புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை - Page 2
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
அவன் கூறுவது எதுவாக இருந்தாலும் ஸ்டேஷன் மாஸ்டர் அவற்றை மிகவும் கவனம் செலுத்திக் கேட்பார். பெட்ரோவிச்சின் நோட்டுப் புத்தகத்தில் அறிவின் முத்துக்கள் இருப்பதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுவார். புகைவண்டியில் பார்த்த பெண்ணின் ஆடையைப் பற்றி தன்னுடைய உதவியாளர் கொண்டிருக்கும் கருத்து ஸ்டேஷன் மாஸ்டரின் மனதிற்குள் பலவித சந்தேகங்களையும் உண்டாக்கியது.
"அது ஏன் அப்படிச் சொல்றே?''- அவர் கேட்டார்: "அழகிகள் மஞ்சள் நிறத்தில் ஆடைகள் அணியக் கூடாதா என்ன?''
"நான் நிறத்தைப் பற்றிப் பேசவில்லை. அந்த ஆடை வெட்டி தைக்கப்பட்ட முறையைப் பற்றிச் சொன்னேன்''- கண்ணாடிப்பாத்திரத்திலிருந்து சற்று ஜாமை மிகுந்த கவனத்துடன் தன்னுடைய பாத்திரத்தில் பரிமாறியவாறு அந்த உதவியாளன் சொன்னான்.
"துணி வெட்டப்பட்ட முறையா? அது வேறு விஷயம்...''- ஸ்டேஷன் மாஸ்டர் ஒப்புக் கொண்டார்.
ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி அந்த உரையாடலில் பங்கு சேர்ந்தாள். இந்த விஷயம் அவளுடைய இதயத்துடனும் மனதோடும் சேர்ந்து நின்று கொண்டிருக்கும் ஒன்றே. ஆனால் அறிவுரீதியாக அந்த மனிதர்களிடம் பெரிய அளவில் வளர்ச்சி எதுவும் உண்டாகாததால், அந்த உரையாடல்கள் நீண்டு போய்க் கொண்டிருக்குமே தவிர, உணர்வு ரீதியாக அது அவளைச் சற்றும் ஈர்க்காது.
ஜன்னல் வழியாக அமைதிக்குக் கீழே ஆழ்ந்து கிடக்கும் அந்த சமவெளியின் பரப்பும், விரிந்து கிடந்த ஆகாயத்தின் சாந்தத் தன்மையும் தெரிந்தன.
கிட்டத்தட்ட ஒருமணி நேரம் கடந்ததும், ஒரு சரக்கு வண்டி புகைவண்டி நிலையத்தைத் தாண்டிச் சென்றது. அந்த வண்டியில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் ஏற்கெனவே நன்கு பழக்கமானவர்கள்தான். கார்டுகள் எல்லாரும் தூங்குவதே வழக்கம் என்றிருப்பவர்கள். அந்த சமவெளி வழியாக உள்ள, முடிவே இல்லாத பயணங்கள் அவர்களுடைய உணர்வுகளையும் மனதையும் சோர்வடையச் செய்தன. பல நேரங்களில் பழைய விபத்துக்களைப் பற்றி அவர்கள் கூறுவது உண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு மனிதன் கொல்லப்பட்ட கதையைக் கூறுவார்கள். இல்லாவிட்டால் தங்களுடைய வேலை விஷயங்களைப் பற்றி அவர்கள் வெறுப்புடன் பேசுவார்கள். "அந்த ஆளுக்கு தவறுக்கான தண்டனை கிடைத்தது. இன்னொரு ஆளை இடம் மாற்றம் செய்திருக்கிறார்கள்" என்பது போன்ற விஷயங்கள் அங்கு அந்த அளவிற்கு அதிகமாகப் பேசப்படாது. சாப்பாடுமீது மோகம் கொண்டவன் சுவையான உணவை அள்ளி விழுங்குவதைப்போல, அவர்கள் அந்த உரையாடல்களை விழுங்கிக் கொண்டிருப்பதுதான் எப்போதும் நடக்கும்.
சூரியன் மெதுவாக அந்தச் சமவெளியின் விளிம்பில் இறங்கிக் கொண்டிருந்தது. விளிம்பின் வழியாகக் கீழே இறங்கி பூமியை நெருங்கும்போது சூரியன் இரத்த நிறத்தில் இருக்கும். பூமியில் இருக்கும் எல்லா பொருட்களின் மீதும் சிவப்பு நிறம் படர்கிறது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு தன்மைக்கு வழி உண்டாக்குகிறது. வெட்டவெளிக்கு அப்பால் பரவிக் கொண்டிருக்கும் ஒரு வசீகரத் தோற்றம்... இறுதியில் விளிம்பைத் தொட்டவாறு சூரியன் கீழே இறங்குகிறது. சிறிது நேரத்திற்கு அந்த சூரிய அஸ்தமனம் ஆகாயத்தில் வண்ணமயமான, இனிய, இசை கலந்த மாலைப் பொழுதைப் படைக்கிறது. ஆனால் அஸ்தமனம் முழுமையானதும், புத்துணர்ச்சி நிறைந்த அமைதியான மாலைப் பொழுது முடிவுக்கு வருகிறது. அந்தக் காட்சியின் பேரமைதியைப் பார்த்து பயந்து விட்டதைப்போல கண்களைச் சிமிட்டிக் கொண்டு நட்சத்திரங்கள் தோன்ற ஆரம்பித்தன.
மாலை நேரத்திற்குக் கீழே அந்தச் சமவெளி மயங்குவதைப் போல தோன்றியது. நான்கு பக்கங்களிலிருந்தும் இரவின் நிழல்கள் புகைவண்டி நிலையத்தைச் சூழ ஆரம்பித்தன. தொடர்ந்து இருண்ட, கவலைகள் நிறைந்த இரவு அந்தக் கட்டிடத்தைச் சுற்றி ஆக்கிரமித்தது.
புகை வண்டி நிலையத்தில் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும்விட உயரத்திலும் உச்சத்திலும் இருப்பது பச்சை நிறத்தைக் கொண்ட சிக்னலின் பிரகாசம்தான். அதைச் சுற்றி அமைதியும் இருட்டும் ஒரே அளவில் பரவி விட்டிருந்தன. ஏதோ ஒரு புகைவண்டி அடுத்து வரப்போகிறது என்பதைக் குறிப்பாக உணர்த்துகிற மாதிரி அவ்வப்போது மணிச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த நடுங்கச் செய்யும் சத்தம் சமவெளிக்குள் கடந்து சென்றது. அந்தச் சமவெளியின் அமைதி, சத்தத்தை விழுங்கியது.
மணி முழக்கத்திற்குப் பிறகு, இருட்டின் எச்சத்திற்குள் ஒரு சிவப்பு வெளிச்சம் தெரிந்தது. அதைத் தொடர்ந்து சமவெளியின் அமைதியை ஊதிப் பறக்கச் செய்து கொண்டு, இருட்டில் மூழ்கிக் கிடக்கும் புகைவண்டி நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருக்கும் அந்தப் புகைவண்டியின் சத்தம் காதில் விழும்.
புகைவண்டி நிலையத்தில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கை முறையிலிருந்து மிகவும் மாறுபட்டிருந்தது அடித்தட்டு வர்க்கத்தினரின் வாழ்க்கை. புகைவண்டி நிலையத்தின் கார்டு லூக்கா ஏழு மைல்கள் தாண்டி வசிக்கும் தன்னுடைய மனைவி, சகோதரன் ஆகியோரிடம் போய்ச் சேர மிகவும் படாதபாடுபட்டான். தனக்கு பதிலாக வேலையைச் செய்யும்படி ஸ்விட்ச்மேன் கோமோஸோவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது, லூக்கா தனக்கு கிராமத்தில் விவசாய நிலம் இருக்கும் விஷயத்தைக் கூறுவதுண்டு.
"விவசாய நிலம்" என்ற வார்த்தையைக் கேட்டவுடன் கோமோஸோவ் நீண்ட பெருமூச்சை விடுவது காதில் விழும்.
"நல்லது... நீங்கள் விவசாயத்தில் முன்னேறணும்''- அவன் கூறுவதுண்டு: "விவசாய நிலத்தை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த விஷயத்தில் எந்தவொரு சந்தேகமும் இல்லை.''
ஆனால் இன்னொரு ஸ்விட்ச்மேன்- அஃபனானி யோகோத்கா ஒரு பழைய பட்டாளக்காரன். அவனுடைய வட்டமான சிவந்த முகத்தில் நிறைய சிறு சிறு உரோமங்கள் இருந்தன. எதையும் தமாஷாகப் பார்க்கும் ஆள் அவன். லூக்கா சொன்னதை அவன் நம்பவில்லை.
"ஒரு விவசாய நிலம்கூட இருக்காது'' - வெறுப்பு நிறைந்த கிண்டலுடன் அவன் கூற ஆரம்பிப்பான்: "பொண்டாட்டியை எடுத்துக்கொண்டால் மேலும் சில பிரச்சினைகள் இருக்கு. சரி... உன் பொண்டாட்டி எப்படி? அவள் ஒரு விதவையா? இல்லாவிட்டால் அவளுடைய கணவன் ஒரு பட்டாளக்காரனா?''
"டேய்... பறவைக் கூட்டம்... நீ கொஞ்சம் பேசாம இருக்கியாடா?''- லூக்கா கோபத்துடன் கூறுவான்.
யோகோத்காவிற்கு பறவைகள்மீது மிகவும் பிரியம். அதனால் லூக்கா யோகோத்காவை "பறவைக் கூட்டம்" என்று அழைத்தான். அவனுடைய வீட்டிற்குள் நிறைய பறவைகளின் இருப்பிடங்களும் கூடுகளும் இருந்தன. நாள் முழுவதும் வீட்டிற்குள்ளும் வெளியிலும் பறவைகளின் ஆரவாரம் கேட்டுக் கொண்டேயிருக்கும். பட்டாளரக்காரன் அவற்றைக் கட்டிப் போட்டான். தித்திரி பறவைகள் சிறிதும் நிறுத்தாமல் "சிப்.. சிரப்.." என்று சத்தம் போட்டுக் கொண்டேயிருந்தன. மைனாக்கள் நிறுத்தாமல் பேசிக்கொண்டிருந்தன. நிறைய வண்ணங்களிலும் வடிவங்களிலும் இருந்த கிளிகள் வெளியே தலையை நீட்டி சுறுசுறுப்புடன் ஓசை உண்டாக்கியவாறு அந்த பட்டாளக்காரனின் வாழ்க்கையை சந்தோஷம் நிறைந்ததாக ஆக்கிக் கொண்டிருந்தன.