Lekha Books

A+ A A-

ராதா, ராதா மட்டும் - Page 5

radha,radha matum

தேடி வந்த காரியம் நடக்காமல் போனதில் அவன் மனதில் நிராசை தோன்றியது. அந்த நிராசை அவனை மேலும் தளர்வடையச் செய்தது. விதி தனக்கு எதிராக நின்று கொண்டிருக்கிறதோ என்று அவன் நினைக்க ஆரம்பித்தான்.

அப்படியென்றால், தன்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்துவிட்டதும் அதே விதிதானே என்றும் அவன் நினைக்காமல் இல்லை. சிறிது நேரம் வெறுமனே எதுவும் செய்யாமல் ஓய்வாக அமர்ந்திருக்க வேண்டும்போல் இருந்தது அவனுக்கு. அதே நேரத்தில் இருட்டில் மறைந்திருந்த எத்தனையோ ஜன்னல்களில் ஏதோ ஒரு ஜன்னலுக்குப் பின்னால் தான் காதலிக்கிற அந்தப் பெண் மறைந்திருக்கிறாள் என்பதையும், அவள் இதே இடத்தில் உயிர்ப்புடன் இருக்க, அவளைப் பார்க்க முடியாத நிலையில் தான் இருக்கும் அவல நிலையையும் நினைத்துப் பார்த்தபோது, அவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. வீடுகளின் சுவர்களை இடித்து தரைமட்டமாக்கி, ராதாவை ஒரு ராட்சசனைப் போலத் தூக்கிக்கொண்டு வந்தால் என்ன என்று நினைத்தான் அவன். முதலில் லேசாகத் தூறிய மழை இப்போது நின்றுவிட்டிருந்தது. அவன் மீண்டும் விளக்குக் கம்பங்களுக்குக் கீழே அடைக்கப்பட்டிருக்கும் வெளிவாசல்களையே உற்று உற்றுப் பார்த்தான். அங்கிருந்த மரங்களை எல்லாம் இருட்டில் பாலா மரங்கள் எனத் தவறாக எண்ணினான். ஜன்னலில் தொங்கிக் கொண்டிருந்த திரைச் சீலையின் வண்ணம் இருட்டில் வேறு நிறமாக அவன் கண்களுக்குத் தெரிய, மிகவும் கவலையில் ஆழ்ந்து போன கருணன் தான் நினைத்துவந்த காரியம் நடக்காமல் போய்விடுமோ என்ற நிராசையுடன் தன் தேடலைத் தொடர்ந்தான்.

திடீரென்று தனக்குப் பின்னால் நிலவு உதித்ததாக உணர்ந்தான் கருணன். அவன் ஆச்சரியத்துடன் திரும்பி நின்று, இளம் வெயிலைப் போல ஒரு மங்கலான வெளிச்சத்தைப் பரப்பியவாறு உதித்துக்கொண்டிருந்த சந்திரனையே பார்த்தான். அவனையும் மீறி அவன் கண்கள் ஒரு நிமிடம் ஒரு பக்கம் பார்த்தன. அதோ! தனக்கு மிகவும் அருகில் பாதையின் வலது பாகத்தில் ஒரு பாலா மரம்! அதோ ஒரு கேட்! அதோ கேட்டின் இடைவெளியில் மூக்கை வெளியே நீட்டியவாறு இருக்கும் இரண்டு நாய்கள்! அதோ சிவப்பு வண்ண திரைச்சீலை தொங்கிக்கொண்டிருக்கும் ஜன்னல்! அதில் நிறைய வெளிச்சம்! "ஹா... ஹா... ஹா...' கருணன் மனம் விட்டு உரத்த குரலில் சிரித்தான். கேட்டை நோக்கி அவன் அடுத்த நிமிடம் வேகமாக நடந்து சென்றான். நாய்களுக்குப் பின்னால் வீட்டுச் சொந்தக்காரி ஒரு சிறு குழந்தையின் கையைப் பிடித்தவாறு நின்றிருந்தாள்.

