ராதா, ராதா மட்டும்
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7162
"ராதா, ராதா மட்டும்” என்ற பெயரில், மலையாள இலக்கிய உலகில் பிரபலமான ஒரு கதையை என்னுடைய நண்பரும் பிரசித்தி பெற்ற எழுத்தாளருமான எம். முகுந்தன் எழுதியிருக்கிறார் என்று எனக்குத் தெரியாமல் இல்லை. அதே பெயரில் இந்தக் கதையை நான் எழுதுவதன் மூலம், பெயரில் என்ன இருக்கிறது என்று நான் கூற முயற்சிக்கிறேன் என்றோ, அதை நியாயப்படுத்த முயல்கிறேன் என்றோ யாரும் நினைத்துவிடக் கூடாது. அது என் நோக்கமும் அல்ல. காரணம்- பெயரில் நிச்சயம் முக்கியத்துவம் இருக்கிறது என்று முழுமையாக நம்பக்கூடிய மனிதன் நான்.
ஆர்தர் சி. க்ளார்க் எழுதிய "கடவுளுக்கு நூறு கோடி பெயர்கள்' என்ற அருமையான கதையை நீங்கள் படித்திருக்கிறீர் களா? தெய்வத்தின் நூறு கோடி பெயர்களை உச்சரித்தால் பிறப்பின் நோக்கம் பூரணமாகும் என்று கூறியிருப்பதையொட்டி, இமயமலையில் இருக்கும் ஒரு ஆசிரமத்தில் ஒரு பெரிய இயந்திரம் அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இயந்திரம் பெயர்களை உச்சரிக்கும் சடங்கு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த சடங்கைப் பார்க்கப் போன விஞ்ஞானிகள், இயந்திரம் தெய்வத்தின் கடைசி பெயரைச் சொல்வதற்கு முன்பே திரும்ப வேண்டிய நிலை. தூரத்தில்- இரவு நேரத்தில் மலையில் இறங்கிக் கொண்டிருக்கும் விஞ்ஞானிகள் காதில் இயந்திரத்தின் தெய்வப் பெயர்கள் உச்சரிக்கும் குரல் நன்றாகவே காதில் விழுகிறது. கடவுளின் கடைசிப் பெயரை இயந்திரம் உச்சரிக்கிறபோது, என்ன நடக்கிறது என்ற எதிர்பார்ப்புடன் தங்களின் பயணத்தை அவர்கள் ஒரு நிமிடம் நிறுத்திக்கொண்டு மலைச்சரிவில் நின்றவாறு தங்களைச் சுற்றிலும் பார்த்தார்கள். அவர்கள் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தார்கள். மேலே- வானத்தில் நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக அணைந்தன. உலகம் அழியப் போகிறது!
தெய்வம், அதே நேரத்தில் பெயரே இல்லாததுதானே!
அதுதான் தெய்வத்தின் சக்தி. காரணம்- எல்லாப் பெயர்களுக்கும் சொந்தக்காரன் கடவுள்தான். பழைய ஏற்பாட்டில் கடவுள் முழங்குகிற சத்தம் என்னுடைய ஆரம்ப நாட்களிலிருந்து
என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடவுளின் பெயரை நீ தேவையில்லாமல் உச்சரிக்கக்கூடாது! வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கிறது. உன்னிடம் இருக்கும் அறிவெல்லாம் வெறும் பெயர்களைப் பற்றிய அறிவுதான். நான்கு வேதங்களும், இலக்கணமும், வைதீகச் சடங்குகளும்- எல்லாம் வெறும் பெயர்கள் மட்டுமே. பெயர்களை நன்றாகத் தெரிந்துகொண்டு உச்சரிப்பது! எல்லாவற்றுக்கும் ஆரம்பமாக இருந்த ஆத்மா, சுற்றிலும் பார்த்துக்கொண்டு தன்னைத்தவிர வேறு யாரையும் பார்க்காமல் தனக்குத்தானே பெயரிட்டுக் கொண்டு முதல் வார்த்தையை உச்சரிக்கிறது. "இதுதான் நான்!'
அதற்குப் பிறகுதான் ஆத்மா தனிமையை அனுபவித்ததும், பயத்தில் மூழ்கியதும். பயம் கடந்துபோன பிறகுகூட, நிறைவின்மை ஆத்மாவைப் பின்தொடர்கிறது. அதன் விளைவு- ஆத்மா தானே இரண்டாகப் பிரிவதும், பெண் படைக்கப் படுவதோடு, அவளைப் பின்தொடரவும் செய்கிறது.
முகுந்தனின் ஒரு கதாபாத்திரத்தை இதற்கு முன்பு நானும் கொஞ்சம் எடுத்துக் கையாண்டிருக்கிறேன். கவுளி அல்லது பல்லி என்றழைக்கப்படும் அற்புத சக்தி கொண்ட பிராணி எங்களின் ஒவ்வொரு கதைகளிலும் விதியின் கருவியாகத் தோன்றியிருக்கிறது. முகுந்தனின் பல்லி ஒரு மின்னலைப்போலத் தோன்றி விதியை நடைமுறைப்படுத்தி கதையை முடிக்கிறபோது, என் கதைகளில் பல்லிகள் கதாநாயகனை நீண்டகாலம் கவுளி சாஸ்திரத்தின் வலையில் சிக்க வைத்து, கதையை நீண்டுகொண்டு போகச் செய்கிறேன்.
விதிக்குத்தான் இப்படி எத்தனை எத்தனை ஆயுதங்கள்! எத்தனையோ வழிமுறைகள்! அவற்றை விவரித்துச் சொல்வதென் றால் எத்தனையோ வாழ்நாட்கள் வேண்டும்! உண்மையாகச் சொல்லப்போனால் வெறுமொரு கதையால் விதியைப் பற்றிய அறிவு, பிறப்பு- இறப்பு பற்றிய சரியான முடிச்சு, காலத்தின் ரகசியம்- இவற்றைப் பற்றிய தூரத்துப் பார்வையையோ அல்லது இவற்றின் பாதிப்பையோ தெளிவாக விளக்கிக் கூற முடியுமா?
கலையின் வரையறைகள் எழுத்தாளனின் மனதை மிகவும் தளர்ச்சியடையச் செய்கின்றன. சாதாரண தன் அனுபவங்களைக் கூட வார்த்தைகளைக் கொண்டு, முழுமையாக, உண்மை கொஞ்சம்கூடப் பிசகாமல் தன்னால் விவரித்துச் சொல்ல முடியும் என்று ஒரு எழுத்தாளன் தைரியமாகக் கூற முடியுமா?
அனுபவத்தின் உருவங்களுக்கும் மனதின் பதிவிற்கும் கலையின் கண்ணாடிக்கும் இடையே நடக்கும் கண்ணால் பார்க்க முடியாத இரசாயனச் செயல்கள் எவ்வளவோ! அவற்றின்மேல் எழுத்தாளனின் நேர்மை ஒரு நூல் பாலத்தின்மேல் நிற்பதுபோல் நிற்கிறது. அவனிடமிருந்து புறப்பட்டு வரும் ஏகாந்தமான வார்த்தைகளை மறுகரையில் கொண்டு போய் சேர்க்கும் கரங்களின் கைகாட்டலுக்குச் சொந்தக்காரன் யார்?
என்னுடைய இந்தக் கதையில் வருகிற இளைஞனை, விதி ஒரு ஞாபக சக்திக் குறைவை வைத்து அவனைப் பந்தாடுகிறது. ராதா என்ற இளம் பெண்ணை நாம் பார்ப்பதே இல்லை. சொல்லப் போனால் ஒரே ஒரு நிமிடம் வருவாள். "ராதா, ராதா மட்டும்' என்று கடைசியில் அந்த இளைஞன் முணுமுணுக்கிறான். விதி- மறதி என்ற மூடு படலத்தை அந்த நகரத்தின் மாலை நேரத்தில் உயர்த்திக்காட்டி மறைகிறபோது, அந்த இளைஞன்- ஏன் அதற்குப் பிறகும்கூட... தனக்குண்டான இந்த வினோதமான
அனுபவத்தைப் பல நேரங்களில் ராதாவைப் பற்றிய ஒரு புதிய கற்பனையை, ஆசையை மனதில் உண்டாக்கிக்கொண்டு நினைத் துப் பார்ப்பான். ஒன்றோ இரண்டோ நண்பர்களிடம் அந்த சம்பவத்தைப் பற்றி மதுவின் பிடியில் இருக்கிறபோது அவன் சொல்லவும் செய்வான். அதற்குப் பிறகு அந்த நிகழ்ச்சி அவனைப் பொறுத்தவரை- நினைவில் பதிந்திருக்கும் ஒன்று- அவ்வளவுதான். ஆனால், எழுத்தாளனின் பார்வையோ சிந்தனையோ அவனின் எதிர்காலத்தை நோக்கிப் பாய்வதில்லை. நிலம் பார்த்திருக்கும் அவன் கண்கள் தேடுவது விதியின் கால் சுவடுகளைத்தான். வேட்டைக்கு இறங்கும் விதிக்குப் பின்னால், இரத்தத்திற்காக அலையும் ஒரு நரியைப்போல அவன் ஒளிந்திருக்கிறான். காரணம்- விதியின் ஆட்சிதான் கதையின் பலமே.
இந்த நிமிடத்தில் ஒரு ஆள்மாறாட்டம் நடத்த என்னை நீங்கள் அனுமதிக்க வேண்டும். கதை கூறுபவனுக்கும், கதையை நடத்திக்கொண்டு பேகிறவனுக்குமிடையே உள்ள இடைவெளியை அழித்து, என்னுடைய கதாநாயகனாக நானே தோன்றுகிறேன். இல்லாவிட்டால், நான் என்ற பெயரில் என் கதாநாயகன் நுழைகிறான். இதுதான் நான்! இது பெயர்களை அடுக்கிக் காட்டும் ஒரு செப்படி வித்தை அல்ல. கதாநாயகனின் அல்லது எனது தப்பித்தலும் இல்லை. இதுதான் நான்! இனி தனிமையும், பயமும், நிறைவின்மையும், ஆத்மாவின் பிளவும், காமமும் என்னைச் சேர்ந்தது.
நேரற்ற பாதையிலிருந்து என்னை
நேரான பாதைக்கும்
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கும்
மரணத்தில் இருந்து வாழ்வுக்கும்-
என் காதலியின் அணைப்பில் இருந்து எழுந்து நான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தவாறு நின்றிருந்தேன்.