நீல வெளிச்சம் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9901
ஒன்றும் நடக்கவில்லை. ஒன்றும் கேட்கவில்லை. ஒரே அமைதி. நான் உறங்கத் தொடங்கினேன். உறக்கத்தில் கனவு எதுவும் வரவில்லை. அடுத்த நாள் காலை ஒன்பது மணிக்கு நான் எழுந்தேன்.
ஒன்றும் நடக்கவில்லை.
“குட்மார்னிங் பார்கவிக் குட்டி.... ரொம்ப நன்றி. ஒண்ணு மட்டும் எனக்குப் புரிஞ்சு போச்சு. ஆளுங்க உன்னைப் பற்றித் தேவை யில்லாத கற்பனையை எல்லாம் சேர்த்துப் பேசுறாங்கன்னு நினைக்கிறேன். அவங்க அப்படியே சொல்லிக்கிட்டு இருக்கட்டும்... என்ன நான் சொல்றது?''
இப்படியே இரவும் பகலும் மாறி மாறிப் போய்க் கொண்டிருந்தன. பார்கவிக் குட்டியைப் பற்றி நான் நினைத்துப் பார்ப்பேன். அம்மா, அப்பா, சகோதர- சகோதரிகள்... அவளைப் பற்றித் தெரியாத கதைகள் எத்தனை இருக்கும்! இரவு முழுக்க உட்கார்ந்து கதை எழுதுவேன். உடலில் சோர்வு உண்டாகிற நேரத்தில் இசைத் தட்டைப் பாட வைப்பேன். பாடல் ஒலிப்பதற்கு முன்பு யார் இந்தப் பாட்டைப் பாடப் போவது, பாட்டின் பொருள் என்ன போன்ற விவரங்களை நான் அறிவிப்பேன். நான் சொல்வேன்: “இப்போ ஒரு பாட்டு போடப் போறேன். இதைப் பாடியது பங்கஜ் மல்லிக் என்ற வங்காள மொழிப் பாடகன். துக்கம் கலந்த பாட்டு. மனதின் நினைவுகளைக் கிளறிப் பார்க்கிற பாட்டு. கடந்துபோன நாட்களை நினைத்துப் பார்த்து அசை போடுகிற பாட்டு. கவனமா நீ கேளு...''
“குஸர்கயா வஹ் ஸமானா கைஸா... கைஸா...''
அது முடிந்ததும் நான் கூறுவேன்:
“இப்போ பாடப் போறது பிம்ங்க்ராஸ்பி. 'ஒய் ற்ட்ங் ம்ர்ர்ய்ப்ண்ஞ்ட்ற்' என்ற பாட்டு அப்படின்னா...
"நிலா வெளிச்சத்தில்'னு அர்த்தம், ஓ... இப்பத் தான் ஞாபகம் வருது. நீ பி.ஏ. படிச்சவளாச்சே! மன்னிச்சுக்கோ...''
எனக்கு நானே பேசிக் கொள்வேன். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடி விட்டன. நான் தோட்டம் அமைத்தேன். தோட்டத்தில் பூக்கள் மலர்கிறபோது, அவை எல்லாமே பார்கவிக்குட்டிக்குத்தான் என்று கூறவும் செய்தேன். இடையில் நான் ஒரு சிறு நாவலை எழுதி முடித்தேன். எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்கள் சிலர் இரவு நேரங்களில் இங்கேயே தங்கவும் செய்திருக்கிறார்கள். உறங்குவதற்கு முன்பு, அவர்களுக்கே தெரியாமல் நான் கீழே இறங்கிச் சென்று இருளைப் பார்த்தவாறு மெல்லிய குரலில் கூறுவேன்:
“பார்கவிக்குட்டி... நல்லா கேட்டுக்கோ. என்னோட நண்பர்கள் சிலர் ராத்திரி இங்க தூங்குறாங்க. அவுங்க யாரையும் கழுத்தை நெரிச்சு கொன்னுடாதே. அப்படி ஏதாவது நடந்துச்சுன்னா போலீஸ்காரங்க என்னைப் பிடிச்சிட்டுப் போயிடுவாங்க. அதை மட்டும் ஞாபகத்துல வச்சுக்கோ. குட் நைட்!''
பொதுவாக வெளியே புறப்படுகிற சமயத்தில் எல்லாம் நான் கூறுவேன்:
“பார்கவிக்குட்டி... வீட்டை பத்திரமா பாத்துக்கோ. யாராவது திருட்டுப் பசங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சாங்கன்னா, கழுத்தை நெரிச்சிக் கொன்னுடு. கொன்ன பிறகு பிணத்தை இங்கே போட்டுடாதே. இழுத்துட்டுப் போயி மூணு மைல் தூரத்துல கொண்டு போட்டுடு. இல்லாட்டினா நமக்குத் தேவையில்லாத பிரச்சினைகள் வரும்.''
இரவில் இரண்டாம் ஆட்டம் படம் பார்த்துவிட்டுத் திரும்பி வருகிறபோது நான் சொல்வேன்:
“நான்தான்... தெரியுதா?''
பல நாட்களாக நடந்து வந்த விஷயங்கள் இவை. காலம் இப்படி ஓடிக்கொண்டிருக்க, நாளடைவில் நான் பார்கவிக்குட்டியை மறந்தே போனேன். அதாவது பெரிதாக ஒன்றும் பேசிக் கொள்வதில்லை. அவ்வப்போது சில நேரங்களில் அவளைப் பற்றி நினைப்பேன். அவ்வளவுதான்.
அவளைப் பற்றிய அந்த நினைப்புக்கூட எப்படி என்றும் கூறுகிறேன். இந்த பூமியில் எத்தனையோ கோடி.. அதாவது... மனிதப் பிறவிகள் இங்கு இறந்திருக்கின்றனர். அவர்கள் எல்லாரும் இந்த பூமியில் மறைந்தும், ஆவியாகவும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய காட்சியாகவும் இரண்டறக் கலந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. இது நமக்கே தெரியும். அந்த வரிசையில் ஒரு நினைவுச் சின்னமாக பார்கவிக்குட்டியும் நின்றுவிட்டாள்.
இப்படி நாட்கள் கடந்து கொண்டிருந்தபோது, அந்தச் சம்பவம் நடக்கிறது. அதைத்தான் இப்போது நான் கூறப் போகிறேன்.
ஒரு இரவு. நேரம் கிட்டத்தட்ட பத்து மணி இருக்கும். ஒன்பது மணியில் இருந்து நான் உட்கார்ந்து ஒரு கதை எழுதிக் கொண்டிருந் தேன். மர்ம நிகழ்ச்சிகள் நிறைய உள்ள கதை அது. மிகவும் வேகமாக நான் அதை எழுதிக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் விளக்கில் வெளிச்சம் குறைந்தது மாதிரி எனக்குத் தெரிந்தது.
நான் விளக்கை எடுத்துக் குலுக்கிப் பார்த்தேன். மண்ணெண் ணெய் இல்லை. இருந்தாலும், இந்தக் குறைந்த வெளிச்சத்திலேயே இன்னும் ஒரு பக்கம் எழுதி முடித்துவிடலாம் என்று நினைத்தேன். எழுதி முடிக்க முடியுமா என்பது தெரியவில்லை. என் முழுக் கவனமும் கதையிலேயே இருந்தது. சிறிது நேரத்தில் விளக்கின் ஒளி மேலும் குறைந்தது. இனி என்ன செய்வது? திரியைச் சிறிது நீட்டி விட்டேன். தொடர்ந்து எழுதினேன். சில நிமிடங்களில் ஒளி மேலும் குறைந்தது. மீண்டும் திரியை நீட்டி விட்டேன். சில நிமிடங்களில் விளக்கின் திரி அரை அங்குல அகலமும், நான்கு அங்குல நீளமும் கொண்ட சிவந்த கனலாக மாறியது.
நான் டார்ச் விளக்கொளியைப் பரவவிட்டேன். அரிக்கன் விளக்கின் திரியை முழுவதும் இறக்கிவிட்டேன். விளக்கு இப்போது முழுமையாக அணைந்துவிட்டது.
நான் மெதுவான குரலில் கேட்டேன்:
“வெளிச்சத்துக்கு இப்போ என்ன செய்யிறது?''
இப்போது உடனடியாக மண்ணெண்ணெய் வேண்டும். வங்கிக்குச் சென்றால் என் நண்பர்களிடம் கேட்டு, அவர்களின் ஸ்டவ்வில் இருந்து கொஞ்சம் மண்ணெண்ணெய் வாங்கலாம். நான் டார்ச் விளக்கையும், மண்ணெண்ணெய்க் குப்பியையும் கையில் எடுத்துக் கொண்டு வாசல் கதவை இழுத்துப் பூட்டினேன். கீழே இறங்கி முன்பக்க வாசலையும் பூட்டி வெளியே இறங்கினேன். வெளிகேட்டை அடைந்து தனிமையான பெரிய சாலையில் காலாற நடந்தேன். சிறிது நிலா வெளிச்சம் வானத்தில் இருந்தது. மழை வரும் போலிருந்தது. நான் வேகமாக நடந்தேன்.
சாலையில் நடந்த சென்று வங்கியை அடைந்ததும், மாடியைப் பார்த்தேன். ஒரு க்ளார்க்கின் பெயரைச் சொல்லி அழைத்தேன். இரண்டு மூன்று முறை கூப்பிட்ட பிறகு, ஒரு ஆள் இறங்கி வந்தான். பக்கவாட்டில் இருந்த கேட்டைத் திறந்து வங்கிக் கட்டடத்தின் பின் பக்கமாய்ச் சென்று படிகளில் ஏறி மாடிக்குப் போனோம். அப்போதுதான் தெரிந்தது- அவர்கள் மூன்று பேரும் உட்கார்ந்து சீட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்பதே.
நான் மண்ணெண்ணெய் வாங்க வந்திருக்கிற விஷயத்தைக் கூறியவுடன், அவர்களில் ஒருவன் கேட்டான்: