ஒட்டகம் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6935
சிறிது தூரத்திற்கு அவன் தரையில் தன்னை இழுத்துக் கொண்டே போய் அங்கு விழுந்தான். ஹோட்டல் நிர்வாகி அந்த நிமிடமே அவனை ஒரு ரிக்ஷா வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். ஒட்டகம் இறந்துவிடுவான் என்றே எல்லாரும் நினைத்தார்கள். அந்த அளவிற்கு அவன் உருக்குலைந்து போயிருந்தான். ஆனால் அவன் உயிருடன் வாழ்ந்தான்.
சுய உணர்வு வந்தபோது தான் ஒரு பளபளப்பான வெள்ளை நிற படுக்கையில் படுத்திருப்பதை அவன் பார்த்தான். அவன் தன்னுடைய உடலை காலிலிருந்து தலைவரை ஒருமுறை ஆராய்ந்தான். தலை, தாடை, எலும்பு, தோள் எல்லாமும் வெள்ளை துணியால் சுற்றிக் கட்டப்பட்டிருந்தன. கணுக்காலைக் கூர்ந்து பார்த்தபோது, அந்த பழைய துணி அங்கு இல்லை என்பதை அவன் உணர்ந்தான். அடுத்த நிமிடம் அவன் தலையில் கட்டியிருந்த துணியை அவிழ்த்துக் கிழித்தான். கணுக்காலில் பத்திரமாக ஒரு கட்டு கட்டிவிட்டு, திருப்தியுடன் கண்களை மூடிப் படுத்துக் கொண்டான்.
சிறிது நேரம் கழித்து நர்ஸ் வந்து பார்த்தபோது அவனுடைய தலையிலிருந்து தாரை தாரையாக ரத்தம் வழிந்து கொண்டிருக்க, மீண்டும் அவன் சுயநினைவு இல்லாமல் படுத்திருந்தான்.
ஒன்றரை மாத காலம் அவன் மருத்துவமனையில் இருந்தான். வாசலின் ஒரு மூலையில் அவனுடைய கட்டில் இருந்தது.
ஒருநாள் இரவுப் பணியில் நியமிக்கப்பட்டிருந்த டாக்டர் வாசல் பக்கம் ஒலித்த ஒரு சத்தத்தைக் கேட்டு வந்து பார்த்தபோது, ஒட்டகம் அந்த இரும்புக் கட்டிலைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தான். அந்த பீப்பாய் வண்டியை இழுக்க முடியாத வெறுப்பை அந்தச் செயல் மூலம் அவன் காட்டினான்.
மறுநாளே அவனை மருத்துவமனையிலிருந்து அனுப்பிவிட்டார்கள். ஹோட்டலை அடைந்த அடுத்த நிமிடமே அவன் தன்னுடைய பீப்பாய் வண்டியை இழுத்துக் கொண்டு ஆற்றை நோக்கி புறப்பட்டுவிட்டான்.
ஒருநாள் ஹோட்டல் நிர்வாகி ஒட்டகத்தை தன்னுடைய அறைக்கு வரும்படி அழைத்தார்.
ஒட்டகம் அதைக்கேட்டு ஒரு மாதிரி வெலவெலத்துப் போனான். என்ன நடக்கப் போகிறது என்பது தெரியாமல் அவன் சிறிது நேரம் மூக்கையும் உதடையும் சுளித்துக்கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு பார்த்தான். கடைசியில் மிகவும் பணிவுடன் அவன் தன்னுடைய கழுத்தை முடிந்த அளவிற்கு முன்னோக்கி நீட்டியவாறு நிர்வாகியின் முன்னால் போய் நின்றான்.
நிர்வாகி அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தவாறு சொன்னார்: "டேய், உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்ன்றதுக்காகத்தான் உன்னை இங்கே வரச் சொன்னேன். உனக்கு என்ன வயது நடக்குது?''
ஒட்டகம் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தான்.
"சரியா தெரியாம இருக்கலாம். பரவாயில்லை. நீ நீண்ட காலமா இந்த ஹோட்டல்ல வேலை செஞ்சிக்கிட்டு இருக்குறே. உன்மேல எனக்கு தனிப்பட்ட முறையில ஒரு தனி பாசம் இருக்கு. அதனால உனக்கு நான் ஒரு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு தீர்மானிச்சிருக்கேன். நீ என்ன சொல்ற?''
அதைக் கேட்டு ஒட்டகம் வெளிறிப்போய் சிலையென நின்றிருந்தான்.
"பொண்ணு ரொம்பவும் நல்லவ. யாருன்னு தெரியுமா? இங்கே சமையல் வேலைக்கு வர்ற மாதுதான். நீங்க ரெண்டு பேருமே இந்த ஹோட்டல்ல வேலை பார்க்குறவங்கன்றதுனால, நீ அவளுக்கு தனியா
பணம் எதுவும் தர வேண்டியது இல்ல. கல்யாணச் செலவுன்னு பார்த்தா...''