வாய்மொழி வரலாறு - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7245
அங்கிருந்த பெண் அவருக்கு போர்வையைக் கொண்டு வந்து கொடுத்தாள். தலைவர் குடிசையில் அந்த பெண்ணின் வயதான தந்தையுடன் சேர்ந்து படுத்துத் தூங்கினார். அவர் வந்த விஷயமோ, நள்ளிரவு நேரத்தில் அங்கிருந்து போன விஷயமோ எதுவுமே காது கேட்காத கிழவனுக்குத் தெரியவே தெரியாது. கடந்த இரவின் நிலவு அப்போதும் பிரகாசித்துக் கொண்டிருந்தது. காட்டில் தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்த முயல்களைத் தொந்தரவு செய்யாமல் அவர் சைக்கிளை ஓட்டினார்.
புகைப்படலங்கள் கிராமத்தை மூடிவிட்டிருந்தன. அதிகாலை வேளையில் அடுப்பில் நெருப்பை எரியவிட்டிருப்பார்கள். ஆனால், தன்னுடைய முகத்தில் வந்து மோதும் கரும்புகையின் பகுதிகள் அடுப்பில் இருந்து வருவது அல்ல என்பது திடீரென்று அவருக்குப் புரிந்தது. மனதின் ஓட்டத்திற்கேற்றபடி சைக்கிளின் வேகமும் குறைந்ததும், அவர் குழைந்த மண்ணில் பாதங்களை ஊன்றி, தள்ளிப் பார்த்தார். ஆனால், சக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் எதிர்பயணம் நடப்பதை அவர் உணர்ந்தார். அங்கிருந்து சென்று கிராமத்தை அடைவதற்கு, முன்னால் வழி இல்லை. குழந்தைகள் மட்டும் எப்போதாவது கவனித்துக் கொண்டிருந்த விமானங்கள் இரவில் வந்து, பயப்படுவதற்கு மட்டும் யாரும் வாசிக்கவோ கேள்விப்படவோ இல்லாத ஏதோ ஒன்றை எறிந்துவிட்டுச் சென்றன. முதலில் அவர் பார்த்தது- சாய்ந்து கிடக்கும் மரத்தின் வேர்களில் ஒரு நாய் கொண்டு போய் போட்ட, ரத்தம் விழுந்து நனைந்த கம்பளியைத்தான். குடிசைகள்... பாத்திரங்கள்... பழத்தோல்கள்... போர்வைகள்... உலோகப் பெட்டிகள்... கடிகாரங்கள்... சைக்கிள்கள்... வானொலி... சுரங்கங்களிலிருந்து கொண்டு வந்த ஷூக்கள்... இளம் பெண்கள் தலையில் கட்டியிருந்த வெள்ளை நிற துணிகள்... முன்பு ஸ்காட்டிஷ் மிஷனரியைச் சேர்ந்தவர்கள் கொண்டு வந்த- பொன் நிற தலை முடி கொண்ட இயேசுவின் அருகில் வெள்ளாட்டுக் கூட்டமும் நீல நிறத்தைக் கொண்ட ஆட்டுக் குட்டிகளும் நின்று கொண்டிருக்கும் அழகான ஓவியங்கள்... கிராமத்து மண் வெடித்து தான் காப்பாற்றி வைத்திருந்தவை அனைத்தையும் தூரத்தில் எறிந்தது. ஐந்து தலைமுறைகள் ஒன்றோடொன்று கொடுத்து வைத்திருந்த செல்வங்கள் அனைத்தும்... குடிசைகள் இடிந்து தகர்ந்தன. மண்ணாலான சுவர்கள் நெருப்பில் வெந்துபோக, மேற்கூரையும் தாங்கிக்கொண்டிருந்த
மரக்கொம்புகளும் சாம்பலாயின. தலைவர் உரத்த குரலில் அலறியவாறு ஒவ்வொரு குடிசையாக பைத்தியம் பிடித்த மனிதனைப்போல அலைந்து கொண்டிருந்தார். எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. ஒரு கோழிக்குஞ்சுகூட பாதங்களுக்கு நடுவில் நடந்து வரவில்லை. அவருடைய வீட்டின் சுவர்கள் மட்டும் எஞ்சி இருந்தன. அது வெடித்தும், மேற்கூரை இடிந்து விழவும் செய்திருந்தன. தொழுவத்தில் சங்கிலியில் கிடந்தவாறு ஒரு வீட்டு மிருகம் வெந்து போய்விட்டிருந்தது. குடிசைகளில் ஒன்றில் அதேபோல ஒரு மனித உருவமும் வெந்து கிடந்தது- அடையாளம் கண்டுபிடிக்கக் கூடிய இறந்த உடலில் தார் பூசியதைப்போல... அது பைத்தியக்கார கிழவியின் குடிசை. உயிரைக் காப்பாற்ற ஓடிக்கொண்டிருந்தவர்கள் அவளை மறந்துவிட்டார்கள்.
எஞ்சி இருந்தவர்களுடன் தலைவரின் தாயும் இளைய மனைவியும் இல்லை. ஆனால், குழந்தை அவருடைய மூத்த மனைவிகளுடன் இருந்து வளர்ந்தது. வெள்ளைக்கார அதிகாரி கமான்டிங் ஆஃபீஸரிடம் தொலைபேசியில் என்ன பேசினான் என்று யாருக்கும் தெரியாது. என்ன நடக்கப் போகிறது என்று கமாண்டிங் ஆஃபீஸர் அவனிடம் கூறியிருப்பார். அப்படியே இல்லையென்றாலும், இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பது அனுபவமுள்ள ஒரு வெள்ளைக்காரனுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
மோப்பேன் மரத்தில் தலைவர் தொங்கி இறந்துவிட்டார். போலீஸோ ராணுவமோ (இந்த காலத்தில் மக்களுக்கு ஒருவரையொருவர் மாறிவிட்டிருந்தனர்) அவருடைய ஆடிக்கொண்டிருந்த ஷூக்களுக்குக் கீழேயிருந்து சைக்கிளைக் கண்டெடுத்தார்கள். கிராமம் முழுவதும் தகர்ந்தபோது, தலைவர் எங்கிருந்து ஒரு கயிறைக் கண்டெடுத்தார் என்ற விஷயம் யாருக்குமே தெரியவில்லை.
மக்கள் திரும்பி வர ஆரம்பித்தார்கள். மோப்பேன் மரங்களுக்கு மத்தியில், தங்களின் தந்தையின் மண்ணில் மரணத்தைத் தழுவியர்கள் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட்டனர். பெண்கள் ஆற்றிலிருந்து உலோகத்தாலான பாத்திரங்களிலும் பழங்களின் தோல்களிலும் மண் அள்ளிக்கொண்டு வந்தார்கள். உரையாடி ரசித்தவாறு அவர்கள் குடிசைகளைக் கட்டி உயர்த்த ஆரம்பித்தார்கள். அவர்களைவிட
உயரமான மரக்கொம்புகளை வெட்டி தலையில் ஏற்றிச் சுமந்து கொண்டு வந்தார்கள். மேற்கூரைக்கு தாங்கும் கொம்பாக மோப்பேன் மரத்தைக் கண்டடைந்தபோது, ஆண்களின் சத்தம் மிகவும் உரத்து கேட்டது.
வெள்ளைக்காரனிடம் இருப்பதைப் போல கட்டிய, வெள்ளை நிற சுவர்களைக் கொண்ட ஒரு வீட்டுக்கு முன்னால் இருந்த மோப்பேன் மரத்தின் கொம்பில் இந்த நேரத்தில் ஒரு வெள்ளை நிறக் கொடி பறந்து கொண்டிருந்தது.