புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை - Page 6
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
"நாம் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு விளையாட்டு விளையாடப் போகிறோம். என்ன? நமக்கு சிரிக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பமாவது கிடைத்தது மாதிரி இருக்குமே!''
"அது எனக்கு சம்மதம்தான்''- டெலிகிராஃபின் பொத்தானை அழுத்தியவாறு நிக்கோலாய் பெட்ரோவிச் பதில் சொன்னான்.
தத்துவஞானி எப்போதும் அதிகமாகப் பேசக்கூடியவனாக இருக்க வேண்டும் என்பது அவருடைய கருத்தாக இருந்தது.
அதிகம் தாமதிக்காமலே அவர் எதிர்பார்த்தது மாதிரியே சிரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு முன்னால் வந்து நின்றது.
சோனியாவின் சம்மதத்துடன், கோமோஸோவின் வற்புறுத்தலின்படி அரீனா அந்தப் பழைய சாமான்கள் போடப்பட்டிருந்த அறைக்குள் அன்று படுக்க முடிவெடுத்தாள். அதற்குள் நல்ல ஈரத்தன்மையும் குளிர்ச்சியும் இருந்தன. பழைய மரச்சாமான்களும் டின்களும் அந்த இருட்டில் பயமுறுத்தக்கூடிய வடிவங்களாக மாறின. தனியாக அந்த அறைக்குள் படுத்திருந்தபோது, அரீனாவிற்கு பயமாக இருந்தது. கண்களை மலரத் திறந்து வைத்துக் கொண்டு அந்த வைக்கோலால் உண்டாக்கப்பட்ட படுக்கையில் கடவுளைப் பிரார்த்தனை செய்தவாறு அவள் மல்லாந்து படுத்திருந்தாள்.
கோமோஸோவ் வந்தான். ஒரு வார்த்தைகூடக் கூறாமல் அவன் அவளை ஒரு வழி பண்ணினான். தளர்வடைந்தவுடன், படுத்து உறங்கி விட்டான். ஆனால் உடனடியாக அரீனா அவனைத் தட்டி எழுப்பினாள்.
"டிமோஃபெ பெட்ரோவிச்! டிமோஃபெ பெட்ரோவிச்!''- பரபரப்புடன் அவள் அழைத்தாள்.
"என்ன?''- பாதித் தூக்கத்தில் இருந்த கோமோஸோவ் முனகினான்.
"அவர்கள் நம்மை இந்த அறைக்குள் போட்டு பூட்டியிருக்கிறார்கள்.''
"என்ன சொன்னே?''- வேகமாக எழுந்துகொண்டு அவன் கேட்டான்.
"வெளியில் இருந்துகொண்டு அவர்கள் இந்த அறையின் கதவைப் பூட்டி இருக்கிறார்கள்.
"உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கு''- கோபத்துடன் அவளைத் தள்ளிவிட்டவாறு அவன் முணுமுணுத்தான்.
"அப்படியென்றால் நீங்கள் கொஞ்சம் போய் பாருங்க''- அவள் சொன்னாள்.
அவன் எழுந்து முன்னோக்கி நடந்தான். பழைய சாமான்களில் மோதியவாறு அவன் கதவை நெருங்கினான். அவன் அந்தக் கதவைப் பிடித்துத் தள்ளிப் பார்த்தான்.
"இவை அனைத்தும் பட்டாளக்காரனின் வேலை''- சிறிது நேர அமைதிக்குப் பிறகு கவலையுடன் அவன் சொன்னான்.
அப்போது வெளியே இருந்து சிரிப்புச் சத்தம் கேட்டது. "என்னை வெளியே விடு''- கோமோஸோவ் ஆர்ப்பாட்டம் பண்ணினான்.
"ஏன் விடணும்?''- பட்டாளக்காரனின் குரல்.
"என்னை வெளியே விடுன்னு சொன்னேன்.''
"காலையில் விடுறேன்''- திரும்பி நடந்துகொண்டு பட்டாளக்காரன் சொன்னான்.
"டேய்... நாசமாப் போன பயலே... நான் வேலைக்குப் போகணும்...''- கோமோஸோவ் கெஞ்சினான்.
"உன் வேலையை நான் பார்க்குறேன். இன்னைக்கு இரவு நீ இங்கேயே படுத்திரு.''
பட்டாளக்காரன் அங்கிருந்து கிளம்பினான்.
"அசிங்கம் பிடிச்ச நாயே!''- அந்த ஸ்விட்ச்மேன் பரிதாபமாக அழுதான். "அவன் என்னை இங்கு அடைத்து மூடியது ஒரு பக்கம் இருக்கட்டும். அங்கு ஸ்டேஷன் மாஸ்டர் இருக்கிறாரே! அவரிடம் அவன் என்ன சொல்லி இருப்பான் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமே! கோமோஸோவ் எங்கே என்று ஸ்டேஷன் மாஸ்டர் கட்டாயம் கேட்பார். அவன் அதற்கு என்ன பதில் சொல்வான்?''
"ஸ்டேஷன் மாஸ்டர் சொல்லித்தான் அந்த ஆள் இதைச் செய்திருக்க வேண்டும் என்பது என்னுடைய சந்தேகம்''- அரீனா கவலையுடன் முணுமுணுத்தாள்.
"ஸ்டேஷன் மாஸ்டரா?''- கோமோஸோவ் சற்று பயம் கலந்த குரலில் கேட்டான்: "அவர் எதற்காக இதைச் செய்ய வேண்டும்?''
சிறிது நேரம் சிந்தித்துவிட்டு அவன் கோபமான குரலில் சொன்னான்: "நீ பொய் சொல்றே!''
ஒரு நீண்ட பெருமூச்சுதான் அதற்கான அவளுடைய பதிலாக இருந்தது.
"கடவுளே! என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?''- கதவுக்கு அருகில் இருந்த ஒரு பீப்பாய்மீது அமர்ந்துகொண்டு அவன் தனக்குத்தானே கூறிக்கொண்டான்: "நான் வெட்கம் கெட்ட மனிதனாக ஆகிவிட்டேன். அடியே பன்றியின் மகளே... உன்னால தான் இவையெல்லாம் நடக்கின்றன!''
அவளுடைய மூச்சு கேட்ட இடத்தை நோக்கி அவன் தன்னுடைய கையைச் சுருட்டி இடித்தான். அவள் எதுவும் சொல்லவில்லை.
சாம்பல் நிறத்தில் இருந்த நிழல்கள் அவர்களைச் சூழ்ந்தன. அந்த நிழல்கள் பலவகைப்பட்ட வாசனைகளைத் தாங்கியிருந்தன. பல பொருட்களின் தாங்க முடியாத வாசனை அவர்களின் மூக்கிற்குள் நுழைந்தது. கதவில் இருந்த சிறிய இடைவெளிகள் வழியாக நிலவின் மெல்லிய கீற்றுகள் உள்ளே புகுந்து கொண்டிருந்தன. தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் ஒரு சரக்கு வண்டியின் சத்தம் உள்ளே வந்து கொண்டிருந்தது.ஸ் "அடியே... சோலைக் கொல்லை பொம்மை... நீ என்ன எதுவுமே சொல்லாம இருக்கே?''- கூச்சமும் கோபமும் கலந்த குரலில் கோமோஸோவ் சொன்னான்: "நான் இனி என்ன செய்வது? நீ என்னை வலையில் சிக்கவைத்து விட்டாயே? இனி நீ சொல்றதுக்கு எதுவும் இல்லை. நாசமாப் போனவளே! ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடி. இந்த வெட்கம் கெட்ட செயலை நான் எப்படி சந்திப்பேன்? கடவுளே, இப்படிப்பட்ட உருப்படாத ஒருத்திகூட வந்து மாட்டிக்கொள்வதற்கு நான் என்ன தப்பு செய்தேன்?''
"எனக்கு மன்னிப்பு தரணும் என்று நான் அவர்களிடம் கூறுவேன்''- அரீனா மெதுவான குரலில் சொன்னாள்.
"அதனால்...''
"ஒருவேளை, அவங்க அதை ஏற்றுக்கொள்வாங்க.''
"அதனால் எனக்கு என்ன பிரயோஜனம்? சரி... அவங்க உன்னை மன்னிச்சிடுவாங்க. அதனால் என்ன ஆகப் போகுது? எனக்கு அவமானம் உண்டாச்சா இல்லையா? அவர்களுக்கு முன்னால் நான் ஒரு கேலிப் பொருளாக இருப்பேன். அவ்வளவுதான்.''
சில நிமிடங்களுக்குப் பிறகு அவன் அவள்மீது கோபப்படவும் அடிக்கவும் செய்தான். நேரம் எந்தவொரு இரக்கமும் இல்லாமல் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. இறுதியில் நடுங்கும் குரலில் அவள் சொன்னாள்:
"என்னை மன்னிச்சிடுங்க, டிமோஃபெ பெட்ரோவிச்.''
"கோடரியை வைத்துத்தான் உன்னை மன்னிக்கணும்''- அவன் கத்தினான்.
அந்த அறைக்குள் நிலவிய கனமான வேதனை நிறைந்த பேரமைதி, அந்த இருட்டு என்ற சிறைக்குள் சிக்கிக்கொண்ட இரண்டு ஆன்மாக்களுக்கு தாங்க முடியாத துயரத்தைத் தந்தது.
"கடவுளே... சீக்கிரம் பொழுது விடியக்கூடாதா?''- அரீனா புலம்பினாள்.
"அமைதியாக இருடீ... நான் உனக்குப் பொழுதை விடிய வைத்துக் காட்டுகிறேன்''- கோமோஸோவ் அவளை பயமுறுத்தினான். ஒரு அசிங்கமான வார்த்தையையும் அவளைப் பார்த்து அவன் சொன்னான். மீண்டும் அமைதி தந்த வேதனை. பொழுது புலர்வதை எதிர்பார்த்து நேரம் கொடூரமாக நகர்ந்து கொண்டிருந்தது. அந்த இரண்டு மனிதப் பிறவிகளின் நகைச்சுவைக்கு இடமான சூழ்நிலையை, அந்த ஒவ்வொரு நிமிடமும் குரூரமாக ரசித்துக் கொண்டிருப்பதைப்போல இருந்தது.
கோமோஸோவ் சற்று நேரம் படுத்து உறங்கினான். அந்த கட்டிடத்திற்கு வெளியே சேவல் கூவுவதைக் கேட்டு அவன் கண்விழித்தான்.