நீல வெளிச்சம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 9901
"ப்ளும்” என்றொரு சத்தம் வந்தது. உள்ளே நீர் இருக்கிறது.
இவ்வளவும் நடந்தது பகல் பதினொரு மணிக்கு.
முதல் நாள் இரவு நான் சிறிதுகூட தூங்கவில்லை. இரவிலேயே ஓட்டலில் கணக்கை முடித்தேன். வீட்டுச் சொந்தக்காரரைப் பார்த்து விவரத்தைக் கூறினேன். கேன்வாஸால் ஆன கட்டிலை மடக்கிக் கட்டினேன். க்ராமஃபோன் ரெக்கார்டுகள் அனைத்தையும் பத்திரமாக அடுக்கிக் கட்டி வைத்தேன். பெட்டிகள், சாய்வு நாற்காலி, அலமாரி- எல்லாவற்றையும் தனித்தனியே எடுத்து வைத்தேன். பொழுது புலர்கிற நேரத்தில் சாமான்களை இரண்டு வண்டிகளில் ஏற்றி இங்கு கிளம்பிவிட்டேன்.
நான் புதிய வீட்டின் கதவுகள் அனைத்தையும் அடைத்து, முன்பக்கம் பூட்டினேன். சாலையில் இறங்கி கேட்டை அடைத்தேன். சாவியைப் பைக்குள் போட்டு பந்தாவாக நடந்தேன்.
நான் நினைத்தேன்- இன்று இரவு யாருடைய பாட்டை வைத்துப் புதிய வீட்டு வாழ்க்கையை ஆரம்பிப்பது என்று. என்னிடம் நூற்றுக்கும் மேலான இசைத் தட்டுகள் இருக்கின்றன. இங்கிலீஷ், அராபிக், இந்தி, உருது, தமிழ், வங்காளம்- இப்படிப் பல மொழி இசைத்தட்டுகளும். மலையாளத்தில் ஒரு இசைத்தட்டுகூட என்னிடம் இல்லை. நன்றாகப் பாடக் கூடிய திறமைசாலிகள் நிறைய பேர் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் பாடிய இசைத்தட்டுகளும் நிறைய இருக்கின்றன. ஆனால், அவற்றுக்கு சரியான இசையமைப் பாளர்கள் இல்லை. இப்போது மலையாளத்தில் நல்ல இசையமைப்பாளர்களும், நன்றாகப் பாடக் கூடிய பாடகர்களும் ஏராளமாக வந்து கொண்டிருக்கிறார்கள். மலையாள இசைத்தட்டுகள் சில வாங்க வேண்டும். நான் யோசித்துப் பார்த்தேன். இன்று முதலில் யாரின் இசைத் தட்டைப் பாட வைக்கலாம்? பங்கஜ் மல்லிக், திலீப்குமார் ராய், சைகால், பிங்கிராஸ்பி, பால்ராப்ஸன், அப்துல் கரீம் கான், கனான் தேலி, குமாரி மஞ்சுதாஸ் குப்தா, குர்ஷித், ஜுதிகாரெ, எம்.எஸ். சுப்புலட்சுமி... இப்படி சுமார் இருபது பேரை நான் யோசித்துப் பார்த்தேன். கடைசியில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். "தூர தேசத்துக்காரர் இதோ வந்திருக்கிறார்' என்றொரு பாட்டு இருக்கிறது. "தூரதேஷ் கா ரெஹ்னேவாலா ஆயா' என்று அந்தப் பாடல் தொடங்கும். இந்தப் பாடலைப் பாடியிருப்பது யார்? பெண்ணா? ஆணா? எனக்கு சரியாக ஞாபகம் வரவில்லை. திரும்ப வந்தபிறகு பார்க்கலாம்... சிந்தித்தவாறே நான் நடந்து சென்றேன்.
முதல் காரியமாக தபால்காரனைப் போய்ப் பார்த்தேன். முகவரி மாறியிருக்கிற விஷயத்தைச் சொன்னேன். இப்போது இருக்கும் முகவரியைக் கூறியதுதான் தாமதம் -அந்த ஆள் பயந்துபோய் விட்டான். அவன் சொன்னான்:
“அய்யோ... சார்... அந்த வீட்ல ஒரு துர்மரணம் இதுக்கு முன்னாடி நடந்திருச்சு... அங்கே யாருமே தங்க மாட்டாங்க. அதனாலதான் அந்த வீடு இதுவரை யாருமே குடிபோகாம சும்மா கிடந்துச்சு.''
துர்மரணம் நடைபெற்ற வீடா? ஒரு நிமிடம் எனக்கே அதிர்ச்சி யாக இருந்தது. அடுத்த நிமிடம் அந்த ஆவியிடம் நான் கேட்டேன்.
“என்ன நடந்தது அந்த வீட்ல?''
“அந்த வீட்டோட வாசல் பக்கத்துல ஒரு கிணறு பார்த்திருப்பீங்களே! அதுல யாரோ விழுந்து செத்துட்டாங்க. அவ்வளவுதான். அந்த வீட்ல அதுக்குப் பிறகு ஒரே ரகளைதான். பல பேரு அங்க வந்து தங்கி இருக்காங்க. ராத்திரி நேரங்கள்ல வாசல் கதவுகள் படார்படார்னு அடிக்கும். தண்ணீ வர்ற குழாய் அதுவாகவே திறந்து தண்ணீர் வழியும்...''
வாசல் கதவுகள் படார் படார் என்று அடிக்கும்! தண்ணீர்க் குழாய்கள் தானே திறக்கும்! உண்மையிலேயே கேட்பதற்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. அங்கிருந்த இரண்டு தண்ணீர்க் குழாய்களுக்கும் பூட்டு போடப்பட்டிருந்தது. “எதற்கு இந்த பூட்டு?'' என்று கேட்டதற்கு, “பாதையில் நடந்து போறவங்கள்லாம் சுவர் ஏறி குதிச்சு வந்து இங்க குளிக்கிறாங்க. அதுனாலதான் பூட்டி வச்சிட்டேன்'' என்று கூறினார் வீட்டின் சொந்தக்காரர். அப்படியே எடுத்துக்கொண்டாலும், குளியலறைக்குள் இருக்கிற தண்ணீர்க் குழாய்க்கு எதற்குப் பூட்டு என்று அப்போது கேட்கத் தோன்ற வில்லை.
தபால்காரன் தொடர்ந்து சொன்னான்: “கழுத்தை நெரிக்கும்... சார், உங்கக்கிட்ட இதை எல்லாம் யாரும் சொல்லலியா?''
எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இரண்டு மாத வாடகையை முன்கூட்டியே கொடுத்தாகிவிட்டது. இனி என்ன செய்வது? நான் சொன்னேன்:
“சரி... அதனால பரவாயில்லை. ஒரு மந்திரத்தை வச்சு எல்லாத்தையும் இருந்த இடம் தெரியாம ஓட்டிடலாம். எது எப்படி இருந்தாலும் எனக்கு வர்ற கடிதங்களை அந்த முகவரியில கொண்டு வந்து குடுத்திடுங்க.''
நான் தைரியமாக அந்த ஆளிடம் கூறினேன். சாதாரணமாக எல்லாரும் பயப்படக்கூடிய விஷயங்களுக்கு நானும் பயப்படவே செய்கிறேன். அதனால், ஒருவிதத்தில் நான் பயந்தாங்கொள்ளி என்று கூடச் சொல்லலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
நான் மெல்ல நடந்தேன். என்ன செய்வது? அனுபவம் வேண்டும் என்பதற்காக ஓர் அனுபவத்தை நாமே உண்டாக்குவதா? அப்படிப் பட்ட மனிதன் இல்லை நான். ஆனால், அனுபவமே என்னைத் தேடி வருகிறது என்றால்...? சரி... அப்படி என்னதான் நடக்கும் என்பதையும் பார்த்துவிட்டால் என்ன?
நான் ஒரு ஓட்டலுக்குள் நுழைந்தேன். தேநீர் அருந்தினேன். சாப்பிடத் தோன்றவில்லை. அடிவயிற்றில் தீ பிடித்த மாதிரி இருந்தது. பசி இல்லை. சாப்பாடு ரெகுலராக அனுப்பி வைக்க வேண்டும் என்ற விவரத்தை ஓட்டல்காரனிடம் விவரமாகக் கூறினேன். வீடு எங்கு இருக்கிறது என்று சொன்னவுடன், அந்த ஆள் சொன்னான்:
“பகல்ல வேணும்னா சாப்பாடு அனுப்பி வச்சிர்றோம். ராத்திரியில் நிச்சயமா நம்ம பசங்க யாரும் அங்கே வரமாட்டாங்க. ஒரு பொண்ணு அங்கே கிணத்துல குதிச்சு செத்துட்டா. அவ ராத்திரி நேரத்துல அங்க வர்றதா பேச்சு. சார்... உங்களுக்குப் பேயைப் பார்த்து பயம் கிடையாதா?''
என் பாதி பயம் குறைந்துவிட்டது. என்ன இருந்தாலும், செத்தவள் பெண்தானே! நான் கூறினேன்:
“அதைப் பற்றி நான் எப்பவும் பெரிசா எடுத்துக்கிறது இல்ல. சொல்லப்போனால்... பேய்களை விரட்டுறதுக்குத்தான் மந்திரங்கள் இருக்கே!''
உண்மை என்னவென்றால் பேய்களை விரட்டக்கூடிய மந்திரங்கள் என்னவென்று எனக்கே தெரியாது. ஆனால், இறந்தவள் பெண் என்பது தெரிந்ததும், அதைப் பற்றிப் பெரிதாக நான் பயப்படவில்லை. அங்கே இருந்து நான் பக்கத்திலிருந்த வங்கியினுள் நுழைந்தேன். அந்த வங்கியில் என் இரண்டு மூன்று நண்பர்கள் க்ளார்க்குகளாக வேலை செய்கிறார்கள். அவர்களிடம் என் புதிய முகவரியைக் கூறினேன். அவர்களுக்கு என்மேல் சரியான கோபம்.