ஒரு கெட்ட கனவு - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7674
'பிறகு... என்னுடைய நியமனத்திற்கு சபை அமைப்பிற்குத் தர வேண்டிய பணத்தையும் கொடுத்து முடிக்கவில்லை. மாதம் பத்து ரூபிள் வீதம் இருநூறு ரூபிள்கள் தர வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். மீதி என்ன இருக்கிறது என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா? அது மட்டுமல்ல. பாதிரியார் ஆவ்ராமிக்கு ஒவ்வொரு மாதமும் மூன்று ரூபிள்களாவது தர வேண்டும்.'
'யார் பாதிரியார் ஆவ்ராமி?'
'எனக்கு முன்பு ஸிங்கோவோவில் பாதிரியாராக இருந்தவர். அவரை விலக்கி விட்டார்கள். அவர் இப்போதும் ஸிங்கோவோவில்தான் தங்கியிருக்கிறார். வேறு எங்கு போவது? அவருக்கு யார் உணவு தருவார்கள்? அவர் வயதானவராக இருக்கலாம். ஆனால், உணவும் ஆடையும் நிலக்கரியும் இல்லாமல் வாழ முடியாதே! அவர்- அதுவும் ஒரு பாதிரியார் பிச்சை கேட்டு யாசிப்பதைப் பார்க்க என்னால் இயலாது. அது பெரிய பாவமாக இருக்கும். நான் செய்யக் கூடிய பெரிய பாவம். எல்லோரின் கையிலிருந்தும் அவர் கடன் வாங்கியிருக்கிறார். எனினும், அவருக்கும் தேவைப்படுவதைக் கொடுக்காமலிருந்தால், நான் பாவம் செய்தவன் ஆவேன்.'
பாதிரியார் யாக்கோவ் வேகமாக எழுந்து, தரையையே வெறித்துப் பார்த்தவாறு அறையின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு நடந்து கொண்டிருந்தார். 'என் தெய்வமே! என் தெய்வமே!' என்று தாழ்ந்து குரலில் கூறியவாறு அவர் முழு நேரமும் கைகளை உயர்த்திக் கொண்டும், இறக்கிக் கொண்டும் இருந்தார். 'எங்களின் மீது கருணை வைக்க வேண்டும், தெய்வமே! எங்களைக் காப்பாற்றணும். சிறிதளவு நம்பிக்கையும், பலவீனனுமான இவன் எதற்கு இந்த புனித பதவியை ஏற்றெடுத்தான்? என் நிராசையின் ஆழத்தை என்னாலேயே அளக்க முடியவில்லை. பரிசுத்த தெய்வ மாதாவே, எங்களைக் காப்பாற்று!'
'நீங்கள் சமாதானமாக இருங்கள்...'- குனின் கூறினான்.
'இது பசியின் காரணமாக உண்டான வேதனை, பாவல் மிகாய்லோவிச். என்னை மன்னித்து விடுங்கள். என்னால் இதை கூறாமல் இருக்க முடியவில்லை. கெஞ்சினால் யார் வேண்டுமானாலும் உதவி செய்வார்கள் என்ற விஷயம் எனக்கு தெரியும். ஆனால், என்னால் அது முடியாது. இந்த ஏழை விவசாயிகளிடம் பிச்சை வாங்குவதற்கு என்னால் எப்படி முடியும்? நீங்கள் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்தானே! உங்களுக்குத் தெரியுமே! அவரவர்களுடைய தேவைக்கே இல்லாதவர்களிடம் எப்படி தானம் கேட்க முடியும்? நல்ல வசதி படைத்த நிலச்சுவாந்தார்களிடம் கேட்பதற்கும் என்னால் இயலவில்லை. என் மதிப்பு... எனக்கு அது வெட்கக்கேடான விஷயம்!'- பாதிரியார் யாக்கோவ் அமைதியற்ற மன நிலையுடன் இரண்டு கைகளைக் கொண்டும் தலையைச் சொறிந்து கொண்டார்.
