ராதா, ராதா மட்டும் - Page 3
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7162
“நாம அறைக்கு வெளியே போகிறவரை நீ ஏன் காத்திருந்தே?'' நான் உண்மையிலேயே அவளைப் பார்த்து, "இவ்வளவு காலம் எதுக்காகக் காத்திருந்தேன்னு நீ கேட்டிருக்கணும்' என்ற கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும். ஆனால், கேட்கவில்லை. நான் சொன்னேன்: “வாசலில் நின்றிருந்த உன்னை மூடிய இருள்தான் எனக்கு அதற்கான தைரியத்தைத் தந்தது. வெளியே காவல் காத்து நின்னுக்கிட்டு இருந்த மாலை நேரமும் உள்ளே நீ உண்டாக்கிய இருட்டும் சேர்ந்து எனக்கு பாதுகாப்பும் தைரியமும் கொடுத்தன. இனி நான் உன்னை வெளிச்சத்துல பாக்குறேன்.'' நான் விளக்கு வெளிச்சத்தில் லீலாவைப் பார்த்தேன். என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை நான் பார்த்தேன்.
எனக்குப் பின்னால் லீலா உறங்கிக் கொண்டிருந்தாள்.
அவளின் மூச்சு நன்றாக என் காதில் கேட்டது. அவளின் உடலை வருட வேண்டும் என்ற என் ஆசையை நானே தடுத்து நிறுத்திக் கொண்டேன். கனவுகளால் செய்யப்பட்ட மென்மையான உலகத்தை என்னுடைய கைகள் கலைத்து விடக்கூடாதே என்று நான் எண்ணியதே அதற்குக் காரணம். ஜன்னலுக்கு வெளியே காற்று அடங்கி விட்டிருந்தது. ஆலம் பழங்களை உதிர்த்த மேகங்கள் காற்றோடு சேர்ந்து வேறு ஏதோ திசையை நோக்கிப் போய்விட்டிருந்தன. அவை போன திசையில் தூரத்தில் தெரிந்த மலையில் நெருப்பு எரிந்துகொண்டிருந்தது. திடீரென்று பார்த்தேன்- அதே பாதையில் ஆலம்பழங்களின், காற்றின் சினேகிதியான அந்தச் சிறுமி தன் தந்தையின் கையைப் பிடித்தவாறு திரும்பி வந்து கொண்டிருக்கிறாள். நான் ஜன்னலைத் திறந்தேன். எனக்கு நேராக உயர்ந்து வரப்போகிற அவளின் பார்வைக்காக நான் தலையை நீட்டிக்கொண்டு நின்றிருந்தேன்.
அவள் என்னை ஜன்னலுக்குக் கீழே கொண்டு போனாள். நான் புன்சிரிப்பு தவழ, அவளின் உயரப்போகிற கண்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால், அவள் உயரத்தில் தெரிந்த ஜன்னல்களை எப்போதோ மறந்து போயிருந்தாள்.
அவள் மேலே தலையைத் தூக்கிப் பார்க்கவே இல்லை. ஆனால், தான் நடந்துபோகும் கால் சுவடுகளை அவள் எண்ணினாள்: “ஒண்ணு... ரெண்டு... மூணு.'' அவள் தரையைப் பார்த்தவாறு எண்ணினாள். ஒவ்வொரு முறை எண்ணுகிறபோதும், நிலத்தை பலமாக அவள் மிதித்தாள். "பாப்பா... என்னைப் பாரு' மனதிற்குள் அந்தச் சிறுமியிடம் நான் கூறினேன்: "எனக்கு இப்போ எந்த பயமும் கிடையாது. நான் இங்கேதான் நின்னுக்கிட்டு இருக்கேன். உன்னோட பேரு என்ன? நீ உன் தலையைத் தூக்கி ஜன்னல் வழியா என்னை ஒரு முறை பார்க்கக் கூடாதா? இதோ- நான் நின்றிருக்கிறேன்.' நான் அவளை அழைப்பதை அவள் அறியவில்லை. "ஒண்ணு... ரெண்டு... மூணு...' என்று எண்ணியவாறு அவள் அந்த இடத்தைவிட்டு அகன்று போனாள்.
என் பார்வையை விட்டு அவள் முழுமையாக மறைந்துபோன பிறகும், அவளின் கால்சுவடுகள் எண்ணிக்கை இரவை முத்தமிடப்போகும் மாலை நேரத்தின் நிழல்களினூடே காலத்தைப் பற்றிய கணக்கைப்போல உயர்ந்து தெரிந்தது.
நான் உறங்கிக் கொண்டிருந்த லீலாவை பட்டாம்பூச்சிகளும் மேகங்களும் வரையப்பட்ட போர்வையால் மூடினேன். ஒரு வெள்ளைத்தாளை எடுத்து எழுதினேன்: "நன்றாகத் தூங்கு. நான் இப்போது செல்கிறேன். நாளை?' எழுதிய தாளை மேஜைமேல் வைத்துவிட்டு தானே அடைத்துக் கொள்கிற கதவை லேசான சத்தம் கேட்கும் வண்ணம் மூடிவிட்டு, படிகளின் வழியாக நான் தெருவுக்கு வந்தேன்.
ஒரு நாளின் முடிவில் இருக்கிற நான் என் கதாநாயகனை விட்டு இப்போது பிரிய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இமயமலையின் கடவுளின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்த பெரிய இயந்திரத்தை விட்டு இரவு நேரத்தில் பிரிய நேர்ந்த விஞ்ஞானிகளைப்போல, நானும் பிரிகிறேன். இனியும் பெயர்கள் உச்சரிக்கப்பட வேண்டி இருக்கிறது. என் கதாநாயகனின் விதிக்குப் பின்னால் நான் ரத்தத்தை முகர்ந்து பார்த்தவாறு போக வேண்டியதும் இருக்கிறது.
நேரற்ற பாதையிலிருந்து என்னை
நேரான பாதைக்கும்-
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கும்
மரணத்தில் இருந்து வாழ்வுக்கும்-
லீலாவின் அறையைவிட்டு வெளியே வந்த கருணன் தன் மனதில் எழுந்த சில எண்ணங்களுடன் போராடியவாறு நடந்து கொண்டிருந்தான். அவனின் முதல் குறி மதுவை அருந்துவதில் இருந்தது. லீலாவின் உடலுக்கு அடுத்தபடியாக அவன் மனதில் ஆசையாக அணைகட்டி வைத்திருந்தது மதுதான். அவன் மது
அருந்திவிட்டு லீலாவைத் தேடிப் போனது ஒரே ஒரு முறைதான். அவள் அவன் தன்னைத் தொடுவதைத் தடுக்கவில்லை என்றா லும், என்னவோ மனதிற்குள் எண்ணமிட்டவாறு அவள் சொன்னாள்: “நீ இப்போ வேற யார் மாதிரியோ இருக்கே!''
அவ்வளவுதான்- கருணன் அதிர்ச்சியடைந்தது போல் தன் முகத்தை அவளிடமிருந்து நீக்கி அவள் முகத்தையே வெறித்துப் பார்த்தான். அவள் என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தாள்.
அந்தத் தீவிர சிந்தனையைப் பார்த்து அவன் நடுங்கிப் போனான். "இதுதான் நான். வேற யாருமில்ல...' அவனுக்கு உரத்த குரலில் சொல்ல வேண்டும்போல இருந்தது. "என்னோட பழைய நண்பன் மது. நான் பெண்களோட உடம்பைப் பற்றிய கற்பனைகளோட,
அவங்களோட உடல் மினுமினுப்பையும், மறைஞ்சிருக்கிற கவர்ச்சிகளையும் பற்றிய கனவுகளோட சஞ்சாரம் பண்ணிக்கிட்டு இருந்த காலத்துல, எனக்கு துணையா இருந்தது மதுதான். என்னோட தனிமையைப் போக்க கிடைச்ச நல்ல நண்பன் மது மது அருந்தக் கூடிய பாரில் தனிமையாக அமர்ந்திருந்த கருணன், முதன்முறையாக மதுவுடன் நட்பு கொள்ள ஆரம்பித்தான். மதுவிற்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் ஆழமான நட்பும், நெருங்கிய உறவும் அவனுக்கு காமத்தால் கிடைக்கும் திருப்தியைவிட அதிகமான துணையையும் நிழலையும் தந்தன. மது அவனை ஒருபோதும் பயமுறுத்தியதில்லை. அவன்மேல் சட்டங்களோ, நிபந்தனைகளோ போட்டதில்லை. பாரின் மங்கலான வெளிச்சத்தில் ஒரு பழைய நாற்காலியைப் போட்டு கம்பீரமாக மதுக் குப்பியின் சொந்தக்காரனும், உலகத்தை வெறுக்கக் கூடியவனும், வளர்ச்சி பெற்றவனுமான கருணன் தலையை உயர்த்தியவாறு அமர்ந்திருப்பான்... அவன் தன் வாழ்க்கைப் பாதையில் சந்தித்து காதலித்த அழகிகளின் நினைவுகளில் இருந்து காப்பாற்றி, மது தன்னுடைய எதிர்ப்பு இல்லாத போக்கில் அவனைக் கொண்டு போகும். அவனின் எண்ணிக்கையில் அடங்காத காமச் செயல்களுக்கு மன்னிப்பு வழங்கி, அவனை அது அமைதிப்படுத்தும்.
அவன் எப்போதும் போகும் மதுக்கடை இன்று அடைக்கப் பட்டிருந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் கடைக்கு முன்னால் நின்றிருந்தான் கருணன். அவன் மனம் அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனையில் ஈடுபட்டிருந்தது. லீலாவின் வீட்டு ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றவாறு உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த நிமிடத்திலும், இந்த ரகசிய சிந்தனை அவன் மனதிற்குப் பின்னால் ஓடிக் கொண்டுதான் இருந்தது.