ஒரு கெட்ட கனவு - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7674
தேவாலயத்தில் ஆட்கள் குறைவாகவே இருந்தார்கள் அவனுக்கு ஆச்சரியம் உண்டானது. வயதானவர்களும் குழந்தைகளும் மட்டுமே தேவாலயத்தில் இருந்தார்கள். அங்குள்ள இளைஞர்களெல்லாம் எங்கு போனார்கள்? மேலும் சிறிது நேரம் அந்த வயதான முகங்களைக் கூர்ந்து பார்த்தபோது புரிந்து விட்டது- அவர்கள் யாருமே வயதானவர்கள் அல்ல. இளைஞர்கள்தான்... அந்த காட்சி பிழைக்கு அவன் பெரிய முக்கியத்துவம் எதுவும் தரவில்லை.
தேவாலயத்தின் உட்பகுதியும் வெளிப் பகுதியைப் போலத்தான்... கலை வேலைப்பாடுகள் எதுவுமில்லை. சிதிலமடைந்து, விரிசல் உண்டான நிலையில் இருந்தது. உருவக் கூடுகளிலும், புகையின் நிறம் படர்ந்திருந்த சுவற்றிலும் காலத்தின் முத்திரை அடையாளங்கள் இல்லாத ஒரு அங்குல இடம் கூட இல்லை. நிறைய சாளரங்கள் இருந்தாலும், தேவாலயத்தின் உட்பகுதி மொத்தத்தில் இருண்டு போய் காணப்பட்டது. 'இதய சுத்தம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனை செய்யட்டும்...'- குனினின் மனம் கூறியது. 'ரோமில் இருக்கும் செயின்ட் பீட்டர்ஸ் பஸிலிக்காவின் கம்பீரமும் அழகும் ஆச்சரியப்பட வைக்கிற அளவிற்கு, இங்குள்ள எளிமையும் வறுமையும் ஒருவனை ஈடுபாடு கொள்ளச் செய்கின்றன.'
ஆனால், அவனுடைய வழிபாட்டு எண்ணம், பாதிரியார் யாக்கோவ் பிரார்த்தனை செய்யக் கூடிய இடத்தை அடைந்து, 'பாவ மன்னிப்பு' கேட்க ஆரம்பித்தவுடன், மறைய ஆரம்பித்தது. ஸெமினாரியிலிருந்து நேராக தேவாலயத்தின் பொறுப்பு கிடைத்து, அங்கே வந்து சேர்ந்ததாலும் வயது மிகவும் குறைவாக இருந்ததாலும் இருக்க வேண்டும்- அவருடைய பிரார்த்தனைக்கு ஒரு தாள லயமோ, பக்தியின் பாதிப்போ இருக்கவில்லை. குரலில் வேறுபட்ட தன்மைகள் காணப்பட்டன. கை குவித்து வணங்குவது மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மிகவும் வேகமாக இருந்த நடையும், பைத்தியக்காரத்தனமான வேகத்தில் கூண்டை திறந்து மூடுவதும் எரிச்சலை உண்டாக்கக் கூடிய வகையில் இருந்தன. வயதானவனும், காது கேட்காதவனுமான மணி அடிக்கக் கூடிய மனிதன் பிரார்த்தனைகளில் பாதியைக் கேட்கக்கூட இல்லை. சில நேரங்களில் பாதிரியார் பிரார்த்தனை செய்து முடித்த பிறகும், அவன் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த இடத்தையே பார்த்தவாறு காதுகளை தீட்டி வைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருப்பான். பிறகு யாராவது ஆடையைப் பிடித்து இழுக்கும்போதுதான், பிரார்த்தனையையே சொல்ல ஆரம்பிப்பான். குழைந்து, மேலும் கீழும் மூச்சு விட்டுக் கொண்டு, வேதனையை வெளிப்படுத்தும் சோர்வடைந்த குரலில். இவையெல்லாவற்றையும் விட பாடல் நன்றாக இருந்தது. பாடகர்களின் கூட்டம் இருந்த பகுதியின் கைப்பிடியின் அளவிற்குக் கூட உயரமில்லை பாடலைப் பாடிய இளைஞனுக்கு. வெட்டுக் கிளியைப் போல தொண்டை உடைந்து பாடுவதைக் கேட்டால், வேண்டுமென்றே குரலை மாற்றி பாடுகிறான் என்றே தோன்றும். சிறிது நேரம் கேட்டு நின்று கொண்டிருந்து விட்டு, குனின் வெளியே சென்று புகை பிடித்தான். மனதில் சோர்வு உண்டாக, அவன் அந்த வெளிறிப் போன தேவாலயத்தையே வெறுப்புடன் பார்த்தான்.
'ஆட்களுக்கு பக்தியுணர்வு குறைந்து விட்டது என்ற குற்றச்சாட்டு இவர்களுக்கு எப்போதும் இருக்கிறது. இப்படிப்பட்ட பாதிரியார்களைத்தான் மக்களுக்கு மத்தியில் அனுப்பி வைக்கிறார்கள் என்றால், ஒரு ஆச்சரியமும் இல்லை.
குனின் மேலும் இரண்டு மூன்று முறைகள் தேவாலயத்திற்குள் சென்றான். ஆனால், ஒவ்வொரு தடவையும் நீண்ட நேரம் ஆவதற்கு முன்பே, தன்னையே அறியாமல் அவன் வெளியே வந்து விடுவான்.
'பாவ மன்னிப்பு' நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, பாதிரியார் யாக்கோவ் அவனை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றார். அங்கிருக்கும் விவசாயிகளின் வீட்டைப் போலவே பாதிரியாரின் வீடும் இருந்தது. மேற்கூரை கொஞ்சம் நன்றாகவே இருந்தது. சாளரங்களில் வெள்ளை நிற திரைச் சீலைகள் தொங்க விடப்பட்டிருந்தன. இவைதான் மொத்தத்தில் இருந்த வேறுபாடு. பாதிரியார் குனினை ஒரு சிறிய அறைக்குள் அழைத்துச் சென்றார். மண்ணால் ஆன தரை, சுவற்றில் விலை குறைவான வால் பேப்பர். ஃப்ரேம் போடப்பட்ட சில புகைப்படங்களும் ஒரு க்ளாக்கும் மட்டுமே அந்த அறையில் இருந்த ஆடம்பர பொருட்கள். ஃபர்னிச்சரைப் பார்க்கும்போதே தோன்றும்- பாதிரியார் பக்கத்து வீடுகளில் சுற்றி அலைந்து சம்பாதித்தது அது என்ற விஷயம். மூன்று கால்களைக் கொண்ட ஒரு வட்ட வடிவமான மேஜை, ஒரு ஸ்டூல், இரண்டு நாற்காலிகள்- அவற்றில் ஒன்று நன்கு சாய்ந்து அமரக் கூடியது. ஒன்று சரிந்து சாய்ந்த நிலையில் இருந்தது. நிறைய இரக்கம் தோன்றிய யாரோ 'திவான்' என்று தோன்றக் கூடிய ஒரு பொருளை கொடுத்திருக்கிறார்கள். கலை வேலைப்பாடுகள் எதுவுமே இல்லாத சாய்மானமும், வலைகளால் கட்டப்பட்ட அமரும் இடமும்... அடர்த்தியான சிவப்பு நிறம் பூசப்பட்டிருந்த அதற்கு பெயின்டின் தாங்க முடியாத வாசனை இருந்தது. ஒரு நாற்காலியில் உட்காரலாம் என்று நினைத்த குனின், மனதை மாற்றிக் கொண்டு, ஸ்டூலின் மீது போய் உட்கார்ந்தான்.
'நீங்கள் முதல் தடவையாக நம்முடைய தேவாலயத்திற்கு வருகிறீர்களா?'- தொப்பியைக் கழற்றி, பெரிய ஒரு ஆணியில் தொங்க விட்டுக் கொண்டே பாதிரியார் யாக்கோவ் கேட்டார்.
'ம்... ஆமாம் ஃபாதர். விஷயங்களுக்குள் நுழைவதற்கு முன்பு, ஒரு கோப்பை தேநீர் கிடைத்தால் நன்றாக இருக்கும். என் மனம் மிகவும் வறண்டு காய்ந்து போன நிலையில் இருக்கிறது.'
பாதிரியார் யாக்கோவ் கண்களை அகல திறந்து வைத்துக் கொண்டு பார்த்தார். சற்று இருமி விட்டு, பக்கத்திலிருந்த அறைக்குள் சென்றார். தொடர்ந்து 'குசு குசு' வென்ற சத்தங்கள் கேட்டன.