வாய்மொழி வரலாறு - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7245
"மது விருந்திற்கு எல்லாரும் அழைக்கப்பட்டார்கள். படகில் ஆற்றைக் கடந்து வரும் பயணிகளும், மணலின் வழியாக சைக்கிள்களில் பயணம் செய்து வரும் பயணிகளும் ஏமாற்றப்படவில்லை. காரணம்- நாய்கள் அடுப்பின் நெருப்புக்கு அருகில் தூங்கிவிட்டிருந்தன. குழந்தைகள் வீட்டுக்குத் திரும்பிச் சென்றிருந்தன. யாருக்கும் தெரியாமல் பல மைல்களைத் தாண்டி மோப்பேன் மரங்களுக்கு மத்தியில் வரும்போது, கீழே விழுந்திருக்கும் காய்ந்த இலைகள் மட்டுமே அவர்கள் வருவதை அறிவித்தன. திலோலாவைத் தாண்டி, எல்லைக்கு இருபக்கங்களிலும் இருந்தவர்கள் கறுப்பு நிறத்தைக் கொண்டவர்களாகவும் ஒரே மொழியையும் பழக்க வழக்கங்களையும் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். இளைஞர்கள் கிராமத்தைவிட்டுச் செல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அரசாங்கம் துப்பாக்கியால் சுடுவதற்கு முன்னால், "நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' என்று யாரும் கேள்வி கேட்காமலிருந்த காலத்தில் "மது விருந்"திற்காக பத்து மைல் தூரம் நடந்து செல்வது என்பது ஆட்களுக்கு மிகவும் சாதாரண விஷயமாக இருந்தது."
அறிமுகமற்றவர்கள் பொதுவாக அங்கு இல்லை. நெருப்பு வெளிச்சம் முகத்தில் படும்போது, அவர்கள் இருட்டில் மறைந்துவிடுவார்கள். யாராலும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாது. குழந்தைகள்கூட அவர்களைப் பார்த்து யாருடைய பலவந்தத்தாலோ வாய் பொத்தப்பட்டுவிட்டதைப்போல எதுவும் பேசாமல் இருந்துவிடுவார்கள். பெண்கள் எப்போதும்போல வீட்டின் பின் பகுதிகளில் இருந்துகொண்டு மெதுவாக சிரிக்கவோ, குறும்புத் தனங்கள் காட்டவோ செய்வார்கள். வயதானவர்கள் வெளியூர்களில் இருக்கும் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரைப் பற்றிய விசேஷங்களைக் கேட்பதில்லை. ஆட்களின் கூட்டத்திலிருந்து யாரையும் அடையாளம் கண்டுபிடிக்க தலைவரால் முடியவில்லை. சில வயதான மனிதர்களின்மீது அவருடைய கண்கள் பாய்ந்தன. அவருடைய கூர்மையான பார்வையை அவர்கள் தெரிந்து கொள்ளவும் செய்தார்கள். அதிகாலை வேளையில் வீட்டின் பின் கதவைத் திறந்து பளபளப்பான கான்க்ரீட் படிகளில் இறங்கிச் சென்று, தலைவர் அவர்களில் ஒருவனை அழைத்தார். நொண்டிப் பசுக்களுடனும் கத்திக் கொண்டிருந்த ஆடுகளுடனும் போய்க் கொண்டிருந்த அவன் மெதுவாக நின்றான். தலைவரிடம் அந்த மனிதனைப்போல நிறம் மங்கலான, காலர் இல்லாத சட்டையையும் பழைய அரைக்கால் சட்டையையும் அணிந்திருந்தார். ஆனால், தலைவரின் கால்களில் செருப்புகள் இருந்தன. கடிகாரம் கட்டப்பட்டிருந்த கையால் கண்ணாடியைக் கழற்றி இன்னொரு கை விரல்களால் அவன் தன் ராசியைத் தடவிக் கொண்டிருந்தான்.
அந்த ஆளுடைய உடல் மிகவும் திடகாத்திரமாக இருந்தது. எனினும், அவனுடைய கண்கள் சூரியனின் பிரகாசத்தில் மங்கலாகிவிட்டன.
மோப்பேன் மரங்களுக்கு மத்தியில் தனியாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த மனிதனிடம் ஒரு தலைவருக்கும் வயதான மனிதனுக்குமிடையே இருக்கக்கூடிய வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு, தலைவர் கேட்டார்.
"உன் மகன் எப்போது திரும்பி வருவான்?''
"எனக்குத் தெரியாது.''
"அவன் சுரங்கம் எதிலாவது சேர்ந்துவிட்டானா?''
"இல்லை...''
"ஒருவேளை புகையிலை தோட்டம் எதற்காவது போய் விட்டானா?''
"அவன் எதுவும் கூறவில்லை.''
"வேலை தேடிப் போவது... பெற்ற தந்தையிடம்கூட எதுவும் கூறாமல் இருப்பது... அவன் என்ன பையன்? நீ அவனுக்கு எதுவும் சொல்லித் தரலையா?''
தலைவரின் வீட்டைச் சுற்றி வேலியாக நின்று கொண்டிருந்த செடிகளை நோக்கி ஆடுகள் நாக்குகளை நீட்டின. கிழவன் ஆடுகளை விரட்டுவதற்காக ஒரு டப்பாவை எடுத்து அதில் தட்டி சத்தம் உண்டாக்கினான். "இவை உங்களுடைய வீட்டையே தின்றுவிடும்.'' அவன் தன் கையை உயர்த்தினான். அவற்றை விரட்டிவிடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான்.
"இங்கு இவை திண்பதற்கு எதுவும் இல்லை.'' தலைவர் கூறினார். முதல் மனைவி நட்டு வளர்த்த வேலியில் இருந்த செடிகளை அவர் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. தலைவர் மேலும் ஏதாவது கேட்பார் என்று கருதிய கிழவன் ஆடுகளுக்கு மத்தியில் நின்று கொண்டிருந்தான். பிறகு... தன்னுடைய வீட்டின் வாசலை நோக்கித் திரும்பினான். எப்போதும் உள்ள சத்தங்களுடன் ஆடுகளைக் கொண்டு செல்வதற்கு பதிலாக அவன் தேவையற்றும் தொடர்ந்தும் சத்தங்களை எழுப்பிக் கொண்டிருந்தான்.
அடிக்கடி லேண்ட்ரோவர்ஸ் குழுவினர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்கள். இந்த நேரத்திற்குத்தான் என்ற தீர்மானம் இல்லாமலிருந்ததால், அவர்கள் எப்போது வருவார்கள் என்பதை யாராலும் முன் கூட்டியே கூற முடியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உறுதியாகத் தெரிந்தது. அவர்கள் திரும்பிப் போவதற்கு முன்னால் ஏராளமான மனிதர்கள் இறப்பைச் சந்திப்பார்கள். பல நிமிடங்கள் கடந்த பிறகும், அதன் சத்தங்கள் கேட்டுக் கொண்டே இருக்கும். மோப்பேன் மரங்கள் பயந்து நடுங்கிய மிருகத்தைப்போல ஆடிக்கொண்டிருக்கும்.
அவர்கள் வரும் திசையில் தூசிப் படலம் உயர்ந்து அடையாளம் தெரியாமல் ஆக்கின. விசேஷத்தைக் கூறுவதற்காக குழந்தைகள் ஓடினார்கள். பெண்கள் தங்களின் குடிசைகளிலிருந்து வேறு குடிசைகளுக்கு ஓடினார்கள். "அரசாங்கம் உங்களைப் பார்ப்பதற்காக வந்து கொண்டிருக்கிறது" என்ற செய்தியைத் தாங்கிய பறை ஓசை தலைவரின் மனைவிகளில் ஒருத்தியை ரசிக்கும்படி செய்தது. லேண்ட்ரோவர்ஸை வீட்டுக்கு முன்னால் நிறுத்தியவுடன், தலைவர் வெளியே வந்தார். ஒரு கருப்பு நிற ராணுவ வீரன் (அவன் தலைவரிடம் தாய்மொழியில் மரியாதை வார்த்தைகளை மெதுவான குரலில் கூறினான்) வேகமாக இறங்கி வெள்ளைக்காரனான ராணுவத்தைச் சேர்ந்தவனுக்கு கதவைத் திறந்துவிட்டான். கிராமத்தின் தலைவர்களின் பெயர்கள் அனைத்தும் வெள்ளைக்காரனுக்கு மனப்பாடமாகத் தெரியும். ஒரு வெள்ளைக்காரனுக்கே உரிய ஆணவத்துடன் அவன் தலைவரிடம் கேட்டான்.
"எல்லாம் சரியாக இருக்கிறதா?''
"ம்... எல்லாம் சரியாக இருக்கிறது.'' தலைவர் திரும்பக் கூறினார்.
"யாரும் தொந்தரவு தரவில்லையே?''
"இல்லை... யாரும் தொந்தரவு தரவில்லை.''
எனினும், தலைவர் தன்னுடைய கறுப்பு நிற வீரர்களுக்கு கட்டளை பிறப்பித்தார். அவர்கள் ஒவ்வொரு குடிசைகள் வழியாகவும் தேடி நடந்தார்கள். கோழிக் குஞ்சுகள் நின்று கொண்டிருந்த சாம்பல் மேடுகளையும் குப்பைகளையும் துப்பாக்கி குழாய் கொண்டு தேடிப் பார்த்தார்கள். பைத்தியம் பிடித்த கிழவியின் வீட்டைப் பார்த்தபோது, இருட்டு அவர்களுடைய கண்களுக்குள் நுழைந்தது. காத்து நின்றிருந்த லேண்ட்ரோவர்ஸுக்கு அருகில் வெள்ளைக்காரன் நின்றிருந்தான். கிராமத்திலிருந்து அப்படியொன்றும் அதிக தூரமில்லாத இடங்களில் நடந்து கொண்டிருக்கும் விபத்துகளைப் பற்றி அவன் தலைவரிடம் கூறினான்: "ஐந்து கிலோ மீட்டர்களைத் தாண்டி போய்க் கொண்டிருக்கும் சாலை தகர்க்கப்பட்டுவிட்டது. அந்தச் சாலையில் யாரோ கண்ணி வெடியைப் புதைத்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் சாலைகளில் இருக்கும் கேடுகளைச் சரி பண்ணி முடித்தவுடன், அவர்கள் மீண்டும் வைக்கிறார்கள். ஆற்றைக் கடந்து வரும் அவர்கள் அந்த வழியேதான் வருகிறார்கள். அவர்கள் எங்களுடைய வண்டிகளைத் தகர்க்கிறார்கள். ஆட்களைக் கொல்கிறார்கள்.''
வயதானவர்கள் அவர்களுக்கு முன்னால் வட்டமாக நின்றிருந்தார்கள்.
"அவர்களுக்கு இடம் கொடுத்தால், உங்களையும் அவர்கள் கொன்றுவிடுவார்கள். குடிசைகளுக்கு நெருப்பு வைப்பார்கள்... எல்லாரையும் அழிப்பார்கள்.''