கவிதை எழுதும் பெண் - Page 4
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7138
பணம், அறிவு, பதவி- எல்லாம் இருந்தன. இருப்பினும் காதல் கடிதங்கள் வந்ததென்னவோ அவள் தோழிக்குத் தான். இப்படிச் சின்னச்சின்ன ஏமாற்றங்களை சகித்துக்கொண்டு அன்பு என்றால் என்னவென்று தெரியாத ஒரு குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவள் திருமணம் செய்து கொண்டதே அன்பு என்ற ஒன்று கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான். அவளின் தவறுகளையும் குணங்களையும் முழுமையாக விரும்பக்கூடிய ஒரு மனிதனைக் காண அவளுடைய முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, அவள் வாழ்க்கையில் அவன் கால் வைத்தான். அவனுக்கு வரதட்சணை தேவைப்பட்டது. அவளும் அதைக் கொடுக்கக்கூடிய நிலையில்தான் இருந்தாள். அவள் தன்னை அந்த அளவிற்கு முழுமனதுடன் காதலித்ததைக் கண்டபோது அவன் ஒருவித பரபரப்பிற்கு ஆளாகிவிட்டான். அதற்குக் காரணம்- அவள் தன்மீது கொண்டிருக்கும் காதலையும் அன்பையும் காண நேரும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவனுக்கு தன்னிடம் இருக்கும் குறைபாடுகள் தெரிய வரும். அவளின் உதடுகளை வாழ்க்கையிலேயே முதன்முதலாகத் தொட்ட மனிதன் அவன்தான். அவளின் அந்த பரிசத்தத்தைச் சந்திப்பதற்கு அவனிடம் என்ன இருக்கிறது? வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்தும் ஒரு பெண் அவனுடைய மூத்த மகனைப் பெற்றெடுத்தாள். இதைப்போல எத்தனையோ பெண்கள் அவனுடன் இரவுகளைப் பங்கிட்டிருக்கிறார்கள். அதனால் அவனுக்கு எந்த கெட்ட பெயரும் கிடைக்கவில்லை. காரணம் அவன் எப்போதும் புத்திசாலித்தனமாக நடந்து கொண்டிருந்தான். அவள் தன் மீது கொண்டிருந்த காதல் அவனுடைய கடந்த கால பாவச் செயல்களை ஞாபகத்திற்குக் கொண்டு வந்திருக்கலாம். அதற்காகவே அவன் அவளை வெறுத்தான். அவளின் கள்ளங்கபடமில்லாத வெள்ளை மனமும் பரிசுத்தமும் அவனை ஒரு விதத்தில் பயமுறுத்தின என்பதே உண்மை.
எல்லாம் படுவேகமாக வாழ்க்கையில் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது. அவள் வாழ்க்கையிலும் அப்படிப்பட்ட சில கெட்ட காரியங்கள் நடக்கவே செய்தன. கண்களை மூடிக்கொண்டு ஒரு பூனையைப் போல அவள் கனவுகள் கண்டுகொண்டிருந்தாள். மன ஆறுதலுக்காக- சில நாட்கள் மட்டுமே நிலை பெற்று நிற்கக்கூடிய, சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கக்கூடிய, தரம் தாழ்ந்த அன்பு என்பது தெரிந்தும்கூட அதற்காக அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள். மரணம் வரை நிலைபெற்று நிற்கக்கூடிய அத்தனை பெரிய அன்பு தனக்கு எந்த இடத்திலும் கிடைக்காது என்று அவள் மனதில் ஆழமாகத் தோன்றியதே அதற்குக் காரணம். அதனால் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் தேன் குடிப்பதைப் போல எண்ணி ஒவ்வொரு துளியாக அவள் சுவைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நிமிடமும் அவள் எண்ணுவாள்: 'நான் எதற்காக இப்படியெல்லாம் நடக்கறேன்? இந்த அப்பாவி மனிதனை நான் ஏன் முட்டாளாக்கணும்?' அவனை முட்டாளாக்குவது ஒரு பக்கம் இருக்கட்டும். அதே நேரத்தில் அவளும் முட்டாளாகிக் கொண்டிருந்தாள் என்பதும் உண்மை. காரணம்- அவளுடைய அந்த காதல் காட்சிகளில் அன்பு என்ற ஒன்று ஒரு நாடகமாகவே அங்கு இருந்தது. 'நான் உங்களைக் காதலிக்கிறேன். நான் உன்னையும்...' என்று சொல்லாமல் ஒருவனின் மடிமீது சென்று விழவோ அவனை முத்தமிடவோ அவளின் குடும்பச் சொத்தான பண்பாடு அவளை அனுமதிக்கவில்லை. மனதில் காதல் இல்லாமல், அன்பில்லாமல் முத்தமிடுபவர்கள் விலைமாதுக்கள்தான் என்று அவளும் கேள்விப்பட்டிருக்கிறாள். அவளுக்குப் பணம் தேவையில்லை. காதல் இருக்கிறது என்ற ஒரு நாடகம் போதும் அவளுக்கு. அவளின் காதலர்கள் நடிக்கவில்லை. அவர்கள் அவளை வழிபட்டார்கள். அவளின் காதல் சில நிமிடங்களே கிடைக்கக்கூடியது என்றாலும் அது மிகவும் சக்தி படைத்த ஒன்றாக இருந்தது. அவள் அவர்களின் தலைமுடியில் தன் விரல்களால் தடவினாள். ஆகாயம் சிவந்திருக்கும் மாலை நேரங்களில் கடற்கரையில் கறுத்த பாறைகளின் மேல் அமர்ந்துகொண்டு அவள் காதலைப் பற்றி, அன்பைப் பற்றி நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தாள். கவிதைகள் எழுதினாள். அவர்களின் அழகைப் பற்றி ஒரு பெண் எப்போதும் சொல்லாத விதத்தில் அவள் புகழ்ந்து சொன்னாள். அதைக் கேட்டு அவர்களுக்கே வெட்கம் வந்தது. மனதில் அவர்கள் மகிழ்ச்சியடைந்தார்கள். அவளைத் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள்.
