நீ மட்டுமே என் உயிர்! - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6610
“சங்கர், உங்கப்பா உன் மேல கோபமா இருந்தாலும் உள்ளுக்குள்ள உன் மேல வச்சிருக்கற பாசத்துல உருகிப் போயிருந்தார்ப்பா. அவர் ஒரு நாள் கூட வயிறாரச் சாப்பிட்டாருப்பா. அதை வயித்துக்கு ஏதோ பேருக்குச் சாப்பிடுவார். ராத்திரி நேரங்கள்ல அமைதியா தூங்கறது இல்லை. உன்னை நினைச்சு நினைச்சு அவர் வேதனைப்பட்டது எனக்குதான்ப்பா தெரியும்...”
வசந்தா, சங்கரின் கைகளை ஆறுதலாக வருடியபடியே, பேசினாள்.
“அதான் அண்ணன் வந்துட்டாரேம்மா” நிர்மலா கூறியதும் சந்தோஷ அலை பரவியது அங்கு.
மீண்டும் பேச ஆரம்பித்தாள் வசந்தா.
“சங்கர்... அந்தப் பொண்ணுதான் பெரிசு. ‘அவ இல்லாம நான் இல்லை’ன்னு பிடிவாதமா அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, பெத்த எங்களைக் கூடப் பகைச்சுக்கிட்டுப் போனியே... இப்ப அவளுக்கு என்ன ஆச்சு? உங்களுக்குள்ள என்ன பிரச்னை?... ”
“ப்ளீஸ் மா. கெட்ட கனவுன்னு நான் மறந்துட்ட அந்த விஷயத்தை மறுபடி ஞாபகப்படுத்தாதீங்க. நான் ஏன் இங்கே திரும்ப வந்தேன்ங்கற காரணத்தை என்கிட்ட இப்ப கேக்காதீங்க. காலம் வரும்போது நானே சொல்றேன்....”
“சரிப்பா. நீயா சொல்றவரைக்கும் நான் அதைப்பத்தி எதுவும் கேக்கலப்பா. ஆனா... நீ வீட்டை விட்டுப் போனப்புறம் உன்னைப்பத்தின எந்தத் தகவலும் தெரியாம இருந்துச்சு. அதனால... கேக்கறேன்... உனக்குக் குழந்தை...”
“குழந்தை ஒண்ணு இல்லம்மா, ரெண்டு குழந்தைகள். அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மூணு வருஷ காலத்துக்குள்ள அடுத்தடுத்து ரெண்டு குழந்தைங்க பிறந்துச்சும்மா. ரெண்டு ஆண் குழந்தைங்கம்மா.... ஜானகி சொன்னா... ‘உங்கம்மா அப்பா வந்து பேர் வைக்கறவரைக்கும் ரெண்டு குழந்தைகளையும் ‘கண்ணா’, ‘குட்டி’ன்னே கூப்பிடுவோன்னு... த்சு... எல்லா முடிஞ்சுபோச்சுமா. விடுங்க. இனிமே பழங்குப்பையைக் கிளற வேண்டாம்மா...’
அதற்கு மேல் பேசினால். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மகனின் மனக்கஷ்டம் அதிகமாகும் என்ற எண்ணத்தில் வசந்தா பேச்சை மாற்றினாள்.
“நம்ம நிர்மலாவும் உண்டாகி இருக்காப்பா. அவ உருவத்தைப் பார்த்தே உனக்குத் தெரிஞ்சுக்குமே... சரிப்பா... உன் முகம் வாடிக்கிடக்கு. முதல்ல சாப்பிடவா. என் கையால நீ சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு!... என்னங்க! நீங்களும் வாங்க. நல்லா வயிறாரச் சாப்பிடுங்க. நிர்மலா, மாப்பிள்ளை எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்... வாங்க.” வசந்தா எழுந்தாள். அவளைப் பின் தொடர்ந்து அனைவரும் சாப்பிடும் மேஜை அருகே சென்றனர்.
இரண்டு சமையல்காரர்கள் இருந்த போதும், மூன்று வேலைக்காரர்கள் இருந்த போதும், சங்கருக்குத் தானே தோசை போட்டு, தன் கையாலேயே பரிமாறினாள் வசந்தா.
நீண்ட நாட்களுக்குப் பின் அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.
3
சசங்கர் அடித்துப் போட்டு விட்டுப் போனதும் லேசான மயக்கத்திற்கு ஆளானாள் ஜானகி. குழந்தைகள் இருவரது அழுகுரலும் பக்கத்து வீட்டிலிருக்கும் பாமாவின் கவனத்தை ஈர்த்தது.
‘ஜானகியோட குழந்தைங்க ஏன் இப்படி விடாம அழுதுக்கிட்டே இருக்குதுங்க?’ யோசித்தபடியே ஜானகியின் வீட்டிற்குள் நுழைந்தாள் பாமா. ஜானகியின் அருகே நின்று அழுது கொண்டிருந்த மூத்தவனையும், ஜானகியின் மீது படுத்து அழுதுகிட்டிருந்த இளையவனையும் பார்த்த பாமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தைகளின் அருகே வந்தாள். மயங்கியிருந்த ஜானகியைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.
ஜானகியின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள். ஜானகி கண் விழித்தாள். அழும் குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொண்டாள். தாயின் ஸ்பரிஸம் சூடு உணர்ந்த குழந்தைகள் அழுகையை நிறுத்தினர்.
“என்னம்மா ஜானகி... என்ன நடந்துச்சு? உடம்பு சரியில்லையா?”
“அ... அ... அதெல்லாம் ஒண்ணுமில்ல, பாமாக்கா... கொஞ்சம் களைப்பா இருந்துச்சு. படுத்துக்கலாம்னு நினைச்சு படுக்கறதுக்குள்ள மயங்கிட்டேன் போலிருக்கு...”
“உன் வீட்டுக்காரர் இன்னுமா ஆபீஸ்ல இருந்து வரலை?”
“அ.... அ... ஆமா பாமாக்கா. அவர் இன்னும் வரலை. வந்துடுவார்...”
“உனக்கு ஒத்தாசையா ஏதாவது செய்யட்டுமா?”
“வேணாம், பாமாக்கா. எனக்கு ஒண்ணுமில்ல. சாதமெல்லாம் ரெடியா இருக்கு. குழந்தைகளுக்கு ஊட்டணும். அவ்வளவுதான். நான் பார்த்துக்கறேன், பாமாக்கா.”
“சரிம்மா. ஏதாவது உதவி தேவைன்னா என்னைக் கூப்பிடு.”
“ரொம்ப நன்றி, பாமாக்கா. தேவைப்பட்டா கண்டிப்பா கூப்பிடறேன்.”
பாமா அங்கிருந்து அவளது வீட்டிற்குப் போனாள். குழந்தைகளுக்குச் சாதம் ஊட்டியபின் அவர்களை உறங்க வைத்தாள் ஜானகி. விபரம் அறியாத குழந்தைகள், விதியை எண்ணி வேதனைப்படும் தாய்மைத் தவிப்பில் ஜானகி! நெஞ்சில் துயரம் கனக்க, கண்களில் கண்ணீர் வற்றாத நதியாக வழிந்தபடி இருந்தது. இரவு வந்தது. திருமணமான நாளிலிருந்து ஒரு நாள் கூடக் கணவனைப் பிரிந்திராத ஜானகி, தனிமைத்தீயில் தவிப்பாய் உணர்ந்தாள். சங்கரை முதல் முதலாய்ச் சந்தித்த சம்பவமும், அவனது மனைவியான பின் கழித்த உல்லாசமான வசந்த கால நினைவுகளும் அவளது நெஞ்சில் ஊஞ்சலாடின.
4
மதுரை மாநகரின் புறநகர்ப் பகுதி. நெருப்பு அரக்கனின் அசுரப்பசிக்கு இரையாகிப் போன பதினெட்டுக் குடிசைகளில் ஜானகியும், அவளது பெற்றோரும் வசித்து வந்த குடிசையும் ஒன்று. குடிசைக்குள் இருந்த ஜானகியின் அம்மா, அப்பா இருவரும் தீ விபத்தில் உருத்தெரியாமல் கருசிச் சாம்பலாகிப் போனார்கள்.
எக்ஸ்போர்ட் வேலை என்றழைக்கப்படும் தையல் தொழில் நடக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்துத் தினக் கூலி வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய ஜானகிக்கு அதிர்ச்சி அளித்த சம்பவம் அந்தத் தீ விபத்து.
எதிர்காலம் சூன்யமாகத் தெரிய மிரண்ட விழிகளுடன் மான் போல மருண்டு போய் நின்றிருந்தாள் அவள். தற்செயலாய்த் தன் நண்பன் ஒருவனுடன் அந்தப் பகுதிக்கு வந்திருந்தான் சங்கர். விபத்தினால் பாதிக்கப்பட்ட குடிசை வாழ் மக்களுக்கு அரசாங்கம் செய்யும் உதவி சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவன் அந்த நண்பன். அவனது பெயர் பாலன். திருச்சியிலிருந்து மதுரைக்கு வேறு வேலையாக வந்த சங்கரைத் தன்னுடன் அங்கே அழைத்து வந்திருந்தான் பாலன்.
வந்த இடத்தில் தனிமையில் சோகமே உருவாக நின்று கொண்டிருந்த ஜானகியைப் பார்த்த முதல் பார்வையிலேயே தன்வசம் இழந்தான் சங்கர். பளிச் என்ற நிறத்தில் வெகுளித் தனம் வெளிப்பட்டு நிற்கும் முகத்தில் சோகத்தை மீறிய ஒரு அழகு சோபையிட்டிருந்ததைக் கண்டான். அந்த அழகில் மனம் சொக்கிப் போன அவன், அவளிடம் பேச்சுக் கொடுத்து அவளது தற்போதைய நிலைமை பற்றி அறிந்து கொண்டான்.
அன்னியன் ஒருவன் தன்னிடம் பேசுவது கண்டு அஞ்சினாலும், அவளுக்கும் சங்கர் மீது ஒரு ஈர்ப்புத் தோன்ற, கொஞ்சம் கொஞ்சமாய் அவனிடம் சகஜமாய்ப் பேச ஆரம்பித்தாள்.