மலரே... மௌனமா? - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சித்ரலேகா
- Hits: 6352
ஏன், சொல்லப் போனா உயிரோட இருக்கறதே அவங்களுக்காகத்தான். இந்த ஊர், உலகத்தைப் பொறுத்த வரைக்கும்தான் நாம புருஷன், பொண்டாட்டி. இந்த வீட்டுக்குள்ள நீங்க யாரோ, நான் யாரோ. என் கூட இனிமேல் பேசாதீங்க."
"இதுதான் உன் முடிவா?"
"அவளை மறக்க முடியாதது உங்க முடிவுன்னா, நிச்சயமா இதுதான் என் முடிவு."
சோகம் கப்பிய முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தான் மதன்.
அவ்வப்போது துன்ப அலைகளால் தாக்கப்பட்டு, துவண்டு போகும் ராகினியைப் பார்த்து ஆறுதல் கூற அடிக்கடி பாட்டி வந்தாள்.
"யானை தன் தலையில தானே மண்ணை வாரிப் போட்டுக்குமாம். அந்த கதைதான் உன் கதை. தேவையில்லாம சிநேகிதின்னு ஒருத்தியை கொண்டு வந்து வீட்டோட வச்ச. அவ உன் வீட்டுக்காரனை வச்சுக்கிட்டா."
"அவ மேல தப்பு இல்லை பாட்டி. ஜாதகம் பாதகம்னு சொல்லி ஒரு பொண்ணோட மனசை நோகப் பண்ணி அவளை நிராகரிக்கறாங்களே அவங்களை சொல்லணும். இந்த மாதிரி மூட நம்பிக்கையினால் ஒரு நல்ல குடும்ப வாழ்க்கை கிடைக்காமதான் சுதா இப்படி ஆயிட்டா. என் வீட்டுக்காரருக்கு புத்தி எங்கே போச்சு? பெண் சுகம் அனுபவிக்காதவரா? பொண்டாட்டி புள்ளைங்கன்னு மதிப்பான குடும்பத் தலைவரா ஆனப்புறம் இப்படி... இப்படி... ஒரு அசிங்கம் தேவைதானா?"
"சரி, சரி விஷயம் வெளியில தெரிஞ்சுடுச்சுன்னு அவ வீட்டை விட்டு போயிட்டா. சனி விட்டுதுன்னு நிம்மதியா சந்தோஷமா இரு."
"இல்லை பாட்டி, அவரால அவளை மறக்க முடியாதாம்."
"என்ன, அப்பிடியா சொல்லிட்டான் உன் புருஷன்? அப்போ? அவ இன்னும் உங்க ஆபீஸ்லதான் வேலை பார்க்கறாளா?"
"ஆமா. ஆம்பளை கெட்டா சம்பவம், பொம்பளை கெட்டா சரித்திரம்ன்னு எழுதாத இந்த சட்டம்தானே ஆம்பளைங்களுக்கு அளவுக்கு மீறி திமிரை வளர்த்திருக்கு."
"என்னமோ, உன் தலைவிதி இப்பிடி ஆயிடுச்சு. குழந்தைங்க வர்ற நேரமாச்சு. டிபன் செஞ்சு வை. போய் வேலையைப் பாரு."
பிள்ளைகள் வளர்ந்தனர். வீட்டை விட்டு வெளியேறிய சுதா, தனியாக ஒரு ஃப்ளாட் எடுத்து தங்கி இருப்பதும், ஆபீஸ் நேரம் போக மதன் அங்கே போவதும், வருவதும் ராகினி கேள்விப்பட்ட செய்திகள். கண்களில் மாறாத சோகத்துடன், நடைப்பிணமாய் நடமாடிய ராகினியின் தலைமுடி கவலையினால் ஏகமாக நரை கண்டிருந்தது. மதனுடன் பேச்சு வார்த்தையை நிறுத்தி, மௌன யாகம் நடத்திக் கொண்டிருந்தாள். மற்றவர்களுடனும் தேவைப்பட்டால் மட்டுமே அளவோடு பேசினாள்.
மதனுக்கு தேவையானதை சமைப்பது, அவனுடைய துணிமணிகளை அயர்ன் செய்து வைப்பது போன்ற கடமைகளை தவறாமல் செய்து வந்தாள். ஒரு நாள் மதனுடனும், ஒரு நாள் ராகினியுடனும் குழந்தைகள் படுத்தனர். பல முறை மதன் முயற்சித்தும் ராகினியின் மௌனத்தைக் கலைக்க முடியவில்லை.
