ஒரு இளம் பெண்ணும் இருபத்தாறு ஆண்களும் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9194
அந்தக் கல்லால் ஆன சிறைக்குள் மனிதப் பிறவிகளான எங்களை அவளைத் தவிர வேறு யாரும் கவனித்ததேயில்லை. அந்தக் கட்டிடத்தில் வசிக்கக்கூடிய வேறு ஆட்கள் இருந்தாலும், அவர்கள் யாரும் எங்களைப் பொருட்படுத்தியதேயில்லை. நாங்கள் உண்டாக்கிய பிஸ்கட்டின் அல்லது எங்களின் நிம்மதியற்ற வாழ்க்கையின் பகுதியாகவே அவளை நாங்கள் நினைத்திருந்தோம் என்பதுதான் எல்லாவற்றையும் விட முக்கியமான விஷயம். அவளுக்குச் சூடான பிஸ்கட்டுகளைத் தருவது என்பது ஒரு கடமை என்று நாங்கள் நினைத்தோம்.
அந்த விக்கிரகத்தின் மீது நாங்கள் கொண்ட ஆராதனையின் வெளிப்பாடாக இருந்தது அது. அவளை எங்களுடன் நெருங்க வைத்த மரியாதைக்குரிய வழிபாட்டுச் சடங்கு என்றே நாங்கள் அதைக் கருதினோம். பிஸ்கட் தவிர சில அறிவுரைகளையும் நாங்கள் அவளுக்குத் தருவதுண்டு- அழகான ஆடைகள் அணிய வேண்டும். படிகளில் ஓடக் கூடாது. எடை அதிகம் கொண்ட பெரிய விறகுக்கட்டுகளைச் சுமக்கக்கூடாது... இப்படி பல அறிவுரைகள். ஒரு புன்சிரிப்புடன் எங்களின் அறிவுரைகளைக் கேட்கும் அவள் ஒருமுறை கூட அதன்படி நடந்ததில்லை. அவற்றில் ஒன்றைக்கூட ஒருமுறை கூட அவள் பின்பற்றியதில்லை. அதற்காக நாங்கள் அவள் மீது கோபம் கொண்டதில்லை. நாங்கள் மனதில் ஆத்மார்த்தமாக நினைத்ததை அவளிடம் சொல்லிவிடவேண்டும் என்பது மட்டுமே எங்களின் நோக்கமாக இருந்தது.
பல விஷயங்களுக்காக அவள் எங்களை அணுகினாள். சமையலறையின் கதவைத் திறந்து கொடுப்பதற்கும் சிறிது விறகு வெட்டிக் கொடுக்கவும் அவள் எங்களின் உதவியைத் தேடி வருவாள். மன விருப்பத்துடனே அந்த வேலைகளையும், அவள் எங்களிடம் ஒப்படைக்கும் சிறுசிறு வேலைகளையும் நாங்கள் செய்வோம்.
ஆனால், ஒருநாள் எங்களில் யாரோ ஒருவன் கிழந்து போயிருந்த சட்டையைத் தைத்துக் கொடுக்க முடியுமா என்று கேட்டதற்கு, அவள் மூக்கை ஒரு மாதிரி சுளித்துக் கொண்டு அலட்சியமான குரலில் சொன்னாள்: "சரிதான்... ஆனால், நடக்காது."
அந்த இளம் பெண்ணின் செலவில் நாங்கள் எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு ஒருமுறைகூட அவளிடம் நாங்கள் எதையும் கேட்டதில்லை. நாங்கள் அவளைக் காதலித்தோம். அந்த வார்த்தைகளில் எல்லாமே அடங்கியிருக்கிறது. எந்த ஆணாக இருந்தாலும் தன்னுடைய காதலை யார் மீதாவது செலுத்தத்தான் முயற்சிக்கிறான். அது பல நேரங்களில் நிராகரிக்கப்படுகிறது. அழிக்கப்படுகிறது. மற்றொரு சக உயிரின் வாழ்க்கையை அது சிரமத்திற்குள்ளாக்குகிறது. காதலிக்கும்போது அவன் தன்னுடைய ஆராதனைக்குரிய பெண்ணைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. வேறு யாரையும் நாங்கள் காதலிக்காததால், நாங்கள் டானியாவைக் காதலித்தோம்.
சில நேரங்களில் நாங்கள் எங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வோம். "அந்த இளம்பெண் விஷயத்துல இந்த அளவுக்கு ஆசைப்படுறதுக்கு என்ன இருக்கு? அப்படி விசேஷமா சொல்லுற அளவுக்கு அவள்கிட்ட என்ன இருக்கு?"- அப்படி யார் சொல்கிறானோ, அவனை அடுத்த நிமிடம் நாங்கள் எல்லோரும் தங்கள் பலத்தைப் பயன்படுத்தி அமைதியாக்கிவிடுவோம். காதலிப்பதற்கு எங்களுக்கு ஏதாவதொரு விக்கிரகம் தேவைப்பட்டது. நாங்கள் அந்த விக்கிரகத்தைக் கண்டுபிடித்து ஆராதனை செய்யவும் ஆரம்பித்தோம். நாங்கள் இருபத்தாறு பேரும் ஒன்று சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு மையப் புள்ளியாக அவள் இருந்தாள். அந்தச் செயலுக்கு எதிராக எங்களில் யார் செயல்பட்டாலும், அவன் அடுத்த நிமிடம் எங்களின் எதிரியாக மாறிவிடுவான். நாங்கள் காதலித்தோம். (ஒருவேளை, அது அந்த அளவிற்கு ஒரு நல்ல விஷயமாக இல்லாமல் இருக்கலாம்.) ஆனால், காதலித்தவர்கள் இருபத்தாறு பேர்களாக இருந்தோம். அந்த இருபத்தாறு பேரும் குறிப்பிட்ட அந்த ஆராதனை மையத்தைப் புனிதமாகக் கருத வேண்டுமென்று நாங்கள் விரும்பினோம்.
