
குழந்தைப் பருவம், சிறுவ-சிறுமியர் பருவம், கன்னிப் பருவம், வாலிபப் பருவம், இளம்பெண் பருவம், பேரிளம் பெண் பருவம், பேரிளம் ஆண் பருவம், வயோதிகப் பருவம், அதன்பின் தள்ளாத பருவம்.
இயற்கை ஏற்படுத்தும் பருவங்கள், மனித வாழ்க்கையில் மாறி மாறி வரும் இனிமைகள்! ஆம்! ஒவ்வொரு பருவமும் இனிமைதான். இளமை மட்டுமே இனிமை என்பதல்ல. முதுமையிலும் அந்த இளமையை நமக்குள் உருவாக்கலாம், உணரலாம். உல்லாஸமாய் வாழலாம்.
வயது அதிகமாக... அதிகமாக... உருவமும், முகத் தோற்றமும் மாறும். அது இயற்கை. ஆனால் மனது? அது என்றும் இளமையுடன் இருக்க நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். முதுமை அடைந்த ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ளுக்குள் இளமை உணர்வு நிச்சயமாய் இருக்கும். ஆனால் அவர்கள் அதை அடக்கி வைக்கிறார்கள்.
'ஊர் என்ன பேசுமோ', 'உலகம் என்ன சொல்லுமோ' என்று எதற்கெடுத்தாலும் ஒரு தயக்கம். பெண் என்றால் "ஐய்யோ... இந்த வயசுல எனக்கு எதுக்கு இந்தப் புடவை? இதெல்லாம் சின்னப் பெண்கள் கட்டுவது" என்று புறக்கணிப்பார்கள். ஆனால் அவர்களது மனதில் அந்த புடவையை உடுத்திக் கொள்ளும் ஆசை இருக்கும். யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயம்!
ஏன் இப்படி பயப்பட வேண்டும்? தயங்க வேண்டும்? நாம் துணிமணிகள் உடுத்துவதற்கும், அணிகலன்கள் அணிந்து கொள்வதற்கும் வயது முக்கியம் அல்ல. நமக்கு பொருந்துகிறதா என்பதுதான் முக்கியம். குறிப்பிட்ட வயதில், சில உடைகள் மற்றும் நகைகள் பொருந்தாது என்பது உண்மைதான். ஆனால் பொருந்தக் கூடிய உடைகளை, வயதை மட்டுமே காரணமாக வைத்து ஒதுக்குவது தேவையற்றது.
ஆண்களில் சிலர் 'டி-ஷர்ட்' அணிய வெட்கப்படுவார்கள். 'டி-ஷர்ட்' என்பது இளைஞர்கள் மட்டுமே அணியும் உடை என்பது இவர்களது தவறான கணிப்பு. அது ஒரு சுலபமான உடை. ஓய்வு உணர்வை (Relaxed Mood) அளிப்பது. இஷ்டப்படும் உடையை ஏன் கஷ்டப்பட்டு அணியாமல் இருக்க வேண்டும்?
'ஆள் பாதி; ஆடை பாதி' என்பார்கள். ஒருவர் அணியும் ஆடை அவருக்கு ஒரு முக்கியத்துவத்தை அளிக்கின்றது. மரியாதையை அளிக்கின்றது. அதாவது பகட்டான பட்டாடையோ, ஆடம்பரமான ஆடையோ அணிந்துதான் மரியாதையை உருவாக்க வேண்டும் என்பதல்ல. எளிமையான உடையானாலும் எடுப்பானதாக, எதிரில் இருப்பவர் முகம் சுளிக்கக் கூடியதாக இல்லாமல் கௌரவமான உடையாக இருத்தல் அவசியம்.
துறவிகள் அணியும் காவி உடை, இயல்பாக மனதில் தெய்வீக எண்ணங்களை எழுப்புகிறது. சில குறிப்பிட்ட உடைகள் நம் மனதில் குறிப்பிட்ட எண்ணங்களைத் தோற்றுவிப்பது உண்மை தான் என்று மகான் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பெண்களில் சிலர் "என் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இனிமேல் எனக்கு எதுக்கு இந்த புடவை/நகை" என்று புறக்கணிப்பார்கள். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா? போட்டுக் கொள்ளுங்கள்.
சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில் மகளுக்கு திருமணமாகி மருமகன் வந்து விட்டால் மாமியார் பின்னல் (ஜடை) போடக் கூடாது எனும் எழுதப்படாத சட்டம் இருந்தது. கொண்டைதான் போட்டுக் கொள்ள வேண்டுமாம். இதற்குக் காரணம், பின்னல் பின்னி இருந்தால், தன் மனைவி எது, மாமியார் எது என்று அடையாளம் தெரியாமல் மாமியாரின் பின்னலைப் பிடித்து இழுத்து விடுவானாம் மருமகன்.
இவ்விஷயம் என்னிடம் ஒரு மூதாட்டி சொன்ன உண்மையான நிகழ்ச்சி. அந்த மூதாட்டி, தன் மகளுக்கு திருமணம் ஆனபின் கொண்டைதான் போட்டிருந்தார். தன் மருமகளுக்கு, மருமகன்வந்த பிறகு மருமகளையும் பின்னல் போடக் கூடாது என்று கட்டளை இட்டு கட்டுப்படுத்தி வைத்திருந்தார். இத்தனைக்கும் நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பெண்களுக்கு பதினைந்து வயதிலிருந்து பதினெட்டு வயதிற்குள் மணமுடித்து விடும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி எனும் போது மகளுக்கு திருமணம் செய்து விட்ட அந்த இளம்தாய்க்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும். அந்த வயதிற்குள்ளே பின்னல் போட்டுக் கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இளம் தாயாக இளமைத் தோற்றம் குறையாமல் இருப்பதால் விதிக்கப்பட்ட தண்டனையா? அறியாமையா? எதுவும் புரியவில்லை. ஆனால் அந்தக் கால கட்டம் மாறி விட்டதில் ஆறுதலாக இருக்கின்றது. அப்படி ஒரு நிலைமை இருந்த போது அந்த இளம் தாயின் மனதில் எத்தனையோ ஆசைகள் இருந்திருக்கும். பொருத்தமில்லாமல் கொண்டையைப் போட்டுக் கொண்டு தன் ஆசைகளுக்கும், அபிலாஷைகளுக்கும் ஒரு பூட்டு போட்டுக் கொண்டு வாழ்ந்திருப்பாள். அந்த அளவிற்கு அன்றிருந்த நிலைமை இன்று இல்லை.
பெண்களுக்குப் பதினைந்து வயதில் இருந்து பதினெட்டு வயதிற்குள் திருமணம் செய்து வைப்பது மாறி விட்டது. கல்வி கற்று, ஒரு பட்டப்படிப்பாவது முடித்து ஆபிஸ், உத்யோகம், சுய தொழில் என்று பெண்கள் முன்னேற்றப்பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டதால் மிகச்சிறு வயது திருமணங்கள் நடப்பது நின்று விட்டது. அம்மா, பெண் இருவரும் வேலைக்குப் போகும் நிலை என்றாகிவிட்டது. நகர்ப்புறங்களில் மட்டுமே இப்படி! இன்னமும் பதினெட்டு பட்டிகளின் கோர்வையாகத் திகழும் கிராமப்புறங்களில் கட்டுப்பாடுகள் ஏகமாய் இருக்கின்றன.
அவற்றைக் கடைப்பிடிப்பதும் இன்றளவில் நடைபெறுகின்றன. பிறர் விதிக்கும் கட்டுப்பாடுகள் போக, நமக்கு நாமே 'வயசு ஏறிப்போச்சு. இதை உடுத்தக் கூடாது. இந்த நகை போடக் கூடாது' என்று சுயமாக விதித்துக் கொள்ளும் வரையறைகள் தேவையற்றது. நம்மை நாமே கண்ணாடியில் பார்க்கும் பொழுது ஒரு உற்சாகம் பிறக்கும் விதமாக நமது உடையலங்காரம் இருக்க வேண்டும். இதற்கு வயதை ஒரு வரம்பாக கருத்தில் கொள்ளத் தேவை இல்லை.
எனது மிக நெருங்கிய நட்புக்குரியவர் ஒரு பிரபல பெண் மருத்துவர். ' Looking good is feeling good' எனும் மந்திரத்தை எனக்கு உபதேசித்தவர் இவர். மிடுக்காக உடுத்திக் கொண்டால் அன்றைய அலுவல்கள் செய்வதற்குரிய ஆவலும், ஊக்கமும் பெருகும் என்று அவர் கூறுவார். அவர் கூறிய ஆலோசனை முற்றிலும் உண்மை.
நாம் உடுத்திக் கொள்ளும் உடையினால் நமக்கு ஒரு தன்னம்பிக்கை உண்டாகிறது. ஏனோதானோ என்று எதையோ அணிந்து கொண்டோம், போனோம்... வந்தோம் என்றில்லாமல் சற்று கவனம் எடுத்து நம்மை சீர்ப்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் சலிப்பு என்பதே இல்லாமல், களிப்பு என்ற உணர்வு நம்மை மேம்படுத்தும்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook