கவிதை எழுதும் பெண் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7138
தன் கணவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் அவள் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.
"என்ன... என்னையே வச்ச கண் எடுக்காம நீ பார்த்துட்டு இருக்கே?"- அவன் கேட்டான்.
"நான் உங்களைக் காதலிக்கிறேன்."
"அப்படியா? அது தேவைதான்."
அவனிடம் அவள் எதிர்பார்த்த பதில் அதுவல்ல. அவள் முதல் காதலே அதுதான். தொட்டுப்பார்த்து ஆச்சரியப்படவும், கொஞ்சிக் கொண்டிருக்கவும் கிடைத்த பொருள். அதனால் அவள் அடிக்கடி அவனிடம் சொல்லுவாள்: "நான் எல்லா நேரமும் உங்களையே நினைச்சிக்கிட்டு இருக்கேன். நான் எந்த அளவுக்கு உங்களை விரும்புறேன் தெரியுமா?"
"அப்படியா? அப்படி இருக்குறது நல்லதுதான்."
அவனுக்கு இது முதல் காதல் அல்ல. அவள் அவனுடைய முதல் காதலியும் அல்ல. பொழுது போகாமலிருந்த பல விடுமுறை நாட்களில் அவன் பல பெண்களுடன் நெருக்கமாய்ப் பழகியிருக்கிறான். காதலைப்பற்றி பேசவோ, அவனைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடனோ அவர்கள் யாருமில்லை. அவர்கள் நல்ல குடும்பத்திலிருந்து வந்த பெண்கள் அல்ல. பெரிய கை விரல்களையும் விரிந்த கால் விரல்களையும் கொண்ட பெண்கள் அவர்கள். அவர்கள் எப்போதும் பணத்தைப் பற்றி மட்டுமே பேசுவார்கள். பணம் வைத்திருப்பவர்களுடன் மட்டுமே அவர்கள் உறவு வைத்திருப்பார்கள்.
அவனுக்கு குடும்பத்தனமான தன்னுடைய மனைவியுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதே தெரியவில்லை. அவள் எப்போதும் அவனுக்குச் சொந்தமானவளாகவே இருந்தாள். அவள் அவ்வப்போது அவனிடம் கூறுவாள்: "நான் உங்களுக்குச் சொந்மானவள்..."
அவளின் அந்த வார்த்தைகளில் எந்த உணர்வையும் காண முடியவில்லை. அவள் காதலை, அன்பை படுக்கையறைக்குள் ஒரு நறுமணத்தைப் போல் கொண்டு வந்தபோது, அவன் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்றான். தனக்குச் சொல்லப்போனால் தேவையானது என்ன என்பதைக்கூட அவன் மறந்துவிட்டான்.
"எப்படி அன்பை வெளிப்படுத்தி நடக்குறதுன்ற விஷயம் எனக்குத் தெரியல..."
அவன் சொல்லியதை அவள் முழுமையாக நம்பினாள். வெளியே தெரியாத எந்த உண்மையும் உண்மையாக இருக்க முடியாது என்று அவள் முதலில் நினைக்கவில்லை. உள்ளே அன்பு என்ற ஒன்று இருக்கும்பட்சம், அதன் அறிகுறி கொஞ்சமாவது வெளியே தெரிய வேண்டுமா? அந்தக் கண்களிலோ, அந்தப் புன்சிரிப்பிலோ- எதிலாவது தெரியவேண்டுமா? அவன் தன்னுடைய வழியில் அவள் மீது அன்பு வைத்திருக்கவே செய்தான். ஒருவன் தேநீர் அருந்த விரும்புகிறான். அவன் தான் தேநீரை விரும்புவதாக ஒருவேளை கூறினாலும் கூறலாம்.
"இன்னைக்கி எங்கே போயிருந்தே?" அவன் கேட்டான். அவள் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அவன் பேப்பரைப் புல் மேல் வைத்துவிட்டு, அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"சும்மா கொஞ்ச தூரம் நடந்துட்டு வந்தேன்!"
"தனியாவா?"
அவன் கேட்ட அந்தக் கேள்வி தன் காதிலேயே விழவில்லை என்பது மாதிரி காட்டிக்கொண்ட அவள் எழுந்து தன்னுடைய புடவையில் இருந்த சுருக்கங்களைச் சரி பண்ணியவாறு, "நான் போயி குளிச்சிட்டு வர்றேன். நேரம் இப்பவே ஒரு மணி ஆயிடுச்சு" என்றாள்.
அவள் உள்ளே நடந்தாள். அவன் புல் மேல் பறக்க முயற்சித்துக் கொண்டிருந்த பேப்பரைப் பார்த்தவாறு சிறிது நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தான்.
அன்று இரவு அவர்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தார்கள். புல்வெளியில் உணவுப்பொருட்கள் இருந்த மேஜையைச் சுற்றி நடந்து கொண்டே அவர்கள் தாழ்ந்த குரலில் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள். மனதிற்குள் கவலைகள் இருந்தாலும், எப்போதும் சிரித்த முகத்துடன் அவர்கள் இருந்தார்கள். எந்தவொரு விஷயத்தின் மீதும் தங்களுக்கு நம்பிக்கை கிடையாது என்று கூறி வாழ்க்கையில் இங்குமங்குமாய் அலைந்து திரிந்தார்கள். கோவில்களுக்கு கேமராக்களை எடுத்துக்கொண்டு போய் கடவுள்களின் நிர்வாண உருவங்களைப் புகைப்படங்கள் எடுத்து, கர்ம யோகிகளின் சிந்தனை தங்களை முற்றிலும் ஆக்கிரமித்திருக்க, திருமணம் செய்து, குழந்தைகளைப் பெற்று, எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒவ்வொரு நாளையும் அவர்கள் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் ஓவியர்களாக இருந்தார்கள். சிலர் கதை எழுதுபவர்களாக இருந்தார்கள். சிலர் அரசாங்க அதிகாரிகளாக இருந்தார்கள். இப்படிப் பல்வேறு வகைப்பட்ட வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் அனைவரும் நிறைய பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். மிகவும் குறைவாகப் பேசிய ஒரு தலைமுறையினரின் மக்கள் அவர்கள். அவர்கள் காதலைப் பற்றியும் அன்பைப் பற்றியும் பேசும்போது உதடுகளின் ஒரு ஓரத்தை வெறுப்பு மேலோங்கப் பிதுக்கினார்கள். பணத்தைப்பற்றி பேசும்போது உதடுகளின் இரண்டு ஓரங்களையும் கீழ்நோக்கி வளைத்தார்கள். தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொண்டு கழுத்தின் பின்பகுதியை அழுக்காக வைத்துக்கொண்டு நடக்க அவர்கள் தயாராக இல்லை. ஆரோக்கியமான ஒரு வெறுப்புடன் உலகத்தைப் பார்த்தவாறு வாழ்ந்து கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டாள் அவள். காரணம்- எந்த விருந்தாக இருந்தாலும், நிகழ்ச்சியாக இருந்தாலும் அவள் ஒரு குறிப்பிடத்தக்க நபராக இருந்தாள். அவள் ஒரு கவிதை எழுதும் பெண்ணாயிற்றே! தேவைக்கதிகமான பணமும் பதவியும் தன்னிடம் கொண்டிருக்கும் கவிதை எழுதும் பெண் அவள்! அவள் எழுதிய கவிதைகள் மக்களால் படிக்கப்படாமல் இருக்கலாம். அவை எப்போதாவது ஒரு முறை மட்டுமே அச்சில் வரக்கூடியதாக இருக்கலாம். இருப்பினும், அவர்கள் எல்லோரும் அவள் மீது மதிப்பு கொண்டிருந்தார்கள். காரணம், என்றாவது ஒருநாள் அவளுடைய மரணத்திற்குப் பிறகு அவளுக்குப் புகழ் கிடைப்பதாக இருந்தால் அவர்கள் ஒவ்வொருவரும் அவளைப் பற்றி நிச்சயம் ஏதாவது பேசுவார்கள். அவளின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமான ஒன்றாக இல்லையென்றும், அவளுக்கு நீல நிறத்தில் ஆடை அணிவதுதான் எப்போதும் பிடிக்குமென்றும் அவர்கள் அவளைப்பற்றி மற்றவர்களிடம் கூறலாம். அவர்கள் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்ற அவசியமில்லை. ஆனால், ஏற்கனவே அவளுக்கு நன்கு தெரிந்தவர்கள் என்ற சுதந்திரத்துடன் அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றியதையெல்லாம் சொல்லலாம்.
"எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு. ஒருமுறை..." இப்படி அவர்கள் சொன்ன ஏதாவது சில வார்த்தைகள் எப்போதும் எங்காவது தங்கி இருக்கும். குண்டுகள் போடப்பட்டு உலகம் அழியாமல் இருக்கும் பட்சம், அவர்களின் சில வார்த்தைகளும் அழியாமல் நிற்கவே செய்யும். அவர்கள் விருப்பப்படுவது கூட அதைத்தானே!
"நீங்க ரெண்டு பேரும் உண்மையிலேயே கொடுத்து வச்சவங்க" - ஒருவன் சொன்னான். "கடலுக்குப் பக்கத்திலேயே வீடு கிடைச்சிருக்கே!"
அவள் தன் கணவன் அருகில் நின்றிருந்தாள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.