புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
சாம்பல் நிறத்தில் இருந்த புகையை வெளியே விட்டவாறு, ஒரு பாம்பைப்போல வளைந்து வளைந்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கும் அந்தப் புகைவண்டியை, மஞ்சள் நிறத்தைக் கொண்ட கோதுமை வயல்கள் நிறைந்த அந்தச் சமவெளிப் பகுதி விழுங்கியது. புகைவண்டி துப்பிய புகை அந்த வெப்பம் நிறைந்த வெளியில் கலந்தது. அதேபோன்று அந்த பரந்து விரிந்து கிடந்த சமவெளியில் நிறைந்திருந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு புகைவண்டியின் கர்ண கொடூரமான சத்தமும் அந்தக் காற்றில் கரைந்து போனது. சமவெளிக்கு மத்தியில் அமைதியைக் கெடுப்பதைப் போல ஒரு சிறிய புகைவண்டி நிலையம் கண்களில் தெரிந்தது.
புகைவண்டியின் கர்ணகொடூரமான சத்தம் இல்லாமல் போனவுடன், அமைதி மீண்டும் அந்த சிறிய புகைவண்டி நிலையத்தைச் சூழ்ந்தது.
பொன்னொளியைப் பரப்பிக்கொண்டு மஞ்சள் நிறத்தில் இருந்த அந்தச் சமவெளியில், வானத்திற்கு இந்திர நீலத்தின் நிறம் இருந்தது. அவை இரண்டும் எல்லையற்று நீண்டு கிடந்தன. கற்பனை வறண்டு போன ஒரு ஓவியன் வரைந்த, குழப்பங்கள் நிறைந்த அந்த ஓவியத்தில் சிறிதும் எதிர்பாராமல் நடந்துவிட்ட, தவிட்டு நிறத்தில் உள்ள கோடும் புள்ளியும் போல அந்தப் புகைவண்டி நிலையம் இருந்தது.
தினமும் மதியம் பன்னிரண்டு மணிக்கும் பிற்பகல் நான்கு மணிக்கும் அந்த பரந்து கிடக்கும் சமவெளிக்கு மத்தியில் புகைவண்டி நிலையத்திற்கு ஒவ்வொரு புகைவண்டிகளும் வந்து கொண்டிருந்தன. சரியாக இரண்டு நிமிடங்கள் அவை அங்கு நின்றன. அந்த நான்கு நிமிடங்கள் மட்டுமே அந்த புகைவண்டி நிலையம் சுறுசுறுப்பாக இருக்கும். அந்த நான்கு நிமிடங்கள் மட்டும்தான் அங்கு வேலை பார்க்கும் மனிதர்களுக்கு மாறுபட்ட ஒரு குணத்தையும் தன்மையையும் அளித்தன.
எல்லா புகைவண்டிகளிலும் பலவகைப்பட்ட ஆடைகள் அணிந்த, பலதரப்பட்ட குணங்களைக் கொண்ட மனிதர்களும் பயணிகளாக இருந்தார்கள். ஆனால் மிகவும் குறைந்த நேரத்திற்கு மட்டும்தான் அதைப் பார்க்க முடியும். நகர்ந்து கொண்டிருக்கும், களைத்துப்போன, அமைதியாக வெறுமனே உட்கார்ந்திருக்கும் ஆட்களின் முகங்கள் புகைவண்டியின் ஜன்னல்கள் வழியாகத் தெரியும். ஒரு மணியோசையோ விஸில் சத்தமோ அந்தக் காட்சியை சத்தங்கள் நிறைந்த ஆரவாரத்துடன் அங்கிருந்து அபகரித்துக் கொண்டு போய்விடும். அந்த மஞ்சள் நிற சமவெளியின் வழியாக வாழ்க்கையின் போராட்டங்கள் நிறைந்த ஏதோ நகரத்தை நோக்கி அது வேகமாகப் பாய்ந்து போய்க் கொண்டிருக்கும்.
புகைவண்டி நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள் அந்த முகங்களையே ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள். புகைவண்டி அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டால் அந்தக் காட்சியைப் பற்றிய தங்களின் கருத்துக்களை ஒருவரோடொருவர் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்களைச் சுற்றிலும் அந்த சமவெளியைப் பற்றிய நினைவுகள் நிறைந்து விரிந்து கிடந்தன. அதற்கு மேலே நிர்மலமான ஆகாயம் வளைந்து நின்று கொண்டிருந்தது. அந்த வெட்ட வெளியில் தங்களை மட்டும் இருக்கச் செய்துவிட்டு, வாழ்க்கையின் விரிவான இன்னொரு பக்கத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும் அந்தப் பயணிகளைப் பார்க்கும்போது அந்தப் பணியாட்களுக்கு பொறாமையாக இருந்தது.
கோதுமையின் பரப்பிற்குள் பாய்ந்து போய்க் கொண்டிருக்கும் புகைவண்டியை - அந்தக் கறுப்புக் கயிறைப் பார்த்தவாறு புகைவண்டி நிலையத்தில் வேலை பார்ப்பவர்கள் ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்தார்கள். மனதில் புதிய உணர்வை உண்டாக்கிய அந்த வாழ்க்கையின் காட்சியில் மனதைப் பதித்து அமைதியாக அவர்கள் நின்றிருந்தார்கள்.
பெரும்பாலும் எல்லா பணியாட்களும் அங்கு இருந்தார்கள். வெட்டி ஒதுக்கப்படாத கிருதாவைக் கொண்ட, கஸாக்குக்காரரான, வயதான ஸ்டேஷன் மாஸ்டர், ஆட்டிடம் இருப்பதைப் போன்ற தாடி, மீசையும் சிவப்பு நிறத்தில் தலை முடியும் கொண்டிருக்கும் அசிஸ்டண்ட், குள்ளமானவனும் புத்திசாலியுமான லூக்கா என்ற ஸ்டேஷன் கார்டு, ஸ்விட்ச்மேன்களில் ஒருவனான சிறிய தாடியும் முரட்டுத்தனமான உடம்பையும் கொண்ட கோமோஸோவ் ஆகியோர்தான் அவர்கள்.
புகை வண்டி நிலையத்திற்குள் கதவுக்கு அருகில் இடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி அமர்ந்திருந்தாள். உயரம் குறைவாகக் கொண்டு, தடித்த சரீரத்தை வைத்திருந்த அவளுக்கு வெப்பத்தைச் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. குழந்தை அவளுடைய மடியில் கிடந்து தூங்கிக் கொண்டிருந்தது. தாயின் முகத்தைப் போலவே குழந்தையின் முகமும் வட்ட வடிவத்திலும் சிவப்பு நிறத்திலும் இருந்தது.
பூமி விழுங்கியதைப்போல புகைவண்டி ஒரு வளைவில் திரும்பி கீழ்நோக்கிப் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.
"சாமோவர் தயாராயிடுச்சா சோனியா?'' - ஸ்டேஷன் மாஸ்டர் தன் மனைவியின் பக்கம் பார்த்துக் கொண்டு கேட்டார்.
"ம்...''- தளர்ந்து போன மென்மையான குரலில் அவள் சொன்னாள்.
"லூக்கா, இங்கே எல்லாவற்றையும் அடுக்கி வை. ப்ளாட்ஃபாரம், தண்டவாளங்கள் எல்லாவற்றையும் பெருக்கி சுத்தம் பண்ணு. ஆட்கள் போட்டுவிட்டுப் போன குப்பைகளையெல்லாம் வாரி சுத்தம் பண்ணணும்.''
"சரி, மாத்வெ கெகோரோவிச்.''
"நிக்கோலாய் பெட்ரோவிச், நாம தேநீர் அருந்தலாமா?''
"எப்போதும் பருகுவதுதானே? பருகுவோம்''- அந்த உதவியாளர் சொன்னான்.
மதியம் வரக்கூடிய வண்டி கடந்து போய் விட்டால், கெகோரோவிச் தன் மனைவியிடம் இப்படிக் கூறுவார்:
"சோனியா, சாப்பாடு தயாரா?''
தொடர்ந்து லூக்காவிற்கு எப்போதும் கூறக்கூடிய வேலைகளைக் கூறுவார். தன்னுடைய உதவியாளரிடம் வழக்கமாகக் கேட்கும் கேள்வியைக் கேட்பார்:
"ம்... நாம சாப்பிடுவோமா?''
"சாப்பிடுவோம்''- உதவியாளர் தன்னுடைய வழக்கமான பதிலைக் கூறுவான்.
ப்ளாட்ஃபாரத்திலிருந்து அவள் புகைவண்டி நிலையத்தில் இருக்கும் ஒரு அறைக்குள் செல்வாள். ஏராளமான பெட்டிகளும், மிகவும் குறைவான இருப்பிடங்களும், வீட்டுச் சாமான்களும் இருக்கும் அந்த அறையில் உணவு சமைத்துக் கொண்டிருக்கும் வாசனையும், தரையைத் துடைக்கும் துணிகளின் வாசனையும் இருக்கும். சாப்பாட்டு மேஜைக்கு வெளியே பேச்சு, புகைவண்டி நிலையத்தைக் கடந்து சென்ற புகைவண்டியில் பயணம் செய்து கொண்டிருப்பவர்களைப் பற்றியதாக இருக்கும்.
"அந்த இரண்டாவது வகுப்பு பெட்டியில் மஞ்சள் ஆடை அணிந்திருந்த பெண்ணைப் பார்த்தியா பெட்ரோவிச்? அவள் ஒரு சகிக்க முடியாத உருப்படி...''
"மோசமில்லை. ஆனால் அவளுக்கு நல்ல ஆடைகள்மீது அந்த அளவிற்கு விருப்பமில்லையோ?''- பெட்ரோவிச் சொன்னான்.
அவனுடைய கருத்துகள் எப்போதும் சாதாரணமாகவும் உறுதியானதாகவும் இருக்கும். தான் கல்வி கற்றவன் என்பதைப் பற்றியும், பல அனுபவங்களையும் கொண்டவன் என்பதைப் பற்றியும் நினைத்து அவன் தனக்குள் பெருமைப்பட்டுக் கொள்வான். அவன் உடற்பயிற்சி நிலையத்திற்குப் போய் வந்திருப்பவன். தன் கையில் கிடைக்கும் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் இருக்கும் பெரிய புள்ளிகளின் பொன்மொழிகள் குறித்து வைக்கப்பட்ட ஒரு புத்தகம் அவனிடம் இருக்கிறது. தொழிலுக்கு வெளியே இருக்கும் எந்த விஷயங்களைப் பற்றியும் அவனுக்கு இருக்கும் ஆச்சரியப்படத்தக்க அறிவினைப் பற்றி ஸ்டேஷன் மாஸ்டர் பெருமையாகப் பாராட்டுவார்.