வாய்மொழி வரலாறு - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7245
"அய்யோ!'' ஒரு பெண் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவர்களுக்கு முன்னால் அவன் சுட்டுவிரலால் அரை வட்டத்தை வரைந்தான். "அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வோம். என்னால் இவ்வளவுதான் கூற முடியும்.'' கடந்த வருடம் திருமணம் செய்து அழைத்துக்கொண்டு வந்த- மூத்த பேத்தியின் வயதே உள்ள தலைவரின் புதிய மனைவி, வெள்ளைக்காரன் கூறுவதைக் கேட்பதற்கு வெளியே வரவில்லை. அவன் என்ன கூறினான் என்பதை அவள் மற்றவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
"நாம் ஏன் இறக்க வேண்டுமென்று அந்த வெள்ளைக்காரன் சொன்னான்?''
காலில் எண்ணெய் தேய்த்து "பளபளப்பு" உண்டாக்கிக் கொண்டே அவள் தலைவரிடம் கேட்டாள்.
"நீ அறிவில்லாமல் புலம்பிக் கொண்டிருக்கிறாய். வெறுமனே ஏதாவது கேட்க வேண்டும் என்பதற்காக மட்டும் கேட்காதே.'' அவர் சொன்னார். தன் கணவரிடம் விவாதம் செய்வதற்கோ அதற்குமேல் ஏதாவது கேட்பதற்கோ அவளால் முடியவில்லை.
ராணுவத்தின் துப்பாக்கிகள் எதிர்கரையை நோக்கிப் பாய்வதற்கு முன்பே, ஆற்றைக் கடந்து கொண்டு வந்த பெரிய படுக்கை போடப்பட்டிருந்த உறங்கும் அறைக்குள்- அவள் அவரிடம் கோபித்துக்கொண்டு தன் பச்சைக் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடினாள்.
அவர் தன்னுடைய தாய் இருக்கும் குடிசையை நோக்கி நடந்தார். கிராமத்து மனிதர்கள் எல்லாரும் நம்பியிருக்கும், வரி வசூலிப்பதற்கும் சட்டங்களை நிறைவேற்றுவதற்கும் அரசாங்கம் அணுகும் அந்த நடுத்தர வயது மனிதர் அங்கு ஒரு மகனாக மாறினார். கிழவி தன்னுடைய ஒப்பனை அறையில் இருந்தாள். கதவுக்கு வெளியே வந்து மூங்கில் தடுக்கில் உட்கார்ந்தபோது, அவளுடைய சரீரம் முழுமையாக அதில் அமர்ந்தது. அவளுடைய முகத்தைக் காட்டிய ஒரு கண்ணாடி அங்கு மாட்டப்பட்டிருந்தது. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் அவள் விளையாடும் பொருளாகக் கேட்கக் கூடிய, சிவப்பு நிற அவரை விதைகள் பதிக்கப்பட்ட கலை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு சிறிய சிமிழும், ஒரு கறுத்த சீப்பும் அந்தக் கிழவியின் கையில் எப்போதும் இருந்தன. பாசம், அன்பு ஆகியவை இல்லாமல் போயிருந்ததால், அவர் காத்துக் கொண்டு நின்றிருந்தார். ஒரு பெண் சிங்கத்திற்கு அதன் குட்டிகளுக்குமிடையே இருக்கும் உறவைப்போல வெளி உலகத்தை மறந்து...
அன்னை தன்னுடைய பெரிய காதுகளைக் கைகளால் தடவினாள். வந்திருக்கும் நோக்கத்தை அவர் கூறவில்லை. கிழவி சிமிழில் இருந்து ஒரு சிறிய எலும்பாலான கரண்டியை எடுத்து மிகவும் கவனமாக வீங்கியிருந்த நாசியின் துவாரங்களுக்குள் நுழைத்தாள். காய்ந்த மூக்கு சளியையும் அழுக்கையும் எடுத்து மூக்கின் மென்மையான பகுதியைச் சுத்தம் பண்ணினாள். அழுக்கை தூரத்தில் எறிந்தாள்.
"உன் பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் என்று உனக்கு தெரியுமா?'' அவள் கேட்டாள்.
"தெரியும். அவர்களில் மூன்று பேர்களை இன்று இங்கு பார்க்கலாம். இரண்டு பேர் மிஷன் பள்ளிக்கூடத்தில். இளைய குழந்தை அவளுடைய தாயுடன்...'' அவருடைய புன்னகையை கிழவி கவனிக்கவில்லை. ஆண் பிள்ளைகளைப் பற்றிய பெருமைக்கும் அவருடைய மிடுக்கான நடவடிக்கைக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை.
"நல்லது. நீ அதைப் பற்றி சந்தோஷப்படலாம். ஆனால், மற்றவர்களிடம் அவர்களுடைய பிள்ளைகளைப் பற்றி விசாரிக்காதே.''
ஒரே ரத்தத்தைக் கொண்டவர்களும் ஒரே சிந்தனையில் இருப்பவர்களுமான அந்தத் தாயும் மகனும் அந்த நிமிடத்தில் ஒன்றானதைப்போல தோன்றியது. அவர் கிழவியாகவும் அந்தக் கிழவி ஆணாகவும்.
"நமக்குத் தெரிந்த பலரும் இல்லாமல் போய்விட்டாலும், அங்கு எல்லா காலங்களிலும் அந்த இடைவெளி இருக்க வேண்டும் என்றில்லை.'' அவர் சொன்னார்.
