புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை - Page 5
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
"அது என்ன?''- ஸ்டேஷன் மாஸ்டர் ஆர்வத்துடன் கேட்டார்.
மிடுக்கான குரலில் அந்த வார்த்தைகள் மீண்டும் உச்சரிக்கப்பட, ஸ்டேஷன் மாஸ்டர் தன்னுடைய கண்களைப் பாதியாக மூடிக்கொண்டு அதை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார். அதே நேரத்தில் அவருடைய மனைவி களைத்துப்போன குரலில் கேட்டாள்:
"நீங்க வாசிக்கிற விஷயங்களையெல்லாம் ஞாபகத்தில் வச்சிருக்கீங்கன்றது அதிசயம் என்று கூறுவதைத் தவிர வேறொன்றும் இல்லை. என்னை எடுத்துக்கொண்டால் நான் இன்று வாசிக்கிற விஷயத்தை நாளைக்கு ஞாபகத்தில் வச்சிருக்க மாட்டேன். நிவாயில் தோன்றிய, பயத்தை ஏற்படுத்துகிற சுவாரசியமான ஒரு விஷயத்தை நான் வாசித்தேன். ஆனால் இப்போது எனக்கு அது ஞாபகத்தில் இல்லை.''
"எல்லாம் ஒரு பழக்கம். அவ்வளவுதான்''- நிக்கோலாய் பெட்ரோவிச் சொன்னான்.
"இது அந்த ஆள் சொன்னதைவிட நல்ல வாக்கியம். அவருடைய பெயர் என்னன்னு சொன்னே? ம்... ஷோப்பான் ஹவர்''- ஸ்டேஷன் மாஸ்டர் சிரித்துக்கொண்டே சொன்னார்: "இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் புதியவை அனைத்தும் பழையவையாக மாறுகின்றன.''
"இல்லாவிட்டால் அதற்கு எதிர்மறையாகக்கூட ஆகலாம். ஏதோ ஒரு கவிஞர் சொன்னதைப்போல, வாழ்க்கை கஞ்சத்தனமானது. எல்லா நேரங்களிலும் பழையதில் இருந்துதான் வாழ்க்கை புதியதைப் படைக்கிறது.''
"சரி... உனக்கு இவை எல்லாம் எங்கேயிருந்து கிடைக்கிறது? சல்லடையில் இருந்து உதிர்வதைப்போல அவை உன்னுடைய நாக்கில் இருந்து வெளியே குதிக்குது.''
ஸ்டேஷன் மாஸ்டர் சத்தம் உண்டாக்காமல் சிரித்தார். அவருடைய மனைவியும் அழகாகச் சிரித்தாள். தன்னுடைய சந்தோஷத்தை மறைத்து வைக்க நிக்கோலாய் பெட்ரோவிச் மிகவும் சிரமப்பட்டு முயற்சி செய்தான்.
"விரக்தியைப் பற்றிச் சொன்னது யார்?''
"பராற்றின்ஸ்கி... ஒரு கவிஞர்!''
"இன்னொரு வாக்கியத்தைச் சொன்னது?''
"ஃபொஃபானோவ்... அவரும் ஒரு கவிஞர்தான்.''
"அவர்கள் திறமை படைத்தவர்கள்'' - அந்தக் கவிஞர்களின் திறமையை ஒப்புக் கொண்டதைப்போல ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார். தன்னை மறந்த சிரிப்புடன் அந்த வார்த்தைகளை ஒரு பாட்டைப்போல அவர் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தார்.
சோர்வு என்ற விஷயம் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்தது. ஒரு நிமிடம் அவர்கள் அந்தச் சோர்விலிருந்து விடுதலை ஆகி, அடுத்த நிமிடம் இன்னொரு சோர்வின் பிடியில் அவர்கள் போய் சிக்கிக் கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து அங்கு அமைதி வளர, வெப்பக் காற்றிலிருந்து தப்பிப்பதற்காக தங்களுடைய நெஞ்சின்மீது ஊதுவதும், தேநீர் குடிப்பதுமாக அந்தச் செயல்கள் திரும்பத் திரும்ப நடந்து கொண்டிருந்தன.
சமவெளியில் அன்று சூரியனின் இருப்பு மிகவும் சக்தி படைத்ததாக இருந்தது. "நான் ஏற்கெனவே அரீனாவைப் பற்றிச் சொன்னேன் அல்லவா?''- ஸ்டேஷன் மாஸ்டர் தொடர்ந்து சொன்னார்: "அவள் ஒரு அசாதாரணமான பெண். அவளைப் பார்த்து ஆச்சரியப்படாமல் என்னால் இருக்க முடியவில்லை. ஏதோ பேய் பிடித்தவளைப்போல அவள் இருக்கிறாள். சிரிப்பு இல்லை. பாட்டு இல்லை. மிகவும் குறைவாகவே பேசுகிறாள். தரையில் நடப்பட்ட ஒரு செடியைப்போல இருக்கிறாள். ஆனால் அவள் நன்றாக வேலை செய்வாள். லோலியாவைப் பத்திரமா பார்த்துக்குற விஷயத்தில் எதுவும் சொல்வதற்கு இல்லை. குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் அவள் திறமைசாலிதான்.''
அரீனா எங்காவது ஒளிந்து நின்று கேட்டுக் கொண்டிருப்பாளோ என்று பயந்து மிகவும் மெதுவான குரலில்தான் அவர் அவை எல்லாவற்றையும் சொன்னார். வேலைக்காரர்களை எந்தச் சமயத்திலும் பாராட்டக்கூடாது என்பதை அவர் புரிந்து கொண்டிருந்தார். அது அவர்களை அழித்து விடும். உண்மையான விஷயத்தை மறைத்து வைத்திருக்கும் வார்த்தைகளுடன் சோனியா அவளுடைய உரையாடலில் இடையில் புகுந்தாள்.
"இந்த மாதிரியான பேச்சை நிறுத்துங்க. அவளைப் பற்றி உங்களுக்குத் தெரியாத எவ்வளவோ விஷயங்கள் இருக்கு.''
நிக்கோலாய் பெட்ரோவிச் மெதுவாகப் பாட ஆரம்பித்தான். மேஜைமீது தன் கையில் இருந்த கரண்டியால் அவன் அவ்வப்போது தாளம் போட்டுக் கொண்டிருந்தான்.
"ஆசீர்வதிக்கப்பட்ட பிசாசே
உன்னுடன் போராடக்கூடிய சக்தி
காதலுக்கு அடிமையான எனக்கு இல்லை."
"என்ன...? என்ன?'' - ஸ்டேஷன் மாஸ்டர் உணர்ச்சிவசப்பட்டார். "அவளுடைய விஷயத்தையா சொல்றே?''
"ச்சே... நீங்கள் இரண்டுபேரும் முட்டாள்தனமா பேசிக்கிட்டு இருக்கீங்க.''
அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தான். அவனுடைய கீழ்தாடை நடுங்கியது. நெற்றியில் இருந்த வியர்வை முன்னால் தெறித்து விழுந்தது.
"வெறும் ஒரு தமாஷான விஷயம் இல்லை அது''- சோனியா சொன்னாள்: "குழந்தையின் விஷயத்தில் அவளுக்கு பொறுப்பு இருக்கிறது. ஆனால் இந்த ரொட்டியைப் பாருங்க. கருகிப்போய் புகைந்து... இது இப்படி ஆவதற்கு என்ன காரணம்?''
"சந்தேகமே இல்லை. ரொட்டி இப்படி இருக்க வேண்டியது இல்லை. இதற்காக நீ அவளைத் திட்ட வேண்டும். ஆனால் கடவுள் சத்தியமா நான் இதையெல்லாம் எதிர்பார்க்கலை. அவள் ஒரு மந்த புத்தி கொண்ட பெண் என்றுதான் நினைத்தேன்.''
"சரி... அதற்குக் காரணமாக இருப்பவன் யார்? லூக்கா...? அந்த ராஸ்கலை நான் இன்னைக்கு ஒரு வழி பண்றேன். இல்லாவிட்டால் அந்த யகோத்காவா? அந்தக் கிழட்டு மூஞ்சி!''
"கோமோஸோவ்''- நிக்கோலாய் பெட்ரோவிச் அமைதியான குரலில் சொன்னான்.
"அவனா? அவன் ஒரு பேசாத பூனை ஆயிற்றே! நீ அதை கண்டுபிடிச்சு சொல்லு.''
ஒரு புதிய விஷயத்தைக் கண்டுபிடித்ததில் ஸ்டேஷன் மாஸ்டருக்கு சந்தோஷம் உண்டானது. அவர் அதை நினைத்து நினைத்து சிரித்தார். காதலர்களுக்கு கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் தீர்மானித்தார். அவர்களுக்கிடையே கை மாறக்கூடிய காதல் வசனங்களை நினைத்து அவருடைய சிரிப்பு தொடர்ந்தது.
இறுதியில் அவர் அந்த விஷயத்தைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். நிக்கோலாய் பெட்ரோவிச் அந்த விஷயத்தில் தனக்கு விருப்பம் இல்லாமல் இருப்பதை முகத்தில் காட்டினான். சோனியா இடையில் புகுந்து என்னவோ சொன்னாள்.
"தாடிக் குரங்குப் பயல்! கொஞ்சம் காத்திருங்க. நான் இப்போது ஒரு தமாஷைக் காட்டுகிறேன். மிகவும் சுவாரசியமான தமாஷ்''- தன்னையே கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்.
அந்த நேரத்தில் லூக்கா அங்கே வந்தான். "டெலிகிராஃப் ஓசை உண்டாக்குகிறது'' - அவன் சொன்னான்.
"நான் இதோ வர்றேன். நீ போய் 42-ஆம் எண் சிக்னல் கொடு.''
லூக்கா புகைவண்டிக்கான சிக்னலுக்காக மணியை அடித்துக் கொண்டிருந்தபோது, ஸ்டேஷன் மாஸ்டரும் அவருடைய உதவியாளரும் அங்கு வந்தார்கள். 42-ஆம் எண் புகைவண்டியை விடலாம் என்ற சம்மதத்திற்காக நிக்கோலாய் பெட்ரோவிச் அடுத்த புகைவண்டி நிலையத்திற்கு டெலிகிராஃப் செய்தி அனுப்பும்போது, ஸ்டேஷன் மாஸ்டர் மென்மையான புன்சிரிப்புடன் அந்த அறைக்குள் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தார்.