நீல வெளிச்சம் - Page 7
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9901
“உனக்குப் பிடிச்ச பார்கவிக்குட்டிக்கிட்ட மண்ணெண்ணெய் வேணும்னு கேட்க வேண்டியதுதானே! பார்கவிக்குட்டியோட வாழ்க்கை வரலாற்றை எழுதி முடிச்சாச்சா?''
நான் ஒன்றும் பதில் பேசவில்லை. எழுத வேண்டும். அவர்களில் ஒருவன் ஸ்டவ்வில் இருந்த மண்ணெண்ணெயைக் குப்பியில் ஊற்றிக் கொண்டிருந்தபோது, திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.
நான் சொன்னேன்:
“ஒரு குடை வேணும்.''
அவன் சொன்னான்:
“இப்போ போயி என்ன செய்யப் போறே? பேசாம இங்க இருந்து சீட்டு விளையாடு. மழை விட்டபிறகு அங்கே போனாப் போச்சு..''
அவன் சொன்னபடி நான் அவர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாட உட்கார்ந்துவிட்டேன். என்னதான் சீட்டு விளையாடினாலும், என் கவனம் முழுவதும் எழுதிக் கொண்டிருந்த கதையிலேயே இருந்தது. அதனால், சீட்டு விளையாட்டில் பெரிதாகக் கவனம் செலுத்தவில்லை. ஒரு மணி ஆனபோது மழை நின்றது. விளையாட்டை நிறுத்திவிட்டு, மண்ணெண்ணெய் குப்பியையும், டார்ச் விளக்கையும் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டேன். அவர்களும் படுக்கத் தொடங்கினார்கள். நான் கீழே இறங்கிச் சாலையை அடைந்தவுடன், அவர்கள் விளக்கை அணைத்தார்கள்.
சாலையில் ஒரு அசைவும் இல்லை. மருந்துக்குக்கூட வெளிச்சம் இல்லை. மெதுவாக நடந்தேன். வளைவு திரும்பி, நான் தங்கியிருக்கும் வீடு நோக்கி நடந்தேன். அந்த மங்கலான நிலா வெளிச்சத்தில், முழு உலகமும் புரிந்துகொள்ள முடியாத ஒரு மர்மத்தில் மூழ்கிக் கிடப்பதை உணர முடிந்தது. பலவிதச் சிந்தனைகளும் என் மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன. மயான அமைதியுடன் இருந்த- இருண்டு போயிருந்த சாலை வழியே டார்ச் விளக்கைப் பிடித்தவாறு நான் மட்டும் தனியே நடந்தேன். சாலையில் ஓர் உயிரைக் காண வேண்டுமே!
நான் தங்கியிருக்கும் வீட்டை அடைந்து கேட்டைத் திறந்து உள்ளே போய், வாசல் கதவைத் திறந்தேன். உள்ளே நுழைந்தேன். வாசல் கதவைப் பூட்டினேன். நான் இல்லாத நேரத்தில் மாடியில் ஏதாவது, அதிசயிக்கத்தக்க வகையில் நடந்திருக்கும் என்றெல்லாம் நான் எண்ணி இருக்கவில்லை. ஆனால், அப்படி நடந்திருந்ததுதான் ஆச்சரியம். இது எப்படி என்று தெரியாமல், உள்ளபடியே என் மனதில் ஒருவிதக் கவலை அரும்பத் தொடங்கியது. வாய்விட்டு அழ வேண்டும் போல் இருந்தது. சாதாரணமாக நான் மிகவும் எளிதில் சிரித்துவிடுவேன். ஆனால், ஒரு துளி கண்ணீர் விடுவது என்றால் அது என்னால் முடியாத ஒரு விஷயம். கண்ணிலிருந்து நீர் வராது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் வருகிறபோது என் மனதை நானே தேற்றிக்கொள்வேன்.
இப்போதும் அதே மாதிரி மனதைத் தேற்றிக்கொண்டு மாடிக்குப் போனேன். எப்போதும் போவதைப் போலத்தான்.... ஆனால், ஒரு ஆச்சரியமான சம்பவத்தை என் கண்கள் சந்தித்தன! இது எப்படி என்ற கேள்வி மனதின் அடித்தளத்தில் எழுந்தது. விஷயம் இதுதான்.
நான் அறையை அடைத்துவிட்டுப் போகிறபோது மண்ணெண் ணெய் முழுவதுமாகத் தீர்ந்துவிட்டதால், விளக்கு அணைந்து விட்டது. அறை முழுக்க இருட்டு ஆட்சி செய்து கொண்டிருந்தது. அதற்குப் பிறகு ஒரு பெரிய மழை. இரண்டு மூன்று மணிகள் ஓடிவிட்டன. ஆனால், இப்போது அறையில் ஆச்சரியமாக அரிக்கன் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. வாசல் கதவின் இடைவெளியில் அது தெரிகிறது. இந்த வெளிச்சத்தைத்தான் என் கண்கள் பார்த்தன. மனதின் அடித்தளத்தில் உண்டான கேள்வியும் இதையொற்றித்தான். இது எப்படி? எனக்குப் புரியவில்லை.
நான் சாவியை எடுத்தேன். தாழ்ப்பாள் மேல் டார்ச் விளக்கை அடித்தேன். தாழ்ப்பாள் வெள்ளியென மின்னியது என்று கூறுவதை விட, அது சிரித்தது என்று கூறுவதே சரியானது.
நான் அறையைத் திறந்து உள்ளே போனேன். அதிர்ச்சியுடன் எல்லாவற்றையும் நோக்கினேன். என் ஒவ்வொரு அணுவிலும் அந்த அதிர்ச்சி பரவி பல உண்மைகளைச் சொன்னது. நான் கொஞ்சம்கூட பயப்படவில்லை. நடுங்கவில்லை. மனதில் அன்பும், கருணையும் மட்டுமே குடிகொண்டிருந்தன. சிலையென நான் நின்றிருந்தேன் என்பதே உண்மை. இலேசாக உடல் வியர்த்தது. அழ வேண்டும் போலவும் இருந்தது.
நீல வெளிச்சம்!
வெள்ளை நிற சுவர்களும், அறையும் நீல வெளிச்சத்தில் மூழ்கிப் போயிருந்தன. விளக்கில் இருந்து இரண்டு அங்குல நீளத்தில் ஒரு நீல வெளிச்சம்... நான் ஸ்தம்பித்து அப்படியே நின்றுவிட்டேன்.
மண்ணெண்ணெய் இல்லாமல் அணைந்துபோன விளக்கை யார் எரிய வைத்தது? பார்கவி நிலையத்தில் இந்த நீல வெளிச்சம் எங்கே இருந்து வந்தது?