அவள் தன்னுடைய பெரிய சரீரத்தை அசைத்தாள். "எல்லா குழந்தைகளும் சொந்தக் குழந்தைகளைப்போல இருக்க வேண்டும். எல்லா பிள்ளைகளும் நம்முடைய பிள்ளைகள். இங்குள்ள மனிதர்களின் ஓல்ட்ஃபேஷன்'' அந்தக் கிழவியின் பேச்சில் ஆங்கில வார்த்தை உருளைக் கல்லைப்போல அவரிடம் சென்று விழுந்தது.
அது வசந்த காலம். மோப்பேன் மரத்தின் இலைகள் காய்ந்து கீழே விழுந்து கொண்டிருந்தன. அழுக்கும் குருதியும் கலந்த மண் நாற்றமெடுக்கத் தொடங்கியது. ரோந்து சுற்றிய விமானங்களிலிருந்து பார்த்தபோது கிராமம் ஒரு போர்க்களத்தைப்போல தோன்றியது. ஆகஸ்டு மாதம் வந்தபிறகும் மழை பெய்யவில்லை. செடிகள் எதுவும் முளைக்கவில்லை. எனினும் கிளிகள் முட்டை போட்டு குஞ்சுகளைப் பொறித்துக் கொண்டிருந்தன. பகல் நேரங்களில் அதிகரித்த வெப்பத்தை இரவு சற்று வாங்கிக்கொண்டு அடுத்த புலர்காலைப் பொழுது வரை காப்பாற்றி வைத்தது. இந்த வெப்பம் நிறைந்த இரவுகளிலும் தலைவரின் வானொலி சத்தமாக கிராமத்துடன் பேசிக் கொண்டிருந்தது. சில ஆட்களை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் புதர்களுக்குள் இருந்து பிடித்துக் கொண்டு வந்து கொன்றார்கள். "தேடிக் கண்டு பிடிப்பது, கொல்வது" என்பதுதான் இப்போது ராணுவத்தின் உத்தியாக இருந்தது. ராணுவத்தைச் சேர்ந்த சிலரும் புதர்களுக்குள் கொல்லப்படுவதும் ட்ரக்குகளில் இருந்து கீழே விழுந்து இறப்பதும் நடந்து கொண்டிருந்தது. அவர்களை முழுமையான மரியாதைகளுடன் அடக்கம் செய்தார்கள். மழை பெய்தால் கால்கள் சேற்றுக்குள் சிக்கிவிடும் என்றும், மழைக்கு முன்பே உள்ள இறுதி வாய்ப்பு இது என்பதும் ஆக்கிரமிப்பு நடத்துபவர்களுக்குத் தெரியும். அதனால் அக்டோபர் வரை புரட்சி தொடரத்தான் செய்யும். எந்தவிதத்திலும் மனிதர்களுக்கு உறங்க முடியாத இந்த நடுங்க வைக்கும் இரவு வேளைகளில் "மது விருந்து" நன்கு இருட்டும் வரை நீண்டு கொண்டிருந்தது. ஆண்கள் அதிகமாகக் குடித்தார்கள். அதைத் தெரிந்து கொண்ட பெண்கள் அதிகமான மதுவைக் காய்ச்சி எடுத்தார்கள். அங்கு நெருப்பு மூட்டியிருந்தாலும், ஒரு ஆள்கூட அதற்கு அருகில் உட்கார்ந்திருக்கவில்லை.
நிலவு வெளிச்சம் இல்லாத இரவு வெப்பமாகவும் இருள் நிறைந்ததாகவும் இருந்தது. முழு நிலவு வந்ததும் இருட்டு குறைந்து ஒரு ஆற்றின் மாய காட்சியைப்போல தோன்றியது. சிவப்பு உதடுகள் அடர்த்தியான நீல நிறத்தில் காட்சியளித்தன. அவர்களுடைய நாசியிலும் கைகளிலும் வியர்வை முத்துகள் உதிர்ந்தன. வேகும் அளவுக்கு வெப்பம் இருந்தாலும், தலைவர் ஷூக்களையும் சாக்ஸும் அணிந்து தன்னுடைய நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு அருகில் அமர்ந்திருந்த எல்லாரும் அழுகிப்போன கால்களின் நாற்றத்தை அனுபவித்தனர். தேவாலயத்திலிருந்து கிடைத்த கடவுள்களின் படங்களில் இருக்கும் ஒளி வட்டத்தைப்போல, உருகி ஒளிர்ந்து கொண்டிருந்த நிலவு வெளிச்சத்தில் அவர்களுடைய தாடியும் உதடுகளும் உயர்வதையும், மோப்பேன் மரத்தின் வெள்ளை நிற புற்றுகள் உடைந்து மின்மினிப் பூச்சிகள் வெளியேறுவதையும் தலைவர் பார்த்தார். அவர்களுடைய ஒரு வீட்டு மிருகத்தைக் கொல்வதற்காக என்றே அங்கு ஒரு திருமணமோ கொண்டாட்டமோ நடக்கவில்லை. எனினும், அவர்கள் ஒரு காளையைக் கொன்றனர். காளை மாமிசத்தின் வாசனை அந்தப் பகுதி முழுவதும் பரவிவிட்டிருந்தது. (அந்த நாய்களைப் பாருங்கள். அதை அவை தெரிந்துகொண்டுவிட்டன.)