நான் நடிகன் ஆன கதை - Page 31
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 7364
‘காஸேஸ் சர்க்கஸ்’ என்ற நகைச்சுவை நடிகர்களின் குழுவில் எனக்கு வேலை கிடைத்தது. அந்த கம்பெனியின் முக்கிய நடிகராக இருந்தேன் நான். வாரத்திற்கு மூன்று டாலர்கள் சம்பளமாக கிடைத்தது. ஒரு நகைச்சுவை நடிகன் என்ற நிலையில் நான் வளர்ந்தது அங்குதான். ‘காஸேஸ் சர்க்கஸி’ல் வேலை முடிந்தவுடன் மீண்டும் மூன்று மாதங்கள் நான் வேலை எதுவும் இல்லாமல் இருந்தேன். சிட்னிதான் அந்தச் சமயத்தில் என்னுடைய செலவுகளைப் பார்த்துக் கொண்டான். அவன் இப்போது ஃப்ரெட்கார்னோ கம்பெனியில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவனாக இருந்தான். பல நேரங்களில் அவன் ஃப்ரெட்கார்னோவிடம் என்னைப் பற்றி கூறினாலும், நான் வயதில் மிகவும் குறைந்தவனாக இருக்கிறேன் என்று நினைத்து அவர் அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.
அப்போது யூத நகைச்சுவை நடிகர்களுக்கு லண்டனில் நல்ல பெயர் இருந்தது. ஃபாரஸ்டர்ஸ் ம்யூசிக் ஹாலில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த நான் தீர்மானித்தேன். ஒரு அமெரிக்கன் புத்தகத்திலிருந்து நகைச்சுவைக் காட்சிகளை எடுத்து வாரக் கணக்கில் அதை பயிற்சி செய்தேன். சிட்னி இரண்டு டாலர்கள் தந்திருந்தான். அதைக் கொண்டு நிகழ்ச்சிக்குத் தேவைப்படும் இசைக்கான ஏற்பாடுகளைச் செய்தேன். வயது சற்று கூடுதலாக தெரிய வேண்டும் என்பதற்காக செயற்கைத் தாடியும் மீசையும் வைத்து ஒப்பனை செய்து கொண்டேன். சிறிது நேரம் சென்ற பிறகு நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஆரஞ்சு பழ தோல்களை மேடை மீது எறிந்து ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். நான் வசனங்களை வேகமாகச் சொல்லி நிகழ்ச்சியை முடித்து விட்டு, அந்த நிமிடமே அங்கிருந்து கிளம்பி விட்டேன். அந்த மாதிரியான நகைச்சுவை நடிகனாக என்னால் ஆக முடியாது என்பதை அன்று நான் தெரிந்து கொண்டேன்.
ஒரு தொழில் முறை நடிகனாக ஆவதற்கு முன்னால் இதே மாதிரி எனக்கு ஏமாற்றமளித்த இரண்டு மூன்று சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. பதினேழு வயது நடந்தபோது, ‘மெரி மேஜர்’ என்ற நாடகத்தில் கதாநாயகனாக நடிக்கக் கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நாற்பது வயது கொண்ட ஒரு பெண் கதாநாயகி. மதுவின் தாங்க முடியாத நாற்றத்துடன் அவள் இரவு நேரங்களில் நாடகத்தில் நடிக்க வருவாள். அவளுடன் சேர்ந்து நடித்ததன் மூலம் எனக்கு கதாநாயகனாக நடிக்கும் ஆர்வமே இல்லாமற் போய்விட்டது.
இன்னொரு முறை நான் ஒரு நகைச்சுவை நாடகம் எழுதினேன். ‘பன்னிரெண்டு நீதிபதிகள்’ என்பது அதன் பெயர். அதைப் பற்றி நகைச்சுவை நடிகனான சார்கோட்டிடம் நான் சொன்னேன். நான் அதை இயக்குவதாக இருந்தால் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களை தான் பார்த்துக் கொள்வதாக அவர் எனக்கு உறுதியளித்தார். தொடர்ந்து கதாபாத்திரங்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து ரிகர்சல் ஆரம்பித்தோம். ரிகர்சல் ஆரம்பித்து மூன்றாவது நாள் சார்க்கோட் எனக்கு ஒரு குறிப்பு எழுதி கொடுத்தனுப்பி இருந்தார். அந்த நாடகத்தை இனிமேல் தொடர வேண்டாம் என்று தான் தீர்மானித்திருப்பதாக அவர் எழுதியிருந்தார். நான் அதைச் சுருட்டி பாக்கெட்டிற்குள் போட்டு விட்டு ரிகர்சலைத் தொடர்ந்தேன். அந்த விஷயத்தை நடிகர்களிடம் கூறுவதற்கு எனக்கு தைரியம் இல்லை. அதற்கு பதிலாக நான் அவர்களை வீட்டிற்குக் கொண்டு போனேன். என் அண்ணனிடம் என்னவோ கூற வேண்டும் என்று சொல்லி விட்டு, நான் உள்ளே போனேன். அந்தக் குறிப்பை சிட்னியிடம் காண்பித்தேன். அதைப் படித்த சிட்னி கேட்டான்:
‘நீ அவங்கக்கிட்ட சொல்லிட்டியா?’
