Lekha Books

A+ A A-

நான் - Page 2

Naan

குளிர்ந்து மரத்துப் போன தரையில் படுத்திருக்கிறான். புதிய டெரிவுல் சூட்டைக் கொண்டு நிர்வாணத்தை மறைத்துக் கொண்டும் பாலீஷ் செய்து பிரகாசம் உண்டாக்கிய காரணத்தால் கால்களை அழகாக்கவும் செய்திருக்கிறான். மல்லாந்த நிலையில் படுத்திருக்கிறான். எழுந்து அமர்ந்து கை- கால்களை மேல் நோக்கி உயர்த்தி, விரித்து, முதுகை நிமிர்த்தினான். அப்போதுதான் சாளரத்திற்கு அப்பால் பதுங்கி நின்று சிரித்துக் கொண்டிருக்கும் சூரியனைப் பார்த்தான். சூரியனின் முகத்தைப் பார்த்து கொட்டாவி விட்டான். அப்போது சூரியன் முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. சூரியனை அவனுக்குத்தான் நன்கு தெரியுமே! அவன் பட்டைச் சாராயம் பருகி, மதராஸில் ஐ.ஸி.எஃப். காலனியின் வழியாக யாசித்து நடப்பதை சூரியன் பார்த்திருக்கிறது. குளிர் காலத்தின் பேரமைதி நிறைந்த இரவு வேளைகளில் கனோட் ப்ளேஸின் நியான் விளக்குகளுக்கு மத்தியில் 'சரஸ்' புகைத்து சுய உணர்வை இழந்து நடந்து திரிந்ததை சூரியன் பார்த்திருக்கிறது. ஶ்ரீதராணி காலரியில் ஒன் மேன் ஷோ நடத்தி, பத்திரிகைகளின்- ரசிகர்களின் கைத்தட்டல்கள் வாங்கியதையும் சூரியன் பார்த்திருக்கிறதே!

சூரியனுக்கு அவனை நன்கு தெரியும்.

சூரியன் சிரித்தது.

இன்று அவன் ஸல்ஃபோட்டாவும் ஜக்மோஹனும் பருகுவதாக இல்லை. பெண்களுக்குப் பின்னால் நடப்பதாகவும் இல்லை.

இன்று அவன் குடிகாரனோ பெண் பித்தனோ அல்ல.

அப்படியென்றால், இன்று அவன் யார்?

பலவாகவும் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டான். யாருமாகவும் ஆகவில்லை. டின்டோரெட்டோவாக ஆகவில்லை. ஜான் டூவானாக ஆகவில்லை. கான்பென்டிட்டாக ஆகவில்லை. சேவாக ஆகவில்லை. மாவோவாக ஆகவில்லை. இன்று அவன் யாருமல்ல. 'நீ யார்?' என்று கேட்பவர்களிடம், நேற்று வரை கூறிக் கொண்டிருந்தான்: 'நான் ஓவியன்'. நம்ப தயாராக இல்லாதவர்களிடம் ப்ரஷ்யூரையும், பத்திரிகைகளின் கட்டிங்குகளையும், பாராட்டு இதழ்களையும் காட்டினான். அவர்கள் நம்பினார்கள். எதுவும் பேசாமல் வணங்கியவாறு பின்னோக்கி நகர்ந்தார்கள்.

இப்போது அவன் ஓவியன் அல்ல.

நேற்று அவனுக்குள் இருந்த ஓவியன் மரணமடைந்து விட்டான். இறப்பதற்கு முன்பு அவன் கை, கால்களை உதறினான். நீருக்காக கூப்பாடு போட்டான். கண்கள் முன்னோக்கி வந்தன. அவன் மரணப் போராட்டங்களை வெளிப்படுத்தி, மரணத்தைத் தழுவினான். இறுதியில் இரண்டு மரக் கொம்புகளைக் கொண்டு உண்டாக்கப்பட்ட பிணக் கட்டிலில் அவனைக் கட்டி, மேலே மலர்களைத் தூவினார்கள். ராம்... ராம்... சத்தத்துடன் யமுனை நதியின் கரைக்குக் கொண்டு சென்றார்கள். சிதையில் கிடந்து அவன் எரிந்தான். அவனின் மரணத்தைப் பற்றிய கவலை தாங்கிக் கொள்ள முடியாததாக இருந்தது முழங்கால்களில் முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். கண்ணீர் விட்டான். அப்போது குத்தப் சாலை கையைக் காட்டி அழைத்தது. அவன் அங்கு சென்றான்.

