
முதுமை என்பது காலத்தின் கட்டாயம் நமக்கு எற்படுத்தும் இராசயன மாற்றம். இதை பெரிதாக எண்ணக் கூடாது. பெற்றெடுத்த பிள்ளைகளுடன் சகஜமாக உரையாடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களுக்கு ஈடாக உலக நடப்புகளைத் தெரிந்து கொண்டு அளவளாவுங்கள். ஏன் முதுமை எனும் திரை கொண்டு நம் இளமை உணர்வுகளுக்கு முகமூடி போட வேண்டும்?!
இளைய தலைமுறையினரிடம் கலந்துரையாடுவதற்கும், விவாதம் செய்வதற்கும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அவர்களுக்கு சரிசமமாக நாம் பேசும் பொழுதும், பழகும் பொழுதும் நம் வயதை மறந்து போக முடியும். மனதை லேஸாக பறக்க வைக்க முடியும்.
நமது பிள்ளைகள் மட்டுமல்லாமல் அவர்களது பிள்ளைகளான பேரன், பேத்திகளுடன், தலைமுறை இடைவெளியின்றி பேசுவதற்கு நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். உள்நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள பற்பல வினோதங்களையும், அறிவு பூர்வமான விஷயங்களையும் அறிந்து வைத்துக் கொண்டால் 'இவங்க வயசானவங்க, இவங்களுக்கு என்ன தெரியும்?' என்று அவர்கள் நம்மை ஒதுக்க மாட்டார்கள்.
'எங்க பாட்டிக்கு / தாத்தாவுக்கு இன்றைய நடப்பு (Up to date) விஷயங்கள் அத்தனையும் அத்துபடி. ஃப்ரெண்ட்சுக்கு சமமாக அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம் தெரியுமா?' என்று பேரக் குழந்தைகள் பெருமையாக பேசிக் கொள்ளும்படி நம் அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.
இன்டர்நெட் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும் உள்நாடு, மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் நிகழும் அன்றாட நிலவரங்களையும், புதுமைகளையும் அறிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
'எங்க அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது, எங்க தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியாது' என்று இளம் தலைமுறையினரால் நீங்கள் ஒதுக்கி வைக்கப்படும் பொழுது உங்களுக்கு முதுமை உணர்வு தோன்றிவிடுகிறது. அறிவை மேம்படுத்திக் கொண்டால் உடலில் ஏற்பட்டுள்ள முதுமை, மனதில் எட்டிக்கூடப் பார்க்காது. மாறாக, இளமை ஊஞ்சலாடும்.
வயதானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தொலைக்காட்சி சேனல்கள் (Channels) என்பதை ஒப்புக் கொள்ள முடியாது. செய்திகள் பார்க்கலாம். கேட்கலாம். இரவில் தூக்கம் வரவில்லை என்றால் பழைய பாடல்கள், பிடித்த திரைப்படங்களை தூக்கம் வரும் வரை பார்க்கலாம். ஆனால் 'எனக்கு வயசாயிடுச்சு. இனிமேல் எனக்கு தொலைக்காட்சி சீரியல்கள்தான் கதி' என்று சதா சர்வமும் சீரியல்களைப் பார்ப்பதால் மனம்தான் சீர் கெட்டுப் போகின்றது.
சீரியல்களில் வரும் பழிவாங்கும் கதாபாத்திரங்கள், அழுது வடியும் கதாபாத்திரங்கள், மாமியார் கொடுமை, புருஷன் கொடுமை என்று அவற்றைப் பார்ப்பதால் மனநலம் குன்றி விடுகின்றது. அதனால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப் படுகின்றது. இதற்கு சான்றாக எனது உறவினருக்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அந்த உறவினர் ஒரு பெண். மகள், மகனுக்கு திருமணமான பின்னர் 'எனக்கு வயசாயிடுச்சு. நான் வெளில எங்கேயும் வர மாட்டேன்' என்று வீட்டிற்குள் முடங்கினார்.
கல்யாணங்களுக்கு, திருவிழாக்களுக்கு இப்படி எங்கே வரச்சொல்லி அழைத்தாலும் 'நான் எதுக்குப்பா அங்கேயெல்லாம்..... என்னோட கடமை முடிஞ்சுருச்சு. நீங்க போயிட்டு வாங்க' என்று சொல்லி, வீட்டிலேயே அடைந்து கிடந்தார். இவருக்குப் பொழுதுபோக்காக இருந்தது, காலை நேரம் ஒளிபரப்பாகும் சீரியல்கள்! மதிய உணவு நேரம் வரை அதிலேயே லயித்து விடுவார்.