‘இல்ல...’- நான் மெதுவான குரலில் சொன்னேன்.
‘பொய் சொல்லு.’
‘என்னால முடியாது. மூன்று நாட்கள் ரிகர்சல் பார்த்து விட்டு எப்படி சொல்வது?’
‘ஆனால், அது உன் குற்றம் இல்லையே! போய் சொல்லு’- அவன் தன் குரலை உயர்த்தினான்.
எனக்கு சிறிது கூட தைரியமே இல்லாமற் போய்விட்டது. ‘நான் என்ன சொல்வேன்?’- நான் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தேன்.
‘ஒரு முட்டாளைப் போல இருக்காதே.’
அவன் எழுந்து அடுத்த அறைக்குப் போனான். சார்க்கோட் எழுதிய குறிப்பை அவன் அவர்களிடம் காட்டி விஷயத்தை விளக்கினான். பிறகு அவன் எங்கள் எல்லோரையும் வெளியே அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்தான். நடிகர்கள் விஷயத்தைப் புரிந்து கொண்டார்கள். அதனால் அவர்கள் என்னிடம் கோபப்படவில்லை.
தொடர்ச்சியான தோல்விகளுக்குப் பிறகு அதிர்ஷ்டம் என்னை ஆசீர்வதித்தது. ஒரு நாள் திரு.கார்னோ என்னைப் பார்க்க விரும்புவதாக சிட்னி சொன்னான். ‘ஃபுட்பால் மேட்ச்’ என்ற நாடகத்தில் புகழ் பெற்ற நடிகரான ஹாரி வெல்டனுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் நகைச்சுவை நடிகர் எதிர்பார்த்த அளவிற்கு திறமையை வெளிப்படுத்தவில்லை என்று கார்னோ நினைத்தார். அதற்காகத்தான் என்னை அவர் அழைத்திருந்தார். காம்பர்வெல்லிலுள்ள கார்னோவின் இல்லத்தை நான் அடைந்தேன். மிகுந்த அன்புடன் அவர் என்னை வரவேற்றார். பிரகாசமான கண்கள்... ஒரு உடற்பயிற்சி பண்ணும் மனிதரின் உறுதியான உடல்... முன்பு அவர் நீளமான இரும்பு பார்களைத் தூக்கி உடற்பயிற்சி செய்யக் கூடிய ஆளாக இருந்திருக்கிறார். தொடர்ந்து மூன்று நகைச்சுவை நடிகர்களுடன் அவர் நாடக உலகத்திற்கு வந்தார். ஒரு நல்ல நகைச்சுவை நடிகராக இருந்த அவர் பிற்காலத்தில் ஆறு நாடக கம்பெனிகளை சொந்தத்தில் வைத்திருந்தபோதும் நீண்ட காலம் நடிப்பைத் தொடர்ந்து கொண்டுதானிருந்தார். பிறகு நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதற்கான காரணம் என்ன என்பதை நாடகக் கம்பெனியில் இருந்த வயதான ஒருவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டேன்.
ஒரு முறை மாஞ்செஸ்ட்டரில் ஒரு காட்சி முடிந்தவுடன் கார்னோவின் குழுவில் உள்ளவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கார்னோ நகைச்சுவை முழுவதையும் கெடுத்து விட்டார் என்று குற்றம் சுமத்தினார்கள். அதைக் கேட்டு அவர் சொன்னார்: ‘சரி... உங்களுக்கு அப்படி தோன்றினால், நான் நடிப்பதையே நிறுத்திக் கொள்கிறேன். இதை என்னோட ராஜினாமாவா வச்சுக்கங்க.’ தன்னுடைய ‘விக்’கை அவர் அங்கிருந்த மேஜை மீது வீசி எறிந்தார். அதற்குப் பிறகு அவர் நடிக்கவேயில்லை.
‘நீ ரொம்பவும் சிறப்பாக நடிக்கிறேன்னு சிட்னி சொன்னான் ஹாரிவெல்டனோடு சேர்ந்து ‘ஃபுட்பால் மேட்ச்’ நாடகத்தில் நடிக்க முடியும்னு உனக்கு தோணுதா?’- கார்னோ என்னைப் பார்த்துக் கேட்டார். அன்று வாரத்திற்கு முப்பத்து நான்கு டாலர்கள் சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த பெரிய நடிகராக இருந்தார் ஹாரி வெல்டன்.
‘எனக்கு தேவை நடிப்பைக் காட்டக் கூடிய வாய்ப்புதான்’- நான் தன்னம்பிக்கையுடன் சொன்னேன்.