நான் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5427
'ஒரு ஓவியமாகவோ, ஒரு பெரிய காவியமாகவோ, ஒரு ஸிம்ஃபனியாகவோ ஆகு. மிரோவின் க்யான்வாஸ்களில் சிறு பிள்ளைத்தனமான நிறங்களாக ஆகு. ரவிசங்கரின் சித்தாரிலிருந்து நாதங்களாக உருவெடு,,, அபோலினேரின் பேனாவிலிருந்து கவிதைகளாக பொழி... நீ புரட்சிக்காரியாக ஆக வேண்டாம்.'
'நான் ஆவேன்.'
'நீ சிரமப்படக் கூடாது.'
'நான் சிரமப் படுவேன்.'
'நீ இறக்கக் கூடாது.'
'நான் இறப்பேன்.'
'அப்படியென்றால், என்னுடைய கல்லறையில் மலர்கள் வைப்பதற்கு யார் இருக்கிறார்கள்?'
வெளியே... முற்றத்தில் மலர்கள் மலர்ந்திருக்கின்றன. எழுந்து சென்று ஒரு பிடி மலர்களைப் பறித்துக் கொண்டு வந்தான்.
'பூக்கள் எதற்கு?'
'என் கல்லறையில் அணிவிக்க...'
வெறுமனே இருந்த க்யான்வாஸின் நான்கு எல்லைகளிலும் மலர்களைச் சூட்டினான். ஆறடி நீளமும் நான்கடி அகலமும். உள்ள க்யான்வாஸ், அதன் மரணித்துப் போன கண்களில் கவலையுடன் கிடந்தது. அது க்யான்வாஸ் அல்ல. அதன் சிதை. சிதையில் மாமிசம் உருகிக் கொண்டும், எலும்புகள் வெடித்துச் சிதறவும் செய்தன. பிணத்தின் வாசனை வந்தது. எரிந்த எண்ணெய் மற்றும் செட்டிப் பூக்களின் வாசனை வந்தது.
கையில் முகம் தாங்கப்பட்ட நிலையில் இருந்தது.
'நான் வெறுமையை வரைய பார்த்தேன்.'
'பிறகு?'
'வெறுமையைக் க்யான்வாஸில் கொண்டு வர வேண்டுமென்றால், வர்ணங்கள் இல்லாத வர்ணங்கள் வேண்டாமா?'
'வர்ணங்களைக் கொண்டு வரைந்தால் என்ன?'
'வெறுமை உயிர்ப்புடன் நிற்பதில்லை. வர்ணங்களைக் கொண்டு வரைந்தால், என்னுடைய ஓவியங்கள் உயிர்ப்புடன் இருக்கும். அது வெறுமையின் மீது காட்டக்கூடிய அநீதியல்லவா? உயிர்ப்புடன் இருக்காத ஒரு க்யான்வாஸை நான் எப்படி வரைவது?'
வெறுமைக்கு நிறங்களோ வடிவங்களோ கிடையாது. வெறுமை கண்ணுக்குத் தெரியாதது. வர்ணமற்ற, கண்ணுக்குப் புலப்படாத, வடிவமற்ற ஒரு ஓவியத்தை வரைவது என்பது...
முழுமையை நோக்கிச் சென்ற பயணத்தில் அவன் கால் நழுவி விழுந்தது ஸூரிச்சில்தான். எழுந்து க்யான்வாஸுக்கு முன்னால் போய் நின்று தாதாயிஸ்ட்டாக கர்ஜித்தான்:
''ஓவியர்கள் அழியட்டும். சிற்பிகள் அழியட்டும். மதங்கள் அழியட்டும். குடியரசுகள் அழியட்டும். அரசியல் அழியட்டும். அராஜகவாதிகள் அழியட்டும். சோஷலிஸ்ட்டுகள் அழியட்டும். பால்ஷேவிக்குகள் அழியட்டும். ப்ராலிட்டேரியன்ஸ் அழியட்டும். அரிஸ்ட்டோக்ராட்டுகள் அழியட்டும். எல்லாம்... எல்லாம்.... எல்லாம் அழியட்டும்.
சூரியன் குலுங்கிக் குலுங்கி சிரித்தது.