அவர்களின் முகங்கள் பாலா மரத்தின் நிழலில் மறைந்து போய்விட்டிருந்தன. கேட்டைப் பிடித்தவாறு நின்றிருந்த கருணன் வீட்டுச் சொந்தக்காரியிடம் கேட்டான்: "இங்கேதானே...' இல்லாத ஒரு படியின்மேல் இருட்டில் தாவி இறங்கும் ஒருவனைப் போல் கருணன் சம்பந்தமே இல்லாமல் பேந்தப் பேந்த விழித்தவாறு சூனியத்தை நோக்கி விழுந்து கொண்டிருந்தான். கருணனின் நாக்கு, ஞாபகத்தில் வராத ஒரு பெயருக்காக அலைந்து கொண்டிருந்தது. அவன் வீட்டுச் சொந்தக்காரியை ஒரு ஊமை யைப்போல் பார்த்தவாறு நின்றிருந்தான். அவன் மனம் பாதாளக் கரண்டியைப்போல பெயர்களின் ஒரு மாயச் சூழலுக்குள் நுழைந்து தேடிக் கொண்டிருந்தது. "அவளோட பேரு என்ன? லீலாவோட தோழி. நான் தேடி வந்த பொண்ணு. அவ பேரு... நாக்கு நுனியில் இருக்கு! வரமாட்டேங்குதே!' கருணனுக்கு தலையைச் சுற்றுவதுபோல இருந்தது. அவன் நடக்க முடியாமல் தடுமாறும் கால்களுடன் பெயர்களின் ஒரு நீண்ட பட்டியலோடு ஓடிக்கொண்டிருந்தான்: "நிர்மலா, கார்த்திகா, லலிதா, உமா, மாதுரி, மீனாட்சி, கல்யாணி, கார்த்தியாயனி, ஹேமா, ரஜினி, காஞ்சனா, ராஜி, விஜயா, பார்வதி, வாசந்தி, தேவி, ரத்னா, சரோஜினி, உஷா, சந்தியா'- குளிர்ச்சியான இரண்டு மூக்குகள் கேட்டில் இறுகப்பற்றியிருந்த அவனின் கைவிரல்களைப் பாசத்துடன் தொட்டுப்பார்த்தன. ஒரு சிவப்பு வண்ண திரைச் சீலை அவன் கண்களுக்கு முன்னால் காற்றில் உயர்ந்தது. கருணனுக்கு உரத்த குரலில் சத்தமிட வேண்டும்போல இருந்தது. "நான் இங்கேதான் இருக்கேன்!' தான் மறந்துவிட்ட பெயரைக் கொண்ட ஒரு பெண் அந்தத் திரைச்சீலைக்குப் பின்னால் இருக்கிறாள் என்பதை எண்ணிப் பார்த்தபோது, கருணனிடம் இருந்த தைரியம் முழுவதும் முற்றிலுமாக மறைந்துவிட்டது. சாபத்திற்கு இரையாகிவிட்ட ஒரு மனிதனைப்போல அவன் வீட்டுச் சொந்தக்காரியையே பார்த்தவாறு நின்றிருந்தான். வீட்டுச் சொந்தக்காரி அவன் தான் கேட்ட கேள்வியை முழுமையாகக் கேட்கட்டும் என்ற எதிர்பார்ப்புடன் - பொறுமையுடன் அவனையே பார்த்தவாறு நின்றிருந்தாள். சாதுக்களான இரண்டு பெரிய நாய்களும் கருணன் உடலை நக்குவதற்காக கேட்டுக்கு உள்ளே இருந்தவாறு பரபரத்தன. அவற்றின் தடிமனான கால்கள் இருட்டில் நிலத்தில் தொட்டு தாளம் அடித்துக்கொண்டிருந்தன. “என்ன வேணும்?'' வீட்டுச் சொந்தக்காரி கேட்டாள். பாலா மரத்தின் கிளைகள் காற்றில் ஆடின. தெரு விளக்கொளியில் ஆலம் பழங்கள் விழுந்து கிடக்கும் அந்தப் பாதையில் இருந்தவாறு அவனைப் பார்த்து பயமுறுத்திய அந்த இரண்டு பெரிய கண்கள் இப்போது மீண்டும் அவனைப் பார்த்தன. கருணனுக்கு வாய்விட்டு அழவேண்டும்போலவும், எல்லாரும் கேட்கும் வண்ணம் சிரிக்க வேண்டும்போலவும், அந்த இடத்தைவிட்டு ஓடிப்போக வேண்டும்போலவும் இருந்தது. "இதோ நான் தேடி வந்த அடையாளம்! நான் வர்றதை அவள் மனப்பூர்வமா ஏத்துக்கிட்டு இருக்கா. ஆனா, நேரமாயிடுச்சு... நேரமாயிடுச்சு....' கருணன் தனக்குள் முணுமுணுத்தான். பிறகு அவளின் கண்களின் பார்வையில் இருந்து விலகி இருக்க நினைத்த அவன் இருட்டுக்குள் தன்னை மறைத்துக்கொண்டான். சுருதி இறங்கிப்போன பரிதாபமான குரலில் அவன் வீட்டுச் சொந்தக்காரியைப் பார்த்துச் சொன்னான்: “இல்ல... நான் வீடு மாறி வந்துட்டேன்...'' கருணன் பாலா மரங்களின் நிழலில் மற்றொரு நிழலாக நீங்கிப் போனான். அவன் தலைக்குமேலே காற்று பாலா மரங்களின் இலைகளுடன் மோதி போராட்டமே நடத்திக் கொண்டிருந்தது. அவனைச் சுற்றிலும் தெருவிளக்கின் பிரகாசமும் நிலவும் சேர்ந்து நிழல்களை இரண்டு மடங்கு பெரிதாக்கி எல்லா இடங்களிலும் பரப்பிவிட்டிருந்தன. சிவப்பு வண்ண திரைச் சீலை திடீரென்று ஒரு பக்கம் விலக, ராதாவின் முகம் ஜன்னல் வழியே தெரிந்தது. “பாலா...'' - அவள் குழந்தையை அழைத்தாள்: “இங்கே வா... நான் உனக்கொரு மிட்டாய் தர்றேன்.'' கருணன் பாலா மரத்தின் நிழலில் இருந்தவாறு, பரிதாபமான தோற்றத்துடன் "டக்டக்'கென்று பதை பதைத்துக் கொண்டிருக் கும் இதயத்துடன் தன்னால் பெயர் சொல்ல முடியாமல் போன அந்த இளம் பெண்ணின் தூரத்தில் தெரியும் முகத்தைப் பார்த்தவாறு ஒளிந்து நின்றிருந்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel