பாத்தும்மாவின் ஆடு - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6357
மிட்டாய் மட்டும்தான் நான் காசு கொடுத்து வாங்குவது. குழந்தைகளின் அழுகையை நிறுத்துவதற்கென்றே அவற்றை நான் வாங்கி வைத்திருப்பேன். மீதி அனைத்தும் என்னுடைய தம்பிமார்களும் கொச்சுண்ணியும் சுலைமானும் வாங்கித் தந்தவை. நான் நிறைய பழங்களைச் சாப்பிட்டாக வேண்டும். அவற்றை நான் மேஜைமீது வைத்திருந்தேன். பெட்டிமீது ஏறி நின்று ஸையது முஹம்மது பழங்களைத் திருடிச் சாப்பிடுவதை நானே பார்த்திருக்கிறேன். நான் பார்த்தேன் என்றால் அவனும் பார்த்தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். என் முன்னால்தான் ஒரு திருடனாக நின்று கொண்டிருந்ததை நினைத்து உண்மையிலேயே அவனுக்கு மிகவும் வருத்தம். அவன் அழுதான். மேலும் அவன் அழக்கூடாது என்பதற்காக பழங்களை நான் பத்திரமாக பெட்டிக்குள் எடுத்து வைத்துவிட்டேன். ஸையது முஹம்மது மிட்டாயையும் பழத்தையும் சாப்பிடுவதைப் பார்த்து லைலாவிற்குப் பெரிய அளவில் அழுகை வந்தது. அவளுக்கும் இரண்டு மிட்டாய்களையும் ஒரு பழத்தையும் தந்தேன். மணம் வருவதைத் தெரிந்துகொண்டு அங்கு வந்த ஆரிஃபாவுக்கும் அதே மாதிரி தந்தேன். தலா இரண்டு மிட்டாய்களை ஸுபைதாவிற்கும் ரஷீதிற்கும் கொடுத்து அனுப்பினேன். பிறகு ஒருவகை நிம்மதியுடன் ஆனும்மாவை தேநீர் கொண்டு வரச்சொல்லி பருகிவிட்டு, பீடியைப் புகையவிட்டவாறு ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தேன். எல்லாம் அமைதியாக முடிந்தன.
அப்படிப் படுத்திருந்தபோது என்னை ஸ்டைலாகப் பெற்ற என்னுடைய உம்மா என்னருகில் வந்தாள். அவளுக்கு அறுபத்து ஏழோ, எழுபத்து ஏழோ, எண்பத்து ஏழோ வயது இருக்கும். பற்கள் இன்னும் விழவில்லை. அதிகாலை நான்கு மணிக்கே படுக்கையைவிட்டு எழுந்துவிடுவாள். பிறகு வாய்க்காலில் நனையப் போட்டிருக்கும் தென்னை ஓலைகளை எடுத்துக்கொண்டு வந்து பின்ன ஆரம்பிப்பாள். அதைப் பின்னி முடித்து நிலத்தில் பரப்பி விடுவாள். சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து அது நன்கு காயட்டுமே என்ற எண்ணம்தான். அது முடிந்ததும் வீட்டுக்குத் தேவையான தண்ணீரை எடுத்து நிறைக்க ஆரம்பிப்பாள். இரண்டு கைகளிலும் ஒவ்வொரு பெரிய குடத்தையும் தூக்கிக் கொண்டு வருவாள். பாத்தும்மா, ஆனும்மா, அய்ஸோம்மா, குஞ்ஞானும்மா- எல்லாரையும் அவள் திட்டுவாள். கண்டபடி பேசுவாள். கடுமையான வீட்டு வேலைதான். இரவு பத்து மணிவரை இது தொடரும். பாத்தும்மா எல்லா இரவுகளிலும் வீட்டில் இருப்பதில்லை. இருப்பினும், வீட்டில் எப்போதும் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். உம்மா எதற்காக வேலை செய்ய வேண்டும்? வெறுமனே உட்கார்ந்திருக்க வேண்டியதுதானே! இந்தக் கேள்விகளுக்கு உம்மாவிடம் அருமையான பதில் இருக்கவே செய்கிறது. “அவள்களுக்கு எதுவுமே தெரியாது. வீட்டை எப்படி பார்த்துக்கணும்னு அவள்களுக்கு தெரியாது” என்பாள். சரி... கொஞ்சம் அவர்களிடம் ஆட்சி பொறுப்பை விட்டுக்கொடுக்க வேண்டியதுதானே! அதற்கும் அவளிடம் பதில் தயாராக இருக்கும். “உனக்கு வீட்டைப் பற்றி என்ன தெரியும்? ஒற்றைத் தடி. ஒரு சாண் வயிறு...”
அதற்குப் பிறகும் நான் தோற்காமல் இருந்தால் அவள் கூறுவாள்: “அவங்களுக்குப் பிள்ளைங்க இருக்காங்கள்ல! அவங்களை யார் பார்க்கறது?”
நான் கூறுவேன்:
“ஒருத்தி பிள்ளைங்களைப் பார்க்கணும். மீதி இருக்குறவங்க வேலை செய்யணும்.”
“நீ அப்படித்தான் சொல்வே. தனிக்கட்டை... ஒரே வயிறு. நீ எனக்குக் கொஞ்சம் பணம் தா.”
எங்கள் பேச்சு எப்போதும் வந்து நிற்பது இந்த ரூபாய் விஷயத்தில்தான். அது என்னுடைய உடல் நிலைக்கு அந்த அளவுக்கு உகந்ததல்ல. அதனால் உம்மா எதைச் சுமந்தாலும் எதை இழுத்துக்கொண்டு போவதைக் கண்டாலும் நான் எதுவுமே பேசாம சும்மா இருப்பேன். எதற்காக உம்மாவிடம் சொல்லி, அவள் பணம் கேட்க வேண்டும்?
உம்மா வந்தவுடன் மெதுவான குரலில் சொன்னாள்: “டேய், எனக்கு ஒரு பத்து ரூபாய் தா.”
நான் என் உம்மாவையே உற்றுப் பார்த்தேன்.
உம்மா மெதுவான குரலில் சொன்னாள்: “அப்துல்காதருக்குத் தெரியக்கூடாது. ஹனீஃபாவுக்குத் தெரியக்கூடாது. ஆனும்மாவுக்கும் பாத்தும்மாவுக்கு தெரியக்கூடாது.”
நான் மிகவும் ரகசியமான குரலில் கேட்டேன்:
“குஞ்ஞானும்மாவுக்கும் அய்ஸோம்மாவுக்கும் தெரியறதைப் பற்றி ஒண்ணுமில்லையே?”
அதற்கு உம்மா சொன்னாள்: “பேசினது போதும் தரவேண்டியதைத் தா யாருக்கும் தெரிய வேண்டாம்.”
நான் உம்மாவைப் பார்த்து கேட்டேன்: “நான் வந்த பிறகு இந்த வீட்டுல எவ்வளவு ரூபாய் தந்திருக்கேன்? வெளியே எல்லாருக்கும் தெரிஞ்சும் தெரியாமலும் என்கிட்ட இருந்து எவ்வளவு ரூபாய் நீங்க வாங்கியிருக்கீங்க?”
உம்மா ரகசியமான குரலில் சொன்னாள்: “நீ எதுவுமே தரலைன்னு நான் சொல்லல. எனக்கு இப்போ பத்து ரூபாய் தேவைப்படுது.”
“நான் தந்த பணமெல்லாம எங்கே போச்சு? நான் தந்து அப்படியொண்ணும் அதிக நாட்கள் ஆகலையே! அந்தப் பணமெல்லாம் எங்கே போச்சு?”
உம்மா மெதுவான குரலில் சொன்னாள்: “மெதுவா பேசு எல்லாத்தையும் அப்துல்காதர் வாங்கிக்கிட்டான்.”
“அவனுக்கு நான் தனியா பணம் தந்திருக்கேனே! சரியான ஆளுதான்... அவன் இங்கே வரட்டும்...!”
சிறு வயதில் அவனுடைய காலில் ஒரு வகை பாதிப்பு உண்டாகிவிட்டது. வாப்பா எத்தனையோ ஆயிரம் பணத்தைச் சிகிச்சைக்காகச் செலவழித்தார். கடைசியில் வலது காலில் ஒரு ஊனம் உண்டாகிவிட்டது. அதை நீக்கிப் பார்த்தால் அவன் பயில்வான்தான். இரும்பால் ஆன ஊன்றுகோலுடன்தான் அவன் எப்போதும் நடப்பான்.
உம்மா தாழ்ந்த குரலில் சொன்னாள்: “அவன்கிட்ட எதுவும் பேச வேண்டாம். இங்க இருக்கற எல்லா விஷயங்களையும் பார்க்கறது அவன்தானே? அவன் மட்டும் இல்லைன்னா நிலைமை எப்படி இருக்கும்ன்றதை நீயே யோசிச்சுப் பாரு. நீ ஒரு தனிக்கட்டை ஒரு வயிற்றைக் காப்பாற்ற கண்ட கண்ட இடத்தில் தங்கி நீ எவ்வளவு ரூபாய் செலவழிச்சிருப்பே?”
“அதற்கான அபதாரத்தை நான் எப்பவோ அடைச்சிட்டேன். நான் இங்கே எவ்வளவு ரூபாய்களைச் செலவழிச்சிருக்கேன்?”
“மெதுவா பேசு. இல்லைன்னு யாரும் சொல்லலையே! யாருக்கும் தெரியாம இப்போ எனக்கு நீ பத்து ரூபா தா."
"இதுக்கு முன்னாடி யாருக்கும் தெரியாம நான் உங்களுக்குக் கொடுத்த பணம் எல்லாத்தையும் அப்துல் காதர் எப்படி வாங்கினான்? அவன் இந்த விஷயத்தை எப்படித் தெரிஞ்சிக்கிட்டான்?”
“மெதுவா பேசு. அபியும் பாத்துக்குட்டியும் போய் சொல்லியிருக்காங்க.”
நான் மிகவும் தாழ்வான குரலில் சொன்னேன்: “உம்மா, உங்ககிட்ட நான் ஒரு ரகசியத்தைச் சொல்றேன். வேற யார்கிட்டயும் இதைச் சொல்லாதீங்க. என்கிட்ட மொத்தம் இருக்கறதே ஒரே ஒரு அஞ்சு ரூபா நோட்டுத்தான். அதை விட்டா ஒரு தம்பிடி காசுகூட இல்லை...”
உடனே உம்மா சொன்னாள்: “சரி... அதை எடு.”