இருபதாம் நூற்றாண்டின் மூன்றாவது பத்திலிருந்து ஏழாவது பத்திற்கு திரும்பி வந்தான்.
திசைகளைப் பற்றியும் காலத்தைப் பற்றியும் இப்போது புரிதல் இருக்கிறது.
'நேரம்?'
அவள் கையில் கட்டியிருந்த டைம் பீஸின் அளவைக் கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள்.
'பத்து.'
பத்து மணி என்று கேட்டதும், பசி கண்களைத் திறந்தது. எல்லாம் அழியும். பசி அழியாது: கல்லறைக்குள் கிடக்கும்போது பசி மண்ணைத் தின்று பசியை அடக்கும். சிதையில் கிடக்கும்போது நெருப்பைத் தின்று பசியை அடக்கும். பசி அழிவற்றது.
'பசி என்ற ஆயில் எங்கே?'
'ஞாபகத்துல இல்லையா? அது ஆயிரம் ரூபாயாக ஆகி விட்டது.'
பசி என்ற எண்ணெய் சாயம் ஃபுல்பு என்ற வெள்ளைக்காரரின் கையில். அந்த வெள்ளைக்காரர் தந்த பணத்தைக் கொண்டு ஒரு வாரம் சந்தோஷமாக செலவிட்டான். டிஃபன்ஸ் காலனியிலிருந்து குல்வந்த் ரந்தாவா என்ற ஒரு பெண்ணை வாடகைக்கு எடுத்து சிம்லாவிற்குச் சென்றான்...
எழுந்து படிகளில் இறங்கி அறைக்குள் சென்றான். ஃப்ரிட்ஜை இழுத்துத் திறந்து வெண்ணெய்யையும் முட்டையையும் எடுத்தான். ஹீட்டருக்கு மேலே நீர் கொதித்து குதித்தது. காலை உணவு சாப்பிட்டு முடித்து, ஒரு சிகரெட்டுடன் அமர்ந்திருந்தபோது அவள் பியானோவிற்கு முன்னால் போய் உட்கார்ந்தாள்.
'என்ன வேணும்?'
'சாப்பின், சானெட் ஆஃப் 85.பி. ஃப்ளாட் மைனர்.'
அவளுடைய கை விரல்கள் பியானோவின் மீது பயணித்தன.
'நீ எனக்கு பியானோ வாசிக்க கற்றுத் தர முடியுமா?'
'கற்றுத் தர்றேன்.'
'பாஷின் வாஹ்ல்டெம்பியேர்ரை கற்றுத் தர முடியுமா?'
'யெஸ்...'
'ஷுமானின் ஃபான்டஸியும் க்ரெயிஸ்லெரியானாவும் கற்றுத் தர முடியுமா?'
'யெஸ்.'
பியானோவிற்கு முன்னால் போய் உட்கார்ந்தான். அவன் இசைக் கலைஞனாக ஆகப் போகிறான். அவன் கடலை, அலைகளைக் கொண்டு பாடச் செய்வான். காற்றைக் கொண்டு இசை வீசுவான். மழையைக் கொண்டு இசை உண்டாக்குவான். அவன் பூமியையும் வானத்தையும் இசையைக் கொண்டு நிறைப்பான்.
அவன் இசைக் கலைஞனாக ஆகப் போகிறான்.
இசை அவனாக ஆகப் போகிறது.
இசைக் கலைஞனாக மட்டுமல்ல ஆகப் போவது...
சிற்பியாகவும் கவிஞனாகவும் ஆகப் போகிறான். வர்த்தகனாக ஆகப் போகிறான். கள்ளக் கடத்தல்காரனாக ஆகப் போகிறான். தலைவனாக ஆகப் போகிறான். மரம் வெட்டும் மனிதனாக ஆகப் போகிறான். பெருக்கி சுத்தம் செய்யும் மனிதனாக ஆகப் போகிறான். தோட்டியாக ஆகப் போகிறான்.
எல்லாமாக ஆகப் போகிறான்.
'கும் குறும் குறும்?'
'க்ரும் க்ரிம்.'
கதவைப் பூட்டி விட்டு வெளியேறினான். பரந்து கிடக்கும் வானத்திற்குக் கீழே நீண்டு கிடக்கும் பூமிக்கு மேலே நான் நடந்தேன்.