ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ! - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6554
நான் கிழிப்பதைப் போல நடித்தேன். அவள் அதை என்னுடைய கையிலிருந்து தட்டிப் பறித்து எடுத்தவாறு கூறுகிறாள்:
'கிழிக்க வேண்டாம். நல்லா இருக்கு. 'சில பெண்கள்' என்று பெயரை மாற்றணும்.'
நான் எதுவும் பேசவில்லை. அவள் காதலுடன், கவலையுடன் என்னிடம் கெஞ்சினாள்:
'சில பெண்கள் இப்படித்தான் என்று எழுதினால் போதும். நீங்கள் என்னை அதில் சேர்க்கக் கூடாது. சேர்ப்பீர்களா?'
அழப் போவதைப் போல பார்த்ததால், நான் சொன்னேன்:
'இல்லை... இல்லை...'
அத்துடன் பிரச்சினை முடியவில்லை. தொடர்ந்து வந்தவை- அவளுடைய உடனடி தேவைகள். அவள் சொன்னாள்:
'உங்களுக்கு நான் ஒரு செல்லப் பெயர் கண்டு பிடித்து வைத்திருக்கிறேன். இன்றிலிருந்து நான் உங்களை புஸ்ஸாட்டோ' என்று அழைப்பேன், என் நாதனான புஸ்ஸாட்டோ... தங்க புஸ்ஸாட்டோ....'
நான் அமர்ந்து மனதிற்குள் வெந்து கொண்டிருந்தேன்.
அவள் சொன்னாள்:
'இன்றிலிருந்து நீங்கள் என்னை ஹுந்த்ராப்பி என்று அழையுங்கள். எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு முறை கூப்பிடுங்க!'
நான் அழைத்தேன். என் குடல் நடுங்கியது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் அழைத்தேன்:
'பிரிய ஹுந்த்ராப்பி என் இதயம் ஹுந்த்ராப்பி... என் தங்க ஹுந்த்ராப்பீ!'
'என் உயிரின் நாயகனான புஸ்ஸாட்டோ!'
என்னை அவள் ஓரக் கண்ணால் பார்த்தாள். நான் வெளிறிப் போகவில்லை. எந்தவொரு கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை. மூச்சே விடாமல் நான் அதே இடத்தில் அமர்ந்திருந்தேன். அவள் சொன்னாள்:
'அந்த கட்டுரையில் நல்ல விஷயங்களில் மட்டுமே நீங்கள் என்னைப் பற்றி நினைக்க வேண்டும்: பெண் இனிமையான ஒரு பிரச்னை. நன்மைகளின் உறைவிடம். அற்புத ஜோதி. அவள் குழந்தை இருக்கும் பெட்டகம் எதுவுமல்ல. குழந்தை இருக்கும் பெட்டகமாம்!' . பிறகு என்னை ஆழமாக பார்த்தாள். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் வெளிறிப் போய் விட்டேன். நான் நினைத்தேன். இனி... இப்போது அவள் எனக்கும் அஅவளுக்கும் புதிய பெயர்கள் வைக்கப் போகிறாள். அவளுடைய பெயர் பெட்டகம் என்றும், என் பெயர் குழந்தையை ஆள்பவன் என்றும் (தங்க பெட்டகமே! நாதனான குழந்தையை ஆள்பவனே! சொல்ல பெட்டகமே!) ஆனால், அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். அவள் அந்தச் செயலில் இறங்காமல் கூற ஆரம்பித்தாள்:
'நான் சொன்னேன் அல்லவா? பெண்ணைப் பற்றி நல்ல விஷயங்களையே நினைக்க வேண்டும். பெண்... இசை... நறுமணம்... தேன் அடை... அமிர்தம்... கள்ளங்கபடமற்றவள்... அன்பின் உறைவிடம்... தேவி, ஈஸ்வரி, ஹூரி- இவை அனைத்தும் பெண்களின் பன்முகத் தன்மைகள். எல்லா நல்ல கனவுகளின் உறைவிடம் அவள்... அவள்... நறுமணத்தில் மூழ்கிய நிலவைப் போன்ற ஒரு சிறிய பூங்காவனம். அவள்தான் பெண்!'
நான் அவை அனைத்தையும் கேட்டவாறு அதிர்ச்சியடைந்து போய் அமர்ந்திருந்தேன். அந்த உறைந்து போய் அமர்ந்திருந்ததில் என் தலையில் முடி முளைத்து விடுமோ என்று நான் பயப்படுகிறேன்! நான் அதே இடத்தில் அமர்ந்து ஒரு பீடியைப் பற்ற வைத்து இழுத்து, காதுகளின் வழியாக புகையை விட்டேன். அவள் கேட்டாள் :
'நீங்கள் எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?'
'எதை?'
'ஓ... மறுத்துட்டீங்க. தொடர்ந்து அவள் கண்களை நீரால் நிறைத்தாள். பிறகு மெதுவான குரலில் சொன்னாள்:
'ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ... அய்யோ அதுவல்ல...' - அவள் புன்னகைத்தாள். சிறிது நேரம் கழித்து மீண்டும் கவலை நிறைந்த குரலில் கூறினாள்:
'கவலைகளும், மோகங்களும் நிறைந்த இனிய காவியம்!'