'எனக்கு வெட்கக் கேடான விஷயம், தெய்வமே! என்ன ஒரு வெட்கக் கேடு! என்னுடைய இந்த வறுமை நிலை ஆட்களுக்குத் தெரிய வேண்டாம். நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்தபோது, அங்கு ஒரு அவுன்ஸ் தேநீர் தூள் கூட இல்லாமலிருந்தது. பாவல் மிகாய்லோவிச், ஒரு மணி தானியம் கூட இல்லை. வெளிப்படையாக கூறுவதற்கு, கவுரவம் என்னை அனுமதிக்கவில்லை. என் ஆடைகள் எனக்கு வெட்கக் கேடான விஷயங்களாக இருக்கின்றன. இந்த புள்ளிகள்... என் ஆடை... என் பசி... ஒரு பாதிரியாருக்கு கவுரவம் என்ற ஒன்று இருக்க வேண்டுமோ என்னவோ?
பாதிரியார் அறைக்கு மத்தியில் நடந்து கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு, குனின் அங்கு இருக்கிறான் என்பதைக் கூட மறந்து விட்டு, தனக்குள் நியாய விசாரணை செய்ய ஆரம்பித்தார்:'
'பசியையும், வெட்கக் கேட்டையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் என்று கூட வைத்துக் கொள்வோம். என் மனைவி? நல்ல ஒரு வீட்டிலிருந்தல்லவா அவளை நான் அழைத்துக் கொண்டு வந்தேன்? அவளுக்கு வெண்மையான, சதைப் பிடிப்பான கைகள் இருக்கின்றன. மரியாதையுடன் வாழ்ந்தவள். தேநீரும், வெள்ளை நிற ரொட்டியும், கம்பளியும்... இவை எல்லாவற்றையும் அடைந்திருந்தவள். தன்னுடைய வீட்டில் இருந்தபோது, பியானோ வாசித்துக் கொண்டிருந்தவள். அவள் வயதில் மிகவும் இளையவள். இருபது வயது கூட ஆகவில்லை. நல்ல ஆடைகள் அணிவதற்கும், சந்தோஷமாக இருப்பதற்கும், உறவினர்களைப் பார்ப்பதற்கும் அவளுக்கு ஆசை இருக்கும்... என்னுடன் சேர்ந்து... ஒரு சமையல்காரியை விட கஷ்டமானது அவளுடைய விஷயம். வெளியே செல்வதற்கே அவளுக்கு வெட்கக் கேடாக இருக்கிறது. தெய்வமே! என் தெய்வமே! எப்போதாவது ஒரு முறை எங்கிருந்தாவது நான் கொண்டு வரும் ஒரு ஆப்பிளோ பிஸ்கட்டோதான் அவளுக்கு மொத்தத்தில் கிடைக்கக் கூடிய சந்தோஷமே...
'எங்களை இணைப்பது அன்பு அல்ல... இரக்கம்தான்... சங்கடம் இல்லாமல் என்னால் அவளைப் பார்க்கவே முடியவில்லை. இந்த நாட்களில் என்னதான் நடக்கிறது? பத்திரிகைகளில் அவற்றைப் பற்றி எழுதினால், ஆட்கள் நம்பக் கூட மாட்டார்கள். இவையெல்லாம் எப்போது முடிவுக்கு வரப் போகின்றனவோ, தெரியவில்லை.'
'போதும், ஃபாதர். நிறுத்துங்க.'- அந்த பேச்சைக் கேட்டு வேதனையும் கோபமும் ஏற்பட்டு, குனின் சத்தம் போட்டு கத்தினான். வாழ்க்கையைப் பற்றி ஏன் இந்த அளவிற்கு நிராசையுடன் சிந்திக்க வேண்டும்?
'மன்னிக்க வேண்டும். பாவல் மிகாய்லோவிச்...'- பைத்தியம் பிடித்த மனிதரைப் போல பாதிரியார் யாக்கோவ் புலம்பினார்: 'என்னை மன்னிச்சிடுங்க. இது எதுவும்... பெரிய விஷமில்லை. இதற்கெல்லாம் பெரிய மதிப்பு தர வேண்டாம். நான் என்னை நானே குற்றம் சாட்டிக் கொள்கிறேன். அப்படித்தான் காரியங்கள் நடக்கின்றன...'- சுற்றிலும் பார்த்து விட்டு அவர் தாழ்ந்த குரலில் கூறினார்: