அந்த செருப்பு - Page 5
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7874
அப்துல்லா செருப்பை வெறித்துப் பார்த்துக் கொண்டே சொன்னான்: “மாதவன் நாயரின் மரியாதையைப் பற்றி அல்ல கேள்வி. இந்தச் செருப்பு என்னுடையதா என்பதுதான் கேள்வியே. அது என்னுடையதுதான் என்பதையும் என்னுடையது மட்டுமே என்பதையும் குதிரை பலத்துடன் நான் திரும்பத் திரும்ப கூறுகிறேன்.''
சிறிது நேரம் அமைதி நிலவியது.
அப்துல்லாவிற்கு ஒரு ஞானம் உண்டானது. அவன் வேகமாக எழுந்தான்: “சரி... ஒத்துக் கொள்கிறேன். நீ எந்தக் கடையில் இந்த செருப்பை வாங்கினே? கடையைக் காட்டு...''
மாதவன் நாயர் எதுவும் பேசவில்லை.
அப்துல்லா தொடர்ந்து சொன்னான்: “ம்... சொல்லுங்க... உனக்கு இந்தப் புதிய செருப்பு மூணு ரூபாய்க்கு எந்தக் கடையிலிருந்து கிடைச்சது?''
“சொல்றதுக்கு விருப்பமில்லை...'' மாதவன் நாயர் அலட்சியமாகக் கூறினான்.
“அப்படின்னா திருடியதாகத்தான் இருக்கும்.''
“நீ என்னடா சொன்னே?'' மாதவன் நாயர் சட்டையின் கைப் பகுதியைச் சுருட்டி விட்டுக் கொண்டே முன்னால் வந்தான்.
அவர்களுக்கிடையே வார்த்தைகளாலான சண்டை முடிந்தது. இனி உடல் பலத்தாலான ஒரு சண்டை ஆரம்பமாகப் போவதற்கான அடையாளம் தெரிந்தது.
அப்போது கிழிந்துபோன ஒரு சட்டையை அணிந்து கொண்டிருந்த ஒரு பையன் வாசலில் வந்து நின்று மாதவன் நாயரை அழைத்தான். மாதவன் நாயர் திரும்பிப் பார்த்தான். பையன் எட்டணா நாணயம் ஒன்றைக் கையில் வைத்து நீட்டிக் கொண்டே சொன்னான்: “சார்... நீங்க என்னிடம் செருப்பு வாங்கினப்போ தந்த எட்டணா கள்ள நாணயமா இருக்கு. இதற்கு பதிலா வேறு நாணயம் தாங்க.''
மாதவன் நாயரின் முகம் வெளிறிப் போனது. நாங்கள் ஒருவரை யொருவர் சந்தேகத்துடன் பார்த்துக்கொண்டோம். படிப்படியாக அந்த ரகசியத்தின்மீது வெளிச்சம் பரவியதைப்போல தோன்ற ஆரம்பித்தது.
“டேய், இந்த ஆளுக்கு நீயாடா இந்த செருப்பை விற்றாய்?'' பணிக்கர் பையனிடம் கேட்டார்.
“ஆமாம் சார். நான்தான்.''
“உனக்கு இந்தச் செருப்பு எங்கே கிடைச்சது?''
பையன் முதலில் கூறுவதற்குத் தயங்கினான்.
பணிக்கர் கோபத்துடன் இருப்பதைப்போல காட்டிக்கொண்டு எழுந்து நின்று கேள்வியை மீண்டும் கேட்டார்.
“சார்... இதை எனக்கு விற்றது ஒரு பிச்சைக்காரன்...'' பையன் மெதுவான குரலில் சொன்னான்.
“நீ எங்கே வச்சு இதை வாங்கினாய்?''
“அந்த சந்து தெருவில் போய் சந்திக்கிற இடத்தில்...''
“சரி...''
பணிக்கர் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு எட்டணா நாணயத்தை எடுத்து பையனை நோக்கி வீசி எறிந்தார்: “ம்... சீக்கிரம் ஓடு.''
தொடர்ந்து பணிக்கர் அந்தச் செருப்பைக் குனிந்து எடுத்து, அதை வாசலுக்குமேலே வைத்து ஒரு சிறிய சொற்பொழிவை ஆற்றியவாறு இப்படி ஒரு உத்தரவையும் போட்டார்:
“மெஸ்ஸின் அக்கவுண்ட்டில் ஏழணா சேர்க்கப்பட்டிருக்கு. இனிமேல் இந்த செருப்புக்கு யாரும் உரிமை கொண்டாடக் கூடாது.''
மாதவன் நாயர் எதுவும் பேசவில்லை. அப்துல்லாவும் வாய் திறக்கவில்லை. அனுபவம் மட்டும் ஒரு வெற்றி பெற்றுவிட்ட உணர்வுடன் வேகமாக எழுந்து தலையை ஆட்டிக்கொண்டே கூறினார்: “எது எப்படியோ... நான் நாய்களைப் பற்றி சொன்னது சரிதான். அந்த வகையில் தலைகீழாக வைக்கப்பட்ட செருப்பை பிச்சைக்காரன்தான் தொடுவானே தவிர, நாய்கள் தொடாது. அது மட்டும் உண்மை.''