நான்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5427
நான்
எம்.முகுந்தன்
தமிழில் : சுரா
கண்களைத் திறந்தான். தான் எங்கு இருக்கிறோம்? நான்கு பக்கங்களிலும் திகைப்புடன் பார்த்தான். எதையும் பார்ப்பதற்கோ கேட்பதற்கோ முடியவில்லை. அப்படியென்றால், தான் எங்கே இருக்கிறோம்? எப்படி தெரிந்து கொள்ள முடியும்? எங்கேயும் இருக்கலாம்.
கிராமத்தில் படிகளும் துளசி மாடமும் உள்ள தன்னுடைய வீட்டின் திண்ணையில் கள்ளு நிறைக்கப்பட்ட குவளைக்கு முன்னால் அமர்ந்திருக்கலாம். சென்னையில் சோழ மண்டலம் என்ற கலைஞர்களின் கிராமத்தில் சாயத்தின் கறை படிந்த துவாலையால் இடுப்பை மறைத்துக் கொண்டு ஸல்ஃபோட்டா பருகி, சுய உணர்வு இல்லாமல் நடந்து கொண்டிருக்கலாம். டில்லி பல்கலைக் கழகத்தின் கலைப் பிரிவு இருக்கக் கூடிய கட்டிடத்தில் ஆப் ஆர்ட்டைப் பற்றியும் பாப் ஆர்ட்டைப் பற்றியும் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டு நின்றிருக்கலாம்.
இல்லை...தான் கள்ளுக்கு முன்னால் அமர்ந்து கொண்டோ, ஸல்ஃபோட்டா பருகிக் கொண்டோ, சொற்பொழிவு செய்து கொண்டோ இருக்கவில்லை. தான் கிராமத்தில் இல்லை. சென்னையில் இல்லை. டில்லியில் இல்லை. நகரத்திலோ கிராமத்திலோ இல்லை. கரையிலும் கடலிலும் இல்லை. மலையிலும் காடுகளிலும் இல்லை.
தான் பூமியில் இல்லை, சூரிய குடும்பத்திலும் இல்லை.
தூரத்தில்... மிகவும் தூரத்தில்... பால் வெளிக்கும் வெளியே இருக்கும் இறந்து போன ஒரு தனிமையில் இருக்கும் நட்சத்திரத்தின் மீது, இருட்டிலும் குளிரிலும் அவன் சுருண்டு படுத்திருந்தான்.
நினைவுப்படுத்திப் பார்க்க முடியாமல் இருப்பது திசைகளை மட்டுமல்ல. காலத்தைப் பற்றிய புரிதல் இல்லாமற் போயிருக்கிறது. விக்டோரியன் யுகத்திலோ மத்திய யுகத்திலோ இருக்கலாம். படைத்தலுக்கு முன்பு இருந்த இருண்ட யுகங்களிலும் இருக்கலாம். தன்னைப் பொறுத்த வரையில் காலம் இருண்டது. காலத்தில் முழுமை இருட்டு... இருட்டின் முழுமை காலம். இருட்டின், காலத்தின் முழுமை தான். தான்தான்... யுகங்கள் குளிர்ந்து உறைந்து போய், அணைந்து போன நட்சத்திரங்களைச் சுற்றிலும் பரவிக் கிடக்கும் எல்லையற்ற இருள் தான்தான்.
திசைகளும் காலமும் மறந்த மனிதன் கூரையை நோக்கி கண்களை திறந்து வைத்துக் கொண்டு கூரையிடம் கேட்டான் :
'நான் யார்?
தான் யாரென்று தனக்கு தெரியவில்லை. தான் கோஹ்ன் பென்டிற்றோ, தாரிக் அலியோ, மகேஷ் யோகியோ, சாய் பாபாவோ, சே குவேராவோ, சேர்மன் மா சே துங்கோ... யாராகவும் இருக்கலாம்.
இல்லை... தான் அவர்களில் யாருமில்லை.
தான் தான்தான்.
அப்படியென்றால் தான் யார்?
யாரோதான். யாராகவும் ஆகாமலிருக்க வழியில்லை. தனக்கு சரீரம் இருக்கிறது. சுவாசிக்கிறோம். அதனால்தான் உயிருடன் இருக்கிறோம். உயிருடன் இருக்க வேண்டுமென்றால், ஏதாவது செய்தே ஆக வேண்டும். எதுவும் செய்யாமல் நிலை நிற்பதற்கும், வாழ்வதற்கும் முடியாதே!