எங்களின் கதையைப் போலவே மோசமானதாக இருந்தது. எங்களின் வெறுப்பும், அதனால் காதலைவிட எங்களின் வெறுப்பு பலம் மிக்கதாக இருப்பதாகச் சிலர் நினைத்ததென்னவோ உண்மை.
பிஸ்கட் உற்பத்தி செய்யும் பேக்கரி தவிர, எங்களுடைய முதலாளிக்கு ஒரு 'பன்' தயாரிக்கும் பேக்கரியும் சொந்தத்தில் இருந்தது. ஒரு கட்டிடத்தில்தான் அந்த இரண்டு பேக்கரிகளும் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அந்த பன் பேக்கரியில் பணியாற்றிய நான்கு தொழிலாளிகளும் எல்லா விஷயங்களிலும் எங்களிலிருந்து முற்றும் வேறுபட்டு நின்றார்கள். எங்களைவிட சுத்தமான ஒரு பணியில் தாங்கள் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் நினைத்தார்கள். எங்களைவிட தாங்கள் நல்ல நிலையில் உள்ளவர்கள் என்று அவர்கள் தங்களைப் பற்றி மதிப்பீடு செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் எங்களின் பேக்கரி பக்கம் வரவே மாட்டார்கள்.
வாசலில் எப்போதாவது ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டால், அவர்கள் எங்களை மிகவும் கேவலமாகப் பார்ப்பார்கள். நாங்கள் அவர்களின் பேக்கரிக்குள் நுழைந்ததில்லை. தாங்கள் அங்கிருந்து பன்களை எங்கே திருடி விடுவோமோ என்று நினைத்து எங்களின் முதலாளி நாங்கள் அங்கு போகாமல் பார்த்துக் கொண்டிருந்தார். பன் பேக்கரியில் பணியாற்றும் தொழிலாளிகள் மீது எங்களுக்குப் பொறாமை இருந்ததால் நாங்கள் அவர்களை வெறுத்தோம். அவர்களின் வேலை எங்களின் வேலையை விட சிரமம் குறைவானதாக இருந்தது. அவர்களுக்கு எங்களைவிட நல்ல சம்பளம் கிடைத்தது. நல்ல உணவு கிடைத்தது. நல்ல காற்றோட்டமுள்ள சுத்தமான அறை அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. நல்ல உடல் நலத்துடனும் உற்சாகத்துடனும் அவர்கள் இருந்தார்கள். அந்தக் காரணங்களால் எங்களுக்கு அவர்கள் மீது வெறுப்பு உண்டானது. அதற்கு நேர்மாறாக நாங்கள் எல்லாரும் வெளிறிப் போன மஞ்சள் நிறத்தில் இருந்தோம். எங்களில் மூன்று பேருக்கு 'ஸிஃபிலிஸ்' நோய் இருந்தது. வேறு சிலருக்கு சிரங்கு நோய் இருந்தது. வாத நோய் காரணமாக ஒருவன் கால் ஊனமுற்றவனாக இருந்தான்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் மற்ற விடுமுறை நாட்களிலும் பன் பேக்கரியில் பணியாற்றும் தொழிலாளிகள் சத்தம் உண்டாக்குகிற ஷூக்களையும், சூட்டுகளையும் அணிந்து கொண்டு ஒரு கொண்டாட்டம் போல பூங்காவை நோக்கி நடப்பார்கள். அவர்களின் கைகளில் அக்காடியன் இருக்கும். சுத்தமில்லாத, அழுக்கு ஆடைகளையும், கிழிந்துபோன காலணிகளையும் அணிந்திருக்கும் எங்களை போலீஸ்காரர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களால் எப்படி அந்த பன் பேக்கரியில் பணியாற்றும் தொழிலாளிகள் இது அன்பு செலுத்த முடியும்?
ஒரு நாள் பன் பேக்கரியில் வேலை செய்யும் முதன்மை பேக்கர் மது அருந்திவிட்டு பணிக்கு வந்தான் என்றும், அவனை முதலாளி அடித்து வெளியே போகச் சொன்னார் என்றும், அந்த ஆளுக்குப் பதிலாக வேறொரு புதிய ஆளை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார் என்றும் நாங்கள் கேள்விப்பட்டோம். புதிதாக வேலையில் சேர்ந்திருந்த பேக்கர் ஒரு முன்னாள் பட்டாளத்துக்காரனாக இருந்தான்.