ராதா, ராதா மட்டும் - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7162
கட்டிலில் கண்களை மூடிப் படுத்திருந்த லீலா மூச்சுவிடும் ஓசை என் காதில் தெளிவாகக் கேட்டது. லீலா உறங்கவில்லை. என்னைப்போல அவளும் சூனியமாகிப்போன வெறுமை மனதுடன் வேறு ஏதோ உள் உலக வாசல் கதவு வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. வெளியே நகரத்தின் சுறுசுறுப்பான சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்து போய்க் கொண்டிருந்தனர். அவர்கள் எழுப்பும் சப்தம் காதைத் துளைத்துக் கொண்டிருந்தது. தூரத்தில் இருந்த மர உச்சிகளில் காற்று பட்டு சுகமாகப் பயணம் செய்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு மறைவிடத்திலிருந்து புறப்பட்டு வருவதைப்போல மேகங்கள் ஆகாயத்தில் படுவேகமாக சஞ்சரித்துக் கொண்டிருந்தன. திடீரென்று காற்று கீழே இறங்கி வந்தது. என்னைச் சுற்றிலும் இருந்த ஜன்னல்கள் "படபட'வென்று அடித்தன. ஒன்றிரண்டு ஆலம்பழங்கள் மரத்திலிருந்து கீழே ஜன்னல் படியில் விழுந்து சிதறின. அடைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி வாசலுக்குப் பின்னால் பத்திரமாக இருந்துகொண்டு நான் மரக்கிளைகள் காற்றில் ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
அப்போது கீழே இருந்தவாறு யாரோ என்னைப் பார்ப்பதுபோல் எனக்குத் தோன்றியது. காற்றில் பறக்கிற முடியுடனும் ஆடையுடனும் தன் தந்தையின் கைகளைப் பிடித்தவாறு ஆலம் பழங்களைத் தாண்டி போய்க் கொண்டிருந்த ஒரு சிறுமி தலையை உயர்த்தி என்னைப் பார்த்தாள். அவளின் அகலமான இரண்டு கண்கள் கண்ணாடிக்குப் பின்னால் நின்றிருக்கும் என்னுடைய முகத்தில் எதையோ தேடின.
நான் அதிர்ந்து போய் அடுத்த நிமிடம் என் முகத்தைப் பின்னோக்கி இழுத்தேன். ஜன்னலை விட்டு நான் பின்னால் நகர்ந்தேன். ஒரு நிமிடம் கழித்து நான் மீண்டும் எட்டிப் பார்த்த போது, ஆலம்பழம் பொறுக்கிக்கொண்டும் காற்றை கையை வீசிப் பிடித்தவாறும், அந்தச் சிறுமி நடந்து போய்க் கொண்டி ருந்தாள். நான் ஏற்கெனவே நின்ற இடத்தைவிட்டு பின்னால் நகர்ந்து நின்றதற்காக உண்மையிலேயே வெட்கப் பட்டேன். என்ன காரணத்திற்காக நான் அப்படி நகர்ந்து நின்றேன்? எனக் குப் பின்னால் மூச்சுவிட்டவாறு படுத்துக் கிடந்த பெண்ணுடன் நான் கொண்டிருக்கும் சம்பந்தமா? நான் பின்னால் திரும்பி லீலாவைப் பார்த்தேன். படுத்துக்கிடந்த அவளின் தோற்றம் என் மனதில் மீண்டும் உஷ்ணத்தைக் கிளப்பி ஆசையை உண்டாக்கியது.
அன்புக்காகவும், காம நிறைவேற்றலுக்காகவும் எந்நேரமும் ஏங்கிக் கொண்டிருக்கும் ஒரு அலைபாயும் இளைஞனிடம் குடிகொண்டிருக்கும் ஆவேசத்துடன்தான் நான் லீலாவைக் காதலித்தேன். அவளுடன் நான் இருக்கும் ஒவ்வொரு தருணத்திலும் நான் புதிய ஆசைகளை நோக்கியும், விதவிதமான கனவுகளை நோக்கியும் தள்ளப்பட்டேன். அதிகமான நாட்கள் நான் லீலாவை தூரத்தில் இருந்து பார்க்கும் மனிதனாக மட்டும் இருந்தேன். பிறகு... கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பெண்ணின் படுக்கையறைக்குள் நான் நுழைய ஆரம்பித்தேன். நாட்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. மனதில் இருக்கும் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஒன்றுக்குப் பின் இன்னொன்றாக வேறு வேறு மாதிரி மனதில் சிந்தித்து, கூட்டுக்குள் அடைக்கப்பட்ட ஒரு பிசாசைப் போல, லீலாவின் அறையில் இருந்த நாற்காலிகளில் மாறி மாறி உட்கார்ந்து என்ன செய்வதென்று தெரியாமல் நான் நெளிந்தேன். அவள் பாட்டு பாடுவாள். மகிழ்ச்சியான செய்திகளைக் கூறுவாள். சந்தோஷத்துடன் பல விஷயங்களையும் பேசுவாள். தேநீர் தயாரித்துத் தருவாள். குளியலறைக்குள் நுழைந்து ஆடைகளை மாற்றி என்னுடன் நடக்க வருவாள். ஆடைகளை மாற்றுவதற்காக லீலா குளியலறைக்குள் போயிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் ஆசைகள் நிரம்பிய உடல் பஞ்சு போன்று காற்றில் பறந்துவிடக் கூடாதே என்று மிகவும் சிரமப்பட்டு அதை நான்அடக்கி வைப்பேன்.
இதெல்லாம் அவளுக்குத் தெரியுமா? நான் ஒரு முறை கூட அவளிடம் இதுபற்றிக் கேட்டதில்லை. அவளின் மனதும், அதிலிருக்கும் ரகசியங்களும் எனக்குத் தெரியாமல் இருப்பதே நல்லது என்று நான் நினைத்தேன். அதனால் லீலா ஒருநாள் முதல் முறையாக என் கைப்பிடியில் சிக்கிக்கொண்டிருந்த நிமிடத்தில்கூட நான் அவளின் இதயத்தைத் திறந்து பார்க்க பிரியப்படவில்லை. அவளின் உடலும் என் உடலும் ஒன்று சேர்ந்து உண்டான அந்த உறவுக்கு உடல்களுக்கென்றே இருக்கிற மணமும், சூடும், வியர்வையும், அசைவும், அசைவின்மையும் ஒத்தாசையாய் இருந்தன என்று முழுமையாக நான் நம்பினேன்.
லீலா அமைதியாக அப்படிப் படுத்துக் கிடந்தது என் மனதில் இனம்புரியாத ஒரு உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்தது. ஒருமுறை இதே மாதிரி காட்சியைக் கனவு கண்டு, தன்னந் தனியனாக, ஈக்கள் மொய்க்கிற தேன்கூட்டைப்போல, ஒருவித குழப்பத்துடன் எத்தனை நாட்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் உட்கார்ந்திருக்கிறேன்! அதை இப்போது நான் நினைத்துப் பார்த்தேன். கடைசியில் ஒருநாள் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு, நான் அவளின் அறையை விட்டு இன்னொரு முறை ஆசைகளை அடக்கிக்கொண்டு, தைரியத்தை இழந்து, கூண்டுக்குள் அடைக்கப்பட்ட மிருகத்தைப்போல எழுந்து வெளியே வந்தேன். லீலா அறையில் இருந்த விளக்கை அணைத்தாள். என்னிடம் ஏதோ கேள்வி கேட்டு, அதற்கு என்னிடமிருந்து பதிலை எதிர்பார்த்து வாசல் கதவைப் பூட்டாமல், கதவுக்குப் பக்கத்தில் இப்போது புதிதாக வந்து சேர்ந்த புதிய இருட்டில் ஒரு ஆவியைப்போல் அவள் நின்றிருந்தாள். பாதி அடைக்கப்பட்டிருக்கும் கதவுக்கு முன்னால் இதற்கு முன்பு எனக்கு அறிமுகமே ஆகியிராத ஒரு பெண்ணைப் பார்த்ததும், என்னிடம் இருந்த பயமெல்லாம் திடீரென்று வேறு எங்கோ போய் ஒளிந்துகொண்டது. கண்ணாடி ஜன்னல் வழியாக மெதுவாக நீங்கிக் கொண்டிருக்கும் மேகங்களினூடே நான் கண்ட மாலை நேரம் என் மனதில் ஒருவகை புத்துணர்ச்சியை உண்டாக்கியது. இருளில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணை நான் ஒரு சினேகிதியைப்போல அவள் தோள்மேல் கை போட்டு அறைக்குள் இருளான பகுதியை நோக்கி அழைத்தவாறு, வாசல் கதவை அடைத்தேன்.
நான் யாருக்கு முத்தம் தருகிறேன்? எனக்கே சரியாகத் தெரியவில்லை. என் கையில் தற்போது இருக்கும் பெண் யார்? இந்த அற்புதம் நிரம்பிய இருட்டு என்னவெல்லாம் மந்திர வித்தைகளைச் செய்துகொண்டிருக்கிறது! எதுவுமே தெரியாமல் என் உடலைப் பற்றிய அறிவை மட்டும் மனதில் கொண்டு லீலாவின் கூந்தலையும், கழுத்தையும், காதுகளையும், கண்களை யும். மூக்கையும், உதடுகளையும், உணர்வுகளையும், சுவையையும், வாசனையையும் மனதிற்குள் நினைத்தவாறு ஒரு தியானத்தில் இருப்பதைப்போல நான் அறைக்குள் நின்றிருந்தேன். இருள் எங்களை ஒரு ஆடை என போர்த்தியது. அப்போது என் கன்னத் தின் அருகில், ஒரு பெண்ணின் உதடுகள் என்னிடம் ஒரு மெல்லிய குரலில் கேட்டது: