ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ! - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6554
அது எப்படி என்பதையும், அதற்குப் பிறகு என்ன நடந்தது என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமா? கூறுகிறேன். ஞாயிற்றுக் கிழமை காலையிலிருந்து இரவு பன்னிரெண்டு மணி வரை என்னுடைய உயிர்த்தோழி கூறியதும் செய்ததும் மறக்காமல், திங்கட்கிழமை காலையிலிருந்து பன்னிரெண்டு மணி வரை கூறியதும் செய்ததும் மறக்காமல்,
புதன் கிழமை காலையிலிருந்து - அப்படியே வியாழன், வெள்ளி, சனி - அன்று இரவு பன்னிரெண்டு மணிக்கு - அதாவது, ஆறு நாட்கள் அவள் கூறியதும் செய்தும் ஒன்றாகச் சேர்ந்து என்னுடைய தலைக்குள் - சுருக்கமாக கூறுவதாக இருந்தால் - சனிக்கிழமை இரவு சரியாக பன்னிரெண்டு மணிக்கு என்னுடைய தலைக்குள் ஒரு பூகம்பமும், இடி முழக்கமும், மின்னல் வெட்டும் உண்டாயின. நான் மயக்கமடைந்து அவளுடைய மடியில் விழுந்தேன்... மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, என்னுடைய தலையின் மேற்கூரையில் எதுவுமில்லை. முழுமையான, அழகான வழுக்கை!
அதற்குப் பிறகு வருவது யார் தெரியுமா? ஹுந்த்ராப்பிபுஸ்ஸாட்டோ!
அந்தக் கதையைத்தான் இனி கூறப் போகிறேன். எங்கு ஆரம்பிக்க வேண்டும், எப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று எதுவும் தெரியவில்லை என்று சிலர் புலம்புவது உண்டு அல்லவா? அப்படிப்பட்ட சிரமங்களெதுவும் இங்கு இல்லை. நேராக கதையை நோக்கித்தான் பயணமே. அப்போது... ஆமாம். அந்த வகையில் எனக்கு முழுமையான, அழகான வழுக்கைத் தலை கிடைத்தது. மொத்தத்தில் எனக்கு ஒரு மென்மைத்தனம் உண்டானது. ஒரு இமயமலைக்கு நிகரான சுமை தலையை விட்டு இறங்கியதைப் போல இருந்தது. திடீரென்று எனக்கு அறிவு அதிகமாகி விட்டதைப் போன்ற உணர்வு உண்டானது. தெரிந்து கொள்ள இல்லாதவை என்று எதுவுமில்லை. சுருக்கமாக கூறுவதாக இருந்தால்- நான் ஒரு தத்துவவாதி... ஞானி... ஆராய்ச்சியாளன். இது இப்போது எனக்கு மட்டுமே தோன்றக் கூடிய ஒரு விஷயமா? எந்த வழுக்கைத் தலையனுக்கும் இந்த மாதிரிதான் தோன்றும். முன்பு எங்குமே இல்லாத ஒரு ஆனந்தம். எப்போதும் புன்னகைதான். ஆனால், என்னுடைய உயர்த்தோழிக்கு கவலை!
அவள் என்னுடைய தலையில் முடியை வரவழைப்பதற்காக தான் கற்ற அனைத்து விஷயங்களையும் பயன்படுத்திப் பார்த்தாள். என்னென்னவோ மூலிகை மருந்துகளை என் தலையில் அரைத்துத் தேய்த்தாள். முடியை வரவழைக்கச் செய்வதற்கான அனைத்து விதமான களிம்புகளையும், எண்ணெய்களையும் சோதித்துப் பார்த்தாள். என்னைத் தலை கீழாக நிற்க வைத்து ஆசனம் செய்ய வைத்தாள். அதில் தோல்வி கிடைத்தவுடன், அதற்குப் பிறகு நேர்த்திக் கடன்கள்... வழிபாடுகள்... வைக்கத்தப்பன், இளங்காவிலம்மா, வடக்கு நாதன், கொடுங்கல்லூர் பகவதி, குருவாயூரப்பன், ஶ்ரீபத்மநாபன், பருமல தேவாலயம், திருவங்கோட்டு தேவாலயம், புதுப்பள்ளி தேவாலயம், உதயம்பேரூர் தேவாலயம், நிரணத்து தேவாலயம், சிஸ்டர் அல்ஃபோன்ஸா, நாகூர் வீராசாயு, காஞ்ஞிரமற்றத்து பரீதவ்லியா, மம்புரத்தவ்லியா, பீமா பள்ளி வாசல், அஜ்மீர் - இப்படி ஏராளமான நேர்த்திக் கடன்களையும், வழிபாடுகளையும் செய்தாள். அவற்றாலும் எதுவும் நடக்காமற் போகவே, சாட்சாத் தெய்வத்தை நோக்கி பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள்:
'என் தெய்வமே, என் நாதரின் தலையில் ஐந்தாறு முடிகளையாவது, வளரும்படி செய்.'
அந்த வகையில் ஆறு மாதங்கள் கடந்து விட்டன. எதுவுமே நடக்கவில்லை. ஒரு சிறிய உரோமம் கூட முளைக்கவில்லை. முன்பு இருந்த மாதிரியே தலையின் மேற்கூரை பரந்து விரிந்து கிடக்கும் சஹாராவைப் போல அழகாகவே இருந்தது.
இங்கு இரண்டு கேள்விகளுக்கு வாய்ப்பு இருக்கிறது.
1. என் உயிர்த் தோழி ஒரு தனிப்பட்ட மதத்தைச் சேர்ந்த தெய்வத்திடமும், ஞானிகளிடமும் வேண்டிக் கொள்ளாமல், எல்லா மதங்களைச் சேர்ந்த தெய்வங்களிடமும், ஆண் துறவிகளிடமும், பெண் துறவிகளிடமும் ஏன் வேண்டிக் கொண்டாள்?
2. பிரார்த்தனையின் மூலம் பயன் எதுவும் உண்டாகாதா?
பதில் :
1. என்னை என்னுடைய உயிர்த்தோழியால் சரியாக புரிந்து கொள்ள முடியாமற் போயிருக்கலாம். அதாவது - என்னுடைய நம்பிக்கை வார்த்தைகள் எந்த தேவாலயத்திற்கு முன்னால் கிடக்கின்றன என்ற விஷயம் ஒரு வேளை அவளுக்குத் தெரியாமல் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும், அவளிடம் அதைப் பற்றி கேட்பதற்கு எனக்கு துணிச்சல் இல்லை. அவள் அழுவாள். பெண்ணைப் போல அந்த அளவிற்கு அதிகமான கண்ணீரைக் கொண்ட ஒரு படைப்பு! ரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? உலகத்திலுள்ள எல்லா பெண்களும் ஒன்று சேர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமை காலையில் வெறுமனே சற்று அழுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், எட்டரை மணிக்குப் பிறகு பூமி இருக்காது. பயங்கரமான கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கிப் போய் விடும். அப்படியென்றால், முதல் கேள்விக்கு என் பக்கம் பதில் இல்லை என்பதுதான் விஷயமே. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் - புதிய தந்திரங்களுடன் வார்த்தைகள் எதையும் வெளியிடுவதில்லை என்பதுதான்...
2. பிரார்த்தனைகளால் பலன் உண்டாகும். பலன் கிடைத்திருக்கிறது. இனியும் கிடைக்கும். பிறகு... என் தலையில் ஏன் முடி முளைக்கவில்லை? அந்த ரகசியத்தையும் கூறுகிறேன். ஒவ்வொரு இடத்திற்கும் என் உயிர்த் தோழியின் பிரார்த்தனையும், மற்ற விஷயங்களும் சென்றன அல்லவா? அவற்றுடன் சேர்ந்து என் பக்கத்திலிருந்து அவற்றுக்கு எதிரான பிரார்த்தனையும் போயிருக்கின்றன. வடக்கு நாதா... இல்லாவிட்டால் நிரணத்து தேவாலயம்... இல்லாவிட்டால் வைக்கத்தப்பா பாருங்கள், நாம் அருகருகே இருப்பவர்கள். என்னை ஏமாற்றி விடாதீர்கள். எனக்கு முடி வேண்டாம். ஏனென்றால், என்னால் முன்பைப் போல முட்டாளாக ஆக முடியவில்லை. என்னைக் காப்பாற்றுங்கள். இந்த விதத்தில் என்னுடைய பிரார்த்தனையும் சென்றிருக்கிறது. பிறகு... முடி வளர வேண்டியது என் தலையில்தானே? நான் தான் தேவைப்படுபவன். எனக்கு வேண்டாம் என்று கூறினால்...? சுருக்கமாக கூறுவதாக இருந்தால் - பிரார்த்தனைக்கு பலன் இருக்கிறது என்பது தெளிவாக தெரிந்து விட்டதல்லவா? ஆனால், நான் பிரார்த்தனை செய்த தகவல் எதையும் அவளிடம் கூறவில்லை. நான் அதை மனதில் நினைத்தவாறு ஏதாவது பீடியையோ சிகரெட்டையோ பற்ற வைத்து, புகைத்து, காதுகளின் வழியாக புகையை விட்டுக் கொண்டே அங்கே உட்கார்ந்து ரசிக்கலாம்.
அவள் கூறுவாள்:
'நீங்கள் ஏன் தனியாக உட்கார்ந்து, சிரித்துக் கொண்டு இருக்கீங்க? அய்யோ... அந்த காதுகளின் வழியாக இப்படி புகையை விடாதீங்க. யாராவது பார்த்தால், நிலைமை மோசமாயிடும். தேவைப்பட்டால், நீங்கள் மூக்கின் வழியாக புகையை விட்டுக்கோங்க.'