ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ! - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6554
உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- என்னுடைய விருப்பம் மூக்கின் வழியாக புகையை விடுவதுதான். ஆனால், என்ன செய்வது? நான் புகையை இழுத்து நிறுத்தி, மூக்கின் வழியாக விட ஆரம்பிக்கும்போது, அது காதுகளின் வழியாக செல்கிறது. பெண்ணைப் புரிந்து கொள்வதற்கு முயற்சித்ததால் உண்டான பலன் இது. சில நேரங்களில் எனக்குத் தோன்றும் - என்னுடைய தலைக்குள் எதுவுமே இல்லை. அதே நேரத்தில் - அறிவு விஷயத்தில் ஏதாவது குறை இருக்கிறதா? அதுவும் இல்லை. ஆனால், அவள் கூறுவாள்:
'உங்களுடைய தலைக்குள் ஏதாவது இருந்திருந்தால், காதுகளின் வழியாக இப்படி புகை வருமா?'
நான் எதுவும் கூற மாட்டேன்.
அவள் எதையோ நினைத்துக் கொண்டு கூறுவாள்:
'ம்... வழுக்கையிலும் ஒரு அழகு இருக்கு!'
நான் எதுவுமே கூற மாட்டேன். அவள் கேட்பாள்:
'அந்த நாவலை எழுத ஆரம்பிச்சிட்டீங்களா?'
நான் கேட்பேன்: 'எந்த நாவல்?'
'ஓ... அதை நீங்கள் மறந்து விட்டீர்கள்... கவலைகளும், மோகங்களும் நிறைந்த இனிய காவியம்?'
'ஆ... ஆரம்பிக்கணும்.'
கவலைகளும், மோகங்களும் நிறைந்த இனிய காவியம்... ம்ஹு... அவளுடைய கண்ணோட்டத்தில் உலகத்தில் இருந்த, இப்போது இருக்கின்ற, இனி இருக்கப் போகிற ஒவ்வொரு பெண்ணுமே, ஒவ்வொரு கவலைகளும் மோகங்களும் நிறைந்த இனிய காவியம்தான்.
இனி உங்களிடம் கதையை ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்தியாக வேண்டும். கதையின் மீதிப் பகுதி மிகவும் கனம் நிறைந்தது. பெண்ணைப் பற்றிய முழு உண்மையும் வருகிறது. அதனால் என்னுடைய கட்டளையை மீறி இதுவரை வாசித்த பெண் ரத்தினமே - ஸ்டாப்! பெண்ணே, இனி அதை வாசிக்க வேண்டாம். வேண்டாம் என்றால் வேண்டாம். எதற்கு வாதம் செய்ய வேண்டும்? ஹாவ்! இனி மன அமைதியுடன் கதையைத் தொடரலாம்.
சில நாட்களுக்கு முன்பு நான் பெண்களைப் பற்றி ஒரு கட்டுரை எழுத நினைத்தேன். ஆனால், பெண்களைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? மொத்தத்தில் - தெரிந்திருப்பதே ஒரே ஒரு பெண்ணைத்தான். அந்த வகையில் என்னுடைய உயிர்த் தோழியை உதாரணமாக வைத்துக் கொண்டு 'பெண்ணுலகம்' என்ற பெயரில் நான் ஒரு சிறிய கட்டுரையை எழுதினேன். நான் எழுதுவது எதுவாக இருந்தாலும், அதை வாசித்துப் பார்த்து இறுதி தீர்ப்பு கூறுவது அவள்தான். நான் எழுதிய கட்டுரை என்ன என்பதைப் பற்றியும், அதைப் பற்றி அவள் என்ன கூறினாள் என்பதைப் பற்றியும் கூறுவதற்கு முன்னால், இன்னொரு விஷயத்தைக் கூற வேண்டியதிருக்கிறது. அந்த 'கவலைகளும் மோகங்களும் நிறைந்த இனிய காவியம்' என்ற நான் எழுதாத நாவலைப் பற்றித்தான். நான் அதை என்ன காரணத்திற்காக இதுவரை எழுதவில்லை?