மதிய உணவிற்குப்பின் மாலைநேரம் துவங்கும் சீரியல்களை இரவு வரை ஒன்று விடாமல் பார்ப்பார். நாளடைவில் சீரியலின் கதாபாத்திரங்களோடு அவரது மனம் ஐக்கியமாகிப் போனது. வீட்டில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சீரியல் பார்ப்பதையே தன் வயோதிக காலத்தின் வாழ்நிலையாக மாற்றிக் கொண்டார். உறவினர்கள் வந்தால்கூட அவர்களுடன் உரையாட விருப்பம் இன்றி சீரியல்களைப் பார்த்தார்.
இவரது இந்தநடவடிக்கை, வீடு தேடி வரும் உறவினர்களை மீண்டும் வரவிடாமல் தடுத்தது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் வாழ்க்கையே தொலைக்காட்சி என்பது போல மாறி விட்டார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவருக்கு தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்ப்பதை விட சீரியல்களைப் பார்ப்பதில்தான் அதிக நாட்டம் இருந்தது. உணவு சாப்பிடும் நேரம் கூட தட்டில் சாப்பாடு, டிபன் வகைகளை எடுத்துக் கொண்டு, தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்தபடியே சாப்பிடுவார்.
இவருக்கு லேசாக ரத்த அழுத்தம் (B.P.) இருந்தது. அதற்குரிய மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று ரத்த அழுத்தம் அதிகமாகியது. கைகள் நடுங்க ஆரம்பித்தன. பயந்து போன அவரது மகன், அம்மாவின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டுமோ, எத்தனை மருத்துவர்களிடம் காட்ட வேண்டுமோ, காட்டினார். ஸ்கேன் எடுக்கும் ஏற்பாடுகளை மருத்துவர்கள் கூறியபடி செய்தார். எதிலும் எந்த பிரச்சனையும் இல்லை. மாத்திரைகளின் அளவைக் கூட்டிக் கொடுத்த பின்னும் ரத்த அழுத்தம் நார்மலுக்கு வரவில்லை. கைநடுக்கமும், அதிகமாகியது.
அவர்களது குடும்ப டாக்டர், அவரது அன்றாட வாழ்க்கை முறை பற்றி விபரமாகக் கேட்டார். டாக்டரின் கேள்விகளின் முடிவில் என் உறவினர் கூறிய பதில், அவரது ரத்த அழுத்தம் உயர்ந்தற்கும், கை நடுக்கத்திற்கும் உரிய காரணத்தை அறிவித்தது. எனவே 'தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்துங்கள். அதன்பின் மற்றதைப் பார்ப்போம்' என்று டாக்டர் கூறினார். அந்த அம்மாவின் மகனிடமும் இதைப்பற்றி பேசினார்.
"உங்க அம்மாவிற்கு ஏற்படும் கை நடுக்கம், மனநிலை பாதிப்பினால் ஏற்படும் விளைவு என்று நான் நினைக்கிறேன். அதை நடைமுறை பரிசோதனையில் பார்த்த பிறகே என்னால் எதுவும் கூற முடியும். உங்கள் அம்மாவை தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தச் செய்யுங்கள். சீரியல்கள் பார்ப்பதாலும், அந்தக் கதாபாத்திரங் களுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்வதாலும் ஏற்படும் மனநல பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக அனுமானிக் கிறேன். தொடரில் வரும் கதாபாத்திரங்கள் படும் தொல்லைகள், சோகங்கள், கொடுமைகள், பழிவாங்கும் படலங்கள், மரணம் சம்பவிக்கும் காட்சிகளில் காட்டப்படும் அழுகுரல், தீ வைத்து எரிப்பது போன்ற காட்சிகள் போன்றவற்றை அனுதினமும், சதாசர்வமும் பார்த்துக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.
மனநிலை பாதிப்பினால் கை நடுக்கமும் உண்டாகிறது. அவருடைய வாழ்க்கையில் இல்லாத பிரச்சனைகளையெல்லாம், தொலைகாட்சி தொடர்களில் பார்த்து, மனதளவில் பெரிதும் பாதித்திருக்கலாம். மற்றபடி அவருக்கு ஆரோக்கிய ரீதியாக பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லை" என்று விளக்கிக் கூறிய அவர், மேலும் தொடர்ந்தார்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook