ஒரு கெட்ட கனவு
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 7674
ஒரு கெட்ட கனவு (ரஷ்ய கதை)
ஆன்டன் செக்காவ்
தமிழில் : சுரா
விவசாயம் சம்பந்தப்பட்ட மாநில அமைப்பின் நிரந்தர உறுப்பினரான குனின் என்ற முப்பது வயது இளைஞன் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து போரிஸோவோவில் இருக்கும் விவசாயம் நடைபெறும் இடத்திற்கு திரும்பி வந்தவுடன், ஒரு ஆளை அனுப்பி விட்டு, ஸிங்கோவோவின் பாதிரியார் ஃபாதர் யாக்கோவ் ஸ்மிர்னோவை அழைத்து வரச் செய்தான். கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் கடந்த பிறகு, பாதிரியார் வந்து சேர்ந்தார்.
'பார்த்தது குறித்து மிகவும் சந்தோஷம்'- அவரை வரவேற்றவாறு குனின் கூறினான்: 'நான் இங்குள்ள பணிகளுக்கான பொறுப்பை ஏற்று, இங்கே தங்க வந்து, ஒரு வருடமாகி விட்டது. நாம் சற்று முன்பே சந்தித்திருக்க வேண்டும்.... சரி... நீங்க ரொம்பவும் இளமையா இருக்கீங்களே!' -குனின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.
'உங்களுக்கு என்ன வயது?'
'இருபத்தெட்டு, சார்...'- மென்மையாக கையைப் பிடித்து குலுக்கியவாறு அவர் சொன்னார். காரணமே இல்லாமல் அவருடைய முகம் சிவந்தது.
குனின் அவரை உள்ளேயிருந்த அறைக்குள் அழைத்துக் கொண்டு சென்றான். 'ஒரு தொழிலாளி பெண்ணின் அவலட்சணமான முகம்...'- அவன் மனதிற்குள் நினைத்தான். சப்பையான மூக்கும், சிவந்த கன்னங்களும், பெரிய சாம்பல் நிறம் கலந்த நீல கண்களும், மெல்லிய புருவமும் சேர்ந்து பாதிரியாரைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றியது. எண்ணெய் தேய்க்காத மெல்லிய தலை முடிகள் குச்சிகளைப் போல பின் கழுத்தின் வழியாக இறங்கிக் கிடந்தன. மீசை, மீசை என்று கூறக் கூடிய பருவத்தில் இப்போதுதான் வந்து கொண்டிருந்தது. தாடியோ காய்ந்த வைக்கோலைப் போல அங்குமிங்குமாக ஒவ்வொன்று... சிக்கரி சேர்க்கப்பட்ட காபியின் நிறத்தைக் கொண்டிருந்த அங்கியின் முழங்கை பகுதிகள் இரண்டும் துண்டுத் துணிகளைக் கொண்டு சேர்க்கப்பட்டிருந்தன.
'என்ன ஒரு வினோதமான பிறவி!' -அவரின் தோற்றத்தைப் பார்த்து குனின் மனதிற்குள் நினைத்தான். முதல் தடவையாக ஒரு வீட்டிற்கு வருகிறார். நல்ல முறையில் ஆடைகளை அணியவாவது செய்திருக்கக் கூடாதா?
'ஃபாதர், உட்காருங்க'- உற்சாகமான வரவேற்பு என்று கூற முடியாத வகையில் இருந்த ஒரு அலட்சியத்துடன் குனின் சொன்னான்:
'தயவு செய்து உட்காருங்க.'
பாதிரியார் யாக்கோவ் கையால் முகத்தை மூடிக் கொண்டு இருமியவாறு, கைகளை முழங்காலில் ஊன்றிக் கொண்டு, நாற்காலியின் நுனியில் உட்கார்ந்திருந்தார். குள்ளமான சரீரத்தையும், வியர்வை வழிந்து கொண்டிருந்த சிவந்த முகத்தையும் கொண்டிருந்த அவரை ஆரம்பத்திலேயே குனினுக்கு அந்த அளவிற்குப் பிடிக்கவில்லை. இந்த அளவிற்கு அவலட்சணமான, வறுமையில் உழன்று கொண்டிருக்கும் பாதிரியார்கள் ரஷ்யாவில் இருப்பார்கள் என்பதை அவன் மனதில் நினைத்துப் பார்த்தது கூட இல்லை. முழங்காலில் கையை ஊன்றிக் கொண்டு நாற்காலியின் நுனியில் அமர்ந்திருந்த அந்தச் செயலில் சகித்துக் கொள்ள முடியாத மதிப்பின்மையும் பரிதாபத் தன்மையும் வெளிப்பட்டன.
'ஃபாதர், நான் பணி நிமித்தமாகத்தான் உங்களை அழைத்தேன்' - நாற்காலியில் சாய்ந்து படுத்துக் கொண்டே குனின் கூற ஆரம்பித்தான்: 'பயனுள்ள ஒரு முயற்சியில் உங்களுக்கு உதவ வேண்டும் என்ற சந்தோஷமான கடமை எனக்கு இருக்கிறது. பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து திரும்பி வந்தபோது, எனக்கு இங்கு பொறுப்பேற்றிருக்கும் மார்ஷலின் கடிதம் வந்திருந்தது. நீங்கள் ஸிங்கோவோவில் ஆரம்பிக்கும் தேவாலயத்தின் கீழுள்ள பள்ளிக் கூடத்தின் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இகோர்த்மித்ரியெவிச் கூறியிருந்தார். ஃபாதர், நான் அதை ஏற்றுக் கொள்ள தயார்தான். நான் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன்.'
குனின் எழுந்து அறைக்குள் அங்குமிங்குமாக நடந்தான்.
'என் கையில் நிறைய பணமெதுவும் இல்லை என்ற விஷயத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை நானும் த்மித்ரியெவிச்சும் விரும்புகிறோம். வசிக்கும் இடம் பணயத்தில் இருக்கிறது. போர்டின் உறுப்பினர் என்ற நிலையில் கிடைக்கக் கூடிய சம்பளம் மட்டுமே என்னுடைய வருமானமாக இருக்கிறது. அதனால், பெரிய உதவிகள் எதையும் எதிர்பார்க்காதீர்கள். செய்ய முடியக் கூடியதை, நான் செய்வேன்... ஃபாதர், பள்ளிக் கூடத்தை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்கள்?'
'தேவைப்படும் பணம் கிடைக்கும்போது...'- பாதிரியார் யாக்கோவ் கூறினார் : 'ஒண்ணுமில்லை, சார். ஒரு வருடத்திற்கு முப்பது கோபெக் வீதம் தருவதாக ஒருவர் விவசாயிகளின் கூட்டத்தில் வைத்து கூறினார். ஆனால், அது ஒரு வாக்குறுதி மட்டுமே. ஆரம்பிக்க வேண்டுமென்றால், இருநூறு ரூபிளாவது தேவைப்படும்.'
'கஷ்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும். என் கையிலும் எதுவுமில்லை. பயணத்திலேயே அனைத்தும் தீர்ந்து போய் விட்டது. இறுதியில் கடன் கூட வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. எது எப்படி இருந்தாலும், நாம் ஒன்று சேர்ந்து ஏதாவதொரு பரிகாரம் காண முயற்சிப்போம்.'
குனின் சிந்தனைகள் பலமானவையாக இருந்தன. ஒவ்வொரு மன விருப்பத்தையும் கூறும்போதெல்லாம், கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக அவன் பாதிரியார் யாக்கோவைப் பார்த்தான். வெறுமை படர்ந்திருந்த அந்த முகத்தில் அச்சமும், பதைபதைப்பும் மட்டுமே நிழலாடிக் கொண்டிருந்தன. சிறிதும் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களை, தன்னுடைய அறிவற்ற தன்மை வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக மட்டுமே காது கொடுத்து கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பதைப் போல அவருடைய செயலைப் பார்க்கும்போது தோன்றும்.
'கூச்ச சுபாவம் உள்ள மனிதன்... மடையன்...' - குனினுக்கு வெறுப்பு உண்டானது.