பாத்தும்மாவின் ஆடு - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6357
நான் பணக்காரனா? என் கையில் பணம் இருக்கா? பெரியண்ணே, நாம இந்த வாசலுக்கு சுவர் அமைக்கணும். வீட்டோட கூரையை மாற்றி ஓடு வேயணும்...”
நான் கேட்டேன்: “நாமன்னு சொன்னா?”
“பெரியண்ணே, நீங்க பணம் தரணும். நான் எங்கே பணத்துக்குப் போவேன்?”
அவன் சாப்பிட்டு முடித்து கடிதத்துடன் நடந்தான். அவன் சென்ற பிறகு, அப்துல் காதர் வந்தான். அவன் போன பிறகு ஹனீஃபா வந்தான்.
ஹனீஃபா பட்டாளக்காரனாக இருந்தவன். அதற்குப் பிறகு தையல் கடை ஆரம்பித்தான். அதற்குப் பிறகு சைக்கிள் கடை. சாதாரணமாக ஹனீஃபா எப்போதும் மிடுக்கான தோற்றத்திலேயே இருப்பான். இரட்டை மடிப்பு வேஷ்டியும் ஜிப்பாவும் அணிந்து தலை முடியை ஒழுங்காக வாரி அழகாக சவரம் செய்து… இப்படித்தான் அவன் எப்போதும் காட்சியளிப்பான். இப்போது ஒரு வேஷ்டியை மட்டுமே அவன் அணிந்திருக்கிறான். இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது. நான் எதுவும் கேட்கவில்லை. ஏதாவது கேட்டு அதனால்...?
அவன் சொன்னான்: “பெரியண்ணே... நான் என்னோட நிலத்தை விற்கலாம்னு இருக்கேன். உங்களுக்குன்னா விலையைக் குறைச்சு தர்றேன்.”
“அதை ஏன்டா இப்போ விற்கணும்?”
“கையில பணம் இல்ல. இருந்தா ஒரு சட்டைத் துணியைப் போட மாட்டேனா?”
“இடத்துக்கு என்ன விலை வேணும்?”
“உங்களுக்குன்னா விலையைக் குறைச்சு தர்றேன். பத்தாயிரம் ரூபா தாங்க.”
பத்தாயிரம் ரூபாய்... ஹனீஃபா அதை என்ன விலை கொடுத்து வாங்கினான் என்பது எனக்குத் தெரியும். நான் விஷயத்தை மாற்றினேன். “நீ இப்போ இந்த வீட்டிற்கு என்ன கொடுக்கற?”
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, ஹனீஃபா ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு இரண்டணாக்கள் (இரண்டு அணா என்றால் 12 பைசாக்கள்) கொடுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும்- சாப்பிடுவதற்காகவும், பருகுவதற்காகவும் அவன் படுக்கை எதுவும் வாங்கிப் போடவில்லை. எண்ணெயும் சோப்பும் அவன் வாங்கவில்லை. இவை எல்லாமே இரண்டு அணாக்களுக்குள் அடங்கிவிடும். அப்துல்காதர் அவனை வாய்க்கு வந்தபடி திட்டுவான். அது குறித்து அவன் சிறிதும் வெட்கப்படுவதில்லை. அதற்குமேல் ஏதாவது கடுமையாகச் சொன்னால் அவன் கூறுவான்: “நான் பட்டாளத்துக்குப் போறேன். அரசாங்கத்துக்கு நான் தேவையா இருக்கேன்.”
கடைசியில் என்னுடைய மேற்பார்வையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இரண்டணாவை நான்கணாவாக ஆக்கினேன். படிப்படியாக அது பன்னிரண்டு அணாவில் (இப்போது அது 75 பைசா) போய் நின்றது. நான் போனவுடன் ஹனீஃபா அதைத் தானாகவே குறைத்துக் கொண்டான். கடைசியில் அதை பழையபடி இரண்டணாவாக ஆக்கிவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதைப் போல ஞாபகம். ஹனீஃபாவிற்கு மேலும் ஒரு குழந்தை அதிகமாகப் பிறந்திருக்கிறது. அதனால் சற்று அதிகமாக அவன் பணம் தர வேண்டியது நியாயமான ஒரு விஷயமும் கூட. ஆனால், என்னுடைய கேள்விக்கு அவன் சரியான பதிலைச் சொல்லவில்லை. அவன் சொன்னான்: “சின்ன அண்ணனோட நடத்தையைச் சகிச்சிக்கிட்டு என்னால வாழ முடியாது.”
“அப்துல் காதர்கிட்ட என்ன தகராறு?”
“ஒரு கட்டு ரூபாய் நோட்டோட அவர் என் கடைக்கு வந்தாரு. அங்கே கூட்டமா பெரிய ஆளுங்க உட்கார்ந்திருக்காங்க. இவர் வந்து ‘இங்க பாருடா’ன்னு சொல்லிட்டு அந்த நோட்டுக் கட்டை என் முகத்துல அடிச்சாரு. அடிச்சிட்டு சொல்றாரு. ‘பணத்தை விட்டெறிஞ்சா, பணத்தை வச்சே அடிப்பே’ன்னு சொல்லிட்டு அவர் திரும்பி நடந்து போறாரு. எனக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு பெரியண்ணே, நான் ஒவ்வொரு நாளும் உங்களுக்குப் பீடி வாங்கித் தர்றேன்ல? ஒவ்வொரு நாளும் தீப்பெட்டி வாங்கித் தர்றேன்ல? என் பணத்தை எறிஞ்ச பிறகும், நீங்க என்னைப் பணத்தால அடிக்கலியே!”
நியாயமான வாதம்தான்.
அதற்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை. “இப்போ ரஷீதும் இருக்கான்லடா! ரேஷன் வாங்குறதுக்கு நீ என்ன தர்ற?”
அவன் உடனே சொன்னான்: “நான் பட்டாளத்துக்குப் போறேன். அரசாங்கத்துக்கு நான் தேவைப்படுறேன்.”
அவன் வேகமாக வீட்டிற்குள் சென்று சாப்பிட்டுவிட்டு தையல் கடையை நோக்கிச் சென்றான்.
நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது பாத்தும்மாவின் ஆடு வராந்தாவில் ஏறி உள்ளே வந்து என்னுடன் சேர்ந்து சாப்பிட முயன்றது. நான் உரத்த குரலில் கத்தினேன்.
“பாத்தும்மா, ஓடி வா.”
பாத்தும்மா ஓடி வந்து அதை வாசல் பக்கம் அழைத்துக் கொண்டு போனாள்.
நான் சொன்னேன்.
“அதைக் கயிறு வச்சு கட்டிப்போடு.”
பாத்தும்மா சொன்னாள்: “கயிறு வச்சு கட்டுறது இதுக்குப் பிடிக்காது, பெரியண்ணே.”
சாயங்காலம் கொச்சுண்ணி வந்தான். சில நேரங்களில் அவன் வீட்டில் படுத்திருப்பான். எனக்குப் பக்கத்தில்தான். எனக்கு இந்தப் பக்கம் உம்மா. கொச்சுண்ணியைத் தாண்டி அபு. ஹனீஃபா அவனுடைய குடும்பத்துடன் இன்னொரு அறையில். அப்துல் காதர் தன்னுடைய குடும்பத்துடன் வீட்டிற்குள். வராந்தாவில் சாக்குகளை விரித்து அதன்மீது சுலைமானும் குடும்பமும். கொச்சுண்ணி வீட்டில் படுக்காத போது குடும்பத்துடன் செல்வான். பந்தத்தை எரியவிட்டவாறு கொச்சுண்ணி முன்னால் நடந்து போவான். அந்த வெளிச்சத்தில் அவனுக்குப் பின்னால் பாத்தும்மா நடந்து போவாள்.பாத்தும்மாவிற்குப் பின்னால் பத்து வயதான கதீஜா. கதீஜாவிற்குப் பின்னால் ஆடு.
2
பாத்தும்மாவின் ஆட்டின் ஆர்ப்பாட்டம் காலையிலேயே தொடங்கிவிட்டது. அப்போது கிட்டத்தட்ட எட்டு மணி இருக்கும். தலையிலும் உடம்பிலும் எண்ணெயைத் தேய்த்துவிட்டு கோவணம் கட்டிக்கொண்டு நான் உலவிக் கொண்டிருந்தேன். அப்போது வாசலில் பிள்ளைகளின் ஆரவாரம் கேட்டது.
“உள்ளாடத்திப் பாரு உள்ளாடத்திப் பாரு!”
“வாலைப் பிடி... வாலைப் பிடி!”
“கிள்ளுறது தெரியல... கிள்ளுறது தெரியல...”
“கொம்பைப் பிடி! கொம்பைப் பிடி!”
என்ன விஷயம்? நான் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய விசேஷமொன்றுமில்லை. பாத்தும்மாவின் ஆடு அபியின் அரைக்கால் ட்ரவுசரின் முன்பக்கம் முழுவதையும் தின்று தீர்த்துவிட்டது. மீதிப் பகுதியை ஆடு தன் வாயில் கவ்வியிருந்தது. அபி ஆட்டின் கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தான். பாத்துக்குட்டி வாலைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். ஸையது முஹம்மது கொம்பைப் பிடித்திருந்தான். ஆரிஃபா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தான். ரஷீதும் ஸுபைதாவும் வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் கட்டை விரல்களை வாய்க்குள் வைத்து சப்பியவாறு வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். லைலா ஆட்டின் தாடையைப் பிடித்துக்கொண்டு திட்டிக் கொண்டிருந்தாள்.
“உள்ளாடத்திப் பாரு! உள்ளாடத்திப் பாரு!”
நான் வேஷ்டி அணிந்து அறையை விட்டு வராந்தாவிற்கு வந்து அங்கிருந்து வாசலுக்குச் சென்றேன். ஆட்டின் செவியைப் பிடித்தவாறு அபியை அதனிடமிருந்து பிரித்தேன். அபியின் ட்ரவுசரின் முன் பகுதியை மட்டுமல்ல, ஒரு பாக்கெட்டையும் ஆடு தின்று முடித்திருந்தது.