புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை - Page 8
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
"முதலில் அவள் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டுவாள்''- அவன் சொன்னான்.
"கண்ணைச் சிமிட்டினாளா? ஹோ... ஹோ... ஹோ... கொஞ்சம் நினைச்சுப் பாரு நிக்கோலாய் பெட்ரோவிச்... அவள் கண்ணைச் சிமிட்டினாளாம்! பிறகு என்ன வேணும்?''
"அவள் எப்போதும் என்னைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தாள். அப்போ நான் சொன்னேன், "அடியே.. உனக்கு என் மகள் வயதுதான் இருக்கும்" என்று. அதற்கு அவள் இதற்கு இப்படி பதில் சொன்னாள்- "வேணும்னா உங்களுக்குத் தேவையான சட்டைகளை நான் தைத்துத் தருகிறேன்" என்று.
"ஆனால், முக்கியமான விஷயம் ஊசி இல்லை''- நிக்கோலாய் பெட்ரோவிச் சொன்னான். ஒரு விளக்கம் என்பதைப்போல ஸ்டேஷன் மாஸ்டரிடம் அவன் இதையும் சேர்த்துச் சொன்னான்: "நெக்ரோஸோவின் கவிதையில் ஒரு வரி இது.''
"கோமோஸோவ் கதையைத் தொடரட்டும்...''
கோமோஸோவ் தொடர்ந்தான். அவனுடைய முயற்சிகள் முதலில் மிகவும் சிரமங்கள் நிறைந்தனவாக இருந்தன. படிப்படியாகத் தன்னுடைய பொய்களின் பாதிப்பால் அவன் மிகவும் சர்வ சாதாரணமாக அந்தக் கதையைத் தொடர்ந்தான்.
அதே நேரத்தில் அவள் அந்த வயலில் கிடந்தாள். கோதுமை என்ற கடலுக்குள் அவள் புகுந்திருந்தாள். சிறிதும் அசையாமல் அவள் அந்த வயலுக்கு மத்தியில் கிடந்தாள். வெயிலின் கொடுமையைத் தாங்க முடியாது என்ற சூழ்நிலை வந்ததும், திரும்பிப் படுத்தாள். கைகளால் தன்னுடைய முகத்தை எரித்துக் கொண்டிருந்த சூரியனிடமிருந்தும் பிரகாசமான ஆகாயத்திடமிருந்தும் மறைத்துக் கொண்டாள்.
அவமானத்தால் காயம்பட்ட அந்தப் பெண்ணுக்கு கோதுமைச் செடிகளின் முணுமுணுப்பு ஆறுதலாக இருந்தது. வெப்பத்தைத் தாங்க முடியாமல் காதுகள் அடைத்துப் போகிற அளவிற்கு சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்த பூச்சிகளின் சத்தமும் அவளை பாதிக்கவில்லை. அன்று மிகவும் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது. அவள் பிரார்த்தனை செய்ய முயற்சித்தாள். ஆனால் அவளுக்குப் பிரார்த்தனை எதுவும் ஞாபகத்தில் வரவில்லை. கிண்டல் பண்ணிக் கொண்டிருந்த ஏராளமான கண்கள் அவளுடைய கண்களுக்கு முன்னால் நடனமாடிக் கொண்டிருந்தன. லூக்காவின் முரட்டுத்தனமான குரலில் உள்ள பாட்டும் விஸிலும், செம்புப் பாத்திரத்தின் வெளிப்பகுதியில் தாளம் போடும் சத்தமும், ஆட்களின் கேலிச் சிரிப்பும் அவளுடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தன. இந்த ஆரவாரங்களும் வெப்பமும் அவளுடைய நெஞ்சை அழுத்தி நெறித்தன. ரவிக்கையை அவிழ்த்து அவள் தன்னுடைய மார்பகத்தை சூரியனுக்கு நேராக நிர்வாணமாகக் காட்டினாள். சுவாசிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதற்காகத்தான் அவள் அப்படிச் செய்தாள். வெயில் அவளுடைய மேற்தோலைச் சுட்டுப் பொசுக்கியது. தன்னுடைய மார்பகத்திற்குள் என்னவோ சுடுவதைப்போல அவளுக்குத் தோன்றியது.
"கடவுளே! என்னிடம் கருணை காட்டு..." என்று அவ்வப்போது அவள் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
ஆனால், கோதுமைச் செடிகளின் முணுமுணுப்பும், புற்களின் முனகல் சத்தமும் மட்டுமே அதற்கு பதிலாக இருந்தன. கோதுமைப் பூக்களுக்கு மேலே அவள் தன்னுடைய தலையை உயர்த்தினாள். அவற்றின் பொன்னொளியும், புகைவண்டி நிலையத்தைத் தாண்டி உயர்ந்து நின்று கொண்டிருக்கும் நீர்த் தொட்டியின் கறுத்த தோற்றமும், புகைவண்டி நிலையக் கட்டிடத்தின் மேற்கூரையும் அவளுக்கு நன்கு தெரிந்தன. அந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட சமவெளியை மூடிக்கொண்டிருந்த நீல வானத்தின் பரப்பைத் தவிர வேறு எதுவுமே அங்கு இல்லை. இந்த உலகத்தில் தான் மட்டும் தனியாக இருப்பதைப்போலவும், தான் அதன் நடுவில் படுத்திருப்பதாகவும், அந்தத் தனிமையின் கனமான சுமையைப் பங்குபோட யாரும் வரப்போவது இல்லை என்றும் அவளுக்குத் தோன்றியது. யாரும்... எந்தச் சமயத்திலும்... இல்லை.
சாயங்கால நேரம் ஆனபோது தன்னுடைய பெயரை யாரோ உரத்த குரலில் அழைப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது.
"அரீனா... அரீனா... திரும்பி வா.''
லூக்கா, பட்டாளக்காரன் ஆகியோரின் சத்தம்தான் அது என்பதை அவள் புரிந்துகொண்டாள். மூன்றாவதாக ஒரு மனிதனின் சத்தத்தைக் கேட்க அவள் விரும்பினாள் என்றாலும், அவள் அதைக் கேட்கவில்லை. அந்தச் சத்தம் கேட்காமல் போனபோது அவள் கண்ணீர் விட்டு அழுதாள். அந்தக் கண்ணீர் அவளுடைய அசிங்கமான கன்னங்கள் வழியாக மார்பகங்களில் இறங்கியது. வெப்பத்தைத் தாங்க முடியாததால் அவள் தன்னுடைய மார்பகங்களை பூமியுடன் சேர்த்து வைத்திருந்தாள். பிறகு திடீரென்று அவள் அழுகையை நிறுத்தினாள். அழுவதிலிருந்து யாராவது தன்னை விலக்கமாட்டார்களா என்று நினைத்துத்தான் அவள் அப்படிச் செய்தாள்.
இரவு ஆனபோது, அவள் எழுந்து மெதுவாகத் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.
புகைவண்டி நிலையக் கட்டிடத்தை நெருங்கிய அவள், அதன் சுவரில் சாய்ந்து, அந்த கோதுமை வயலையே பார்த்துக்கொண்டு நின்றாள். ஒரு சரக்கு வண்டி புகைவண்டி நிலையத்தில் வந்து நின்றது. பட்டாளக்காரன் அந்த வண்டியில் இருந்த கார்டிடம் அவளுடைய வெட்கம் கெட்ட கதைகளை விளக்கிக் கூறிக் கொண்டிருப்பதையும், அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதையும் அவள் கேட்டாள். பரந்து கிடந்த அந்த வயலில் அவர்களுடைய சிரிப்புச் சத்தம் பெரிதாகக் கேட்டது. அணில்களின் ஒரு கூட்டம் அந்த உரத்த சிரிப்புச் சத்தத்தைக் கேட்டு, அந்த வயலிலிருந்து வெளியே எட்டிப் பார்த்தன.
"கடவுளே, என்மீது கருணை காட்டு...''- என்று நீண்ட பெருமூச்சை விட்டவாறு அவள் தன்னுடைய சரீரத்தை அந்தச் சுவர்மீது சாய்த்தாள். ஆனால் அந்த பெருமூச்சுக்கள் அவளுடைய இதயச் சுமையைக் குறைக்கவில்லை.
பொழுது புலர்ந்தபோது, மேலே இருந்த அறைக்குச் சென்று துணிகள் தொங்க விடப்படும் உத்திரத்தில் அவள் தூக்குப் போட்டுத் தொங்கினாள்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, கெட்டு அழுகிப்போன பிணத்தின் தாங்க முடியாத நாற்றம் ஆட்களின் கவனத்தை அந்தப் பக்கமாகத் திருப்பிவிட்டது. முதலில் அவர்கள் திகைத்துப் போனார்கள். குற்றவாளி யாராக இருக்கும் என்று பின்னர் அவர்களுக்குள் விவாதித்தார்கள். கோமோஸோவ்தான் குற்றவாளி என்று நிக்கோலாய் பெட்ரோவிச் உறுதியான குரலில் சொன்னான். ஸ்டேஷன் மாஸ்டர் பெட்ரோவிச்சின் முகத்தில் ஒரு அடி கொடுத்தார். வாயைத் திறந்தால் இனியும் அடி கிடைக்கும் என்று அவர் பெட்ரோவிச்சிடம் சொன்னார்.
போலீஸ்காரர்கள் வந்தார்கள். விசாரணை ஆரம்பமானது. அரீனாவிற்கு மனக்கவலை என்ற நோய் இருந்தது என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். சமவெளியின் ஏதோ ஒரு மூலையில் அந்த இறந்த உடலைப் புதைக்கும்படி ரெயில்வே தொழிலாளர்களிடம் அவர்கள் உத்தரவிட்டார்கள். அந்த உத்தரவு செயல்படுத்தப்பட்டது. அமைதியும் வழக்கமான செயல்களும் அந்த புகைவண்டி நிலையத்திற்கு மீண்டும் வந்தன.
மீண்டும் அந்தப் புகைவண்டி நிலையத்தைச் சேர்ந்த மனிதர்கள் நான்கு நிமிட நேரத்திற்குத் தங்களுடைய சோர்வும் வெறுப்பும் தனிமையுணர்வும் இல்லாமல் வாழ்ந்தார்கள். அந்த வெப்பத்திலும் சோர்விலும் புகைவண்டிகள் கடந்து போவதை அவர்கள் பொறாமையுடன் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
வசந்த காலத்தில் சமவெளியிலிருந்து குளிர்ந்த காற்று ஓசை எழுப்பியவாறு கடந்து வந்தது. அது அந்த சிறிய புகைவண்டி நிலையத்திற்கு மேலே பனியையும் தூசியையும் ஓசைகளையும் சிதறிவிட்டது. அங்கு வாழ்க்கை வழக்கம்போல தனிமைப்பட்டுப் போயிருந்தது.