வாய்மொழி வரலாறு - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7245
தலைவரின் கண்கள் அறிமுகமில்லாத ஒரு மனிதனைப் பார்த்ததும், சாய்ந்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த அவன் திடீரென்று காணாமல் போனான். ஒரு முறை மட்டுமே அப்படி நடந்திருக்கிறது. தொடர்ந்து அவர் குடித்துக் கொண்டிருக்கும் ஆதரவாளர்களின் தாடை எலும்புகள் உயர்வதையும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இளம் பெண்களைப் பார்த்து புன்னகைப்பதையும் பார்த்தார். குழந்தைகள் அவர்களை தள்ளி விலக்கி, முன்னால் மிகவும் அருகில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். நள்ளிரவு நேரம் ஆனபோது, தலைவர் நாற்காலியை விட்டு எழுந்தார். ஆண்கள் சிறுநீர் கழிப்பதற்காகச் செல்லும் நிழலில் நின்றிருந்த ஆள் திரும்பி வரவேயில்லை. பெரும்பாலான மது விருந்துகளிலும் தலைவர் வீட்டுக்குப் போய்விட்டாலும், மற்றவர்கள் மது அருந்துவதைத் தொடர்ந்து கொண்டிருப்பார்கள்.
பகலைப்போல பிரகாசித்துக் கொண்டிருந்த மேற்கூரையைக் கொண்ட தன்னுடைய வீட்டுக்கு தலைவர் சென்றார். புதிய பெண்ணும் ஆறாவது குழந்தையும் தூங்கிக் கொண்டிருந்த படுக்கை அறைக்குள் அவர் நுழையவில்லை. சமையலறையில் பல தலைமுறைகளாக பத்திரப்படுத்தி வைத்திருந்த சைக்கிளை எடுத்து வெளியே ஓட்ட ஆரம்பித்தார். பின்னால் மோப்பேன் மரங்களுக்கு மத்தியில் அவருக்கும் அவருடைய தாத்தாவுக்கும் சொந்தமான கிராமம் படிப்படியாக மறைந்து கொண்டிருந்தது. தொடர்ந்து அவர் மண்ணின் வழியாக வேகமாக சைக்கிளை ஓட்டினார். ராணுவத்தைச் சேர்ந்த ஒரு ரோந்து குழுவை சந்திப்போம் என்றோ அவர்கள் துப்பாக்கியால் சுட்டு விடுவார்கள் என்றோ அப்போது அவர் பயப்படவில்லை. மணல் காட்டில் அவர் தனியாக இருந்தார். தனக்கு வாழும் காலம் முழுவதும் நன்கு தெரிந்திருந்த ஒரு மணல் காட்டில், ரோந்து குழுவால் ஏதாவது செய்துவிட முடியும் என்று அவர் நினைக்கவில்லை. சைக்கிள் சவாரி மிகவும் சிரமம் நிறைந்ததாக இருந்தது. எனினும், காலையில் செய்ததைப்போல அவர் அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தார். பழைய சாமர்த்தியங்கள் அவரிடம் திரும்ப வந்து சேர்ந்திருப்பதைப் போல தோன்றியது. ஒரு மணி நேரத்திற்குள் அவர் ஆர்மி போஸ்ட்டை அடைந்துவிட்டிருந்தார். இயந்திரத் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த காவலாளியிடம் தான் யார் என்று தலைவர் அறிவித்தார். தொடர்ந்து விசாரிப்புகளுக்கும் சோதனைகளுக்கும் உள்ளாவதற்காக ஒரு பிச்சைக்காரனைப்போல அவர் காத்து நின்றிருந்தார். அங்கு இருந்த கறுப்பு நிற ராணுவ வீரன் வெள்ளைக்கார ராணுவ அதிகாரியை அழைத்து எழுப்பினான். அவன் ஏற்கெனவே தலைவருக்கு நன்கு அறிமுகமாகியிருந்த அதே ராணுவ அதிகாரிதான். தலைவர் வருகை தந்ததற்கான நோக்கம் என்ன என்று அவன் ஒரே பார்வையில் புரிந்துகொண்டான். சிரிப்புடனும் அதிக முன்னெச்சரிக்கையுடனும் திறந்த வாயில், நாக்கின் நுனிப்பகுதி வளைந்து தொட்டுக் கொண்டிருந்தது. ஒரு மனிதன் விரலைத் தொட்டு விஷயங்களை சிந்தித்துச் கூறுவதைப்போல.
"எத்தனை பேர் இருக்காங்க?''
"ஆறு... இல்லாவிட்டால் பத்து... இல்லாவிட்டால்... ஒரு வேளை ஒரு ஆள் மட்டும்... எனக்குத் தெரியாது. ஒரு ஆள் அங்கே இருந்தான். அவன் போய்விட்டான்... அவர்கள் திரும்பவும் வருவார்கள்.''
"அவர்கள் உணவு சாப்பிட்டுவிட்டு... தூங்கினார்கள்... பிறகு... போய்விட்டார்கள். அப்படித்தானே! ஆட்கள் அவர்களுக்கு தேவையானவற்றையெல்லாம் கொடுத்தார்கள். சரிதானா? யார் அதைச் செய்தது என்று உங்களுக்குத் தெரியும். யார் அவர்களை மறைத்து வைத்தார்கள் என்பதும், படுப்பதற்கு இடம் கொடுத்தார்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இல்லையா? ம்... உங்களுக்குத் தெரியும்?''
அந்த அறையிலிருந்த ஒரே ஒரு நாற்காலியில் தலைவர் தளர்ந்து போய் உட்கார்ந்திருந்தார். வெள்ளைக்கார ராணுவ அதிகாரி அங்கே நின்றிருந்தான்.
"யார் அது?''
மனதில் இருந்த ஆசைகளையும் எண்ணங்களையும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பார்ப்பதைப்போல ஆங்கிலத்தில் வெளிப்படுத்துவதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. தான் எதிர்பார்க்கக்கூடிய அளவுக்கு அது வெளியே வரவில்லை என்பதையும் தான் புரிந்துகொண்ட அளவுக்கு அதை அவர்களிடம் கூற முடியவில்லை என்பதையும் தலைவர் தெரிந்துகொண்டார். "யார் என்று எனக்குத் தெரியவில்லை.'' -அவர் மிகவும் சிரமப்பட்டு மூச்சை விட்டார். "கிராமத்தில் எவ்வளவோ ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில்... அவர்களில் யாராவது இருக்கலாம்.'' அவர் நிறுத்தி வெள்ளைக்காரனிடம் புகார் கூறுவதைப்போல தலையைச் சாய்த்து வைத்துக்கொண்டு கூறினார். அது ராணுவ அதிகாரியை அமைதியானவனாக ஆக்கியது.
"சரி... இருக்கட்டும்... பரவாயில்லை... அவர்கள் ஆட்களை பயமுறுத்தியிருக்கிறார்கள். ஆட்களால் எதையும் மறுக்க முடியவில்லை. உங்களுக்குத் தெரியுமா? மறுத்துக் கூறுபவர்களின் செவியை அவர்கள் அறுத்தெடுத்துவிடுவார்கள். உதடுகளைப் பிய்த்தெடுத்து விடுவார்கள். கொன்றுவிடுவார்கள். பத்திரிகைகளில் நீங்கள் அந்தச் செய்திகளையும் பார்க்கவில்லையா?''
"இல்லை... நாங்கள் பார்க்கவில்லை. வானொலி மூலமாக அரசாங்கம் சொன்னதைக் கேட்டோம்.''
"அவர்கள் இப்போதும் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தானே? எவ்வளவு நேரம் குடிப்பார்கள்? ஒரு மணி நேரம்...?''
வெள்ளைக்காரன் தன்னுடன் செயல்படுபவர்களை கூர்ந்து பார்த்தான். போருக்கு தயார் நிலையில் அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஆயுதங்களை எடுத்து, அவர்கள் லேண்ட்ரோவர்ஸ் நின்று கொண்டிருந்த இருட்டுக்குள் தாவினார்கள். வெள்ளை ராணுவ வீரன் தொலைபேசியை எடுத்தான். என்னவோ தடை இருப்பதை நினைத்து பேசும் பகுதியை கையால் மூடினான்.
"சீஃப், ஒரே ஒரு நிமிடத்தில் நான் வந்துவிடுகிறேன். தெரியுதா? ஒரே ஒரு நிமிடத்தில்...'' தலைவரைப் பார்த்து அவன் சொன்னான்: "இவரை டூட்டி அறைக்கு அழைத்துக் கொண்டு போ... தேநீர் கொடு.''
ராணுவ அதிகாரி சாய்ந்து மேஜையின் இடது பக்கத்தில் இருந்த ஒரு ரகசிய அறையின் கதவைத் திருகி, அதைத் திறந்து அரை புட்டி பிராண்டியை வெளியே எடுத்தான். தலைவருக்குப் பின்னால் நின்று கொண்டு அவருக்காக அது என்பதைப்போல சைகை காட்டினான். ஒரு கறுப்பு ராணுவ வீரன் பவ்யம் கலந்த வேகத்துடன் அதை வாங்கினான்.
இரவு நீண்ட நேரம் ஆனதும், ஆர்மி போஸ்ட்டின் எதிரே உள்ள கிராமத்திலிருந்த ஒரு உறவினரின் வீட்டுக்கு தலைவர் சென்றார். தான் ஒரு "மது விருந்"திற்குச் சென்றிருந்ததாகவும், இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு உள்ளதால் வீட்டுக்குப் போக முடியவில்லையென்றும் அவர் சொன்னார்.
கைதுகள் நடக்கும்போது தலைவர் அந்தச் செயலுடன் தொடர்பு வைத்திருக்கவோ, கிராமத்தில் இருக்கவோ கூடாது என்று ராணுவ அதிகாரி கூறியிருந்தான். அரசாங்கம் அவரிடம் என்ன கேட்டுக் கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிந்தால், அவர்கள் அவருடைய செவியை அறுத்தெடுத்து விடுவார்கள். என்ன கூறியிருக்கிறார்கள் என்பது தெரிந்தால், உதடுகளும் இல்லாமற் போய்விடும். ஆபத்தில் மாட்டிக்கொள்ளக் கூடாது.