புகை வண்டி நிலையத்தில் வாழ்க்கை - Page 4
- Details
- Category: புதினம்
- Published Date
- Written by சுரா
- Hits: 6350
"அது சரி... அப்படியென்றால் நான் உனக்கு முப்பது கோபெக் தரணும். இல்லையா? இங்கே பாரு... இன்னைக்கு இரவே அதை வந்து வாங்கிட்டுப் போயிடு. பத்து மணிக்கு வந்தால் போதும். என்ன, வந்திர்றேல்ல? நான் உனக்குப் பணம் தர்றேன். வேறு எதுவும் செய்வதற்கு இல்லாததால் நாம் தேநீர் அருந்துவோம். நாம இரண்டுபேர் மட்டுமே அங்கே இருப்போம். நீ வரணும்.''
"நான் வர்றேன்''- மிகவும் சாதாரணமாகக் கூறிவிட்டு அவள் வெளியேறினாள்.
சரியாகப் பத்து மணிக்கு அவள் அங்கு வந்துவிட்டாள். இரவு விடிவதற்கு முன்பே அவள் அங்கிருந்து கிளம்பினாள்.
அவன் அவளிடம் திரும்பவும் வரவேண்டும் என்று கூறவோ அவளுக்குத் தருவதாகக் கூறிய முப்பது கோபெக்குகளைக் கொடுக்கவோ செய்யவில்லை. தன்னுடைய சொந்த விருப்பத்தால் தான் அவள் வந்தாள். மிகவும் பணிவுடன் எதுவும் பேசாமல் அவள் அவனுக்கு முன்னால் நின்றாள். படுத்துக்கொண்டே அவன் தன்னுடைய கண்களால் அவளைக் கால்களில் இருந்து தலைவரை ஆராய்ச்சி செய்தான்.
சிறிது நேரம் அப்படிப் பார்த்துவிட்டு, சற்று நகர்ந்து படுத்துக் கொண்டு அவன் "உட்காரு'' என்று சொன்னான். அவள் உட்கார்ந்தவுடன் அவன் சொன்னான்:
"நீ இதை யாரிடமும் சொல்ல வேண்டாம். ஒரு உயிருக்குக்கூட இது தெரியக்கூடாது. அப்படிச் செய்தால் நான்தான் மாட்டிக்கொள்வேன். நான் சின்ன வயசு இல்ல. நீயும் சின்ன வயசு இல்ல. புரியுதா?''
அவள் தலையை ஆட்டினாள்.
அவள் புறப்பட்டபோது தைப்பதற்காக ஒரு கை நிறைய உடைகளை அவன் அவளிடம் தந்தான்.
"இந்த விஷயத்தைப் பற்றி ஒரு குழந்தைக்குக்கூட தெரியக்கூடாது'' - அவன் அவளை எச்சரித்தான்.
இப்படி மற்றவர்களின் கண்களில் படாமல் தங்களுடைய உறவை மறைத்து வைத்துக்கொண்டே அவர்கள் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.
இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் அரீனா அவனுடைய அறைக்கு வந்தாள். ஒரு பிரபுவின், எஜமானின் கம்பீரத்துடன் அவன் அவளை வரவேற்றான்.
"உன் முகம் எதற்கு லாயக்கு?''- அவன் சில நேரங்களில் கிண்டல் செய்தான்.
வருத்தத்துடன் அவள் புன்னகைத்துக்கொண்டே போகும் நேரத்தில், தைப்பதற்காக ஒரு குவியல் ஆடைகளைக் கொண்டுவந்து அவன் அவளிடம் தந்தான்.
வெளியே மிகவும் அரிதாக மட்டுமே அவர்கள் சந்தித்துக் கொள்வார்கள். எப்போதாவது அந்தப் புகைவண்டி நிலையத்தைச் சேர்ந்த ஏதாவதொரு இடத்தில் சந்திக்க நேர்ந்தால் அவன் அவளிடம் மெதுவான குரலில் கூறுவான்:
"இன்று இரவு வரணும்.''
அவன் கேட்டுக்கொண்டபடி நடப்பதைப்போல அவள் அங்கு செல்வாள். அசிங்கமான அவளுடைய முகத்தில் தெரிந்த அந்த மிடுக்கைப் பார்க்கும்போது, ஏதோ முக்கியமான ஒரு கடமையை நிறைவேற்றுவதைப்போல இருக்கும்.
ஆனால் வீட்டிற்குத் திரும்பிச் செல்லும்போது குற்ற உணர்வும் கவலையும் அவளுடைய மனதிற்குள் திரும்பவும் வரும்.
பல நேரங்களில் புகை வண்டி நிலையத்தின் ஏதாவதொரு ஆள் அரவமற்ற மூலையில் உட்கார்ந்துகொண்டோ ஏதாவது மரத்தின் நிழலில் அமர்ந்துகொண்டோ அவள் சமவெளியின் பரப்பை நோக்கிக் கொண்டிருப்பாள். இரவு அங்கே வந்து ஆக்கிரமித்தவுடன், கவலை நிறைந்த அதன் அமைதித்தன்மை அவளுடைய இதயத்திற்குள் பயத்தை நிறைத்தது.
ஒருநாள் சாயங்கால நேரப் புகைவண்டி கடந்துபோன பிறகு, ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டின் சாளரத்திற்கு வெளியே வளர்ந்து நின்றிருந்த பாப்லார் மரங்களின் நிழலில் அந்தப் பணியாட்கள் தேநீர் குடிப்பதற்காக உட்கார்ந்திருந்தார்கள். அங்கே உட்கார்ந்து கொண்டுதான் அவர்கள் கோடைகாலத்தில் தேநீர் குடிப்பார்கள். தங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் விரக்தித் தன்மையை விரட்டி விடுவதற்கான மற்றொரு சந்தர்ப்பமாக அது இருந்தது.
அப்போது கடந்து சென்ற புகைவண்டியைப் பற்றிப் பேசிக் கொண்டுதான் அன்றும் அவர்கள் தேநீர் பருகிக் கொண்டிருந்தார்கள்.
"இன்று நேற்றைவிட வெப்பம் அதிகம்''- ஒரு கையால் அந்த காலியான தேநீர்க் குவளையைத் தன்னுடைய மனைவியிடம் நீட்டியவாறு, இன்னொரு கையால் தன்னுடைய நெற்றியில் இருந்த வியர்வையைத் துடைத்துவிட்டு அந்த ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்.
"உங்களுக்கு மிகவும் போர் அடிப்பதால்தான் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்று தோன்றுகிறது''- காலியான தேநீர்க் குவளையை வாங்கிக்கொண்டே அவருடைய மனைவி சொன்னாள்.
"ம்... நீ சொன்னது உண்மையாக இருக்கலாம். நாம சீட்டு விளையாடுவோம். ஆனால் நாம் மூன்று பேர்தானே இருக்கோம்?''
உதவியாளர் தோளை வெட்டியவாறு, கண்களை உருட்டினான்.
"ஷோப்பான் ஹவரின் கருத்துப்படி, சீட்டு விளையாட்டு அதை விளையாடும் மனிதரின் மனரீதியான வறுமையை வெளிப்படுத்துகிறது''- மிகுந்த மிடுக்குடன் அவன் சொன்னான்.
"அருமை!'' - ஸ்டேஷன் மாஸ்டர் சொன்னார்: "நீ என்ன சொன்னே? மனதின் வறுமை... அடடா... அதைச் சொன்னவர் யார் என்று சொன்னே...''
"ஷோப்பான் ஹவர்... ஜெர்மன் தத்துவச் சிந்தனையாளர்.''
"ஒரு தத்துவச் சிந்தனையாளரா? சரிதான்...''
"இந்த தத்துவச் சிந்தனையாளர்களுக்கு என்ன வேலை? பல்கலைக் கழகத்திலா அவர்கள் வேலை பார்க்கிறார்கள்?''- சோனியா கேட்டாள்.
"நான் எப்படி அதை விளக்கிச் சொல்வேன்? தத்துவச் சிந்தனையாளராக ஆவது என்பது ஒரு வாழ்க்கையின் நோக்கம் அல்ல. அது இயற்கையாகவே நடக்கக்கூடிய ஒன்று என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். யாரும் ஒரு தத்துவச் சிந்தனையாளராக ஆகலாம். விஷயங்களைப் பற்றி அறிவுப்பூர்வமாகச் சிந்திக்கவும் அதன் காரணங்களைக் கண்டுபிடிக்கவும் ஆர்வமாக இருக்கும் மனிதன் ஒரு தத்துவச் சிந்தனையாளனே. மேலும் விளக்கிக் கூறுவதாக இருந்தால், பல்கலைக் கழகங்களிலும் தத்துவச் சிந்தனையாளர்களைப் பார்க்கலாம். வேறு எங்கும்கூட தத்துவச் சிந்தனையாளர்களைப் பார்க்கலாம். ஏன்? ரெயில்வே பணியாட்களுக்கு மத்தியில்கூட...''
"அவர்களுக்கு தாராளமாகப் பணம் கிடைக்குமா? பல்கலைக் கழகங்களில் இருப்பவர்களைப் பற்றி நான் கேட்கிறேன்...''
"அது ஒவ்வொருவருடைய திறமையைப் பொறுத்தது...''
"ஒரு நாலாவது ஆள் கிடைத்தால் நாம் இரண்டு மணிநேரம் சுகமாக நேரத்தைப் போக்கலாம்''- ஸ்டேஷன் மாஸ்டர் நீண்ட பெருமூச்சை விட்டார்.
பேச்சு மீண்டும் வேறு வழிக்குத் திரும்பியது.
நீல வானத்தில் வானம்பாடி நீளமாகப் பாடிக் கொண்டிருந்தது. பாப்லார் மரங்களின் கிளைகளில் குருவிகள் தத்தித் தத்தி விளையாடியவாறு பாடிக் கொண்டிருந்தன. வீட்டிற்குள்ளிருந்து ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது.
"அரீனா உள்ளேதானே இருக்கிறாள்?''- ஸ்டேஷன் மாஸ்டர் உரத்த குரலில் கேட்டார்.
"ஆமா...''- ஸ்டேஷன் மாஸ்டரின் மனைவி சொன்னாள்.
"மன ரீதியாக அந்தப் பெண்ணுக்கு என்னவோ தனிப்பட்ட முறையில் இருக்கு. நீ அதை கவனிச்சிருக்கியா நிக்கோலாய் பெட்ரோவிச்?''
"மன பாதிப்பு விரக்தியின் தாய்''- ஒரு முனிவரைப்போல கம்பீரமாக இருப்பதைபோல் காட்டிக்கொண்டு நிக்கோலாய் பெட்ரோவிச் சொன்னான்.