திசைகள் தெரியவில்லையென்றால், காலத்தைப் பற்றியும் புரிதல் இல்லையென்றால் போகட்டும்... ஆனால், தான் யார் என்பது தெரிந்தாக வேண்டும். எது வந்தாலும் சரி... அதை தெரிந்தே ஆக வேண்டும். கண்களை கூரையின் மீது ஆணியடித்ததைப் போல பதிய வைத்துக் கொண்டு, முற்றிலும் ஒரே சிந்தனையுடன் மையப்படுத்திக் கொண்டு, நெற்றியைச் சுளித்து யோசித்துக் கொண்டிருந்தபோது, உதட்டில் சிரிப்பு வந்தது. சந்தோஷத்துடன் தனக்குத்தானே கூறிக் கொண்டான்: 'நான்... ரமேஷ் நாயர். என் பெயர் ரமேஷ் நாயர்.'
திசைகளைப் பற்றியும் காலத்தைப் பற்றியும் சுய உணவு வந்தது. பொலிவியா தென் அமெரிக்காவில் இருக்கிறது. சே குவேரா மரணமடைந்தது ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்தேழிலும் கான் பென்டிட் பாரிகேடுகள் உருவாக்கியது அறுபத்து எட்டிலும். தான் பிறந்தது கேரளத்திலும், படித்தது மதராஸிலும், வேலை செய்வது டில்லியிலும்.
எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கிறான்.
நேற்று சாயங்காலம் அலுவலகத்தை விட்டு நேராகச் சென்றது வாடகைக் கார் நிறுத்தத்திற்குத்தான். நிறுத்தத்தில் நின்றிருந்த ஒன்பது வாடகைக் கார்களையும் அவனுக்கு நன்கு தெரியும். வாடகைக் கார்களுக்கு அவனையும் நன்கு தெரியும்! ஒரு காரில் ஏறி உட்கார்ந்து, போக வேண்டிய இடத்தைப் பற்றி வாடகைக் காரிடம் கூற வேண்டிய தேவையே இல்லை. வாடகைக் காருக்கு அது நன்றாகவே தெரியுமே. போக வேண்டிய இடம் குத்தப் சாலை. அவனைப் பொறுத்த வரையில் நகரத்தில் ஒரேயொரு சாலை மட்டுமே இருக்கிறது. அது: குத்தப் சாலைதான். மற்ற எல்லா தெருக்களும் குத்தப் சாலையின் கிளைகள்தாம். அக்பர் சாலை, குத்தப் சாலையே. குருத்வாரா சாலை, குத்தப் சாலைதான் மின்டோ சாலை, குத்தப் சாலையே. ரிங்க் சாலை, குத்தப் சாலைதான்.
சாலைகள் மட்டுமல்ல: நகரமும் குத்தப் சாலைதான்.
டில்லி குத்தப் சாலைதான்.
டில்லி மட்டுமல்ல- உலகமே குத்தப் சாலைதான்.
பூமி குத்தப் சாலையே...
சூரிய குடும்பமும் பால் வெளியும் குத்தப் சாலையே. குத்தப் சாலையில் போதைப் பொருட்கள் விற்கிறார்கள்.
உலகமே 'பங்க்'தான். போதைப் பொருட்களின் வழியாக மட்டுமே உலகத்தால் நிலை பெற்று நிற்க முடியும். இல்லாவிட்டால் உலகமோ வாழ்க்கையோ இல்லை. யஹோவாவும் லூஸிஃபரும் சே குவேராவும் கான்பென்டிட்டும் இல்லை. 'பங்க்' ஆண்மையின் அடையாளம். 'பங்க்' உபயோகிக்காதவர்கள் உலகத்திற்கு எதிரானவர்கள்.
அவன் உலகத்திற்கு எதிரானவன் அல்ல.
விளக்கங்களும், அர்த்தங்களும், ஒழுங்கும் இல்லாத தன்னுடைய வாழ்க்கைக்கு 'பங்க்'கின் மூலமாக அவன் விளக்கங்களும், அர்த்தங்களும், ஒழுங்குகளும் தருகிறான்.
கூரையிலிருந்து கண்களைப் பின்னோக்கி எடுத்தான்.