அந்த காரணத்தையும் கூறுகிறேன். ஒரு சிறிய சுயநலம். பொதுவாகவே சமத்துவத்தைப் பற்றி நாம் சொற்பொழிவு ஆற்றுவதுண்டு. எழுதுவதுமுண்டு. அதே போல பணக்காரனும் பிச்சைக்காரனும் இல்லாத - விஷயம் புரிந்து விட்டதல்லவா? அப்படிப்பட்ட சமத்துவம் உள்ள இனிய ஒரு உலகம் உண்டாக வேண்டுமென்று வெறுமனே ஒரு கோஷத்தை எல்லோரும் போடுவதுண்டு. ஆனால், அது நடக்க வேண்டுமென்று எவ்வளவு பேர் விரும்புகிறார்கள் என்பது தெரியுமா? எது எப்படி இருந்தாலும்- பணம் இருப்பவனுக்கு அப்படி ஒரு ஆசை இல்லை. அதனால் அது பணக்காரனின் குற்றமா? 'டேய்... இங்கே வா' என்று கூறும்போது, பத்து பேர் நெளிந்தவாறு நமக்கு முன்னால் நின்று கொண்டிருப்பது ஒரு சுவாரசியமான விஷயம்தான். மதிப்பு உள்ளதும் கூட. கிட்டத்தட்ட இந்த மனநிலைதான் எனக்கு இப்போது இருக்கிறது. அதாவது- நான் பணக்காரனின் பக்கம் இருக்கிறேன் என்று அர்த்தம். ஆனால், என்னிடம் பணமில்லை. வழுக்கைத் தலை இருக்கிறது என்று கூறினால், என்னிடம் ஏராளமான அறிவு இருக்கிறது என்று அர்த்தம். உலகத்திலிருக்கும் எல்லா ஆண்களுக்கும் ஒரே மாதிரி அறிவு இருப்பது நல்லதும். அதற்கு சமத்துவம் நிறைந்த அழகான வழுக்கைத் தலை எல்லா இடங்களிலும் உண்டாக வேண்டும். ஆனால், இந்த நிலை உண்டாக நான் விரும்புகிறேனா? இல்லை என்பதுதான் சத்தியமான உண்மை. தலையில் முடி இருக்கும் ஏராளமான முட்டாள்கள் உலகத்தில் இருப்பது ஒரு சுவாரசியமான விஷயம். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- உலகத்தில் இப்போது இருக்கும் முடியைக் கொண்ட தலை உள்ள கழுதைகளை வழுக்கைத் தலை உள்ள அறிவாளிகளாக ஆக்க என்னால் முடியும் அதற்கான ஒரே வழி என்ன தெரியுமா? கவலைகளும் மோகங்களும் நிறைந்த இனிய காவியம் என்ற நாவல். அதில் அனைத்தும் இருக்கின்றனவே! அவளை நான் முதல் தடவையாக சந்தித்த அந்த இனிய நிமிடத்திலிருந்து... இந்த இனிய நிமிடம் வரை - அதாவது, நீண்ட இந்த காலகட்டத்திற்கிடையில் அவள் கூறியது, செய்தது... அனைத்தும் ஒரு எழுத்து கூட விடாமல் நாவலில் இருக்கும்.
அந்த நாவலை ஒரு முறை வாசித்து விட்டால், எப்படிப்பட்ட முடியைக் கொண்ட மனிதனும் வழுக்கைத் தலை உள்ளவனாக ஆகி விடுவான். ஒரு விஷயம் இருக்கிறது - பெண்களுக்கு எதுவுமே நடக்காது என்பதுதான் அது.
எது எப்படி இருந்தாலும்- அந்த நாவலை நான் சமீப காலத்தில் எழுத நினைக்கவில்லை. சுருக்கமாக கூறுவதாக இருந்தால் - சமத்துவம் நிறைந்த அழகான வழுக்கை சமீப நாட்களில் உலகத்தில் உண்டாகப் போவதில்லை. முடி வைத்திருக்கும் முட்டாள்கள் இன்னும் சிறிது காலம் இப்படியே வாழ்ந்து கொண்டு இருக்கட்டும். இந்த தீர்மானம் சற்று கடுமையான ஒன்றாக இருக்கிறது என்று அரசாங்கம் நினைத்தால், இப்போது அமைச்சர்களாக இருக்கும் பத்து முட்டாள்களை ஒரு சாதாரண கட்டணத்தை வாங்கிக் கொண்டு நான் வழுக்கைத் தலையர்களாக ஆக்குகிறேன் என்று இதன் காரணமாக உறுதி கூறுகிறேன். பணக்காரர்களோ, முன்பு மன்னர்களாக இருந்தவர்களோ மனு போட வேண்டிய அவசியமில்லை. அமைச்சர்களைச் சரி செய்யலாம் என்று கூறுவது கூட ஒரு தியாகம் என்ற நிலையில்தான். இனி இது சம்பந்தமாக வாதமோ, எதிர்வாதமோ செய்வதற்கு நான் தயாராக இல்லை என்ற முன்னறிவிப்புடன் மெதுவாக கதைக்குள் நுழைகிறேன்.