வாய்மொழி வரலாறு - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7245
வெள்ளைக்காரனுக்குச் சொந்தமானது என்பதைப் போல தோற்றம் தந்த ஒரு வீடு எப்போதும் திலோலா கிராமத்தில் இருந்தது. செங்கற்களால் கட்டப்பட்ட அந்த வீட்டின் மேற்கூரையில் பட்டு சூரியனின் கதிர்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. பெண்கள் ஆற்றிலிருந்து நீர் எடுப்பதற்காக தலையில் வைத்துக்கொண்டு போகும் பாரஃபீன் பாத்திரத்தைப் போல அது மோப்பேன் மரங்களுக்கு மத்தியில் பிரகாசித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கலாம். ஆற்று மண்ணும் சேறும் சாம்பலும் கொண்டு உருவாக்கப்பட்ட, கிராமத்தின் மீதி வீடுகள் மூங்கில் இலைகளால் வேயப்பட்டதாகவும், மீன் செதில்களைப் போல இலைகள் சிதறி நின்று கொண்டிருக்கும் மோப் பேன் மரக் கொம்புகளுடன் உள்ளதாகவும் இருந்தன.
அது கிராமத்தின் தலைவருடைய வீடு. சில தலைவர்களுக்கு கார் சொந்தத்தில் இருந்தாலும், இந்த மனிதர் அந்த அளவுக்கு முக்கியமானவர் அல்ல. அது மட்டுமல்ல- சிறிய தலைவராக இருந்தாலும், அரசாங்கத்திடமிருந்து தொடர்ந்து உதவிப்பணம் பெற்றுக் கொண்டிருந்தார். இனி அவர்கள் ஒரு காரே கொடுத்தாலும், அதனால் அவருக்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. காரணம்- அங்கு சாலை இல்லை. இடையில் அவ்வப்போது லேண்ட்ரோவர்ஸ் ராணுவம் ரோந்து சுற்றி வரும் போதெல்லாம், கிராமத்து மனிதர்களின் கால்நடைகள் முயல்களைப் போல மோப்பேன். மரங்களுக்கு மத்தியில் பயந்து ஓடின. கிராமம் மிகவும் பழமை வாய்ந்தது. கிராமத்து தலைவரின் தாத்தாதான் கோத்ரா இன தலைவரின் தலைவர். தன்னுடைய படை வீரர்களை அனுப்பி எதிரிகளைத் தோல்வியடையச் செய்து ஸ்காட்டிஷ் மிஷனரியிலிருந்து முதன்முதலாக பைபிளைப் பெற்ற தலைவரின் பெயர்தான் அவருடைய பெயர். மிஷனரியைச் சேர்ந்தவர்கள் அருள் வார்த்தைகளைக் கூறினார்கள்: "தேடுங்கள் கண்டடைவீர்கள்."
நுனிப்பகுதி கூர்மையாக இருக்கும் ராணுவ விமானங்கள் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை கடந்து செல்லும்போதெல்லாம் அங்குள்ள கிராமத்து மனிதர்கள் சமீபகாலமாக அவற்றைப் பார்ப்பதே இல்லை. மீன்கொத்திகள் மட்டும் தங்களுடைய எல்லைக்குட்பட்ட வானத்திற்குள் ஆக்கிரமித்து கடந்து வருபவற்றை நோக்கி குழப்பமடைந்து எதிர்ப்புகளை வெளிப்படுத்துவதும் ஆரவாரங்கள் செய்வதும் உண்டு. தூரத்தில் சுரங்கங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு படிக்கத் தெரியும். என்றாலும், அங்கு பத்திரிகைகள் எதுவும் இல்லை. எத்தனை ராணுவ வண்டிகள் தகர்க்கப்பட்டன என்பதையும் எத்தனை வெள்ளைக்கார ராணுவ வீரர்கள் அரசாங்க மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட இருக்கிறார்கள் என்பதையும் காட்டும் அரசாங்கத்தின் கணக்குகளை அவர்கள் வானொலி மூலம் கேட்டார்கள்.