சிதையிலிருந்து அவன் உயிர்த்தெழுந்தான். அவன் இறக்கவில்லை. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், மரணத்தைத் தழுவிய அவனை குத்தப் சாலை மீண்டும், பிறக்கச் செய்தது. அவன் திரும்பி வந்தான். அவன் அவனுக்குள் நுழைந்தான். அவன் மீண்டும் ஓவியனாக ஆனான். அவன் அவனாக ஆனான். அவன் நீயாக ஆனான். அவனாக ஆனான்.

குத்தப் சாலையில் செல்லும்போது ஒன்றுமேயல்லாத அவன் என்னவாக ஆகிறான்?

அவன் கான்பென்டிட்டாக ஆனான். பாரீஸுக்குச் சென்று பல்கலைக் கழகத்தைக் கைப்பற்றி, சாலைகளில் 'பாரிகேடுகள்' உண்டாக்குகிறான்.

அவன் சாய்பாபாவாக ஆகி, புட்டபர்த்திக்குச் சென்று ஜால வித்தைகள் காட்டுகிறான்.

அவன் மாஷே தயானாக ஆகி, நைல் நதியின் கரையின் வழியாக படையைச் செலுத்திக் கொண்டு நடக்கிறான். அரேபியர்களைப் போருக்கு அழைத்து, நைல் நதியில் இரத்தத்தைக் கலக்கச் செய்கிறான்.

லிண்டன் பி.ஜான்ஸனாக ஆகி வியட்நாமிற்குச் சென்று பெர்ஃப்யூம் நதியை வற்றச் செய்து, அதில் குருதியை நிறைக்கிறான்.

சேவாக ஆகி பொலிவியாவின் அடர்த்தியான காடுகளுக்குள் தாகமெடுத்து, தொண்டை அடைக்கும்போது தன்னுடைய சிறுநீரை பருகிக் கொண்டு, பாக்கெட்டிற்குள் ட்ராட்ஸ்கியுடன் புரட்சியை ஆரம்பித்து விட்டு நடக்கிறான்.

அக்டோபர் புரட்சி முடிந்த பிறகு அவன் ஃப்ரான்ஸுக்குச் சென்று, டான்டேயாக ஆனான். அவன் ஃப்ரெஞ்ச் புரட்சி நடத்தி வாட்டர் லூவை அடைந்தபோது, நெப்போலியன் போனாப்பார்ட்டாக ஆனான். மத்திய யுகத்தின் வழியாக நடத்திய பயணத்தில் வென்ஸில் இருந்தபோது, டின்டோட்டாவாக ஆனான். அரண்மனைகளையும் தேவாலயங்களையும் ஓவியங்களைக் கொண்டு நிறைத்தான். பெத்லஹேமில் பிறந்தான். நாசரேத்தில் வளர்ந்தான். கால்வரியில் சிலுவையில் அறையப்பட்டான். மக்கள் பின்னால் நின்று கொண்டு சத்தம் போட்டு அழைக்க, கற்கள் பறந்து விழ, அவன் மெக்காவிலிருந்து மதீனாவிற்குச் சென்றான். போதி மரத்தின் நிழலில் அவன் தவத்தில் மூழ்கியிருந்தான். படைப்பின் முதல் சூட்சும பிரபஞ்சம் நீருக்கு மத்தியில் அவனுடைய நெஞ்சில் பரந்து கிடக்கிறது. அவனுடைய நெஞ்சில் முதலும் முடிவுமில்லாமல் பரந்து கிடக்கும் நீர் பரப்பில், இருளில் ப்ரம்மா நீந்தி விளையாடினார். அவன் வரலாறாக ஆனான், வேதங்களும் புராணங்களுமாக ஆனான். காலமாக ஆனான்.

இறுதியில் சாயம், நாஃப்தால் ஆகியவற்றின் வாசனை நிறைந்த தன்னுடைய வேலை செய்யும் இடத்தில் முழுமை செய்யாத க்யான்வாஸ்களுக்கு மத்தியில் படுத்து ஒன்றுமில்லாதவனாக ஆனான்.

இப்போது ஒன்றுமற்ற தன்மையிலிருந்து சூரிய வெளிச்சம் உண்டாகிறது. அவன் உயிரணுவாக ஆகி உடலுக்குள் கிடக்கிறான். கண்டமாக ஆகிறான். குழந்தையாக ஆகிறான். தொப்புள் கொடியைத் துண்டித்து, அவன் வெளியே வருகிறான். வளர்கிறான். மனிதனாக ஆகிறான். ரமேஷ் நாயராக ஆகிறான். ஓவியனாக ஆகிறான்.

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel