பாத்தும்மாவின் ஆடு - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6357
அங்கு விழுந்து கிடக்கும் சாம்பங்காய்களைத் தின்ன ஆரம்பிக்கும். பிறகு அது மேல் நோக்கிப் பார்க்கும். இளம் சிவப்பு நிறத்தில் பெரிய பனித்துளிகளைப் போல பச்சை இலைகளுக்கு மத்தியில் சாம்பங்காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும். என்ன செய்வது? ஆடு தன்னுடைய இரண்டு பின்னங்கால்களாலும் எழுந்து நின்று கொண்டு தாழ்வான கிளையில் இருக்கும் சாம்பங்காய்களைத் தின்ன முயற்சிக்கும். ஆனால், அது எட்டினால்தானே! இந்தச் சாம்ப மரத்தின் தாழ்வான கிளைகளை உயரத் தூக்கிக் கட்டிவிட்டது யார்?
இதை நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது பழுத்த ஒரு பலா இலை கீழே விழும். ஆடு அடுத்த நிமிடம் முற்றத்தை நோக்கி ஓடிச்சென்று அதை சுவைத்துத் தின்னும். அப்போது உம்மாவோ, குஞ்ஞானும்மாவோ, அய்ஸோம்மாவோ, ஆனும்மாவோ வாசலைப் பெருக்குவதற்காக கையில் விளக்குமாறுடன் வருவார்கள். ஆடு வீட்டிற்குள் நுழைந்து அங்கு உலாத்த ஆரம்பிக்கும்.
அது யாருடைய ஆடு? எந்த அளவிற்கு படு சுதந்திரமாக அது உலாவிக் கொண்டிருக்கிறது! எங்கெல்லாம் அது போகிறது. என்னவெல்லாம் செய்கிறது! எனினும், யாரும் எதுவும் சொல்வதில்லை. கேட்போரும் கேள்வியுமில்லாத ஒரு வீடு!
சாய்வு நாற்காலியில் நான் முன்னாலிருக்கும் வராந்தாவில் உட்கார்ந்திருக்கும் பொழுது அறையில் யாரோ தாளைக் கிழிக்கும் சத்தம் என் காதில் விழுந்தது. நான் சிறிய கதவு வழியாக உள்ளே பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அந்த அடு என்னுடைய படுக்கை மீது ஏறி நின்று கொண்டு, புத்தகத்தைத் தின்று கொண்டிருக்கிறது.
பெட்டிக்கு வெளியே இளம் பருவத்துத் தோழி, சப்தங்கள் ஆகிய இரண்டு புத்தகங்களின் புதிய பதிப்பு தலா ஒரு பிரதி இருந்தது. அதில் ‘இளம் பருவத்துத் தோழி’யைத் தான் ஆடு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. முன்னங்கால்களால் மிதித்து இரண்டு மூன்று பக்கங்களை நாவால் நக்கி வாய்க்குள் விட்டு ஸ்டைலாக அது சுவைத்துத் தின்று கொண்டிருந்தது. தின்னட்டும்! நல்ல ஆடுதான். ‘சப்தங்கள்’ இருக்கிறதே! பயங்கரமான விமர்சன பீரங்கி குண்டுகளை ஏற்ற சிறு புத்தகம் அது. இருந்தாலும் விஷயம் பயங்கரமானதாயிற்றே! அந்தப் புத்தகத்தைத் தின்பதற்கான தைரியம் அந்த ஆட்டிற்கு இருக்குமா?
எந்தவித தயக்கமும் இல்லை. ‘இளம் பருவத்துத் தோழி’ முழுமையாக உள்ளே போய் முடிந்தது. அது முடிந்தவுடன் ‘சப்தங்கள்’ புத்தகத்தைத் தின்ன ஆரம்பித்தது. இரண்டே நிமிடங்களில் முழு புத்தகத்தையும் தின்று முடித்தது. தொடர்ந்து ஆடு என்னுடைய போர்வையைத் தின்ன ஆரம்பித்தது. அவ்வளவுதான். நான் சாய்வு நாற்காலியை விட்டு எழுந்து உள்ளே ஓடினேன்.
“ஏய் அழகியே! தயவு செய்து அந்தப் போர்வையைத் தின்னாதே’ அதோட விலை நூறு ரூபாய். அதே மாதிரி இன்னொரு போர்வை என்கிட்ட இல்ல. புத்தகங்கள் என்கிட்ட வேறயும் இருக்கு. அந்தப் புத்தகங்களை வர வச்சு உனக்கு இலவசமா தர்றேன்.”
பிறகு ஆட்டை வெளியே விரட்டிவிட்டேன். அது பலா மரத்தடியைத் தேடி ஓடியது. அங்கே இரண்டு மூன்று இலைகள் விழுந்து கிடந்தன. அந்தப் பெண் ஆடு அந்த இலைகளைத் தின்ன ஆரம்பித்தது.
நான் உம்மாவை அழைத்து கேட்டேன்: “இந்த ஆடு யாரோடது உம்மா?”
உம்மா சொன்னாள்:
“நம்ம பாத்தும்மாவோட ஆடு.”
“அதனாலதான் இவ்வளவு சுதந்திரமா அது திரியுதா?”
பாத்தும்மாவின் ஆடு... விஷயம் தெளிவாகப் புரிந்தது. பொழுது விடிவதற்கு முன்பே, பாத்தும்மா அதை அவிழ்த்துவிட்டு விடுவாள்.
“அவங்க வாசலைப் பெருக்கி பலா இலைகள் முழுவதையும் எடுக்குறதுக்கு முன்னாடி போய் வயிறு நிறைய அதைச் சாப்பிடு என் தங்கமான ஆடே!” என்று நான் கூறுவேன். ஆடு நேராக பொது சாலையைக் கடந்து வீட்டை நோக்கி வரும் நல்ல தமாஷ்தான்!
அந்த ஆட்டின் சொந்தக்காரி பாத்தும்மா என்னுடைய சகோதரிதான். அப்துல்காதருக்கு இளையவள். அவள் இருப்பது ஒன்றரை ஃபர்லாங்கிற்கு அப்பால்- சந்தைக்குப் பின்னால் தன்னுடைய கணவன் கொச்சுண்ணிக்கு அதிகாலையிலேயே தேநீரும் பலகாரமும் தயார் பண்ணிக் கொடுத்து அவனை வியாபாரத்திற்கு அனுப்பி வைப்பாள். அவன் என்னென்னவோ வியாபாரங்களையெல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. இப்போது கயிறு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறான். சாயங்காலம்தான் வீட்டிற்குத் திரும்பி வருவான்.
கொச்சுண்ணி போன பிறகு, எல்லா பாத்திரங்களையும் கழுவி கவிழ்த்து வைத்துவிட்டு, தன்னுடைய சின்னஞ்சிறு மகள் கதீஜாவுடன் பாத்தும்மா நேராக வீட்டிற்கு வருவாள். வருவதே ஒரு ஸ்டைல்தான். அவளுக்குப் பின்னால் வாலைப் போல கதீஜா கனவில் நடப்பதைப் போலத்தான் பாத்தும்மா நடப்பாள். வீட்டிற்கு வந்தவுடன், அவள் நடவடிக்கையே வேறு மாதிரி இருக்கும். பாத்தும்மாவின் குரல் பெரிதாக ஒலிக்க ஆரம்பிக்கும். அது தேவைதான். அவள்தான் உம்மாவின் மூத்த மகள். அதனால் வீட்டில் அதிகாரமும் சற்று அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா?
பாத்தும்மா வீட்டிற்குள் வந்தவுடன், நான் அனைத்து விஷயங்களையும் பார்த்தேன். பாத்தும்மாவின் ஆடு இருக்கிறது. உம்மா இருக்கிறாள். தங்கை இருக்கிறாள். இரண்டு நாத்தனார்களும் இருக்கிறார்கள். என்ன நடக்கும்?
பாத்தும்மா வீட்டிற்குள் சென்று தங்கையிடமும் உம்மாவிடமும் நாத்தனார்களிடமும் சற்று அதிகாரம் தொனிக்கக் கேட்டாள்: “என் ஆட்டுக்கு யாராவது கஞ்சி கொடுத்தீங்களா?”
உம்மா சொன்னாள்: “நூறு வேலைகள் இருக்கு. உன் ஆடுதான் பெருசா?”
பாத்தும்மா தன் நாத்தனார்களைப் பார்த்து என்னவோ கேட்டாள். தங்கையைச் சிறிது திட்டினாள். “உன்னை எனக்கு நல்லா தெரியும்டி!”
அதற்கு என்ன பதில் சொல்வது என்று ஆனும்மாவிற்குத் தெரியாது. பாத்தும்மா உம்மாவிடம் தன்னுடைய வாழ்க்கை கஷ்டங்களைச் சொன்னாள். எவ்வளவோ கவலைகள். இருப்பினும், அவள் உரத்த குரலில் சொன்னாள்: “நீங்க யாரும் எதுவும் செய்ய வேண்டாம். என் ஆடு பிரசவம் ஆகட்டும். அப்போ பார்க்கலாம்.”
பாத்தும்மாவின் ஆடு பிரசவம் ஆகும்போது அவள் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்வாள்?
சாம்பமரம் காய்களால் புன்னகைத்துக் கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்தவாறு சாய்வு நாற்காலியில் மேற்குப் பக்கம் திரும்பி சாய்ந்திருந்த போது ‘ம்யாவ்... மியாவ்’ என்றொரு சகிக்க முடியாத சத்தத்துடன் அபயம் தேடி இங்கு வந்திருந்த பூனைகள் எனக்கு அருகில் வந்தன. அதில் ஒரு பூனை வேகமாகக் குதித்து என் மடியில் வந்து உட்கார்ந்து கொண்டது. அந்தப் பூனை சுத்தமான ஒன்றாகவும் தெரியவில்லை.