ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ! - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6554
அந்த வகையில் நான் 'பெண்ணுலகம்' என்ற பெயரில் ஒரு அருமையான கட்டுரையை எழுதினேன் என்று கூறினேன் அல்லவா? எழுதிக் கொண்டிருந்தபோது அவள் எனக்கு அருகில் மல்லாக்க படுத்துக் கொண்டு என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தாள். என்னவோ என்று கூறுவது - ஆமாம்... பெண்களின் சிந்தனைகளைப் பற்றி என்ன கூற முடியும்? எனினும், நான் கட்டுரையை எழுதினேன். பெண்களைப் பற்றிய எல்லா விஷயங்களையும் நான் அதில் சேர்த்திருந்தேன் என்று கூறினால், எதையும் மீதம் வைக்கவில்லை என்று அர்த்தம். நான் அவளிடம் கூறினேன்:
'கேட்டுக்கோ. 'பெண்ணுலகம்' என்றொரு கட்டுரை. இது மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. அதனால், மிகவும் கவனமாக கேள்.'
நான் இப்படி வாசித்தேன்.
'பெண்ணுலகம்... பெண், ஒரு ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ. நல்லவை - கெட்டவை, நறுமணம் - நாற்றம், அழகு- அவலட்சணம் ஆகியவற்றின் நிழல்தான் பெண். ஆனால், அவள் நிழல் அல்ல. எதுவுமல்ல. அவள் அனைத்தும். அவள் அமிர்தம். அவள் விஷம். அவள் கடுமையும் மென்மையும். அவள் இசை. அவள் சூறாவளி. ஓ... அவள் இந்த மிகப் பெரிய பிரபஞ்சம். பெண் ஒரு குழந்தையைக் கொண்ட பெட்டகம். உயிரின் மூல காரணம். எல்லையற்ற வாழ்வின் வாசல்.
பெண், இனிமையான, ஒரு குழைவான பிரச்சினை, அவளுக்கு சொந்த கதை இல்லை. வாழ்க்கை வரலாறும் இல்லை. அழகான பொய் அவள். அவள் கூறுவதை கவனிக்காதீர்கள். அவள் இன்று கூறுவதை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டாம். நாளை இதை அவள் மறந்திருப்பாள். ஆனால், பத்து வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சம்பவத்தை நினைவுபடுத்திப் பார்க்க அவளால் முடியும். படித்த திருடி அவள். அறிவு இல்லாத மிருகமும்... எவ்வளவு வயது ஆனாலும், அவள் சிறிய குழந்தைதான். எவ்வளவு சிறிய குழந்தையாக இருந்தாலும், அவள் வயதான பெண்தான்.
வழுக்கைத் தலைக்கு முதல் காரணமே பெண்தான். கோஷங்களின் ஒரு பைத்தியக்கார ஆலயம் அவள். அவளைப் பற்றி கூறுவதெல்லாம் தவறானவை. கூறியது அனைத்தும் தவறானவை. கூற இருப்பவையும் தவறானவை. கூறக் கூடியவை அனைத்தும் சரியானவை. அருகில் இருப்பவள் பயங்கரமானவள், பொய்யானவள், திருடி, கள்ளங்கபடமற்றவள், ஆடம்பரப் பிரியை, பொறாமையின் மய்யம், பகை, நாணம், வைராக்கியம் - அனைத்தும் அவளுடைய சொந்தச் சொத்துக்கள், அன்பு நிறைந்தவள், தேவி, ஈஸ்வரி, அரக்கி... ஓ! அவள் வாழ்வின் அனைத்தும்.
பெண், வெறும் ஒரு வயிறு. அவளுக்கு இதயம் இல்லை. மூலை இல்லை. அவள் எல்லாவற்றையும் கூறுவாள். எதையும் செய்வாள். அவள் புரட்சியைப் பற்றி பேசுவாள். மதத்தைப் பற்றி பேசுவாள். பண்பாட்டைப் பற்றி உரையாற்றுவாள். ஆனால், தனிப்பட்ட முறையில் அவளுக்கு எதிலும் நம்பிக்கை இல்லை. அவள்தான் சட்டத்தைப் படைக்கிறாள். அவள்தான் முதலில் அதை மீறுவதும். அவளிடம் எந்தச் சமயத்திலும் அறிவுரை கேட்காதீர்கள்.
அனைத்து கோல்மால்களின் உறைவிடமே பெண்தான். எல்லா கனவுகளையும் படைத்திருப்பதே அவளுக்காகத்தான். உலக வரலாறு முழுவதும் அவளுடைய கதைகள்தாம். எல்லா இரத்தம் சிந்துதலுக்கும் காரணம் அவள்தான். எல்லா கலைகளுக்கும் மூல காரணம் அவள்தான். அவள் இல்லையென்றால் ஆண் இல்லை. முட்டாளும் மடையனுமான ஆணை சரியான வழியில் நடத்திச் செல்வதற்கு ஆழமான சிந்தனைக்குப் பிறகு கடவுள் படைத்த அற்புத ஜோதி பெண். குடும்ப நாயகி!
நறுமணம் நிறைந்த நிலவு வெளிச்சம் படர்ந்த அடர்த்தியான காடு அவள். ஆண் பகலும், பெண் இரவுமாக ஆகிறார்கள். ஆண் பாலை வனமும், பெண் கானலுமாக ஆகிறார்கள். சுருக்கமாக கூறுவதாக இருந்தால் - வெறும் ஒரு ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ பெண்!'
இவ்வாறு நான் வாசித்து நிறுத்தினேன்.அரங்கம் பேரமைதியுடன் இருந்தது... நான் அவளிடம் கேட்டேன்:
'எப்படி இருக்கு?'
'மிகவும் பிரச்னைக்குரியதாக இருக்கு!'- அவள் சொன்னாள்: ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோவும்... குழந்தை இருக்கும் பெட்டகமும்... வழுக்கைக்கான முதல் காரணமும்...'- சிறிது நேர ஆழமான மவுனத்திற்குப் பிறகு கேட்டாள்: 'பெண் இப்படித்தான் என்று உங்களிடம் சொன்னது யார்?'
நான் சொன்னேன்:
'யாரும் கூறவில்லை. நீ கற்றுத் தந்தாய், உன்னைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக முயற்சி செய்ததால் உண்டான அற்புதம்தானே என்னுடைய இந்த வழுக்கைத் தலை!'
அவள் கர்ஜனை செய்யவில்லை. என்னுடைய உயிர்த் தோழி சத்தம் போட்டு கத்தவில்லை. என் வழுக்கைத் தலையை அடித்து உடைக்கவில்லை. அவள் குலுங்கிக் குலுங்கி சிரிக்கவில்லை. நினைத்து புன்னகைத்தான்.
'வழுக்கைத் தலையர்களின் என் தங்க தம்புரானே!'- அவள் கூறினாள்: 'நான் உங்களைப் பார்த்தபோது, உங்களுக்கு இப்போது இருப்பதைவிட பெரிய வழுக்கை இருந்தது. அதில் இங்குமங்குமாக காணப்படும் முடிகள் என்னுடைய நேர்த்திக் கடன்களலும், வழிபாடுகளாலும் முளைத்தவை. நீங்கள் வழுக்கைத் தலையைப் பற்றி என்னிடம் கூறியது என்ன என்பது ஞாபகத்தில் இருக்கிறதா?'
நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். தெரியுமா? அவள் என்னைப் பார்த்தபோது, எனக்கு வழுக்கை இருந்ததாம். நான் அதைப் பற்றி அவளிடம் என்னவோ கூறியிருக்கிறேன் என்று அவள் கூறுகிறாள்!
நான் கேட்டேன் :
'வழுக்கைத் தலையைப் பற்றி நான் என்ன சொன்னேன்?'
'அதுவா?'- அவள் கூறினாள் : 'கேளுங்க... உங்களுடைய முன்னோர்களான சக்கரவர்த்திகள் கிரீடம் வைத்திருந்தார்கள். அதற்கு ஜன்னல்களோ, கதவுகளோ கிடையாது. அதனால் உள்ளே காற்று செல்ல முடியவில்லை. அதன் காரணமாக உரோமங்கள் உதிர்ந்து விட்டன. நீங்கள் சக்கரவர்த்தியாக இல்லையென்றாலும், பரம்பரையின் வழியாக உங்களுக்குக் கிடைத்தது வழுக்கை மட்டும்தான்!. ராஜ வழுக்கை!'
நான் எதுவும் கூறவில்லை. கூற முடியுமா? நான் பயங்கரமான பொய்யனாக, தாழ்ந்த நிலையில் உள்ளவனாக அங்கு அமர்ந்திருந்தேன்.
அவள் தொடர்ந்து சொன்னாள்:
'அந்தப் பழைய கிரீடத்தைப் பற்றிய விஷயங்களை நினைத்துத்தான் நான் உங்களை வழுக்கைகளின் ராஜா என்றும், தங்க தம்புரான் என்றும் அழைத்தேன். இப்போது விஷயம் புரியுதா?'
நான் சொன்னேன்:
'புரியுது.'
நான் அந்த வகையில் தனித்து அமர்ந்திருந்தேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நான் கட்டி உயர்த்திய கோட்டைகள் அனைத்தையும் அவள் இதோ... ஒரு சிறிய புன்னகையால் தகர்த்தெறிந்திருக்கிறாள். வழுக்கைக்கான காரணம் பெண் இல்லையாம்.
நான் சொன்னேன் :
'அப்படியென்றால்... 'பெண்ணுலகம்' என்ற இந்தக் கட்டுரையைக் கிழித்து பத்தாயிரம் துண்டுகளாக்கி வீசி எறிவேன்..'