வருடங்கள் உருண்டன. பிள்ளைகளுக்கு விபரம் தெரியும்வரை அவர்களை சமாளிப்பது மிகுந்த சிரமமாக இருந்தது. விபரம் அறிந்தபின், அவர்கள் சுதாவை அறவே வெறுத்தனர். சுரேஷ் கல்லூரியில் மூன்றாவது ஆண்டிலும், எழில் இரண்டாவது ஆண்டிலும் படித்துக் கொண்டிருந்தனர்.
வாசலில் ஆம்புலன்ஸ் வேன் நிற்பது தெரிந்தது. ஜன்னல் திரையை விலக்கிப் பார்த்த ராகினி, பரபரப்பாக வாசலுக்கு சென்றாள். அதிர்ச்சி அடைந்தாள். தன் அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் செயல்பட்டாள்.
மதனின் ஆஜானுபாகுவான உடல், உயிர் அற்றதாய் நடு வீட்டில் கிடத்தப் பட்டது. திடீர் என ஹார்ட் அட்டாக் வந்து விட்டதாகவும், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்து விட்டதாகவும் ஆபீஸ் ஊழியர்கள் விளக்கம் கொடுத்தனர்.
அமெரிக்காவில் இருந்து பம்பாய் வந்திருந்த அண்ணனைப் பார்ப்பதற்காக சுதா போய் இருப்பதாகவும், அவளுக்கும் தகவல் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டது.
நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் கூடி விட்டனர். சுரேஷும், எழிலும் வாய் விட்டு கதறி அழுது வறண்டு போனார்கள். ராகினியின் கண்களில் இருந்து சோகம் வெளிப்பட்டதே தவிர வாய்விட்டு அழவும் இல்லை. யாரிடமும் எதுவும் பேசவும் இல்லை.
உறவுக் கூட்டம் மதன்-சுதா தொடர்பு பற்றியும், ராகினியின் வைராக்யத்தைப் பற்றியும் வம்பளத்தபடி இருந்தது.
"கெட் அவுட்"
'துக்க வீட்டில் யாரிடம் இப்படி கோபமாக சுரேஷ் கத்துகிறான்? ராகினி நிமிர்ந்து பார்த்தாள்.
சுதா தயங்கியபடி வாசலில் நின்றிருந்தாள்.
"சுரேஷ்" ராகினி, சுரேஷை கூப்பிட்டாள்.
"சுரேஷ், ஊரறிய தாலி கட்டிய நானே அவர் கூட எட்டு வருஷம்தான் வாழ்க்கை நடத்தி இருக்கேன். தாலியே வாங்கிக்காம என்னைவிட அதிக காலம் அவ உங்க அப்பா கூட வாழ்ந்திருக்கா. அவளை உள்ளே வர விடு. உங்க அப்பாவோட கடைசி பயணம் வரைக்கும் அவ இருக்கட்டும். வீணா பிரச்சனை பண்ணி, எல்லாரும் வேடிக்கை பார்க்கற மாதிரி ஸீன் கிரியேட் பண்ணாதே. உங்க அப்பாவோட கௌரவம்தான் நமக்கு முக்கியம்."
"அம்மா..."
"உங்க அப்பாவை உயிரோட என்னைக்கோ பறி குடுத்துட்டேன். போப்பா, போய் ஆக வேண்டியதைப் பாரு."
ராகினியின் திடமான பேச்சும், மன உறுதியும் கண்டு அங்கு வந்திருந்த கூட்டம் மலைத்தது.
மதனின் இறுதி யாத்திரை புறப்பட்டது. சாஸ்திர, சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்தபின் அனைவரும் புறப்பட்டுப் போனார்கள். கதறி அழுததால் சிவந்து வீங்கிய முகத்துடன் இருந்த சுதா, கண்ணீரைத் துடைத்தபடி ராகினியின் கால்களில் விழுந்து வணங்கி விட்டு வெளியேறினாள்.
அத்தனை வருடங்களாக மதனை அழைக்காத ராகினி, திடீரென்று வாய் விட்டு அழ ஆரம்பித்தாள்.
'என்னங்க போயிட்டீங்களே பெரிதாக அலறினாள்.
மகள் எழிலின் மடியில் முகம் புதைத்து அழுதாள்.
"அம்மா, அழாதீங்கம்மா." அம்மா இப்படி அழுவதைப் பார்க்க சகிக்காத எழில், தானும் அழுதாள்.
"அம்மா அழட்டும் எழில். அவங்க மௌனம் கலையட்டும். இதுவரைக்கும் யார் முன்னிலையிலும் அழுது, புலம்பி தேவையற்ற அனுதாப அலைகளில் நீந்த விரும்பாத நம்ப அம்மா, இப்ப நல்லா அழுது தீர்க்கட்டும். அவங்க பாரம் குறையட்டும்." விவேகமாக பேசினான் சுரேஷ்.
நாமும், ராகினியை அழுது தீர்க்கட்டும் என்று விட்டுவிடுவோம்.