ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும் - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9194
அவர் சொன்னதைக் கேட்டதும் நாங்கள் அதிர்ச்சியடைந்து விட்டோம். நாங்கள் டானியாவின் விஷயத்தை முழுமையாக மறந்து போயிருந்தோம். தன்னுடைய அழகான தோற்றத்தின் மூலம் அந்தப் பட்டாளத்துக்காரன் மீண்டும் அவளை எங்களுடைய மனதில் தோன்ற வைத்ததைப் போல் நாங்கள் உணர்ந்தோம். எங்களுக்கு மத்தியில் சத்தங்கள் உண்டாக ஒரு சர்ச்சையே உண்டானது. டானியா அந்த ஆளை பொருட்படுத்தவே மாட்டாள் என்று யாரோ சொன்னார்கள். அந்தப் பட்டாளத்துக்காரனின் காதலை நிராகரிக்க அவளால் முடியாது என்று இன்னொரு ஆள் சொன்னான். டானியாவை காதலிக்கவும் உடல் ரீதியாக உறவு கொள்ளவும் முயன்றால் அடி, உதை கொடுத்து அந்த ஆளின் எலும்பை ஒடிக்க வேண்டும் என்ற கருத்தும் அங்கு எழுந்தது. கடைசியில் பட்டாளத்துக்காரன், டானியா இருவர் மீதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டுமென்றும், அந்தப் பட்டாளத்துக்காரனைப் பற்றி டானியாவிற்கு முன் கூட்டியே எச்சரிக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது. அத்துடன் அன்றைய விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
அப்படியே ஒரு மாதம் கடந்துவிட்டது. பட்டாளத்துக்காரன் பன்கள் தயாரித்தான். தையல்காரிகளுடன் வெளியே சென்றான். அவன் பலநேரங்களில் எங்களின் இருண்ட சிறைக்கு வருவதுண்டு. ஆனால், தன்னுடைய காதல் லீலைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவன் கூறவில்லை. அதற்குப் பதிலாக மீசையை நீவி விடுவதும் உணவு அருந்த பயன்படுத்தும் குச்சியை நக்குவதுமாக இருந்தான் அவன்.
எல்லா நாட்களிலும் காலையில் வழக்கம் போல சந்தோஷத்தின் அறிகுறிகளைப் பரப்பியவாறு பிஸ்கட் கேட்டுக்கொண்டு டானியா வந்து கொண்டிருந்தாள். அந்தப் பட்டாளத்துக்காரனைப் பற்றி நாங்கள் அவளிடம் கூறுவதற்கு முயன்றோம். ‘‘திருட்டுக் கண்களைக் கொண்ட பந்தா பேர்வழி’’ என்று அவள் அந்த ஆளைப் பற்றி கருத்து சொன்னாள். அவள் அப்படி கருத்து சொன்னது எங்களுக்கு நிம்மதியைத் தந்தது. அந்தத் தையல்காரிகள் பட்டாளத்துக்காரனுடன் சேர்ந்து நடக்கும்போது நாங்கள் டானியாவைப் பற்றி நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டோம். அந்த ஆளைப் பற்றி டானியா கொண்ட கருத்து எங்களிடமும் ஒருவித வேகத்தை உண்டாக்கியது. நாங்கள் அந்த ஆளைப் பார்க்கும்போது கோபத்துடன் பார்க்க ஆரம்பித்தோம். முன்னாலிருந்ததை விட நாங்கள் அவளைக் காதலித்தோம். காலை வேளைகளில் அவளுக்கு நாங்கள் வாழ்த்து சொன்னோம்.
ஒரு நாள் சிறிது மது அருந்தி விட்டு அந்தப் பட்டாளத்துக்காரன் எங்களின் இருண்ட சிறைச்சாலைக்கு வந்தான். அவன் அப்போது சிரித்துக் கொண்டிருந்தான். சிரிப்பதற்கான காரணம் என்ன என்று விசாரித்ததற்கு அந்த ஆள் சொன்னான்:
‘‘எனக்காக அவங்க ரெண்டு பேரும் சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க. லிடாவும் க்ருஷாவும் அவங்க ஒருவரோடொருவர் நடத்திய போராட்டம்தான் ரொம்பவும் சுவாரசியமானது. என்ன ஆர்ப்பாட்டம்! அய்யய்யே! ஒருத்தி இன்னொருத்தியோட தலை முடியைப் பிடித்து இழுத்து வராந்தாவுல தள்ளிவிட்டு, பிறகு அவளோட நெஞ்சில ஏறி உட்கார்ந்து... ஹ...ஹ....ஹ... ரெண்டு பேரும் ஒருத்தர் முகத்தை இன்னொருத்தர் அடிச்சு… ஆடைகளைக் கிழித்தெறிந்து... நான் எப்படி சிரிக்காம இருக்க முடியும்? அந்தப் பொண்ணுங்க ஒருத்தரையொருத்தர் ஏன் அடிச்சிக்கிறாங்க? அவங்க எதுக்கு உடம்பைப் போட்டு அடிச்சு காயம் உண்டாக்கிக்கணும்?’’
மிகவும் உற்சாகத்துடன், சந்தோஷத்துடன் அங்கு போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அந்த ஆள் நிறுத்தாமல் சிரித்துக் கொண்டிருந்தான். நாங்கள் எதுவுமே பேசவில்லை. என்ன காரணத்தாலோ இந்த முறை அந்த ஆள் மீது எங்களுக்கு வெறுப்பு தோன்றியது.
‘‘பெண்களுக்கு என் மேல ஏன் இப்படியொரு விருப்பம்? அதுதான் ரகசியம். நான் இலேசா கண்ணைக் காண்பிப்பேன். அவ்வளவுதான்... பெண்கள் அதுல விழுந்திடுவாங்க!’’
ரோமங்கள் பிரகாசித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய கைகளை உயர்த்தி மகிழ்ச்சியுடன் அவன் தன்னுடைய முழங்கால் மீது ஒரு அடி அடித்தான். சந்தோஷமும் ஆச்சரியமும் நிறைந்த கண்களுடன் அவன் எங்களைப் பார்த்தான். பெண்களுடன் நெருங்கிப் பழகுவதற்காகத் தனக்குக் கிடைக்கக் கூடிய சந்தர்ப்பங்களைப் பற்றி அவன் தனக்குத்தானே ஆச்சியப்பட்டுக் கொண்டான். அவனுடைய சதைப் பிடிப்பான சிவப்பு படர்ந்த முகம் சந்தோஷத்தால் பிரகாசமாக இருந்தது. அவ்வப்போது அவன் தன்னுடைய நாக்கால் உதடுகளை நக்கிக் கொண்டிருந்தான்.
எங்களை தலைமை பேக்கர் கோபத்துடன் தன்னுடைய கரண்டியை சுடுகல் மீது வைத்து தேய்த்துக் கொண்டே தன்னுடைய மறுப்பை நகைச்சுவை மிளிர வெளிப்படுத்தினார்.
‘‘சின்ன ஃபிர் செடி, மரங்களைப் பார்த்து சாகசம் காட்டுறதுல நான் ஆச்சரியமே படல. அப்படின்னா... பெரிய பைன் மரங்கள்கிட்ட உங்களால என்ன செய்ய முடியும்னு நான் பார்க்கணுமே...’’
‘‘நீங்க யார்கிட்ட பேசுறீங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியலியேடா...’’
‘‘யூ... உங்ககிட்டத்தான் சொன்னேன்.’’
‘‘நீ என்ன சொன்னே?’’
‘‘சரி... விடுங்க... அது இருக்கட்டும்...’’
‘‘ஏய்... நான் அதையும்தான் தெரிஞ்சிக்குறேனே... நீங்க என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? பைன் மரம்னு நீங்க சொன்னதன் அர்த்தம் என்ன?’’
எங்களுடைய தலைமை பேக்கர் அதற்குப் பதில் கூறவில்லை. அவருடைய கரண்டி சுடுகல் மீது பரவிக் கொண்டிருந்தது. வெந்து தயாரான பிஸ்கட்டுகளை அவர் தரையில் அள்ளிப் போட்டார். பையன்மார்கள் அவற்றை எடுத்து சுருட்ட ஆரம்பித்தார்கள். அவர் பட்டாளத்துக்காரனை மறந்துவிட்டதைப் போல் தோன்றியது. ஆனால், பட்டாளத்துக்காரன் உற்சாகத்துடன் எழுந்து நின்றான்.
அவன் அடுப்பிற்கு அருகில் சென்றான். காற்றில் ஆவியைப் பறக்க விட்டுக்கொண்டு சுழற்றிக் கொண்டிருந்த அந்த கரண்டியின் கைப்பிடி அவனுடைய மார்பில் பட்டிருக்க வேண்டியது...
‘‘இங்க பாரு... நீ என்ன மனசுல நினைச்சுக்கிட்டு அந்த வார்த்தைகளைச் சொன்னே? அது என்னை வேணும்னே குத்துற மாதிரி வார்த்தைகள்தானே? என் காதல் வலையில் சிக்காத ஒரு பெண் இருக்காள்ன்றியா? அதுதானே நீ சொன்னது? என்ன சார்? நான் சொல்றத சரியா?’’
நிலை குலைந்த ஒரு மனிதனின் முகத்தைப் போல் ஆகிவிட்டது பட்டாளத்துக்காரனின் முகம். பெண்களைத் தன்னுடைய காதல் வலையில் விழ வைப்பது என்பதுதான் அவனுடைய ஆணவத்திற்கான காரணமாக இருந்தது. அதுதான் அவனுடைய பெருமைக்குரிய விஷயமாக இருந்தது. ஆணவத்துடன் எல்லாரிடமும் அவன் பேசுவதற்குக் காரணம்கூட அதுவாகத்தான் இருந்தது. அந்த ஒரு தகுதிதான் அவனை மனிதப் பிறவியாக நடமாடச் செய்து கொண்டிருந்தது.
உடலுக்கோ மனதிற்கோ நோயை உண்டாக்குவது சிலரின் வாழ்க்கையில் முக்கியமான ஒரு விஷயமாக இருக்கும். அது அவர்களின் வாழ்க்கை முழுக்க இருக்கும். அதற்கு வேண்டித்தான் அவர்கள் வாழவே செய்வார்கள். அதற்குத் தொல்லைகள் உண்டாகிறபோது, அவர்கள் அதை ரசிப்பார்கள். அதைப் பற்றி அவர்கள் மற்றவர்களிடம் குறைகள் கூறிக் கொண்டிருப்பார்கள்.