புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை - Page 7
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
"அடியே பன்றியின் மகளே! நீ தூங்குறியா?''- அவன் முணுமுணுத்தான்.
"இல்ல''- அரீனா நீண்ட பெருமூச்சை விட்டாள்.
"எதனால் தூங்கல?''- கிண்டல் பண்ணுவதைப்போல அவன் கேட்டான்.
"டிமோஃபெ பெட்ரோவிச்...''- அரீனா அழுதாள்: "என்னிடம் கோபப்படாதீர்கள். என்மீது கருணை காட்டுங்க. இயேசுவை மனசுல நினைத்தவாறு என்மேல கருணை காட்டுங்க. நான் ஒரு தனியான பெண். இந்த உலகத்தில் எனக்குன்னு யாரும் இல்லை. நீங்க... நீங்க மட்டும்தான் எனக்குன்னு இருக்குற ஒரே ஆதரவு. என்ன ஆனாலும் நாம...''
"கூப்பாடு போடாதடீ... ஆட்களைச் சிரிக்க வச்சிடாதே''- கோமோ ஸோவ் முரட்டுத்தனமான குரலில் சொன்னான். அவன் அவளுடைய மன எண்ணங்களைக் கேட்டு அப்படி நடந்து கொண்டாலும், சிறிய அளவில் ஒரு மென்மைத்தனம் அவனுடைய மனதில் எங்கோ இருக்கத்தான் செய்தது. "அமைதியா இருடீ அறிவு கெட்டவளே!''
அதைத் தொடர்ந்து எதுவும் பேசாமல் ஒவ்வொரு நிமிடமும் கடந்து போவதைப் பார்த்துக்கொண்டே அவர்கள் அங்கு இருந்தார்கள். ஆனால் நிமிடங்கள் கடந்து சென்றும் எந்தவொரு செயலும் நடக்கவில்லை. இறுதியில் சூரியனின் ஒளிக்கீற்றுகள் கதவின் இடைவெளி வழியாக உள்ளே வந்து எட்டிப் பார்த்தது. வெளியே நடக்கும் காலடிச் சத்தம் கேட்டது. யாரோ கதவிற்கு அருகில் நடந்து வந்தார்கள். சிறிது நேரம் அங்கு நின்றுவிட்டு, வெளியே நின்ற ஆள் திரும்பிப் போவது கேட்டது.
"நண்பர்களே!''- கோபத்துடன் காரித் துப்பியவாறு அவன் கத்தினான். அமைதி உண்டாக்கிய வேதனையைச் சகித்துக்கொண்டு அவர்கள் காத்திருந்தார்கள்.
"கடவுளே... கருணை காட்டுவாயா?''- அரீனா முணுமுணுத்தாள்.
காலடிச் சத்தம் மெதுவாகக் கேட்டது. பூட்டு திறக்கப்பட்டது. வெளியே நின்று கொண்டு மிடுக்கான குரலில் ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்:
"கோமோஸோவ்! அரீனாவின் கையைப் பிடித்துக்கொண்டு வா! உடனே... வேகமாக...''
"நீ வா...''- கோமோஸோவ் சொன்னான். குனிந்த தலையுடன் அரீனா கோமோஸோவிற்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தாள்.
"பரவாயில்லை... ஒரு நிமிட சந்தோஷத்திற்காக நான் இதையெல்லாம் சகித்துக்கொள்கிறேன்.''
நிக்கோலாய் பெட்ரோவிச் சொன்னான்.
கோமோஸோவ் ஒரு காலை முன்னோக்கி வைத்ததும், ஸ்டேஷன் மாஸ்டர் உரத்த குரலில் சொன்னார்: "புதிய ஜோடிகளுக்கு வாழ்த்துக்கள்!''
அப்போது மீதமிருந்த நான்கு பேரும் "ஹீரோ" என்று உரத்த குரலில் சத்தம் போட்டார்கள்.
அரீனா கோமோஸோவின் ஒரு நிழலாகப் பின்தொடர்ந்தாள். இப்போது அவளுடைய தலை உயர்ந்திருந்தது. உதடுகள் மலர்ந்து திறந்து காணப்பட்டன. கைகள் இரண்டும் தொங்கிக் கொண்டிருந்தன. சோகமயமான தன் கண்களால் அவள் தனக்கு முன்னால் இருந்த எல்லாவற்றையும் பார்த்தாள். ஆனால் அவர்கள் அதைப் பார்த்தார்களா என்பது சந்தேகம்தான்.
"ஹ... ஹ... ஹ... அவர்களிடம் முத்தமிடச் சொல்லுங்க.''
மனைவி கணவரிடம் சொன்னாள்.
"தம்பதிகளே... சற்று முத்தமிடுங்கள்''- நிக்கோலாய் பெட்ரோவிச் சத்தம் போட்டுச் சொன்னான். அதைக் கேட்டதும் ஸ்டேஷன் மாஸ்டரால் தன் கால்களைக் கொண்டு நிற்க முடியாமல் போய்விட்டது. அவர் ஒரு மரத்தின் தடியில் சாய்ந்துகொண்டு நின்றார். பாத்திரத்தின் வெளிப்பக்கத்தைத் தட்டி சத்தம் உண்டாக்கினார். விஸில் அடித்தார். பாட்டு பாடுவதற்கு மத்தியில் லூக்கா சிறிய அளவில் நடனம் ஆடினான்.
"அரீனா சமையல் செய்த முட்டைக்கோஸ் சூப்பிற்கு அடர்த்தி அதிகமோ என்றொரு சந்தேகம்"
நிக்கோலாய் பெட்ரோவிச் தன்னுடைய வீங்கிய கன்னங்களைக் கொண்டு சத்தம் உண்டாக்கினான்.
"போம்... போம்... போம்... டுட் டுட் டுட், டுட், போம், போம் டுட் டுட்..."
பாரக்கின் கதவை அடைந்தபோது கோமோஸோவ் காணாமல் போனான். அரீனா வாசலில் தனியாக நின்று கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி நின்று கொண்டிருந்த முரட்டுத்தனம் கொண்ட ஆட்கள், அவளுக்கு எதிராக வாய்க்கு வந்தபடி மோசமான வார்த்தைகளைக் கூறினர். கேலி செய்து சிரித்தார்கள். சந்தோஷத்தால் துள்ளிக் குதித்தார்கள். முகத்தைச் சற்றும் அசைக்காமல் அவள் அவர்களுக்கு மத்தியில் அமைதியாக நின்றிருந்தாள்- அவலட்சணம் பிடித்த, சுத்தமில்லாத, பரிதாபத்தை வரவழைக்கச் செய்யும் பெண் வடிவம்...
"மணமகன் அவளை விட்டுவிட்டு ஓடி விட்டான்''- அரீனாவைச் சுட்டிக்காட்டியவாறு ஸ்டேஷன் மாஸ்டர் தன் மனைவியிடம் கூறினார்.
அரீனா அவரையே வெறித்துப் பார்த்தாள். தொடர்ந்து தண்டவாளங்களைத் தாண்டி அந்த கோதுமை வயல்களை நோக்கி அவள் நடந்து சென்றாள். கூவல், ஆரவாரம் ஆகியவற்றுடன் ஆட்கள் அவளைப் பயணிக்க வைத்தார்கள்.
"போதும்... இனி அவளை வெறுமனே விடுங்க!''- சோனியா சத்தம் போட்டுச் சொன்னாள்: "திரும்பி வர்றதுக்கு அவளுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்க. நம்முடைய உணவைத் தயார் பண்ண வேண்டியது அவள்தான் என்ற விஷயத்தை மறந்துவிட வேண்டாம்.''
அரீனா வயல்களுக்கு மத்தியில் நடந்து சென்றாள். அடர்த்தியாக கோதுமைச் செடிகள் வளர்ந்து நிறைந்திருந்த வயல்களின் எல்லை வரப்பையும் தாண்டி அவள் முன்னோக்கி நடந்து சென்றாள். சிந்தித்துக்கொண்டே சென்றதில் அவள் தன்னையே மறந்துவிட்டதைப்போல நடந்து போய்க் கொண்டிருந்தாள்.
"உங்களுக்கு விருப்பம்தானா?''- ஸ்டேஷன் மாஸ்டர் தன்னுடைய உதவியாளர்களிடம் கேட்டார். அவர்கள் புதிய தம்பதிகளைப் பற்றிய ஒவ்வொரு சிறிய விஷயங்களையும் சொல்லி விவாதத்தில் ஈடுபட்டனர். விவாதத்திற்கு மத்தியில் அவர்கள் தலையில் அடித்துக்கொண்டு சிரித்தனர். அந்த சந்தர்ப்பத்தில்கூட நிக்கோலாய் பெட்ரோவிச் தன்னுடைய மகத்துவமான வசன முத்துக்களைக் கூறுவதற்கு மறக்கவில்லை.
"சிரிக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் சிரிப்பது ஒரு குற்றச் செயல் அல்ல.''
அவன் இந்த வார்த்தைகளைச் சோனியாவிடம்தான் சொன்னான். அதைத் தொடர்ந்து ஒரு முன்னறிவிப்பை வெளியிடவும் அவன் மறக்கவில்லை: "ஆனால் அளவுக்கும் மேலே சிரிப்பது ஆபத்தானது.''
புகைவண்டி நிலையத்தில் அந்த நாளன்று எல்லாரும் கட்டுப்பாடே இல்லாமல் சிரித்தார்கள். ஆனால் அரீனா திரும்ப வராமல் இருந்ததால், உணவு மிகவும் மோசமாக இருந்தது. அந்த வேலை ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவியின் தோள்மீது விழுந்தது. நல்ல நிலையில் இல்லாத உணவால் அவருடைய ஆர்வத்தைக் கெடுக்க முடியவில்லை. வேலைக்குப் போகும் நேரம் வரை கோமோஸோவ் நின்றிருந்த பெட்டிக்கு உள்ளேயிருந்து வெளியே வரவேயில்லை. அவனிடம் ஸ்டேஷன் மாஸ்டருக்கு முன்னால் வந்து நிற்கும்படி தகவல் கூறி அனுப்பப்பட்டது. மாத்வெ யொகோரோவிச் என்ற ஸ்டேஷன் மாஸ்டரை சந்தோஷப்படுத்துகிற மாதிரி நிக்கோலாய் பெட்ரோவிச்சும் லூக்காவும் கோமோஸோவை விசாரணை செய்தார்கள். அவன் எப்படி அந்த "அழகி"யை வசீகரித்தான் என்பதை அவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்.
"நான் இதுவரை கேள்விப்பட்டவைகளிலேயே மிகவும் பரிதாபமான காதலும், வீழ்ச்சியும்''- நிக்கோலாய் பெட்ரோவிச் ஸ்டேஷன் மாஸ்டரிடம் சொன்னான். அவனுடைய முகத்தில் ஒரு சிறிய புன்சிரிப்பு மலர்ந்தது. அரீனாவை எதிர்த்துப் பேசினால், தன்னால் இந்தக் கிண்டல்களில் இருந்து தப்பிக்க முடியும் என்று கோமோஸோவ் நினைத்தான்.