"உன் முகம் எவ்வளவு அழகா இருக்கு?"- இப்படி என்னென்னவோ அவள் சொன்னாள். அவர்கள் அதையெல்லாம் நினைத்துப்பார்த்ததே இல்லை. காரணம்- அவர்களுக்கே புரியாத சில வார்த்தைகளில்தான் அவள் பெரும்பாலும் அவர்களுடன் பேசினாள். அவர்களை அவள் சில நாட்களுக்கு கடவுளாக ஆக்கினாள். அவர்கள் மீது அவள் கொண்டிருந்த காதல் ஒரு பந்தைப் போல பின்னால் இழுக்கப்பட்டபோது திடீரென்று அவர்கள் ஒவ்வொருவரும் மீண்டும் அப்பிராணி மனிதர்களாக மாறினார்கள். என்ன நடந்தது என்பது கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர்கள் அந்த அளவுக்கு குழப்பமான நிலையில் நின்றிருந்தார்கள். இருந்தாலும் வாழ்க்கையில் சில நாட்களுக்காவது மறக்கமுடியாத அந்த ஆனந்த அனுபவத்தைத் தந்த அவளை அவர்கள் குற்றம் சொல்லவில்லை. அதற்குக் காரணம்- அவர்களுக்கும் அவளுக்குமிடையே இருந்த பெரிய இடைவெளிதான். அவர்களின் பார்வையில் அவள் ஒரு தேவதையாக இருந்தாள்.
"என்ன, எதுவும் பேசாம இருக்கீங்க? இன்னைக்கு அப்படியென்ன ஆழமான யோசனை?"
விருந்தினர்களில் ஒருவன் கேட்டான். அவள் மரத்திற்குக் கீழே போடப்பட்டிருந்த ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்தாள்.
"எதற்காகப் பேசணும்? நன்கு அறிமுகமானவர்கள் தங்களுக்கிடையே பேசவேண்டிய தேவையென்ன?"
அவள் அப்படிச் சொன்னதை அவன் மிகப்பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டான். புதிதாகக் கிடைத்த சுதந்திர எண்ணத்துடன் அவன் பெஞ்சின் இன்னொரு பக்கத்தில் போய் உட்கார்ந்தான். அவனுடைய கால்களுக்குக் கீழே சேறு அப்பியிருந்ததை அவள் பார்த்தாள். அவன் கைவிரல்கள் நீண்டு மெலிந்து போயும் கன்னங்கள் ஒட்டிப்போயும் இருந்தன. அவள் அக்கறையில்லாத குரலில் கேட்டாள்:
"உங்களை நான் அதிகம் பார்த்தது இல்லை. பாம்பேக்கு இப்போத்தான் வந்திருப்பீங்கன்னு நினைக்கிறேன்."
அவள் தன்னுடைய பெயரை மறந்துவிட்டிருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். இருந்தாலும், அதற்காக வருத்தப்படாமல் அவன் சொன்னான்: "என் பேரு ரஸ்ஸா. என்னை ஞாபகத்துல இல்லியா? மூணு வருடத்துக்கு முன்னாடி அந்த ஓவிய சாலையில் நாம் அறிமுகமானோம்..."
"ஓ... ரஸ்ஸா. நல்லா ஞாபகத்துல இருக்கு. பிக்காஸோவைப் பற்றி நாம மூணு மணி நேரமா பேசிக்கொண்டிருந்தோம் இல்லியா?"
"ஆமா..."
"அதற்குப்பிறகு என்ன ஆச்சு மிஸ்டர் ரஸ்ஸா? ஜெயிச்சது நீங்களா, நானா?"
"நீங்கதான்."
"நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு ரகசியமா எதைப்பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க?"
அவளுடைய கணவன் அருகில் வந்தான். அவன் கையில் நீல நிறத்தில் கோடு போட்ட ஒரு பீங்கான் தட்டில் சோறு இருந்தது. மசாலாவால் ஆன கூட்டு பக்கத்தில் இருந்தது.