நான் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 5427
ஓவியனாக அல்லாமல் ஆகிறான்.
சூரியன் எல்லாவற்றையும் பார்க்கிறது. சூரியன் இப்போதும் பார்த்துக் கொண்டு நிற்கிறது. என்ன ஒரு ஆர்வம்!
ஒரு சிகரெட்டைப் புகைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. மேஜையின் மீது சிகரெட் பாக்கெட் கிடப்பதைப் பார்த்தான். எழுந்திருக்க முடியவல்லை. சிகரெட் மேஜையிலிருந்து இறங்கி வரவோ, மேஜையை இங்கு வரவோ செய்தால்... சிகரெட் பாக்கெட் இறங்கி வராது.
மேஜை அசையாது. சூரியன் வானத்திலிருந்து இறங்கி வந்தால்....
'புவொநாஸ் தியாஸ்!'
ஸ்பேனிஷ் மொழியில் வணக்கம் கூறுகிறான். யார்? சூரியன் இறங்கி வந்து விட்டதா?
திரும்பிப் பார்க்காமல் சொன்னான்: 'அந்த சிகரெட்டைச் சற்று எடுத்துத் தா. ப்ளீஸ்...'
திறந்த கதவின் வழியாக மெல்லிய நறுமணம் உள்ளே நுழைந்து வந்தது. இன்டிமேட்டின் வாசனையா? ஷார்னெல் ஃபைவுடையதா? யார்ட்லி பவுடருடையதா?
இல்லை.
யார்ட்லி பவுடரின் வாசனை அல்ல. ஷார்னெல் ஃபைவுடையதல்ல. இன்டிமேட்டின் நறுமணம் அல்ல. சுஜாதாவுடையது. சுஜாதாவின் வாசனை அது.
வந்தது சூரியன் அல்ல. சுஜாதா...
'ஏன் விஷ் செய்யல?'
'எந்த மொழியில் வேணும்?'
'அஃப் கோர்ஸ்... ஸ்பேனீஷில்...'
'குட்டன் மோர்கன்... நான் ஜெர்மன்காரன்.'
அவன் ஹிட்லர்... ரூடி தி ரெய்ட்...
அவன ஜெர்மன் மொழி பேசுகிறான். அவள் ஸ்பேனீஷ் மொழியில்...
அவள் ஸ்பேனீஷ் மொழியைக் கற்றுக் கொள்வது லத்தீன் அமெரிக்காவின் கெரில்லா அமைப்பையும் சே குவேராவையும் சரியாக புரிந்து கொள்வதற்காகத்தான். அவன் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்வது ஹிட்லராக ஆவதற்குத்தான். இன்னும் கொஞ்சம் ஆகட்டும். ஆங்கிலம் கற்று ஷேக்ஸ்பியராக ஆவதற்கு பார்க்க வேண்டும். மலையாளம் கற்று குஞ்சன் நம்பியாராக ஆக வேண்டும்.
'கும் குறுகுறும்...'
'என்ன அர்த்தம்?'
'இது ஜெர்மன் இல்லை...'
'பிறகு?'
'குக்கு குறும் குறுகுறும்... இது காட்டு வாழ் மனிதர்களின் மொழி. நான் காட்டு வாழ் மனிதன்.'
சிகரெட்டை எடுத்து தந்தபோது, காட்டு மனிதனின் மொழியிலேயே நன்றி சொன்னான்:
'கும் க்ரீம்.'
சிகரெட்டைப் பற்ற வைத்து சூரியனின் முகத்தில் புகையை ஊதி விட்டவாறு சொன்னான்:
'நான் இறந்து விட்டேன்.'
'இங்கு இருப்பது யார்?'
'என் டம்மி...'
'முஸ்ஸோலியம் எங்கே இருக்கு?'
அவளுக்கு அது ஏன் தெரிய வேண்டும்? வருடத்திற்கு ஒரு முறை தன்னுடைய பிறந்த நாள் வரும். அவள் மலர்களைக் கொண்டு போய் வைப்பாள் போலிருக்கிறது. பூக்கள் என்றால் அவனுக்கு மிகவும் விருப்பம். பூக்களின் கெட்ட நாற்றம் அவனுக்குப் பிடிக்கும்.
'அதோ...'
தன்னுடைய கல்லறையைச் சுட்டிக் காட்டினான். ஆறடி நீளமும் நான்கடி அகலமும் உள்ள அந்த க்யான்வாஸ் இருக்கிறது அல்லவா? அதுதான் அவனுடைய முஸ்ஸோலியம். அங்குதான் அவனுக்குள் இருந்த ஓவியன் தன்னுடைய கரையான் அரித்த எலும்புகளுடன் கிடக்கிறான்.
அவள் அந்த க்யான்வாஸின் அருகில் சென்றாள். ஃப்ரேமில் இணைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆறடி நீளமும் நான்கடி அகலமும் உள்ள க்யான்வாஸ். அதன் மீது தூரிகையோ, சாயமோ பட்டிருக்கவில்லை. அது வெறுமனே கிடக்கிறது. அதனால் அது க்யான்வாஸ் அல்ல. தூரிகை தொடாத, சாயம் பட்டிராத க்யான்வாஸ், க்யான்வாஸ் அல்லவே! தூரிகையையும் சாயத்தையும் எதிர்பார்த்து காத்திருக்கும் க்யான்வாஸ்தான், க்யான்வாஸ். அந்த க்யான்வாஸ் தூரிகையையோ, சாயத்தையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை. அதனால் அது க்யான்வாஸ் அல்ல. அது கல்லறை... அவனுடைய ஓவியனின் கல்லறை. அவனுடைய கல்லறை...
'இதில் என்ன வரைகிறீங்க?'
விசாலமான அந்த க்யான்வாஸுக்கு முன்னால் நிற்கும்போது, அவள் சிறியதாகிப் போகிறாள்.
'வரைந்து முடிந்தாகி விட்டது.'
'நான் எதையும் பார்க்கலையே?'
'உன்னால் பார்க்க முடியாது.'
'எனக்கு கண்கள் இல்லையா?'
'சாயத்தைக் கொண்டு வரையவில்லை.'
ஆச்சரியப்பட வேண்டாம் பெண்ணே! ஆச்சரியப்பட வேண்டாம்...
'இதன் பெயர் என்ன?'
'பெயர் இல்லை.'
வர்ணங்கள் இல்லாத, பெயர் இல்லாத ஓவியத்திற்கு முன்னால் அவள் ஆச்சரியத்துடன் நின்று கொண்டிருந்தாள்.
'ஏன் கையெழுத்துப் போடவில்லை?'
'கை எழவில்லை.'
'நான் போடட்டுமா?'
'நீ நானாக ஆக முயற்சிக்கிறாயா?'
'நீங்கள் நானாக ஆகுகிறீர்கள்.'
'நான் நீயாக ஆகலாம். நீ நானாக ஆகு.'
அவனால் அவளாக ஆக முடியவில்லை. சந்தன வர்ண புடவை அணிந்து, கையில் எகிப்திய பழங்கால வளையல்களை அணிந்து நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணாக அவனால் முடியாது.
அவளால் அவனாக ஆகவும் முடியாது.
அவன் குடிகாரனும், விலை மகளிரிடம் செல்பவனும்...
'நான் நானும்... நீ நீயும்...'
'நான் நானல்ல.'
'பிறகு யார்?'
'நான் சே குவேரா அல்லவா?'
'சே... ஆண்.'
'இல்லை.'
'பெண்ணா?'
'சே இயற்கை.'
சே நெருப்பும், காற்றும், நீரும்... சூரியன்...
'சே ஈராஸின் அவதாரம்.'
'ஈராஸின் அவதாரமல்ல... இயேசு கிறிஸ்துவின்...'
'ஆமாம்...'
அவளுடைய கண்கள் மலர்ந்தன. அவள் தொடர்ந்து சொன்னாள்: 'ஆமாம்... சே, இயேசு கிறிஸ்துதான்.'
கிறிஸ்துவிடம் இருப்பதைப் போன்ற செம்பு நிற தலை முடியும், தாடியும். கிறிஸ்துவிடம் இருப்பதைப் போன்ற சாந்த கம்பீரம் நிறைந்த தெய்வீக முகம்.
சே, கிறிஸ்து... ஶ்ரீபுத்தன்... குரு நானக்... நபி...
'நீ ஏன் சேவாக ஆக ஆசைப்படுகிறாய்?'
அவள் ஃபிடல் கேஸ்ட்ரோவாக கூறினாள்: 'மனித இனத்தின் மிக உயர்ந்த இடத்தை அடைவதற்கு...'
'உன்னால் துப்பாக்கியைத் தூக்க முடியுமா?'
'முடியும்.'
'நீ தெப்ரேயின் 'ரெவல்யூஷன் இன் ரெவல்யூஷன்' வாசித்திருக்கிறாயா?'
'வாசித்திருக்கிறேன்.'
'உனக்கு ஆஸ்துமா இருக்குதா?'
இல்லை.'
'அப்படின்னா உன்னால் சேயாக ஆக முடியாது.'
'நான் ஆஸ்துமா இல்லாத சேயாக ஆவேன்.'
'நீ சேயாக ஆக வேண்டாம்.'
'பிறகு... யாராக ஆகணும்?'