புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை - Page 3
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
தன்னுடைய ஓய்வு நேரங்கள் முழுவதையும் அவன் பறவைகளுக்காக ஒதுக்கி வைத்தான். பறவைகளுக்காகத் தன்னுடைய உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டபோதும், புகைவண்டி நிலையத்தில் தன்னுடன் பணியாற்றும் மனிதர்களின் விஷயத்தில் அவன் சிறிதும் கவனத்தைச் செலுத்தவில்லை. லூக்காவைப் பாம்பு என்றும்; கோமோஸோவை "காற்று" என்றும் அவன் அழைத்தான். பெண்களைப் பின்தொடரும் அவர்களுடைய கண்களைப் பார்த்து அவன் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டினான். அவனுடைய எண்ணப்படி அவர்களுக்கு சரியான அடி கொடுக்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.
ஒரு அன்றாடச் செயல் என்பதைப்போல லூக்கா அவனுடைய சுடக்கூடிய வார்த்தைகளைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆனால் பட்டாளக்காரன் எல்லையைக் கடந்து பேசினால், லூக்கா அதற்குக் கடுமையான பதில் கூறுவான்.
"டேய் பட்டாளப் பூனையே! பாதி அழுகிப்போன கிழங்கே! நீ இருந்து என்னடா பிரயோஜனம்? கர்னலின் ஆடுகளை மேய்ப்பதுதானே உன் தொழிலாக இருந்தது? மொத்தத்தில் நீ செய்த வேலை தவளைகளை விரட்டுவதும் முட்டைகோஸ் தோட்டத்திற்கு காவல் காத்ததும்தானே? மற்றவர்களைக் கேலி செய்றதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு? நீ உன்னுடைய தித்திரிப் பறவைகளுடன் நேரத்தைச் செலவிடு. அதுதான் சரி!''
அந்த எதிர்ப்பு வெள்ளத்தை மிகவும் அமைதியாக அனுபவித்துவிட்டு, யோகோத்கா ஸ்டேஷன் மாஸ்டருக்கு முன்னால் போய் நின்று தன்னுடைய குற்றச்சாட்டைக் கூறுவான். தனக்கு அதைவிட முக்கியமான விஷயங்கள் நிறைய இருக்கின்றன என்று கூறி அவர் யோகோத்காவைப் பார்த்து சத்தம் போடுவார். வெளியே வரும் யோகோத்கா தன்னுடைய கட்டுப்பாட்டை விடாமல், அமைதியாக லூக்காவிற்கு நேராக மிகவும் மோசமான வார்த்தைகளைக் கொண்டு அபிஷேகம் நடத்துவான். அதைக் கேட்டவுடன் லூக்கா கோபத்துடன் காரித்துப்பியவாறு அங்கிருந்து ஓடித் தப்பிப்பான்.
தன்னுடைய சிறு பிள்ளைத்தனமான குணங்களால் அந்தப் பட்டாளக்காரன் எதிர்த்து ஏதாவது சொன்னால், கோமோஸோவ் அதற்கு எதிராக ஏதாவது கூற முயற்சிப்பதுண்டு. அவன் நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டு கூறுவான்:
"என்ன செய்வது? அவனால் அது இல்லாமல் இருக்க முடியவில்லை! ஒரு வகையான குறும்புத்தனம்... உங்களை நீங்களே எடை போட்டுப் பார்க்க வேண்டாம்.''
பொறுமையை இழந்த அந்தப் பட்டாளக்காரன் ஒருநாள் இப்படிச் சொன்னான்:
"எல்லா நோய்களுக்கும் ஒரே மருந்துதான்!''
"எடை போட்டுப் பார்க்க வேண்டாம்... எடை போட்டுப் பார்க்க வேண்டாம்.''
"எதனால் பார்க்கக்கூடாது? ஒரு மனிதனால் இன்னொரு மனிதனை எடை போட்டுப் பார்க்காமல் இருக்க முடியாதே!''
ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி தவிர, இன்னொரு பெண்ணும் அங்கே இருந்தாள். சமையல்காரியான அரீனா என்ற பெண். சுமார் நாற்பது வயதைத் தாண்டிய, மிகவும் அவலட்சணமான தோற்றத்தைக் கொண்ட, தொங்கிக் கிடக்கும் மார்பகங்களைக் கொண்ட, சிறிதும் சுத்தமே இல்லாத சரீரத்தைக் கொண்ட ஒரு பெண். அவள் ஆடி ஆடிக்கொண்டே நடப்பாள். அசிங்கமான அவளுடைய முகத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்த கண்களில் பயம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும். அவளுடைய தடிமனான உதடுகள் எல்லா நேரங்களிலும் மலர்ந்து, திறந்தே இருக்கும். ஏதோ இனம் புரியாத, பயத்தின் அடையாளங்கள் அவளுடைய முகத்தில் இருந்தன. எட்டு மாதங்கள்வரை அந்தப் பெண்மீது கோமோஸோவ் குறிப்பிட்டுக் கூறும் வண்ணம் கவனம் செலுத்தியதே இல்லை. அவள் கடந்து செல்லும்போது, அவன் "ஹலோ" என்று கூறுவான். அவள் பதிலுக்கு "ஹலோ" கூறுவாள். முற்றிலும் மரியாதைக்காக மட்டுமே பேசிவிட்டு, இருவரும் அவரவர் வழிகளில் போய்விடுவார்கள். ஆனால் ஒருநாள் கோமோஸோவ் ஸ்டேஷன் மாஸ்டரின் சமையலறைக்கு வந்தான். அவன் அரீனாவிடம் தனக்கு சட்டைகளைத் தைத்துத் தர முடியுமா என்று கேட்டான். அதைச் செய்து கொடுப்பதாக அவள் சொன்னாள்.
"நன்றி''- கோமோஸோவ் சொன்னான்: "ஒரு சட்டைக்கு பத்து கோபெக் என்ற கணக்கில் மூன்று சட்டைகள் தைக்கணும். அதற்கு நான் உனக்கு முப்பது கோபெக் தரணும் இல்லையா?''
"அப்படித்தான் என்று நினைக்கிறேன்''- அரீனா சொன்னாள்.
கோமோஸோவ் என்னவோ சிந்திக்க ஆரம்பித்தான்.
"நீ எந்த ஊரைச் சேர்ந்தவள்?''- தன்னுடைய தாடியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணிடம் அவன் கேட்டான்.
"நவாஸான்''- அவள் சொன்னாள்.
"அது ரொம்பவும் தூரத்தில் இருக்குற ஊராச்சே! அங்கேயிருந்து நீ எப்படி இங்கே வந்தே?''
"எனக்குத் தெரியாது. நான் தனி... எனக்கு வேண்டியவர்கள்னு யாரும் இல்லை.''
"அப்படியென்றால் நீ அவ்வளவு தூரத்தில் இருந்து வந்ததில் ஆச்சரியமே இல்லை''- கோமோஸோவ் நீண்ட பெருமூச்சை விட்டவாறு சொன்னான்.
அடுத்த கொஞ்ச நேரத்திற்கு அவர்கள் இருவரும் அமைதியாக இருந்தார்கள்.
"என்னை நம்பலாம். நான் நிஷ்னி நொவோகோகாத்தைச் சேர்ந்தவன். ஸெர்ஜஷேவ் யுயேஸ்த்.''
சிறிது நேரம் சென்றதும், கோமோஸோவ் சொன்னான்: "நானும் தனிக்கட்டைதான். எனக்கும் யாரும் இல்லை. ஒருகாலத்தில் எனக்கு வீடும் மனைவியும் குழந்தைகளும் இருந்தாங்க. இரண்டு பிள்ளைகள். மனைவி காலரா வந்து இறந்துவிட்டாள். வேறு ஏதோ நோய் வந்து பிள்ளைகளும் இறந்துட்டாங்க. கவலையைக் கடிச்சு அழுத்திக்கிட்டே நான் வாழ்க்கையை ஓட்டிவிட்டேன். எல்லாவற்றையும் திரும்பவும் தொடங்கினால் என்ன என்று பின்பு ஒருமுறை எனக்குத் தோன்றியது. பிறகு யோசிச்சுப் பார்த்தப்போ அது வேண்டாம் என்றுபட்டது. எல்லா விஷயங்களும் ஒரே குழப்பமாக இருந்தது. அதைச் சரிபண்ணி எடுப்பது என்பது சாதாரண ஒரு விஷயமாக இல்லை. அதற்குப் பிறகு நான் பல திசைகளை நோக்கியும் பயணம் செய்தேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் இதோ... இங்கே இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.''
"நமக்குச் சொந்தமானது என்று சொல்ல ஒரு இடம் இல்லை என்றால், அந்த வாழ்க்கை எதற்குமே லாயக்கு இல்லாதது''- அரீனா சொன்னாள்.
"எதற்கும் லாயக்கு இல்லாததுதான்... நீ ஒரு விதவையா?''
"இல்லை. நான் கன்னிப்பெண்.''
தன்னுடைய நம்பிக்கையின்மையை மறைத்து வைக்க சிரமப்படாமல் அவன் சொன்னான்: "அப்படியே இனியும் இருக்கணும்.''
"கடவுள்கிட்ட நான் என்னுடைய உண்மைத்தன்மையை எப்போதும் வெளிப்படுத்துறேன்''- அரீனா சொன்னாள்.
"நீ ஏன் திருமணம் செய்துக்கல?''
"என்னை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? எனக்கு அதற்குத் தேவையான எதுவும் இல்லை. ஆண்கள் சில விஷயங்களை விரும்புவார்கள் இல்லையா? என் முகம் பார்ப்பதற்கு எவ்வளவு அசிங்கமா இருக்கு!''
"அது உண்மைதான்!''- தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே கோமோஸோவ் சொன்னான்.
அவன் அவளுடைய சம்பளம் எவ்வளவு என்று கேட்டான்.
"இரண்டரை.''