ராதா, ராதா மட்டும் - Page 6
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7162
பாலா என்ற குழந்தை அவுட்ஹவுஸுக்கு நேராக கால் சுவடை எண்ணியவாறு ஓடிக்கொண்டிருந்தது: "ஒண்ணு... ரெண்டு... மூணு...' அந்தக் குழந்தைக்குப் பின்னால் அந்த நாய்களும் கருணனுக்காக தாங்கள் இதுவரை காத்திருந்ததை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்து- அந்த இரண்டு நாய்களும் அரக்கர்களைப் போன்ற தோற்றத்துடன் நிலவொளியில் ஓடி மறைந்தன.
எனக்கொரு நம்பிக்கையுண்டு. எந்த விஷயத்தையும் முழுமையாக விவரிக்க முடிந்தால், அதன் உண்மைத் தன்மைக்கு நம்மால் பூரணமாகப் போய்ச்சேர முடியும். இமயமலையில் தெய்வத்தின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்த இயந்திரம் செய்தது- தெய்வத்தை முழுமையாக விவரிக்க முயற்சி செய்ததே தவிர வேறொன்றுமில்லை. தெய்வத்தை முழுமையாக விவரித்துக் கூற முடிந்துவிட்டால், பிறகு பிரபஞ்சத்திற்கு என்ன வேலை இருக்கிறது? அது அணைகிறது. காரணம்- தெய்வத்தைப் பற்றிய விவரிப்பு விரிந்து நமக்குத் தெரிவது- காலம். காலத்தின் அரவணைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிற நம்மால் ஒரு எறும்பையோ ஒரு யானையையோ ஒரு மேகத்தையோ ஒரு சிறு முடியையோ முழுமையாக விவரிக்க முடியாது. முழுமையாக விவரங்கள் தெய்வத்திடம் மட்டுமே முடியும். காரணம்- முழுமையாக விவரிக்க தெய்வத்தால் மட்டுமே இருக்கிறது.
அதனால்தான் அவனால் பெயர் வைக்க முடிகிறது. படைக்கப்பட்டுவிட்டால் மட்டும் போதுமா? பெயர்தான் படைப்பிற்கு அர்த்தமே தருகிறது. எழுத்தாளனின் விதி இதோடு சண்டை போடுகிறது. பிரபஞ்சத்தின் சிக்காத பெயர்களுக்குப் பின்னால் எழுத்தாளன் ஓடிக்கொண்டிருக்கிறான்.
எண்ணெய் தேய்க்கப்பட்ட மினுமினுப்பான தூணில், எண்ணெய் தேய்த்த உடலுடன் பிடித்து ஏற முயற்சிப்பவனைப் போல்தான் இந்த எழுத்தாளன். வழுக்கி விழும்போது, சில நேரங்களில் கையில் கிடைப்பது ஒரு பொய்யான பெயராக இருக்கும். சில நேரங்களில் பெயரில்லாதவனின் கரங்களின் அரவணைப்பு அவனுக்குக் கிடைக்கும்பட்சம், ஒரு உண்மைப் பெயரும் அவனுக்கு நிச்சயம் கிடைக்கும்.
லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து.