ஆஃப்டர்ஷாக்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6729
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
Aftershock
(சீன திரைப்படம்)
சில திரைப் படங்களை, பார்த்த சில நிமிடங்களிலேயே மறந்து விடுவோம். சில திரைப்படங்கள் சில நாட்கள் நம் மனங்களில் தங்கி நிற்கும். சில சிறந்த திரைப் படங்கள் மட்டுமே எத்தனை வருடங்கள் ஆனாலும், நம் மனங்களை விட்டு சிறிதும் நீங்காமல், அப்படியே சாகாவரம் பெற்று வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தகைய ஒரு படமே இது.
2010ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்த திரைப்படத்தை இயக்கியவர் Feng Xiaogang. 1976ஆம் ஆண்டு சீனாவில் உள்ள Tangshan என்ற ஊரில் உண்டான பயங்கரமான பூகம்பத்தையும், அதனால் உண்டான மோசமான விளைவுகளையும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதே இப்படத்தின் கதை. மிகப் பெரிய செலவில் எடுக்கப்பட்ட இப்படம் வர்த்தக ரீதியாக பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது. சீனாவில் பெரிய வெற்றியைச் சந்தித்த படங்களில் இது ஒன்று.
படத்தின் கதை இது:
1976ஆம் ஆண்டில் Tangshan என்ற ஊரில், Li Yuanni என்ற பெண் தன் கணவனுடனும், தனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுடனும் ஒரு சிறிய வீட்டில் வசித்துக் கொண்டிருக்கிறாள். அந்த இரண்டு குழந்தைகளில் ஒன்று ஆண். இன்னொன்று பெண். லீ தன் கணவன் Fang Daqiang இடம் தனக்கு இன்னொரு குழந்தையும் வேண்டும் என்கிறாள். அதைத் தொடர்ந்து அவர்கள் தங்களுடைய‘ட்ரக்’வண்டிக்குப் பின்னால் போய் ஒதுங்குகிறார்கள். அவர்களுடைய குழந்தைகள் வீட்டில் படுத்திருக்கிறார்கள். அப்போது திடீரென்று பூகம்பம் உண்டாகிறது. பூமி பிளக்கிறது. அங்கிருந்த கட்டிடங்கள் தரை மட்டமாகி பெயர்ந்து கீழே விழுகின்றன. எங்கு பார்த்தாலும் இடிந்து கிடக்கும் கட்டிடங்கள்…
தங்களின் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக அந்த பெற்றோர் பாய்ந்தோடுகிறார்கள். லீயைக் கையைப் பிடித்து பின்னால் இழுத்த அவளுடைய கணவன் முன்னால் ஓடுகிறான். ஆனால், கட்டிடம் இடிந்து விழுந்து, அவன் நசுக்கப்பட்டு இறக்கிறான்.
அவர்களுடைய வீடு இடிந்து கிடக்கிறது. குழந்தைகள் இரண்டும் ஒரு காங்க்ரீட் தூண் மேலே விழ, கீழே கிடக்கின்றனர். உயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு குழு வருகிறது. குழந்தைகளின் மீது விழுந்து கிடக்கும் காங்க்ரீட் தூணை அகற்ற வேண்டியது முதல் வேலை. ஆனால், அந்தத் தூணை அகற்றினால் இரு குழந்தைகளில் யாராவது ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும்- இன்னொருவர் அதன் கீழ் நசுங்குவதை தவிர்க்க முடியாது என்கிறது காப்பாற்ற வந்த குழு, லீ என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறாள். சிறிது நேர யோசனைக்குப் பின், தன் மகன் Fang Da வைக் காப்பாற்றும்படி லீ கூறுகிறாள். அவள் கூறுவதை கண்களை மூடிக் கொண்டு, காங்க்ரீட் தூணுக்குக் கீழே பாதி மயக்க நிலையில் படுத்திருக்கும் பெண் குழந்தை Fang Deng கேட்கிறாள். பையன் காப்பாற்றப் படுகிறான்.
பூகம்பத்தில் இறந்த உடல்கள் குவியல் குவியலாக அடுத்தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கில்… அவற்றில் Fang Dengம் இருக்கிறாள். மழை விடாமல் பெய்கிறது. இறந்த உடல்கள் மழை நீரில் நனைந்து மண்ணில் கிடக்கின்றன. கீழே கிடக்கும் Fang Dengஇன் உடலில் மழைத் துளிகள் விழ, உடலில் ஒரு சிலிர்ப்பு… சிறிய அசைவுகள்…Fang Deng மெதுவாக தன் கண்களைத் திறக்கிறாள். அவள் சாகவில்லை. சுய உணர்வற்ற நிலையில் அவள் இருக்க, இறந்து விட்டாள் என்று நினைத்து அவளைப் பிணங்களுடன் சேர்த்து போட்டுவிட்டு போய் விட்டனர்.
இரவு நேரம்… ஒரே இருட்டு… மருந்துக்குக் கூட வெளிச்சம் இல்லை. தான் படுத்திருந்த இடத்தை விட்டு Fang Deng மெதுவாக எழுகிறாள். மெல்ல நடக்கிறாள்.
மயானத்தைப் போல இருக்கும் அந்த பரந்து கிடக்கும் இடத்தில் அந்தச் சிறுமி தான் மட்டும் தனியே செயலற்ற நிலையில் மெதுவாக நடந்து செல்கிறாள். கலைந்த தலை முடியுடன், உடல் முழுவதும் களைத்துப் போய், எல்லாவற்றையும் இழந்து விட்ட மன உணர்வுடன் உயிரற்ற நிலையில் நடந்து வந்து கொண்டிருக்கும் அவளை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு கணவனும் மனைவியும் பார்க்கிறார்கள். அவர்கள் தங்களின் பிள்ளைகளை பூகம்பத்திற்கு பறி கொடுத்து விட்டார்கள். எல்லோரையும் பூகம்பத்தில் இழந்துவிட்ட அனாதை என்று அந்தச் சிறுமியை நினைக்கும் அவர்கள், அவளைத் தங்களுடன் அழைத்துச் செல்கின்றனர்.
Fang Deng வாய் திறந்து எதுவும் பேச மாட்டேன் என்கிறாள். ஆனால், காலப் போக்கில் பேச ஆரம்பிக்கிறாள். அவளைத் தத்தெடுத்து தங்களின் ஊருக்கு அழைத்துச் சென்ற அந்த கணவனும், மனைவியும் அவளைத் தங்களின் செல்ல மகளாக, பொன்னைப் பாதுகாப்பதைப் போல பாதுகாத்து பொக்கிஷமென வளர்க்கின்றனர்.
பத்து வருடங்கள் கடந்தோடுகின்றன. Fang Deng இன் இப்போதைய பெயர் Wang Deng (Wang என்பது வளர்ப்பு தந்தையின் பெயரின் முதல் பகுதி). அவள் மருத்துவக் கல்வி கற்கிறாள். அங்கிருந்து வெளியேறிய பிறகு, அவள் Yang Zhi என்ற ஒரு பட்டதாரி இளைஞனைப் பார்க்கிறாள். அவர்களுக்கிடையே காதல் அரும்புகிறது. Fang Deng மூன்றாவது ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போது, அவளுடைய வளர்ப்புத் தாய் உடல் நலம் பாதிக்கப்படுகிறாள். தான் இறப்பதற்கு முன்னால், தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தைக் கொண்டு தன்னுடைய உண்மையான குடும்பத்தைக் கண்டு பிடிக்கும்படி அவள் Fang Deng இடம் கேட்டுக் கொள்கிறாள்.