நீல வெளிச்சம் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9901
"நீல வெளிச்சம்” என்ற இந்தக் கதை என் வாழ்க்கையில் நடைபெற்ற அற்புதச் சம்பவங்களில் ஒன்று. சம்பவம் என்று கூறுவதைவிட சம்பவத்தின் ஒரு ரேகை என்று கூறுவதே பொருத்தமானது. விஞ்ஞானம் என்ற ஊசியை வைத்து இதை ஓட்டை போட்டு ஆராயப் பார்க்கிறேன். ஆனால், என்னால் இந்த விஷயத்தில் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதே உண்மை.
ஒருவேளை, உங்களால் முடியலாம். ஆராய்ச்சி செய்து, விளக்கம்கூட உங்களால் கூற முடியலாம். இது ஒரு அற்புதச் சம்பவம் என்று நான் முதலிலேயே சொன்னேன் அல்லவா? ஆமாம்... அப்படி அல்லாமல் நான் வேறு என்ன பெயரிட்டு அதைச் சொல்ல முடியும்?
சம்பவம் இதுதான்.
நாள், மாதம், வருடம் எல்லாம் தேவையில்லை அல்லவா? நான் ஒரு வீடு தேடி அலைந்து கொண்டிருந்தேன். வீடு தேடுவது என்பது என்னைப் பொறுத்த வரை புதிய ஒரு விஷயமில்லை. அடிக்கடி நான் இப்படி வீடு தேடி அலையக் கூடிய ஆள்தான். ஆனால், நான் விருப்பப்படுகிற மாதிரி எனக்கு வீடோ, அறையோ கிடைக்கவில்லை. இப்போது இருக்கும் வீட்டைப் பற்றிக் கூறுவது என்றால்... நூறு குறைகளைக் கூறலாம். ஆனால், இதை யாரிடம் சொல்வது? பிடிக்கவில்லை என்றால், இடத்தை காலி பண்ணி விட்டுப் போக வேண்டியதுதானே என்று கூறுவார்கள். ஆனால், நான் எங்கே போவது? இப்படி பயங்கர வெறுப்புடன் நகர்ந்து கொண்டிருக்கிறது என் வாழ்க்கை. நான் வெறுத்து வேண்டாம் என்று சொன்ன வீடுகளும், அறைகளும் மட்டும் எத்தனை வரும் தெரியுமா?
இதற்காக நான் வேறு யாரையும் குறை சொல்லவில்லை. எனக்குப் பிடிக்கவில்லை. நான் காலி செய்து விட்டுப் போகிறேன். இதே இடத்தை விருப்பப்படுகிற இன்னொரு ஆள் இங்கு வருவார். வாழ்க்கையை நடத்துவார். இதுதானே வாடகை வீடுகளின் நிலை! இருந்தாலும் வாடகைக்கு வீடு கிடைப்பது என்பது கொஞ்சம் கஷ்டமான சமாச்சாரம்தான். பத்து ரூபாயில் கிடைக்கக்கூடியது சில நேரங்களில் அறுபது ரூபாய் கொடுத்தால்கூட கிடைக்காது. இப்படி நான் வீடு தேடி அலைந்து கொண்டிருந்தபோது என் பார்வைக்கு வருகிறது ஒரு வீடு!
அதை வீடு என்று சொல்வதைவிட, ஒரு சிறு மாளிகை என்று கூறுவதே பொருத்தமானது. பெயர்- பார்கவி நிலையம். நகரத்தின் ஆரவாரங்களில் இருந்து விலகியிருக்கும் ஒரு இடத்தில் அந்த வீடு அமைந்திருந்தது. கிட்டத்தட்ட நகராட்சியின் எல்லையில் என்று சொல்லலாம். "இந்த வீடு வாடகைக்கு விடப்படும்'' என்ற பலகை அங்கு தொங்கிக்கொண்டிருந்தது.
பொதுவாகவே எனக்கு அந்த வீடு மிகவும் பிடித்திருந்தது. வீடு பழையதுதான். மேலோட்டமாகப் பார்க்கிறபோது அவ்வளவு பெரிதாகத் தோன்றாது. இருந்தாலும் பரவாயில்லை. வசிப்பதற்குப் போதுமே! மேலே இரண்டு அறைகளும் ஒரு போர்ட்டிக்கோவும். கீழே நான்கு அறைகள். அவற்றுடன் குளியலறையும் சமையலறையும். தண்ணீர் வரும் குழாய் இருந்தது. ஆனால், வெளிச்சத்திற்கு மின்சாரம் மட்டும் இல்லை. சமையலறைக்குப் பக்கத்தில் ஒரு கிணறு இருந்தது. அதற்குப் பக்கத்திலேயே ஒரு மூலையில் கக்கூஸ் அமைக்கப்பட்டிருந்தது. முற்றத்தில் இருந்த கிணறு மிகமிகப் பழையது. கிணற்றைச் சுற்றிலும் கற்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. முன்னால் இருந்த காலி இடம் முழுக்க ஏகப்பட்ட மரங்கள். வீட்டைச் சுற்றிலும் மதில் எழுப்பப்பட்டிருந்தது. பொதுச் சாலையை ஒட்டி அந்த வீடு அமைந்திருந்தது.
எனக்கே மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இதுவரை ஏன் அந்த வீட்டை யாரும் வாடகைக்கு எடுக்கவில்லை? மிகவும் அழகான ஒரு இளம்பெண்ணை... இவளை யாருக்கும் காட்டக்கூடாது என்று நாம் நினைத்து பர்தா போட்டு மூடி மூடி வைத்தால் எப்படி இருக்கும்? அத்தகைய ஒரு எண்ணத்தைதான் அந்த வீடு என் மனதில் உண்டாக்கியது. வீட்டைப் பார்த்த அடுத்த கணமே அந்த வீட்டை வாடகைக்கு எடுத்தே ஆவது என்பதில் பிடிவாதமாகி விட்டேன் நான். சொல்லப்போனால் இந்த விஷயத்தில் படு வேகமாகச் செயல்பட்டேன் என்பதே உண்மை. ஓடிச் சென்று ஓர் இடத்தில் பணம் கடன் வாங்கினேன். இரண்டு மாத வாடகைப் பணத்தை முன்பணமாகக் கொடுத்தேன். சாவியைக் கையில் வாங்கினேன். அடுத்த நிமிடமே மாளிகையின் மாடிக்கு குடிபெயர்ந்தேன். என்னுடைய பொருட்களை ஏற்றி வந்த வண்டிக் காரர்கள் ஏதோ ஒருவித அச்சத்துடன், வீட்டிற்குள் பொருட்களைக் கொண்டு வராமல், கேட்டுக்கு வெளியிலேயே அவற்றை வைத்து விட்டுப் போய்விட்டார்கள். அன்றே ஒரு புதிய அரிக்கன் விளக்கை வாங்கி மாட்டினேன். மண்ணெண்ணெய் வாங்கவும் மறக்கவில்லை.
மாடியையும் கீழ்ப் பகுதியையும், எல்லா அறைகளையும், சமையலறையையும் நானே பெருக்கித் தண்ணீர் விட்டுக் கழுவினேன். ஆங்காங்கே அழுக்குப் படிந்திருந்தது. சில இடங்களில் தூசு தென்பட்டது. எல்லாவற்றையும் நீர் விட்டு சுத்தமாக்கினேன். எல்லாம் முடிந்த பிறகு பார்த்தேன். ஒரே ஒரு அறை மட்டும் பூட்டியிருந்தது. நானும் அதை ஏனோ திறக்க முயற்சிக்கவில்லை. குளியலறைக்குள் நுழைந்து ஆசை தீரக் குளித்தேன். உடலுக்கும் மனதிற்கும் ஒரு புத்துணர்ச்சி வந்தது மாதிரி இருந்தது. கிணற்றைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கற்சுவர் மேல் ஏறி அமர்ந்தேன். மனதில் இனம் புரியாத ஒரு சந்தோஷம் உண்டானது. வெறுமனே அங்கு உட்கார்ந்து கனவு காணலாம் போலிருந்தது. வீட்டைச் சுற்றி இருந்த வெற்றிடத்தில் நடக்கலாம்... ஓடலாம். வாசலில் ஒரு தோட்டம் உண்டாக்க வேண்டும். பன்னீர் செடிகளை ஏராளமாக வைக்க வேண்டும். ஒரு சமையல்காரனை வேலைக்கு அமர்த்தினால் என்ன என்று நினைத்தேன். பிறகு ஏனோ அந்த எண்ணத்தைக் கைவிட்டு விட்டேன். தேவையில்லாத தொல்லை எதற்கு என்று நினைத்ததே காரணம். காலையில் குளித்து முடித்து தேநீர் அருந்தப் போகிறபோது, ஒரு தெர்மோஃப்ளாஸ்க் நிறைய தேநீரை நிரப்பிக் கொண்டு வர வேண்டியதுதான். மதிய உணவை ஓட்டலிலேயே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டியது. இரவு உணவை இங்கேயே கொடுத்தனுப்பும்படி ஓட்டல்காரர்களிடம் சொல்லிவிட வேண்டியது. பிறகு... தபால்காரனைப் பார்த்து முகவரி மாறிய விஷயத்தை உடனடியாகக் கூறியாக வேண்டும். இந்த இடத்தை வேறு யாருக்கும் சொல்லக்கூடாது என்பதையும் கட்டாயம் கூறிவிட வேண்டும். தனிமையிலேயே கழியப் போகிற அழகான இரவுகள்... தனிமையிலேயே கழியப் போகிற பகல்கள்... இங்கு எவ்வளவோ எழுதலாம்... இப்படிப் பல விஷயங்களையும் மனதில் எண்ணியவாறு நான் கிணற்றுக்குள் பார்த்தேன். நீர் இருக்கிறதா இல்லையா என்பதே தெரியவில்லை. கிணற்றுக்குள் நிறைய செடிகள் முளைத்திருந்தன. அது போக, வேறு என்னென்னவோ வளர்ந்திருந்தன. நான் ஒரு கல்லை எடுத்து உள்ளே போட்டேன்.