ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ!
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6555
ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ!
வைக்கம் முஹம்மது பஷீர்
தமிழில் : சுரா
'கவலைகளும், மோகங்களும் நிறைந்த இனிய காவியம்' என்ற பெயரில் என்னுடைய உயிர்த் தோழியைப் பற்றி ஒரு பெரிய புதினத்தை நான் எழுத வேண்டுமென்று மேற் சொன்ன என்னுடைய உயிர்த் தோழி கூற ஆரம்பித்து எவ்வளவு காலமாகி விட்டது, தெரியுமா? வெறுமனே கூறவில்லை. அழவும் செய்வாள். வெறும் அழுகையா? என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, தேம்பித் தேம்பி அழுவாள். பிறகு கண்ணீர் முழுவதையும் அவள் என்னுடைய நெஞ்சுப் பகுதியில் தொட்டு தேய்ப்பாள். அத்துடன் நிறுத்திக் கொள்வதில்லை. அழகான புன்னகையுடன் 'எழுதுவீங்கள்ல?' என்று அவள் கேட்கவும் செய்வாள். அப்போது நான்-
'ஹாவ்... ஒரு விஷயத்தைக் கூறுவதற்கு மறந்து விட்டேன். 'ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ' என்ற அருமையான இந்தக் கதையைப் பெண்களும் வழுக்கை விழாத ஆண்களும் வாசிக்கக் கூடாது.
வாசித்தால் என்ன செய்ய வேண்டுமென்று கேட்டால்... கூறுகிறேன். அடித்து நான் உங்களுடைய எலும்பை நொறுக்குவேன் என்று கூறலாம். ஆனால், கூறினால், அப்படிச் செய்ய வேண்டாமா? ஆனால் அதற்கு முன்பு மாதிரி எனக்கு நேரமில்லை. உங்களுக்கு என்ன வேலை... என்று கேட்டால்- கூறுகிறேன்... காதல்!
அவளை நான் இப்போதும் காதலிக்கிறேன். இப்போதும் என்று கூறுவதில் அர்த்தம் இருக்கிறது. தெரியுதா? ஆனால், வெறும் காதலா? அழகானதும், இனிமையானதும், நிரந்தரமானதும், வர்ணமயமானதுமான காதல்!
'வழுக்கைத் தலையர்களின் அரசரே!' என்றுதான் அவள் என்னை அழைப்பாள். 'நாதா' என்றும் சில நேரங்களில் அழைப்பாள். அவள் செய்த ஒரு... ஆ! ஒன்றா... அவள் செய்த நூறாயிரம் துரோகங்களைப் பற்றி கூறுகிறேன். ஓ... அப்படியே இல்லையென்றாலும் - எந்த பெண்தான் ஆணுக்குத் துரோகம் செய்யாமல் இருக்கிறாள்? நான் இங்கு ஆண் என்று குறிப்பிடுவது வழுக்கைத் தலை உள்ளவர்களை மட்டும் மனதில் வைத்துத்தான். ஆமாம்... நான் என்ன கூற வருகிறேன் என்று கேட்கிறீர்களா? - என்னுடைய வழுக்கைத் தலையைப் பற்றிய கதை.
இதன் ஆரம்பம் கீழே கூறப்படும் விதத்தில்தான் நடந்தது.
இன்னொரு உண்மையையும் கூறட்டுமா? இந்த உலகத்திலிருக்கும் எல்லா வழுக்கைத் தலையர்களின் கதை இது.
கதையை ஆரம்பிப்பதற்கு முன்னால், இன்னொரு சிறிய விஷயத்தையும் கூறி விடுகிறேன். இனிமேல் நீங்கள் வழுக்கைத் தலை மனிதர்களைப் பார்த்தால், அவர்களை வணங்குங்கள். அவர்கள் மிகப் பெரிய மனிதர்கள். தியாகிகள். எந்த விஷயத்தில் தியாகிகள் என்று கேட்டால் - ஆமாம்... அதைத்தான் கூறப் போகிறேன். பிறகு... ஒரு கேள்வி மீதமிருக்கிறது.
நீங்கள் எந்தப் பக்கம்?
அதாவது - இந்த கெட்டு நாறிப் போயிருக்கும் சமுதாய அமைப்பில் இரண்டு பிரிவுகள் இருக்கின்றனவே! அதில் வழுக்கைத் தலையர்களின் பக்கம் நல்ல விஷயங்கள் இருக்கின்றன, அன்பு இருக்கிறது, நம்பிக்கை இருக்கிறது, இதயமும் மூளையும் இருக்கின்றன. சுருக்கமாக கூறுவதாக இருந்தால்- மனிதத் தன்மை இருக்கிறது என்பது சாரம். பொதுவாக கூறுவதாக இருந்தால்- நாங்கள் நல்லவர்கள். சாக்ரட்டீஸ், உமர்கய்யாம், ஷேக்ஸ்பியர், லெனின், தர்யது குஞ்ஞித்தொம்மன், நான் - ஆ! அது இருக்கட்டும். என்னுடைய வழுக்கைத் தலையைப் பற்றிய வீர கதையைத் தொடர்கிறேன்.
ஆமாம்... முன்பு ஒரு காலத்தில் என்னுடைய தலையில் சுத்தமற்றவையும், கருப்பு நிறம் கொண்டவையுமான ஏராளமான முடிகள் இருந்தன. மினுமினுப்பு கொண்டவையாகவும் சுருளானவையாகவும் அவை இருந்தன. அன்று நான் மிகப் பெரிய முட்டாளாக இருந்தேன். எனக்குத் தெரிந்தது என்று கூறுவது மாதிரி ஒரு விஷயம் கூட இல்லை. நான் நின்று, குடித்து, தலை முடியை நன்கு வாரி, பவுடர் பூசி... அப்படியே நடந்து திரிந்து கொண்டிருந்தேன். ஹோ... முடி இருந்த அந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்கும்போது - நான் முழுமையாக வெட்கப்பட்டு பதுங்கிக் போகிறேன். அந்த சுருள் முடியைக் கொண்டிருந்த மனிதன் நான்தானே!'
ஆனால், இப்படி வழுக்கைத் தலை உண்டாகக் கூடிய மிகப் பெரிய அதிர்ஷ்டம் எப்படி வாய்த்தது என்று கேட்டால், கூறுகிறேன்:
நான் முன்பு கூறிய சுத்தமற்ற தலைமுடி இருந்த காலம். ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் பதினொரு மணி. மடியில் ஒரு புத்தகத்தைத் திறந்து வைத்துக் கொண்டு நான் தோட்டத்தில் வெறுமனே அமர்ந்திருந்து, கனவு கண்டு கொண்டிருந்தேன். அப்போது நான் முன்பு கூறிய உயிர்த் தோழி எனக்கு அருகில் வந்து கொண்டிருக்கிறாள். முதல் பார்வையிலேயே அவள் என்னால் ஈர்க்கப்பட்டு விட்டாள். எனக்கும் அவள் மீது கிட்டத்தட்ட அப்படித்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
அவளைப் பார்த்ததும் 'டேய், இது ஒரு கவலைகளும், மோகங்களும் நிறைந்த ஒரு இனிய காவியமாச்சே!' என்று என்னுடைய மனதிற்குள் தோன்றியது. சில நாட்கள் கடந்து சென்ற பிறகு, என் மனதில் தோன்றியதை நான் அவளிடம் வெளிப்படையாக கூறவும் செய்தேன். அதை அவள் மறக்கவில்லை என்பதைத்தானே இந்தக் கதை தெளிவாக கூறுகிறது! அன்று அவள் என்னிடம் ஏராளமான விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு நினைத்திருந்தாள். (இப்போதும் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள்). நான் அவை ஒவ்வொன்றையும் மிகவும் கவனம் செலுத்தி கேட்டேன். 'மிகவும்' என்று கூறுவது நல்ல அர்த்தம் உள்ள சொல்... தெரியுதா? நான்தான் கூறினேனே- அவள் கூறியவை ஒவ்வொன்றையும் மிகவும் கவனம் செலுத்தி, காதலுடன், ஒரே சிந்தனைப் போக்குடன் கேட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது என்று கேட்கிறீர்களா? இன்னொரு ரகசியத்தைக் கூறுகிறேன். அதுதான் சம்பவத்திற்குக் காரணம். வேறொன்றுமில்லை. சாக்ரட்டீஸ் முதலான என்னுடைய முன்னோடிகள் செய்ததுதான். சுருக்கமாக கூறுவதாக இருந்தால் - நான் பெண்ணைப் புரிந்து கொள்வதற்கு முயற்சித்தேன். ஒரு பழமொழி இருக்கிறதே! பெண்ணைப் புரிந்து கொண்டவன், எல்லாவற்றையும் புரிந்து கொண்டவன்!
அப்போது ஒரு கேள்வி வருகிறது. பெண்ணை எப்படி புரிந்து கொள்வது?
அந்த ரகசியத்தையும் கூறுகிறேன். பைபிளின்படி வானம், பூமி, கடல் என்று வேண்டாம்- இந்த மிகப் பெரிய பிரபஞ்சத்தையும், இதிலிருக்கும் மற்ற அனைத்தையும் படைப்பதற்கு தெய்வம் எவ்வளவு நாட்கள் செலவிட்டது? நமக்குத் தெரியும். ஆறு நாட்கள். இதே போல ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணைப் புரிந்து கொள்வதற்கு எத்தனை நாள் வேண்டும்?
சாக்ரட்டீஸ் எவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டார்? நமக்குத் தெரியாது. ஆனால், நான் எத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டேன் என்பதைக் கூறுகிறேன்: வெறும் ஆறே ஆறு நாட்கள்.