கிராமத்தின் தலைவருக்கு படிக்கத் தெரியும். அவரிடம் ஒரு வானொலியும் இருந்தது. ராணுவத்தைத் தாக்குபவர்களுக்கு உணவையோ நீரையோ கொடுத்தாலோ, அவர்களை மறைத்து வைத்தாலோ அவர்களை சிறைகளில் அடைப்போம் என்ற அரசாங்கத்தின் உத்தரவை அவர் முக்கிய நபர்களிடம் வாசித்து, அவர்களைக் கேட்கச் செய்தார். மக்களைக் கொல்வதற்கும் குடிசைகளை எரிப்பதற்கும் எல்லைக்கு அப்பால் சென்று வெடிகளுடன் திரும்பி வருபவர்களிடமிருந்து கிராமத்தைக் காப்பாற்றுவதற்காக, இரவு வேளையில் காட்டில் நடந்து திரிபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைச் சுட்டு விடுவோம் என்ற அரசாங்கத்தின் இன்னொரு கடிதத்தையும் அவர் வாசித்தார். மது அருந்துவதற்கோ உல்லாசமாக இருப்பதற்கோ பக்கத்து கிராமத்திற்குச் செல்பவர்கள் தொலைந்தார்கள். அவர்கள் இனி தங்களின் வீட்டுக்கு வந்து தந்தையின் பாதுகாப்பில் இருக்க முடியாது. ஒருநாள் இளைஞர்கள் வேலை தேடி சுரங்கங்களுக்குச் சென்றிருந்தார்கள். ஆனால், அவர்கள் இவ்வாறு போராட்டப் பயிற்சிகளைப் பெறுவதற்காக எல்லைக்கு அப்பால் போகிறார்கள் என்று வானொலி கூறியது. இளைஞர்கள் மண்ணாலான குடிசைகளையும், தலைவரின் வீட்டையும், லேண்ட்ரோவர்ஸ் குழுவின் வேடம் போட்டு விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளையும் விட்டு, வெளியேறி நடந்தார்கள். "நீங்கள் எங்கே போகிறீர்கள்?'' என்று குழந்தைகள் இளைஞர்களிடம் கேட்டார்கள். ஆனால், அவர்கள் அதற்கு பதில் கூறவோ திரும்பி வரவோ இல்லை.
யாராவது இறக்கும்போது, வெள்ளைக் கொடியை உயரத்தில் பறக்க விட்டுக் கொண்டிருக்கும், மோப்பேன் மரத்தாலும் மண்ணாலும் கட்டப்பட்ட ஒரு தேவாலயம் அங்கு இருந்தது. பிணங்களின் இறுதிச் சடங்குகள் ஸ்காட்லேண்டிலிருந்து வந்திருக்கும் மிஷனரிமார்களின் சடங்குகளுக்கு இணையாக நடந்தன. புதிதாக இறப்பவர்களை முன்னோர்கள் இருக்கும் இடத்திற்கு உயர்த்திக் கொண்டு செல்வதற்காக அந்தச் சடங்குகளை பழைய பழக்க வழக்கங்களுடன் இணைத்தார்கள். வெளிறிய முகங்களைக் கொண்ட பெண்கள், பாதிரியார்களின் இறுதி தீர்ப்பிற்காக அவர்களை ஆரவாரத்துடன் வழியனுப்பி வைத்தார்கள். ஒரு சிறிய சிமிழியில் எலும்புத் துண்டுகளை எறிந்து தீர்ப்பு கூறும் ஜோதிடனுடனும் தாய்மார்களிடமும் கலந்தாலோசித்து பாதிரியார்கள் புதிய பெயர்களைக் கண்டுபிடித்து குழந்தைகளுக்கு வைப்பார்கள்.
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் பெரும்பாலான சனிக்கிழமைகளிலும் தலைவரும் சேர்ந்து பங்குபெறும் ஒரு "மது உபசரிப்பு" அங்கு நடக்கும். தலைவர் அமர்வதற்காக அவருடைய வீட்டிலிருந்து ஒரு நற்காலியை இதற்கென்றே கொண்டு வருவார்கள். மற்றவர்கள் தங்களின் வசதிக்கேற்றபடி இங்குமங்குமாக நிழல்களில் உட்காருவார்கள். அலங்கரிக்கப்பட்ட ஒரு வெள்ளரி ஓட்டில் தலைவர் முதலில் ருசித்து பருகுவார். (மற்றவர்கள் தேங்காய் ஓட்டின் மூலமோ உலோக பாத்திரத்தின் மூலமோ பருகுவார்கள்) இதுதான் கிராமத்து மனிதர்களின் பழக்க வழக்கமாக இருந்தது.
குலம் நின்றிருக்கும் கிராமத்திற்கும் கோத்திரம் நின்று கொண்டிருக்கும் பூமிக்கும் மேற்கு திசையில் மற்றாஸி முதல் கிழக்கு மொம்பாஸா வரை, வடக்கு என்றெபி முதல் எம்பான்ஜனி வரை இருப்பவர்களின் பழக்க வழக்கங்களும் இதேமாதிரிதான் இருந்தன.