ஆஃப்டர்ஷாக் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6731
Fang Deng தான் கர்ப்பமாக இருப்பதை உணர்கிறாள். Yang கர்ப்பத்தை உடனடியாக கலைத்து விடும்படி கூறுகிறான். அதற்கு மறுத்து விடுகிறாள் Fang Deng. அவள் பல்கலைக் கழகத்தை விட்டு, யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறாள். Yang ஐயும், தன் வளர்ப்புத் தந்தையையும் விட்டு (தான் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தால், அவர் மிகவும் கவலைப்படுவார் என்று அவள் நினைக்கிறாள்) அவள் வெகுதூரம் போய் விடுகிறாள்.
இதற்கிடையில் Fang Da படிப்படியாக வளர்கிறான். தன் அன்னையுடன்தான் அவன் இருக்கிறான். பூகம்பத்தின் இடிபாடுகளுக்குக் கீழே கிடந்ததால், அவனுடைய இடது கரத்தை எடுக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகி விடுகிறது. பல்கலைக் கழகத்தின் நுழைவுத் தேர்விற்குச் செல்லாமல், அவன் தனக்கென்று ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்கிறான். தன்னுடைய ‘பை’க்கில் ஆட்களை ஏற்றிக் கொண்டு போய், அவர்கள் போக நினைக்கும் இடத்தில் இறக்கி விடுவது – இதுதான் அவனுடைய வேலை.
காலப் போக்கில் அவன் தன்னுடைய தாயை விட்டு நீங்கி, ஒரு பெரிய ‘ட்ராவலிங் ஏஜென்ஸி’யின் உரிமையாளராக ஆகிறான். அவனுக்குத் திருமணம் நடக்கிறது. ஒரு மகனும் பிறக்கிறான். அவனுக்கு Fang Da வைக்கும் பெயர் – Diandian.
நான்கு வருடங்களுக்குப் பிறகு, Fang Deng மீண்டும் தன்னுடைய வளர்ப்புத் தந்தையைப் பார்ப்பதற்காக வருகிறாள். இப்போது அவளுடன், அவளுடைய மகளும் இருக்கிறாள். மகளுக்கு அவள் வைத்திருக்கும் பெயர் Diandian. (Fang Da தன் மகனுக்கு வைத்திருக்கும் அதே பெயர்தான்.) தான் செய்த தவறைக் கூறி, தன் வளர்ப்புத் தந்தையிடம் மன்னிப்பு கேட்கிறாள் Fang Deng. புதிய வருடத்தின் மாலை நேரத்தில், தான் ஒரு வெளிநாட்டுக்காரரை திருமணம் செய்து கொண்டிருக்கும் தகவலை தன் வளர்ப்புத் தந்தையிடம் கூறும் அவள், தன்னுடைய மகளுடன் கனடாவில் இருக்கும் Vancouver என்ற இடத்திற்குப் போய், அங்கேயே குடியிருக்கப் போவதாக கூறுகிறாள்.
2008ஆம் ஆண்டு. Sichuan என்ற இடத்தில் பூகம்பம் உண்டாக, அந்த சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்க்கிறாள் Fang Deng. உடனடியாக சம்பவம் நடைபெற்ற அந்த இடத்திற்குச் சென்று, பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவள் முடிவெடுக்கிறாள். அதைத் தொடர்ந்து அவள் சீனாவிற்குக் கிளம்புகிறாள்.
பூகம்பம் நடைபெற்ற இடத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்ய வேண்டும் என்று Fang Da வும் தீர்மானிக்கிறான். அண்ணனும், தங்கையும் ஒரே இடத்தில் இருக்கிறார்கள்- யார் என்று தெரியாமலே. Fang Da தன்னுடன் இருந்தவர்களிடம், Tangshanஇல் உண்டான பூகம்பத்தைப் பற்றி கூறிக் கொண்டிருப்பதை, Fang Deng கேட்கிறாள். அவன் தன் அண்ணன் என்பது அவளுக்குத் தெரிகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ஒரே வயிற்றில் பிறந்த அந்த அண்ணனும், தங்கையும் ஒன்று சேர்கின்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து, தங்களின் அன்னையைப் பார்க்கச் செல்கின்றனர். முதலில், தன் தாயின் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாள் Fang Deng. தன்னை கை விட்டவள்தானே அவள் என்று Fang Deng நினைக்கிறாள்.
ஆனால், இத்தனை வருடங்களும் தன் மகளுக்கு தான் செய்த கெடுதலுக்காக மனதிற்குள் வருத்தப்பட்டுக் கொண்டும், குற்ற உணர்வால் வேதனைப்பட்டுக் கொண்டும், அதற்காக காலம் முழுவதும் கண்ணீர் விட்டுக் கொண்டும், புகைப்படத்தில் இருக்கும் தன் செல்ல மகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டும் இருந்திருக்கிறாள் அந்த அன்பு தாய். இந்த உண்மை தெரிந்ததும், தன் அன்னை மீது தான் கொண்டிருந்த கோபத்தை அக்கணத்திலேயே Fang Deng விட்டொழிக்கிறாள்.
Tangshan பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவிய மக்களின் நினைவாக உண்டாக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு முன்னால் தங்களின் அன்னையுடன் நின்று கொண்டிருக்கிறார்கள் Fang Daவும் Fang Dengம். பூகம்பத்தில் இறந்த 2,40,000 பேரின் பெயர்களும் அந்த நினைவுச் சின்னத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றில் அவர்களுடைய தந்தை Fang Daqiangன் பெயரும் இருக்கிறது. அந்த நினைவுச் சின்னத்திற்கு முன்னால் தலையைக் குனிந்து கொண்டு அவர்கள் மரியாதை செலுத்திக் கொண்டிருக்க, படம் முடிவடைகிறது.
‘Aftershock’ஐ ஒரு திரைப்படம் என்றே என்னால் நினைக்க முடியவில்லை. மனித வாழ்க்கையையும், மனிதர்களையும், அவர்களின் உணர்வுகளையும் என்ன அருமையாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர் Feng Xiaogang!
Fang Deng என்ற குழந்தையாக நடித்திருக்கும் குழந்தை நட்சத்திரம் Zhang Zifeng இன் நடிப்பும், முகத்தில் பரவிக் கிடக்கும் சோகமும் இப்போது கூட என் மனதில் பசுமையாக நின்று கொண்டிருக்கின்றன.
அண்ணனும், தங்கையும், தாயும் பல வருடங்களுக்குப் பிறகு இணையும் காட்சி இருக்கிறதே! அதை நம்மால் மறக்க முடியுமா?
எந்தவித காரணத்தைக் கொண்டும் பார்க்காமல் இருக்கக் கூடாது என்று கூறுவார்கள் அல்லவா? அத்தகைய ஒரு படமாக ‘Aftershock’ படத்தை நான் எப்போதும் கூறுவேன். என் மனதின் அடித்தளத்தில் நிரந்தரமாக உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு காவியம் இது.